பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் மறைவு இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு பேரிழப்பு

 Saturday, October 16, 2021 - 12:08pm

DR AG Husain Ismail

- இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அனுதாபம்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உவேந்தரும், இலங்கை தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், முஸ்லிம் சமூகத்தின் மூத்த கல்வி யியலாளருமான பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் அவர்களின் மறைவு இலங்கை முஸ்லிம் சமூகத்தில் குறிப்பாக கல்வித் துறையில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

முஸ்லிம் சமூகத்தில் சமூக ஒழுக்கங்கள் காலத்திற்கு ஏற்ப மேம்பட வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த அவர், மாற்றத்தை வேண்டி நிற்கும் பரப்புகளில் தைரியமாக தனது நிலைப்பாடுகளை வெளிப்படையாக முன்வைத்துச் செயற்பட்டவர்.மானிடத் தன்மை கொண்ட சமூகப் பெறுமானம் இலங்கை முஸ்லிம் கல்விப் பரப்பிலிருந்து கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதையும் அரச வளங்கள், பாராபட்சமற்ற நிதி ஒதுக்கீடுகள் என்பனவற்றுக்குள் கல்வி சிக்கி விடக் கூடாது என்பதையும் அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தினார்.

1964 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவராக 2005 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்ட போது கல்விமான்கள் மற்றும் தேசிய பிராந்திய கட்சி சார்ந்த அரசியல்வாதிகளை ஒன்றுகூட்டி கல்வி சார்ந்த முன்னேற்ற முன்மொழிவுகளை அரசாங்கத்திற்கு முன்வைத்தார்.நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும் முஸ்லிம் சமூகத்தின் கல்வி சார்ந்த பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதிலும், அனைத்து மாணவர்களும் கல்வியைப் பெறுவதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உரிமை உண்டு என்பதிலும் வறுமை காரணமாக பாடசாலையை விட்டு இடை விலகியோரை மீள இனைத்துச் செயற்படுத்துவதிலும் கூடிய அக்கறையாக செயற்பட்டவர்.அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டில் இவரின் பங்களிப்பு காத்திரமானது. இலங்கை முஸ்லிம்களின் கல்வி மீதுள்ள தடைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் பேராசியர் பல்வேறுபட்ட தளங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டு பல தீர்வு முன்மொழிவுகளையும் வழங்கியுள்ளார்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்விப் பரப்பில் அவரின் வகிபாகம் கனதியானது. 2003 - 2009 காலப் பகுதியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடமையாற்றிய சமயம் பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்கு அயராத பங்களித்தார். அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீட உருவாக்கத்தில் இவரின் பங்களிப்பு மகத்தானது.பல்கலைக்கழக விரிவுரையாளர்களை தகைமைப்படுத்துவதில் கூடிய அக்கறை காட்டி செயற்பட்டார்.

சிவில் சமூகக் கட்டமைப்பு பல்தரப்பு துறை சார்ந்தவர்களை ஒன்றிணைத்து முற்போக்காக செயற்படுவதாலேயே நமது இருப்பு தங்கியுள்ளது என்பதை வலியுறுத்தியவர்.இலங்கை முஸ்லிம்களின் கல்வி முயற்சியாண்மை, அதனூடாக சமூக பொருளாதார முயற்சியாண்மைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

சிறந்த சிந்தனையாளர்,கல்விமான் என்பதைத் தாண்டி அவர் நற்பண்பாளர்.தேடலுள்ள ஆய்வாளர்.இலக்கியம் மீது நேசம் கொண்டவர்.

களுத்தறை பேருவளையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் பேருவளைப் பிரதேசத்தின் கல்வி முன்னோடிகளில் சிரேஷ்டமானவர்.பேருவளை பிரதேசத்தின் கல்வி,சமய,சமூக மாற்ற முயற்சியில் காத்திரமான வகிபாகத்தை நிலைப்படுத்தியவர்.பேருவளை பிரதேசத்திலிருந்து முதன் முதலாக பல்கலைக்கழ துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கல்வியியலாளர்.பேருவளை தர்கா நகர் இஷாஅதுல் இஸ்லாம் அநாதைகள் காப்பகத்தின் தலைவராக இறுதி வரை செயற்பட்டார்.

என்னுடனும் எனது குடும்பத்துடன் நல்ல உறவுகளை பேணியவர். எனது தமிழ் மொழியெயர்ப்பு நூலான 'இதயம் பேசுகிறது' எனும் நூல் வெளியீட்டின் போது நூல் பற்றிய திறனாய்வை திறம்பட மேற்கொண்டதை மரியாதையுடன் நினைவு கூருகிறேன். மலேஷியா மலாய் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட ஆய்வாளராகவும் மலேஷியா இஸ்லாமிய விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் செயற்பட்டார்.    நன்றி தினகரன்

No comments: