அடைக்கலமே தந்து அருளிடுவாய் தாயே !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 

அகமதில் தூய்மை அமர்த்திவிடு தாயே

முகமதில் மலர்ச்சி கொடுத்துவிடு தாயே
கறைநிலை மனத்தில் அகற்றிவிடு தாயே

களிப்புடனே வாழ அருளிவிடு தாயே 
 
சினமது தொடரா நிறுத்திடு தாயே
சிறப்பதை மனதில் இருத்திடு தாயே
தனமதில் தயையை நிறைத்திடு தாயே
தாழ்பணிந்  தோமம்மா காத்திடு தாயே 

கல்வியொடு செல்வம் தரவேண்டும் தாயே
கசடகல என்றும் துணையாவாய்  தாயே
உள்ளமதில் என்று முறுதிநிறை தாயே
உன்கமல பாதம் துணையெனக்கு  தாயே  

வாய்மையுடன் வாழ வரமருள வேண்டும்

வாழும்வரை நோய்கள் வராதிருக்க வேண்டும்
தாழ்வு மனப்பாங்கு தளர்ந்துவிட வேண்டும்
தாயே உன்பாதம் சரணடைந்தேன் அம்மா

வாதமது செய்யும் மனமகல வேண்டும்

போதைநிறை எண்ணம் பொசுங்கிவிட வேண்டும்
காதலுடன் வாழ்வை வாழ்ந்துவிட வேண்டும்
கருணையுடன் என்னைக் காத்திடுவாய்  தாயே

ஆசையெனும் தீயை அணைத்துவிடு தாயே


அகந்தையெனும் பேயை அழித்துவிடு தாயே 
பாசமெனும் உணர்வை நிறைத்துவிடு தாயே 
பக்தியுடன் உன்னைப் பரவிவிட அருள்தா 

 

அகவொழுக்கம் அமைய அருளிடுவாய் அம்மா
அறமதனை மனதில் நிறைத்திடுவாய் அம்மா 
குறைபகரும் குணத்தை கொன்றிடுவாய் அம்மா
குவலயத்தை நாளும் காத்திடுவாய் அம்மா 

 

அலைபாயும் மனத்தை  அகற்றிடுவாய் தாயே
நிலையான செல்வமதை  நீதருவாய்  தாயே
உலைபோல கொதிக்கிறது மனமென்றும் தாயே
உன்கருணை மழையைப் பொழிந்திடுவாய்  தாயே 

முத்தமிழும் எனக்கு தந்திடுவாய் தாயே
முழுநிலவாய் நீயும் விளங்குகிறாய் தாயே
அத்தனைக்கும் காரண மாகுகிறாய் தாயே
அடைக்கலமே தந்து அருளிடுவாய்  தாயே  


No comments: