எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 69 கலை, இலக்கியத்தில் வீரகேசரியின் வகிபாகம் 1986 நவம்பரில் வடமராட்சியில் நடந்த போர் ஒத்திகை ! முருகபூபதி



தமிழ்நாட்டில்  தனவணிகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் செறிந்து வாழ்ந்த செட்டி நாட்டு மண்ணில் ஆவணிப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து, வளர்ந்து கொழும்புக்கு வர்த்தகம் செய்யவந்தவர்  பெரி. சுப்பிரமணியம் செட்டியார், 1930 ஆம் ஆண்டு ஓகஸ்ட்  மாதம் 6 ஆம் திகதி வீரகேசரி பத்திரிகையின் முதல் இதழை வெளியிட்டார்.

அவருக்கு அரசகேசரி, வீரகேசரி என்ற பெயர்களில் இரண்டு புதல்வர்கள் இருந்ததாக அறியப்படுகிறது.

முதலில் கொழும்பு செட்டியார் தெருவிலிருந்து வெளிவந்த வீரகேசரி, அதன் விரிவாக்கம் கருதி கிராண்ட்பாஸ் வீதியில் 185 ஆம் இலக்க இல்லத்திற்கு இடம்பெயர்ந்தது.

அந்த இல்லமும் வரலாற்று முக்கியத்துவம் மிக்கது என்பதை பலரும்


அறியமாட்டார்கள்! அங்குதான் இலங்கையின் முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்தனா பிறந்திருக்கிறார் என்பதை இந்தத் தொடரில் முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.

இத்தகைய அரிய தகவல்களை தன்னகத்தே வைத்துள்ள வீரகேசரியின் தொடக்க காலத்தில்  பாரதியாரின் நண்பர் வ.ராமசாமி அவர்களும் தமிழகத்திலிருந்து வருகை தந்து ஆசிரியராக பணியாற்றியவர்.

இலங்கையில் சிறந்த சிறுகதைகளை வெளியிட்ட இதழ் என்ற பெருமையும் வீரகேசரி வாரவெளியீட்டையே சாரும். காலத்துக்காலம் சிறுகதை, நாவல்  மற்றும் கலை இலக்கியப்போட்டிகளையும் வாரவெளியீடு நடத்தியிருக்கிறது.

வீரகேசரியில் ஈழத்து எழுத்தாளர்கள் அ.ந. கந்தசாமி, கே. கணேஷ், சில்லையூர் செல்வராசன், செ. கதிர்காமநாதன், காசிநாதன், அன்டன் பாலசிங்கம், க. சட்டநாதன்,  அன்னலட்சுமி இராஜதுரை, கமலா தம்பிராஜா, யோகா பாலச்சந்திரன், கு. இராமச்சந்திரன் , வி.ஏ. திருஞானசுந்தரம்                          எஸ். எம். கோபாலரத்தினம் ஆ. சிவநேசச்செல்வன், கார்மேகம், சோமசுந்தரம் ராமேஸ்வரன், மூர்த்தி, தெய்வீகன், சூரியகுமாரி பஞ்சநாதன், சந்திரிக்கா சுப்பிரமணியன், ரவிவர்மா,  எஸ்.எம். கோபாலரத்தினம், டீ.பி.எஸ்.ஜெயராஜ், சொலமன் ராஜ், ஜீ.நேசன், சுபாஷ் சந்திரபோஸ், கே. நித்தியானந்தன்,  ஆர். திவ்வியராஜன்,  பால. விவேகானந்தா,  சட்டத்தரணிகள் இ. தம்பையா,  பாலச்சந்திரன்,   ஶ்ரீகாந்தலிங்கம், மற்றும் வன்னியகுலம், கே. விஜயன், தனபாலசிங்கம் உட்பட பல எழுத்தாளர்கள்  முன்னர் பணியாற்றினர்.  

தமிழகத்தில் திரைப்படத்துறையில் பாடலாசிரியராக விளங்கிய கு.மா. பாலசுப்பிரமணியமும் ஒரு காலத்தில் வீரகேசரியில்தான்


பணியாற்றியவர்.

எனக்கு அங்கிருந்த வாழ்க்கை 1987 ஜனவரியுடன் முற்றுப்பெற்றது.  எனினும் ஆத்மார்த்தமான உறவை நெஞ்சத்தில் தேக்கிவைத்திருக்கின்றேன். அதனால்தான் முடிந்த வரையில் எனது நினைவாற்றலுக்கு ஏற்ப இந்தத் தொடரை எழுதிவருகின்றேன்.

வீரகேசரியில் தமது கன்னிப்படைப்பை எழுதிய பலர் பின்னாளில் மிகச்சிறந்த எழுத்தாளர்களாகவும் தேசிய சாகித்தியவிருது முதலான சிறப்பு விருதுகளை பெற்றவர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.

வீரகேசரி மலையக எழுத்தாளர்களுக்காக நடத்திய சிறுகதைப்போட்டிகளில் பரிசுபெற்ற பலரும் பின்னர் வீரகேசரியில் எழுதிவளர்ந்தவர்களே! குறிப்பிட்ட சிறுகதைப்போட்டியை மலையக எழுத்தாளர் மன்றத்துடன் இணைந்து நடத்திய வீரகேசரி, பின்னர்  வீரகேசரி பிரசுரமாக அவற்றை தொகுத்தும் வெளியிட்டுள்ளது. அவ்வாறு வெளிவந்த தொகுதிதான் கதைக்கனிகள்.

எண்ணிறந்த  எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துத் தந்துள்ள


வீரகேசரி வாரவெளியீட்டில் தொடர்கதைகளாக வெளியான பல நவீனங்களும் நூலுருவாகி தேசிய சாகித்திய விருது உட்பட பல பரிசுகளை பெற்றுள்ளன.

கொழும்பில் நீண்டகாலமாக இயங்கிவரும் தமிழ்க்கதைஞர் வட்டம் (தகவம்) ஆண்டுதோறும் தெரிவுசெய்யும் சிறந்த சிறுகதைகளின் வரிசையில் வீரகேசரி வாரவெளியீட்டில்  வெளியானவையும் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தகுந்தது.

1970 இற்குப்பின்னர், தென்னிந்திய இதழ்களின் இறக்குமதியில் கட்டுப்பாடுகள் வந்த சமயத்தில் தொடங்கப்பட்ட வீரகேசரி பிரசுர வெளியீடுகள் ஈழத்து இலக்கியவளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

தமது படைப்புகளை நூலுருவில் காணும் பாக்கியத்தையும் பல எழுத்தாளர்கள் வீரகேசரி பிரசுரங்களின் வாயிலாகவும் பெற்றனர்.

அவ்வாறு வெளிவந்த நவீனம்தான் செங்கை ஆழியான் எழுதிய வாடைக்காற்று. பின்னர் இந்த நாவலின் பிரபல்யத்தினால், இக்கதை அதேபெயரில் தரமான திரைப்படமாகவும் வெளியானது.

வீரகேசரி பிரசுரங்கள் வெளிவரும் சந்தர்ப்பங்களில், அவை தொடர்பான மதிப்பீடுளை வீரகேசரி வெளியிட்டு,  வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமிடையே ஆரோக்கியமான இலக்கியப்பாலத்தையும் கட்டி எழுப்பியிருக்கிறது. வீரகேசரி பிரசுரங்கள் பற்றிய விரிவான மதிப்பீட்டை இலக்கிய விமர்சகர் கலாநிதி ந. சுப்பிரமணியன் எழுதியுள்ளார்.


இலங்கையின் அனைத்துப்பிரதேசங்களையும் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு களம் வழங்கிவரும் வீரகேசரி பத்திரிகை குறிப்பிட்ட பிரசுர  நாவல் வெளியீட்டுத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம், வன்னிப்பிரதேசம், கிழக்கிலங்கை, மலையகம், தென்னிலங்கை, உட்பட பல பகுதிகளையும் உள்ளடக்கிய பிரதேச மொழிவழக்குகளுக்கும் களம் வழங்கியிருப்பது கவனத்திற்குரியது. வரலாற்று நாவல்களும் இத்திட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளன.

வீரகேசரியில் கலை, இலக்கியவாதிகளின் நேர்காணல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து, வாசகர் மத்தியில் அதிர்வுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத்து இலக்கியவளர்ச்சியில் சிறந்த விமர்சன செல்நெறியை உருவாக்கியதிலும் வீரகேசரிக்கு பெரும் பங்கிருக்கிறது.

பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை மாணவர்கள் தமது ஆய்வுகளுக்கும் வீரகேசரி பிரசுரங்களையும் வீரகேசரியில் வெளியாகும் ஆக்கங்களையும் உசாத்துணையாக்கியிருக்கின்றனர்.

வீரகேசரியின் வரலாற்றை ஒரு நாளிதழின் நெடும்பயணம் என்ற


பெயரில் நூலாக ஆவணப்படுத்தியிருப்பவர் வீரகேசரியில் முன்னர் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கார்மேகம்.

 வீரகேசரியின் ஐம்பது ஆண்டு    நிறைவு     விசேட மலரை வெளியிட்ட      சமயத்திலும்     குறிப்பிட்ட     பொன்விழாவை    முன்னிட்டு நடத்தப்பட்ட    நாவல்     போட்டியின்    காலகட்டத்திலும்               வீரகேசரியின் கலை - இலக்கிய வகிபாகம் முக்கியத்துவமானது.

இலங்கை     செய்தி    ஏடுகளின்    தோற்றத்தின்     அரசியல்             சமூகப்பின்னணிகளை      விரிவாக     கூறிய  ஆய்வுகளும்             அம்மலரில் வெளியாகின.

பொன்விழா    நாவல்    போட்டிக்கு    வந்து   குவிந்த நாவல்களைத்  தேர்வுசெய்யும்     பணியில்   பல தரப்பு   வாசகர்களையும்  வீரகேசரி நிறுவனம் இணைத்துக்கொண்டதையும் இங்கு சுட்டிக்காண்பிக்க விரும்புகின்றேன்.   

பல்கலைக்கழக மாணவர்கள்,    குடும்பத்தலைவர்கள்,    தலைவிகள்,


பத்திரிகாலய ஊழியர்கள்,    இப்படி     பலரையும்     அணுகி    முதல்கட்டம் , இரண்டாம்கட்டம்,      மூன்றாம்கட்டம்    தேர்வுகளை                      நடத்தியே பரிசுக்குரியவை தேர்வுசெய்யப்பட்டன.

இப்போட்டியில்   பிரபல   எழுத்தாளர்   செம்பியன்  செல்வனின்  'நெருப்பு மல்லிகை  நாவல் முதல்   பரிசினைப்பெற்றது.

இவ்வாறு பல வழிகளிலும் தமிழ் இலக்கியத்திற்கும் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும்  மத்தியில் ஆரோக்கியமான தொடர்பாடலை வீரகேசரி நீண்ட நெடுங்காலமாக ஏற்படுத்திவருகிறது. அந்த நெடும்பயணத்தில் எனக்கு அதனுடான உறவு 1972 ஆம் ஆண்டு தொடங்கியது.

எனினும் அங்கிருந்து நிரந்தரமாக விடைபெறும் வேளை விதிவசத்தால் நேர்ந்தது.  அதற்கு 1986 ஆம் ஆண்டு இறுதிப்பகுதி முக்கிய காரணமாக விளங்கியது.

‘லிபரேஷன் ஒப்பரேஷன்’ ஒத்திகை

இனக்கலவரம் 1983 இல் நடந்ததைத் தொடர்ந்து பல தமிழ்த்


தலைவர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். சென்னையில் எம்.எல்.ஏ. விடுதியில் அமிர்தலிங்கம் குடும்பத்தினரும் அண்ணா நகரில் ஆனந்த சங்கரியும் மற்றும் சில இடங்களில் வவுனியா முன்னாள் எம்.பி. சிவசிதம்பரம் உட்பட பல தமிழ் தலைவர்களும் இயக்கத்தலைவர்களும் தங்கியிருந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டவாறு இலங்கை நிலைமைகளை அவதானித்துக்கொண்டிருந்தனர்.


சென்னையில் தமிழர் தகவல் நிலையம் ஒன்றும் இயங்கிக்கொண்டிருந்தது. 1987 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தம் இரண்டு நாட்டுத்தலைவர்களுக்கும் மத்தியில் நடக்கும் வரையில் பெரும்பாலான தலைவர்களும் இயக்கங்களின் தலைமைகளும் தமிழகத்தையே தஞ்சமாகக் கொண்டிருந்தனர்.

இனக்கலவரம் இந்திராகாந்தியின் நெருக்குதலினாலும் நரசிம்மராவின் இலங்கைக்கான திடீர் விஜயத்தினாலும் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேடுதல் வேட்டையில் அப்பாவித்தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்படைவது தொடர் நிகழ்வாகியிருந்தது.

புலிகள் இயக்கமும் ஏனைய இயக்கங்களும் வடபகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீவிரமாக இயங்கி அதில் முன்னேற்றமும் கண்டிருந்தனர்.
யாழ்.கோட்டை இராணுவ முகாம் மற்றும் பலாலி முகாம்களில் படையினர் இயக்கங்களின் பகீரத முயற்சியினால் முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்தனர். வெளியேற முடியாத படையினர் அவ்வப்போது வான் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்திரா காந்தி கொல்லப்பட்டதும் இலங்கையில் ஜே. ஆரின் ஆட்சிக்கும் அவரது காலத்தில் பாதுகாப்பு அமைச்சராக பதவியிலிருந்த லலித் அத்துலத் முதலிக்கும் குளிர்விட்டுப்போய்விட்டது.

அதனால் தென்னிலங்கையில் இனச்சங்காரம் முடிவுக்கு வந்திருந்தாலும்,  வடக்கு, கிழக்கில் தேடுதல் வேட்டை என்ற போர்வையில் தமிழ் மக்கள் சொல்லொனா துயரத்திற்கு ஆளாகி வந்தனர்.

தமிழகத்திலிருந்த தலைவர்களும் இயக்கத்தலைமைகளும் இலங்கையில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை தொலைபேசி ஊடாக தினமும் கேட்டறிந்து தமிழக பத்திரிகைகள் - ஊடகங்களுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருந்த காலம். மின்னஞ்சல், கைத்தொலைபேசி இல்லாத அக்காலத்தில் தொலைபேசி மாத்திரமே தகவல் பரிமாற்றத்துக்கு பெரிதும் உதவியது. வீரகேசரியையே அவர்கள் இலங்கைச்செய்திகளுக்காக நம்பியிருந்தனர்.
தினமும் மதியம் சென்னையிலிருந்து யாராவது ஒருவர் தொடர்புகொண்டு தகவல் அறிவார். அவர்களில் மகேஸ்வரி வேலாயுதமும் ஒருவர். ஆனால் அச்சமயம் அவர் வேறு ஒரு பெயரிலேயே தொடர்புகொண்டு தகவல் அறிந்து தமிழ்தகவல் நிலையத்திற்கு தெரியப்படுத்துவார். சில நாட்கள் அமிர்தலிங்கம் தொடர்புகொண்டு கேட்டறிந்து தமிழக அரசியல் கட்சித்தலைவர்களுக்கும் இந்து, இன்டியன் எக்ஸ்பிரஸ் முதலான ஆங்கில ஊடகங்களுக்கும் தெரியப்படுத்துவார்.

1986 நவம்பர் மாதம் வடமராட்சியில் படையினர் ஹெலியில் சுற்றி சுட்டனர். அதனால் மந்திகை ஆஸ்பத்திரி அதற்கு முன்னால் அமைந்திருந்த நீதிபதி ஆனந்தகுமாரசாமி அவர்களின் வீடு மற்றும் சில குடியிருப்புகளின் கூரைகள் சேதமடைந்தன. சிலர் கொல்லப்பட்டனர். மந்திகை ஆஸ்பத்திரியில் குழந்தைகள் வார்டின் கூரையிலும் வான் தாக்குதலினால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் காயமுற்றனர்.

அன்று எனக்கு மறக்கமுடியாது நாள்.

காலை எட்டு மணிக்கே அலுவலகம் வந்துவிட்டேன். மித்திரனுக்கு செய்தி எழுதிக்கொடுக்கவேண்டும். அக்காலப்பகுதியில் எம்முடன் சிறிது காலம் பணியாற்றியவர் திக்கவயல் தர்மகுலசிங்கம் என்ற இலக்கிய எழுத்தாளர். இவர் கூட்டுறவு தொழில் துறையில் வேலைசெய்து தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்தார். வீரகேசரியில் பணியிலிருந்து விட்டு சில மாதங்களில் விலகிச்சென்றுவிட்டார். அவருக்கு தொழில் சார்ந்த விசாரணை ஒன்று கொழும்பில் இருந்தமையால் முதல் நாள் இரவு யாழ்ப்பாணத்திலிருந்து பஸ்ஸில் வந்து வீரகேசரி அலுவலகத்தில் எனக்காக காத்துக்கொண்டிருந்தார்.

நான் கடமைக்கு வந்ததும் என்னுடன் உரையாடும்போது, “யாழ்ப்பாணத்தில் ஏதும் புதினம் இருக்கிறதா?” – என்று கேட்டேன்.

“ ஆம். வடமராட்சியில் ஒரு தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது. சில அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். மந்திகை ஆஸ்பத்திரியும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. பொம்பர் தாக்குதல் அல்ல. ஹெலியிலிருந்து சுட்டிருக்கிறார்கள்.”

இவ்வளவும்தான் அவர் எனக்குத்தந்த தகவல். அவர் சில நிமிடங்களில் புறப்பட்டுவிட்டார். நான் துரிதமாக இயங்கினேன். அந்தச்செய்திகளை ஊர்ஜிதப்படுத்தி எழுதினேன்.

மதியம் தமிழ்நாடு சென்னையிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். அன்று எனது கஷ்ட காலம். மதியம் உணவுவேளையில் பலரும் வெளியே சென்றுவிட்டனர். நான் வீட்டிலிருந்து எடுத்துவந்த உணவுப்பார்சலை பிரித்து சாப்பிட அமர்ந்தவேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
மறுமுனையில் அமிர்தலிங்கம்.

“ என்ன தம்பி நடக்கிறது?” என்று கேட்டார்.
காலையில் கிடைத்து எழுதிய செய்தியை சுருக்கமாக ஆனால் விபரமாகச்சொன்னேன். அச்சமயம் பெங்களுரில் சார்க் மாநாடு நடந்துகொண்டிருந்தது. சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். பாரதப்பிரதமர் ரஜீவ் காந்தி, இலங்கையிலிருந்து ஜனாதிபதி ஜே.ஆர்,ஜெயவர்த்தனா, பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி, வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸி. எஸ்.ஹமீத் உட்பட இலங்கை அரசின் உயர் அதிகாரிகளும் அச்சமயம் பெங்களுரில் முகாமிட்டிருந்தனர்.


வீரகேசரியுடன் தொடர்புகொண்டு செய்தி கேட்டறிந்த அமிர்தலிங்கம் உடனடியாகவே சென்னை இந்து, இந்தியன் எகஸ்பிரஸ் நாளிதழ்களுக்கு இச்செய்தியை கொடுத்துவிட்டார். அவரை குறிப்பிட்டு அச்செய்தி மறுநாள் பத்திரிகைகளில் வெளியாகிவிட்டது.

மருத்துவமனைகள் தாக்கப்படுவது என்பது பாரதூரமான செய்தி. ஏற்கனவே ஜே.ஆரின். ஆட்சியில் 1981 இல் உலகப்பிரசித்தி பெற்ற யாழ். பொதுநூலகம் தாக்கி எரிக்கப்பட்டமை அந்த ஆட்சியாளருக்கு மாறாத கறை. அந்தக்கறை மறையுமுன்னர் ஒரு மருத்துவமனையும் தாக்கப்பட்டிருப்பது ரஜீவ் காந்தியின் கவனத்துக்கு சென்னை பத்திரிகைகளின் ஊடாக கிடைத்துவிட்டது.
பெங்களுரில் சார்க் மாநாடு நடந்துகொண்டிருக்கிறது. மதிய உணவு இடைவேளையில் இருநாட்டு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்து உரையாடுகின்றனர்.

“ இலங்கையில் எல்லாம் கட்டுப்பாட்டுக்குள்தானே?” என்று ராஜிவ்,  ஜே. ஆரிடம் கேட்கிறார்.

“ ஆம் எல்லாம் கட்டுப்பாட்டுக்கள்தான். எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லை.” என்கிறார் ஜே.ஆர்,

“ இல்லை… வடக்கிலே ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. படையினர் ஒரு மருத்துவமனைக்கும் ஹெலியிலிருந்து சுட்டிருக்கிறார்களாம். சில அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டுமிருக்கிறார்களாம். அமிர்தலிங்கம் இங்குள்ள ஊடகங்களுக்கு சொல்லியிருக்கிறார்.” என்று ராஜீவ் சொன்னதும் தர்மிஸ்டரின் முகம் இருண்டுவிடுகிறது. ஓரக்கண்ணால் லலித் அத்துலத் முதலியை பார்க்கிறார். அந்த பாதுகாப்பு அமைச்சரும் வெளிவிவகார அமைச்சரும் உஷாரடைகின்றனர்.

அவர்களின் அதிகாரிகள் கொழும்பை தொடர்பு கொள்கின்றனர். வீரகேசரியைத்தவிர வேறு எந்தப்பத்திரிகைகளிலும் அச்செய்தி இல்லை. அப்படியாயின் வீரகேசரி வேண்டுமென்றே சார்க் மாநாடு நடந்துகொண்டிருக்கும் தருணத்தில் இலங்கை அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்கு அமிர்தலிங்கம் ஊடாக செயல்பட்டிருக்கிறது என்று அரச தலைமை நம்பிவிட்டது.

அரச ஊடக அதிகாரிகள் குறிப்பிட்ட வடமராட்சி செய்தி வீரகேசரியில் மாத்திரம்தான் வெளியாகியிருப்பதாக மேல்மட்டத்திற்கு தெரியப்படுத்தியதும் வீரகேசரி நிருவாகம் எதிர்பாராரத அழுத்தங்களை சந்தித்தது. அப்போதைய இலங்கை அரசுடன் நெருக்கமான உறவை வைத்திருந்த கொழும்பின் மிகப்பெரிய செல்வந்தர் வீரகேசரி நிருவாகத்தின் தலைவர் ஞானம் அவர்களுக்குத்தான் முதலாவது அழுத்தம் வந்திருக்கிறது. பின்னர் அழுத்தம் நிருவாக இயக்குநருக்கும் அவரைத்தொடர்ந்து முகாமையாளருக்கும் பின்னர் பிரதம ஆசிரியருக்கும் பிரயோகிக்கப்பட்ட அந்த அழுத்தம் புதுப்புதுக்கோலம் பூண்டு இறுதியாக எனது தலையில் வந்து விடிந்தது.

குறிப்பிட்ட வடமராட்சி சம்பவம் தொடர்பான செய்தி பற்றி செய்தி வெளியான விரகேசரி, மித்திரன் பத்திரிகைகள் இரண்டையும் காண்பித்து ,   ஆசிரியரும் பொது முகாமையாளரும் விளக்கம் கேட்டனர். அந்தச்செய்தியின் பின்னணி குறித்து விளங்கப்படுத்தினேன்.
அரசமட்டத்தில் நிருவாகம் பாரிய அழுத்தத்தை எதிர்நோக்குவதனால் அன்று இரவு பஸ்ஸில் யாழ்ப்பாணம் சென்று யாழ். அலுவலக நிருபரையும் அழைத்துக்கொண்டு சம்பவங்கள் நடந்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்குமாறும் மந்திகை, யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கெல்லாம் சென்று காயப்பட்டவர்களின் பெயர் விபரங்களை சேகரிக்குமாறும், இயலுமானால் யாழ்.அரசாங்க அதிபர் உட்பட சம்பவத்தை நன்கு அறிந்த பிரமுகர்களையும் சந்தித்து செய்திகளை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு இரண்டு நாட்களில் கொழும்பு திரும்ப வேண்டும் என்றனர்.

அலுவலகத்தின் கஷியரை இன்டகொம்மில் அழைத்து எனக்கு போக்குவரத்து செலவுக்கு ஐநூறு ரூபா கொடுக்குமாறும் பொது முகாமையாளர் சொன்னார்.

இரண்டு நிபந்தனைகளையும்  அவர் விதித்தார். இந்தப்பயணம் அலுவலகத்தில் செய்தி ஆசிரியர், பிரதம ஆசிரியர் தவிர வேறு எவருக்கும் தெரியவும் கூடாது.
யாழ்ப்பாணத்தில் நண்பர்களின் வீடுகளில் தங்காமல், சுபாஷ் விடுதியில்தான் தங்கவேண்டும். தப்பித்தவறி யாழ்நகரில் நண்பர்களைச்சந்தித்தால் எதற்காக இந்தத்திடீர் பயணம் என்பதையும் அவர்களுக்கு சொல்லாமல் தவிர்க்கவேண்டும்.

பொதுமுகாமையாளருக்கு நான் ஒரு பத்திரிகையாளன் என்ற முகம் மட்டுமல்ல ஒரு இலக்கியப்படைப்பாளி என்ற முகம் இருப்பதும் நன்கு தெரிந்தமையால்தான் அந்த நிபந்தனையை விதித்தார்.


யாழ்ப்பாணம் சென்றால் எனது இலக்கிய நண்பர்களை நான் சந்திக்காமல் திரும்பமாட்டேன். ஆனால்,  ஒரு பாரதூரமான செய்தியை ஊர்ஜிதப்படுத்தச்செல்லும்போது கடமைதான் முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணம் பஸ்நிலையத்தில் காலை இறங்கியதும் நல்லூரில் இராமலிங்கம் வீதியிலிருந்த குடும்ப நண்பர,பிரபல வயலின் வித்துவான் இல்லம் சென்று சிரமபரிகாரம் செய்துவிட்டு, அவருடைய சைக்கிளையே எடுத்துக்கொண்டு யாழ்.ரயில் நிலையம் முன்பாகவுள்ள வீரகேசரி கிளைக்காரியாலயம் வந்தேன்.

அச்சுவேலியிலிருந்து நிருபர் காசி.நவரத்தினம் வரும்வரையில் காத்திருந்து, வந்ததும் அவரது ஸ்கூட்டருக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு வடமராட்சி நோக்கி பறந்தோம். வல்லைவெளியால் செல்லும்போது மேலே ஹெலி சுற்றிக்கொண்டிருந்தது.

அந்த தாக்குதல் சம்பவத்தில் பதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்றோம். மரணச்சடங்கிற்காக வாசலில் கட்டப்பட்டிருந்த குருத்தோலைகள் கழற்றப்படாமல் காய்ந்திருந்தன. அந்த வீடுகளில் இருந்தவர்களின் கன்னங்களும் கண்ணீர் வடிந்து காய்ந்து கிடந்தன. கொல்லப்பட்டவர்களின் பெயர் வயது விபரம் பதிவுசெய்து, மரணவிசாரணை அதிகாரி வழங்கிய சான்றிதழ் பிரதிகளையும் பெற்றுக்கொண்டு மந்திகை ஆஸ்பத்திரிக்குச்சென்று அங்கு பிரதம மருத்துவ அதிகாரி (டீ.எம்.ஓ) மற்றும் காயப்பட்டவர்களை சந்தித்து நடந்த சம்பவத்தை கேட்டுப்பெற்றேன்.

குழந்தைகள் வார்டில் ஓரு குழந்தைக்காக தாயார் பால் கொண்டுவந்திருந்த தேமஸ் ஃபிளாஸ்க் சூட்டுச்சன்னங்களினால் சேதமடைந்திருந்தது. அதற்கு அருகில் படுத்திருந்த குழந்தை காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்பிழைத்திருந்தது.


மந்திகை ஆஸ்பத்திரிக்கு முன்பாக இருந்த உயர் நீதிமன்ற நீதியரசர் ஆனந்த குமாரசாமி மற்றும் பருத்தித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் ஆகியோரையும் சந்தித்து அவர்களின் வீடுகளுக்கு நேர்ந்த சேதங்களையும் பார்வையிட்டு அவர்களின் தகவல்களையும் பதிவுசெய்தேன்.
பருத்தித்துறை பஸ்நிலையத்திற்கு வந்தபோது இயக்கத்தின் போராளிகள் சிலர் ஆயுதங்களுடன் வேகமாக விரைந்துகொண்டிருந்தனர். மீண்டும் ஒரு தாக்குதல் அங்கே நடக்கப்போகிறது என்ற பீதியில் வீதி வெறிச்சோடிப்போயிருந்தது.

இரவு, யாழ். வீரகேசரி கிளைக்காரியாலயத்திலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு முகாமையாளருக்கு, நான் யாழ், நிருபருடன் இணைந்து சேகரித்த தகவல்களை சொன்னபோது, தொலைபேசியில் பேசுவதை தவிர்த்துக்கொள்ளச்சொன்னார். குறிப்பிட்ட சம்பவம் நடந்தபின்பு யாழ்ப்பாணத்தில் வெளியான ஈழநாடு பிரதிகளை தபாலில் அனுப்பிவிட்டு சேகரித்த செய்திகள், மரணச்சான்றிதழ்களுடன் தாமதமின்றி வந்துசேருமாறும் சொன்னார்.

சேகரித்த அனைத்து உண்மைச்செய்திகள் சான்றிதழ்களையும் என்னுடனேயே எடுத்துவந்தேன். ஆனையிறவு உட்பட பல சோதனைச்சாவடிகளையும் கடந்து வந்து கொழும்பில் வீரகேசரி நிருவாகத்திடம் ஒப்படைத்து, அந்த நிருவாகம் எதிர்கொண்ட நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு துணைநின்றேன் என்ற மனநிறைவைத்தவிர எனக்கு வேறு ஒன்றும் இல்லை.

1987 இல் வடமராட்சியில் நடந்த ‘லிபரேஷன் ஒப்பரேஷன்’ தாக்குதலுக்கான ஒத்திகை 1986 இறுதியிலேயே நடந்துவிட்டது.

( தொடரும் )

 

 

 

 

No comments: