இலங்கையில் மீண்டும் பிரஜைகள் குழுக்களை உயிர்ப்பித்தல் வேண்டும் ! அவதானி


மாமாவின் கையை வெட்டி வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்ற மருமகன்.  கிளிநொச்சியில் சம்பவம். காரணம் காணித் தகராறு.

ஆறு இலட்சம் ரூபாவுக்கு  மேற்பட்ட பெறுமதியுடைய போதை மாத்திரை வைத்திருந்த நபர் ஏழாலையில் கைது.  காரணம் பேராசை.

மட்டக்களப்பில் மாத்திரம் கடந்த 2020 ஆம் ஆண்டில் 150 பேர் தற்கொலை. காரணம் மன அழுத்தம்.

மட்டக்களப்பில் பண்ணை  ஒன்றின் காவலாளி சடலமாக மீட்பு.


  காரணம் தகராறு.

பருத்தித்துறை புனித நகர் பிரதேசத்தில் வன்முறைக்கும்பல் அட்டகாசம். காரணம் :  சமூகத்தினுள் முரண்பாடுகள்.

மாதகலில் மீனவரின் படகை எரித்தது ஒரு கும்பல். காரணம் தனிப்பட்ட கோபம்.

திருகோணமலை தனியார் விடுதியில் நஞ்சருந்திய நிலையில் இரண்டு பெண்கள் மீட்பு.

அரியாலையில் ஒரு வீட்டுக்கு தீவைத்த மர்ம நபர்கள்.

கிளிநொச்சிப்பிரதேசத்தில் சிறுவர்மீது பாலியல்  துஷ்பிரயோகம் அதிகரிப்பு.   

கிளிநொச்சி மருத்துவமனைக்குள் புகுந்து ஏற்கனவே வாள்வெட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர் மீது மீண்டும் வாள் வெட்டுத்தாக்குதல் .

அப்பளம் எடுத்துச்சாப்பிட்டதற்காக ஐந்து வயதுக்குழந்தையின் வாயில் நெருப்பால் சுட்டு காயப்படுத்திய  தாய்.  இதற்குக்காரணம் கண்டிப்பு என்பதா..? குரூரம் என்பதா..?

இச்செய்திகள் யாவும் கடந்த சில நாட்களுக்குள் வடக்கு – கிழக்கில்  தமிழ்ப்பிரதேசங்களிலிருந்து கிடைத்துள்ள செய்திகள்.

ஈழத்தமிழ் மக்கள் கொடிய போர்க்காலத்தை கடந்து வந்தவர்கள்.  ஆனால்,  தமிழ் சமூகத்துள் இன்னமும் ஆளை ஆள் தாக்கும் துன்புறுத்தும்,  மனஅழுத்தங்களினால் தற்கொலைக்குத் தயாராகும்,  மனவக்கிரத்தினால், சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்யும்  மற்றும் ஒரு வடிவத்துள் போர்க்காலம் இன்னமும் தொடருகின்றது.

இக்காலத்தில் எறிகணை வீச்சுக்களோ, குண்டு வீசும் தாக்குதல்களோ இல்லை.  ஆனால், ஆளையாள் தாக்கி கொல்லும்,  படுகாயப்படுத்தும் அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும்  செயல்கள்தான் தொடருகின்றன.

இதனைச்செய்பவர்கள் இலங்கை அரசின் ஆயுதப்படையினரோ, அல்லது பொலிஸாரோ அல்ல. தமிழர்களே சக தமிழர்களுக்கு எதிராக  மேற்கொள்ளும் வன்முறைகள்.

இந்தப்பின்னணிகளுக்கு மத்தியில் இலங்கை அரசு,  அத்தியாவசிய உணவுப்பொருட்களான பால் மா, பாண், மற்றும்  எரிவாயு உட்பட எரிபொருளின் விலையை உயர்த்தியுள்ளது. அதனால் பதுக்கல் வர்த்தகமும் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். அதனால் என்ன நடக்கும்..?  திருட்டும், கொள்ளையும் பெருகும்.

சமகாலத்தில் சமூகம் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடிகளிலிருந்து மீண்டு,  ஆரோக்கியமான சமூகம் தோன்றவேண்டுமாயின்,  ஊருக்கு ஊர்  பிரதேசத்திற்கு பிரதேசம் விழிப்புணர்வு பிரஜைகள் குழுக்கள் தோன்றவேண்டும்.

முன்னர் போர் நெருக்கடி நீடித்த காலத்தில் பல பிரஜைகள் குழுக்கள் வடக்கிலும் கிழக்கிலும் அர்ப்பணிப்புடன் இயங்கின.  போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவும்  இயங்கியது.

போராளிகளுக்கும் ஆயுதப்படைகளுக்கும் மத்தியில் கத்திமீது நடப்பதுபோன்று முடிந்தவரையில் சமாதானத்தை நிலைநாட்ட அந்த குழுக்கள்  பாடுபட்டன.

இந்தப்பத்தியின் தொடக்கத்தில்  சொல்லப்பட்ட துன்பியல் நிகழ்வுகள் இரண்டு வெவ்வேறு தரப்புகளுக்கு மத்தியில்  நடக்கவில்லை.

ஒரே மொழி பேசும் ஒரே இனத்தின் மத்தியில்தான் நடக்கின்றன.

அவ்வாறாயின்  இந்த சமகால நெருக்கடிகளை நிறுத்த அல்லது தணிப்பதற்கு என்ன செய்யலாம்…?  அதற்கு பொலிஸாரை மாத்திரம் நம்பியிருப்பதா..?

குற்றச்செயல்களினால் சந்தேகத்தின்பேரில் கைதானவர்களும் பொலிஸ் காவலில்  இறந்திருக்கின்றனர் என்பதையும் மறப்பதற்கில்லை.

வடக்கு – கிழக்கு பிரதேசங்களில்  முன்னர் இணக்க சபைகள், சமாதான குழுக்கள்  இயங்கின.   குடும்பங்களுக்குள் ஏற்படும் காணி – சொத்து தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்கு அவை முன்வந்தன.

இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்களில் அன்றாடம் நாம் காணும் காட்சிகள்  ஆரோக்கியமான சமூகத்திற்கான அறிகுறியல்ல. இங்கு சமூக நலன் விரும்பிகளாக இருப்பவர்கள் பலர் ஆசிரியர்கள், அதிபர்களாகவும் பொது அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்களாகவும்,  ஆலயங்கள், தேவாலயங்கள்,  மசூதிகளில் அறங்காவலர்களாகவிருப்பவர்களாவும்,  ஊடகவியலாளர்கள், கலைஞர், படைப்பாளிகளாகவும் முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியர்களாகவும் இருக்கின்றனர்.

இவர்கள் மத்தியிலிருந்து மீண்டும் பிரஜைகள் குழுக்கள் தோன்ற வேண்டும்.  அவை சமூக விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை உருவாக்கி செயற்படுத்தல் வேண்டும்.

சமூக விரோதச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைதானால்,  அதற்குரிய தண்டனையை சிறையில் கழித்துவிட்டுத்திரும்பி நல்லவர்களாக மாறிவிடுவார்கள் என்று மாத்திரம் சமூகம் நம்பியிருக்க இயலாது.

பிரஜைகள் குழுக்கள் தத்தம் பிரதேசங்களில்  குடும்பங்களிடையேயான  ஒற்றுமை, சமூக ரீதியிலான நல்லிணக்கம் முதலானவற்றில் அடிக்கடி சந்திப்புகளையும் கலந்துரையாடல்களையும் நடத்தல் வேண்டும்.

முப்பது  ஆண்டு கால கொடிய போர்க்காலத்தை கடந்து வந்துள்ளது எமது தமிழ் சமூகம் என்பதை மறந்துவிடாமல்,  குறிப்பிட்ட போரின் இறுதிக்காலத்தில் பிறந்துள்ள குழந்தைகளுக்கு தற்போது பன்னிரண்டு வயதாகிறது என்பதையும் கவனத்தில் கொண்டு, இந்தப்பிள்ளைகளின் எதிர்காலமாவது சுபீட்சமாக அமையவேண்டும் என்பதற்காகவாவது மீண்டும் பிரஜைகள் குழுக்கள் உயிர்ப்புடன் இயங்கத் தொடங்கவேண்டும்.

 “ நாளை நமதே… நாளை நமதே….
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே….. “ என்று தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் இந்த பிரஜைகள் குழுக்கள் பாடவேண்டிய  காலத்தின் விளிம்பில் நிற்கின்றோம்.

வீட்டில் உணவுக்காக பொரித்த அப்பளத்தை குழந்தை எடுத்து உண்டால், அது மிகப்பெரிய குற்றமா..? அதற்காக அதன் மென்மையான இதழ்களில் சூடுவைத்து ஒரு தாய் துடிதுடிக்கச்செய்கிறாளென்றால், அதற்காக அவளுக்கு சட்டப்படி தண்டனை கொடுத்துவிட்டால் மாத்திரம்போதுமா..? அது ஏதோ ஒரு குடும்பத்திற்குள் நிகழ்ந்த சம்பவம் என்று சமூகம் வெறும் பார்வையாளராக மாறிவிடலாகாது.

இவ்வாறு குரூரமாக வளர்க்கப்படும் குழந்தைகள்தான் எதிர்காலத்தில் உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகும்.  அதுவே சமூக நோயாக மாறிவிடும்.

எனவே சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் பிரஜைகள் குழுக்கள் அர்ப்பணிப்புடன் இயங்கவேண்டியிருக்கிறது.

சமகால கோவிட்  பெருந்தொற்றினால் ஏராளமான உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.  அவ்வாறு தங்கள் குடும்ப உறவுகளை இழந்து தவித்துள்ளவர்களை ஆற்றுப்படுத்தும் பணிகளிலும் இந்த  பிரஜைகள் குழுக்கள் ஈடுபடமுடியும்.

சமூகத்தின் மத்தியில் மலிந்திருக்கும்  குரோதங்களை களைவதற்கு பேச்சுவார்த்தைகள்தான் அவசியமானது.  அந்தப்பேச்சுவார்த்தைகள் கோபத்தை தணிக்கும்.

அயலானை நேசிக்கும் எண்ணம் மனதில் துளிர்விட்டால்,  அயலானின் சொத்துக்களை  எரித்து சேதமாக்கும் எண்ணம் வராது.    தமிழ்ப்பிரதேசங்களில்  பிரஜைகள் குழுக்களை அமைப்பதற்காக  நல்லெண்ணம் படைத்தவர்கள் அனைவரும் ஒன்றிணையே வேண்டிய காலம் கனிந்துள்ளது.

---00---

 

 

 

 

 

 

No comments: