நோர்வேயில் மர்ம நபரால் அம்பெய்து ஐவர் படுகொலை
ஜூலை படுகொலையின் பின்னர் நோர்வேயில் இடம்பெற்ற மோசமான தாக்குதல்
கைவிடப்பட்ட கொள்கலனில் இருந்து 126 குடியேறிகள் மீட்பு
மெக்சிகோ, கனடா எல்லையை திறப்பதற்கு அமெரிக்கா முடிவு
கொலம்பஸ் சிலையை நீக்குகிறது மெக்சிகோ
மூவருக்கு பொருளாதார நோபல் பரிசு அறிவிப்பு
ஆப்கானுக்கு மனிதாபிமான உதவி வழங்க ஜி20 நாடுகள் விருப்பம்
நோர்வேயில் மர்ம நபரால் அம்பெய்து ஐவர் படுகொலை
- டென்மார்க்கை சேர்ந்த 37 வயது நபர் கைது
நோர்வே நாட்டில், மர்மநபர் ஒருவர் அம்பு, வில்லை பயன்படுத்தி பொதுமக்கள் மீது எய்து 5 பேரை கொன்றுள்ளதோடு, துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளார்.
இதில் 2 பொலிஸார் உள்ளிட்ட பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து அந்த நபர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் கொங்ஸ்பேர்க் (Kongsberg) நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இரவு நேரத்தில் மர்ம மனிதர் ஒருவரால் இப்பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள தலைநகரின் மையப்பகுதி இரவு நேரத்தில் பொதுமக்கள் பரபரப்பாக இருந்த இருந்த வேளையில், கையில், விம், அம்புடன் வந்த அந்த நபர், மக்களை அம்புகள் எய்தி கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சராமரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளார்.
சுற்றி என்ன நடப்பது என்று தெரிவதற்கு முன்பே தாக்குதலுக்குள்ளான மக்கள் சுருண்டு வீழ்ந்துள்ளனர். பலர் அங்கிருந்து தங்கள் உயிரை கையில் பிடித்தவாறு தப்பி ஓடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த பொலிசார் குறித்த நபரை சுற்றி வளைத்து பிடிக்க முயற்சித்த வேளையில் பொலிசார் மீதும் அவர் தாக்குதல் நடாத்தியுள்ளார்.
இறுதியில் குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்திய நபரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் 37 வயதான டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடாத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியப்படுத்தபடவில்லை.
அரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த தாக்குதலை பொதுமக்கள் மீது அந்த நபர் நடத்தியுள்ளதாக கூறப்படுவதோடு, அந்நபரின் கை நிறைய அம்புகள் இருந்ததாக அதனை அவதானித்த ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்
ஜூலை படுகொலையின் பின்னர் நோர்வேயில் இடம்பெற்ற மோசமான தாக்குதல்
நோர்வேயில் அம்பு மூலம் வில்லை எய்து தாக்குதல் நடத்தி பலரைக் கொன்ற இஸ்லாத்துக்கு மதம் மாறிய ஆடவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் கடும்போக்காளராக மாறி இருக்க வாய்ப்பு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
37 வயதுடைய டென்மார்க் பிரஜையான அந்த ஆடவர் கடந்த புதன்கிழமை இரவு தெற்கு நகரான கொங்ஸ்பேர்க்கில் நடத்திய தாக்குதலில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர் அன்று இரவே கைது செய்யப்பட்டு பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளார்.
கடந்த 2020இல் கடைசியாக இந்த ஆடவருடன் அதிகாரிகள் தொடர்பில் இருந்ததாக பிராந்திய பொலிஸ் தலைவர் ஓலே பிரெட்ருப் செவருட் தெரிவித்துள்ளார்.
இதில் கொல்லப்பட்ட அனைவரும் 50 மற்றும் 70 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களை நடத்தி ஆறு நிமிடத்திற்குள்ளேயே அந்த ஆடவரை பொலிஸார் எதிர்கொண்ட நிலையில், அவர் பொலிஸாரை நோக்கியும் அம்பு எய்துள்ளார். இதனை அடுத்து பொலிஸார் எச்சரிக்கை வேட்டுகளை செலுத்தியுள்ளனர். தொடர்ந்து தப்பியோடிய அந்த ஆடவர் 35 நிமிடங்கள் கழித்தே கைது செய்யப்பட்டார்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றபோதே தாக்குதலுக்கு இலக்கான ஐவரும் உயிரிழந்திருந்ததாக பொலிஸ் தலைவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் 'பயங்கரமானது' என்று பதவியில் இருந்து வெளியேற சில மணி நேரத்திற்கு முன்னர் நோர்வே பிரதமர் எர்னா செல்பேர்க்கு வர்ணித்துள்ளார்.
கொங்ஸ்பேர்க்கின் மேற்கு பக்கம் உள்ள பேரங்காடி ஒன்றுக்குள் வைத்து இந்தத் தாக்குதுல்களை ஆரம்பித்ததாக அந்தத் தாக்குதல்தாரி குறிப்பிட்டுள்ளார். இதில் அப்போது அந்தக் கடையில் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயம் அடைந்துள்ளார்.
தலைநகர் ஓஸ்லோவிலிருந்து 68 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள அந்நகரின், பேரங்காடி உட்பட வெவ்வேறு இடங்களில் அரை மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் அந்த ஆடவர் அம்புத் தாக்குதலை நடத்தியுள்ளார். சுவர்களில் அம்பு பாய்ந்த அடையாளங்கள் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் காயமடைந்த அதிகாரி மற்றும் மற்றுமொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உயிராபத்து இல்லை என்று கூறப்பட்டது.
காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் எட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் மூன்று ஆம்புலன்ஸ் ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. நகரம் எங்கும் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர்.
தாக்குதல் நடத்தியவர் தனியாகவே செயல்பட்டிருக்கிறார் என்று குறிப்பிட்ட பொலிஸார், தாக்குதலுக்கான காரணம் குறித்து தெரிவிக்கவில்லை. கடந்த 2011 ஜூலையில் உடோயோ தீவில் 77 பேர் படுகொலை செய்யப்பட்ட தீவிர வலதுசாரி கடும்போக்காளரான அன்டெர்ஸ் பஹ்ரிங் ப்ரிவிக்கின் தாக்குதலுக்கு பின்னர் நோர்வேயில் இடம்பெற்ற மோசமான தாக்குதல் சம்பவமாக இது உள்ளது.
பொதுவாக ஸ்கன்டிநேவியன் நாடுகளில் பொலிஸார் துப்பாக்கியுடன் பணி புரிவதில்லை. எனினும் இந்த சம்பவத்தை அடுத்து அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் ஆயுதம் வைத்திருக்குமாறு நோர்வே பொலிஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. நன்றி தினகரன்
கைவிடப்பட்ட கொள்கலனில் இருந்து 126 குடியேறிகள் மீட்பு
குவாத்தமாலா பொலிஸார் கைவிடப்பட்ட கொள்கலனிலிருந்து 126 அகதிகள் மற்றும் குடியேறிகளை காப்பாற்றியுள்ளனர்.
கப்பல் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் அந்தக் கொள்கலன் வீதியோரம் இருந்தது. அதிகாலையில் நுயேவா கான்செப்சியோன் நகரின் எல்லையில் அந்தக் கொள்கலன் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது. கொள்கலனிலிருந்து மக்கள் அலறும் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதிலிருந்த பெரும்பாலானோர் ஹெய்டி நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் செல்ல கடத்தல்காரர்களிடம் பணம் கொடுத்ததாக நம்பப்படுகிறது. கடத்தல்காரகள் அகதிகளை ஏமாற்றி பாதி வழியிலேயே கைவிட்டதாகக் கூறப்படுகிறது. நேபாளம், கானா ஆகிய நாட்டினரும் அந்த கொள்கலனுக்குள் இருந்தனர்.
தற்போது அந்த அகதிகள் குவாத்தமாலா அரசாங்கத் தங்குமிடங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
அகதிகள் எங்கிருந்து வந்தனரோ அங்கு மீண்டும் அனுப்பப்படுவார்கள் என்று குவாத்தமாலா அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக அமெரிக்காவின் தெற்கு எல்லைக்கு அருகில் வைத்து மூன்று குளிரூட்டப்பட்ட கொள்கலன் டிரக் வண்டிகளுக்குள் சுமார் 350 சிறுவர்கள் உட்பட 652 குடியேறிகளை மெக்சிகோ நிர்வாகம் தடுத்த சம்பவம் இடம்பெற்ற ஒரு நாளைக்கு பின்னரே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நன்றி தினகரன்
மெக்சிகோ, கனடா எல்லையை திறப்பதற்கு அமெரிக்கா முடிவு
முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு எதிர்வரும் நவம்பரில் அமெரிக்கா தனது மெக்சியோ மற்றும் கனடா நாட்டு எல்லைகளை திறக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
அத்தியாவசியமற்ற நோக்கத்திற்காக தரை மற்றும் படகு வழியாக எல்லை கடந்து வருபவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எந்தப் பயணங்களுக்கும் 2022 ஜனவரி தொடக்கம் தடுப்பூசி பெற்ற அத்தாட்சி கட்டாயப்படுத்தப்படவுள்ளது.
கொரோனா பெருந்தொற்ற காரணமாக 2020 மார்ச் தொடக்கம் அமெரிக்கா தனது வடக்கு மற்றும் தெற்கு அண்டை நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடு கொண்டுவந்தது.
எனினும் முழுமையாக தடுப்பூசி பெற்ற வெளிநாட்டு விமானப் பயணிகளுக்கு வரும் நவம்பர் தொடக்கம் கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாக அண்மையில் முடிவெடுத்தது.
கொரோனா தொற்று ஆரம்பித்தது தொடக்கம் அமெரிக்காவில் 42 மில்லியன் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இந்த நோய்த் தொற்றினால் அந்நாட்டில் 670,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
கொலம்பஸ் சிலையை நீக்குகிறது மெக்சிகோ
மெக்சிகோ தலைநகரில் கிறிஸ்டோபர் கொலம்பஸின் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தில் பழங்குடிப் பெண் ஒருவரின் சிலை நிறுவப்படும் என்று அந்த நகர ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
பழங்குடி உரிமை செயற்பாட்டாளர்கள் கொலம்பஸ் சிலையை உடைக்கப்போவதாக எச்சரித்ததை அடுத்து அந்த சிலை கடந்த ஆண்டு அகற்றப்பட்டது.
இந்நிலையில் அமஜக் இளம் பெண் என்று அறியப்படும் கொலம்பஸுக்கு முந்திய சிலையின் பிரதி ஒன்று வைக்கப்படவிருப்பதாக மெக்சிகோ சிட்டி நகர மேயர் கிளோடியா செயின்பவும் குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டக்காரர்களால் அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருக்கும் கொலம்பஸ் சிலைகள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் பிறந்த கடலோடியான கொலம்பஸ் ஸ்பானிய மன்னரின் நிதி உதவியுடன் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவை அடைந்தார்.
இது அமெரிக்காவில் ஸ்பானிய ஆக்கிரமிப்புக்கு வழி வகுத்தது. கொலம்பஸை பலரும் அடக்குமுறை மற்றும் காலநித்துவத்தின் அடையாளமாக பார்க்கின்றனர். நன்றி தினகரன்
மூவருக்கு பொருளாதார நோபல் பரிசு அறிவிப்பு
2021 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜோஸ்வா டி ஆங்க்ரிஸ்ட் மற்றும் கெய்டோ டபிள்யூ. இம்பென்ஸ் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக சுவீடனின் ஸ்டோக்ஹோமில் உள்ள தேர்வுக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் பொருளாதாரம் குறித்த பங்களிப்பிற்காக டேவிட் கார்டுக்கு நோபல் பரிசின் ஒரு பாதியும், மற்ற இருவருக்கு மற்றொரு பாதியும் வழங்கப்படுகிறது.
முன்னதாக, மருத்துவம், பௌதீகம், இரசாயனவியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நோர்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் ஒக்.5, திங்கள்கிழமை முதல் ஆரம்பித்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. மற்ற துறைகளுக்கு நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இறுதியாக நேற்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
ஆப்கானுக்கு மனிதாபிமான உதவி வழங்க ஜி20 நாடுகள் விருப்பம்
விநியோகம் நேரடியாக நடைபெறும் என அமெரிக்கா அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சீரழிவுகளையடுத்து அந்நாட்டுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்ய அமெரிக்காவும் ஜி-20 நாடுகளும் முன்வந்துள்ளன.
தலிபான்கள் ஊடாக அல்லாமல் இந்த உதவிகளை சுதந்திர சர்வதேச அமைப்புகள் வழியாக நேரிடையாகவே ஆப்கான் மக்களை சென்றடையும் வகையில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இவ்வுதவிகளை வழங்குவதோடு, ஆப்கான் மக்கள் மத்தியில் அடிப்படை மனித உரிமைகளை குறிப்பாக பெண்கள், சிறுமியர், சிறுபான்மை இனத்தவர் மத்தியில் வளர்க்கும் வகையில் இந்நாடுகள் செயல்படும் என்றும் வௌ்ளை மாளிகை அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜி-20 நாடுகளுக்கான விசேட கூட்டம் இத்தாலி தலைமையில் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக கடந்த செவ்வாய் நடைபெற்றபோதே இம்முடிவு எட்டப்பட்டது.
ஆப்கான் விவகாரத்தில் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து மனிதாபிமான, இராஜதந்திர ரீதியாக ஆப்கான் மக்களுக்கு உதவ அமெரிக்கா கடமைப்பட்டிருப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதும் அந்நாட்டை சீனாவும் பாகிஸ்தானுமே அங்கீகரிக்க முன்வந்தன. ஏனைய நாடுகள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற மனநிலையில் உள்ள தருணத்திலேயே ஜி-20 நாடுகள் ஆப்கானுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளன. இது தொடர்பாக ஆப்கானின் தலிபான் அரசு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. நன்றி தினகரன்
No comments:
Post a Comment