இலங்கைச் செய்திகள்

இந்திய இராணுவத் தளபதி திருகோணமலைக்கு விஜயம் 

ஒம்புட்ஸ்மனை சந்தித்துரையாடிய நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர்

ஆலயத்திற்குள் பொலிஸ் அதிகாரி காலணியுடன் சென்ற விவகாரம்; இந்து சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அறிக்கை

 'பாராளுமன்றத்தில் திலகர்' நூல் வெளியீடு

யாழில் வாள்வெட்டு, திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

வடக்கில் வாள்வெட்டுக்கு விரைவில் முற்றுப்புள்ளி

இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லையில் ஆரம்பித்த கடல் வழிப் போராட்டம் யாழில் நிறைவு!


இந்திய இராணுவத் தளபதி திருகோணமலைக்கு விஜயம் 

அரச அதிபருடன் சந்தித்துரையாடினார்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந் நரவானே நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சனவை அரசாங்க அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்திய இராணுவத் தளபதியால் அரசாங்க அதிபருக்கு நினைவுப் பரிசில் வழங்கப்பட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபரும் இந்திய இராணுவ தளபதிக்கு நினைவு பரிசிலொன்றை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 


 


ஒம்புட்ஸ்மனை சந்தித்துரையாடிய நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர்

நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்

நியூஸிலாந்து நாட்டின் உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிலிட்டன் மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் அன்ரு ரவலர் ஆகியோர் பாராளுமன்றத்தின் குறைகேள் அதிகாரியான (ஒம்புட்ஸ்மன் ) ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.ரீ. சித்திரசிறியை நேற்று சந்தித்தனர். கொழும்பு, பம்பலப்பிட்டியிலுள்ள ஒம்புட்ஸ்மன் அலுவலகத்தில்  இச்சந்திப்பு இடம்பெற்ற து. இலங்கையில் உள்ள அரச திணைக்களங்கள்,கம்பனிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களில் சேவையாற்றும் அரச ஊழியர்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால், அவை பற்றிய முறைப்பாடுகளை ஆராய்ந்து உரிய நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து உடன் தீர்வு பெற்றுக் கொடுத்தல் போன்ற விடயங்களில் குறைகேள் அதிகாரியின் நடவடிக்கைகள் பற்றி உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் அலுவலகத்தின் நிர்வாக வள குறைபாடுகள் பற்றி தெரிவித்த குறைகேள் அதிகாரி, ஊழியர்களுக்காக மடிக் கணினி ஒரு தொகுதியை வழங்குமாறும் உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை முன்வைத்தார். அதனை நிவர்த்தி செய்வதாக நியூஸிலாந்து உயர் ஸ்தானிகர் உறுதியளித்தார்.

தெஹிவளை, கல்கிசை விசேட நிருபர் - நன்றி தினகரன் 



ஆலயத்திற்குள் பொலிஸ் அதிகாரி காலணியுடன் சென்ற விவகாரம்; இந்து சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அறிக்கை

பொலிஸ் அதிகாரி ஒருவர் ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலயத்திற்குள்ளும் ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்குள்ளும் காலணியுடன் பிரவேசித்ததாகச் செய்திகள் சமூக வலைத்தளங்களிலும் இணையத் தளங்களிலும் பரவிய நிலையில் அதன் உண்மைத்தன்மை தொடர்பாக விடயமறிய இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டது.

இதன் பிரகாரம் பருத்தித்துறைப் பிரதேச செயலக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலமாக சம்பந்தப்பட்ட ஆலயங்களின் அறங்காவலர் சபைத் தலைவரிடம் நேரிற் சென்று அறிக்கை பெற்றுக் கையளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதற்கமைய இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், பொலிஸ் உத்தியோகத்தர் வருகை தொடர்பாக முதல்நாளே அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்ததென்றும் வந்தவர்கள் இந்து சமய கலாசார முறைப்படியே ஆலயத்திற்குள் உட்பிரவேசித்து, சுவாமிக்கு அர்ச்சனை செய்வித்து, குருக்கள் ஆசிர்வாதமும் பெற்று, ஆலயதரிசனம் முடித்து வெளியேறினார்கள் என்று ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய அறங்காவலர் சபையாற் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் அறங்காவலர் சபையினர், வழமை போன்று வந்து செல்லும் அடியார்கள் போன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்து சென்றிருக்கலாம் என்றும் முகப் புத்தகங்களில் உள்ள விடயம் தொடர்பாகத் தங்கள் அறியவில்லை எனவும் பொலிஸ் உத்தியோகத்தர் காலணியுடன் பிரவேசித்ததாக தாம் எந்த ஒரு முறைப்பாடும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 




'பாராளுமன்றத்தில் திலகர்' நூல் வெளியீடு

முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜாவின் பாராளுமன்ற உரைகளின் தொகுப்பான "பாராளுமன்றத்தில் திலகர்" தொகுதி 1, நூல் வெளியீடு இலங்கை நேரப்படி மாலை 7 மணிக்கு Zoom செயலி ஊடாக மெய்நிகராக நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுகள் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளர் நாயகமும் முன்னாள் மத்திய மாகாண சபை உப தவிசாளரும் பிரபல மலையக எழுத்தாளருமான மு.சிவலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் நூல் குறித்த உரைகளை மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் ஸ்தாபக செயலாளர் நாயகமும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் அரசியல் ஆய்வாளருமான பி. ஏ. காதர் ( லண்டன் ), அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம் ( யாழ்ப்பாணம்), பெப்ரல் (PAFFREL) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி,

சமூகப் பண்பாட்டு ஆய்வறிஞர் ஏ.பி.எம். இத்ரிஸ் ( மட்டக்களப்பு), தாயகம் திரும்பியோர் உரிமை மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் வழக்குரைஞருமான தமிழகன் (இந்தியா), அரசியல் எம். ஆர். ஸ்டாலின் ஞானம் (பிரான்ஸ்) ஆகியோர் வழங்கவுள்ளனர்.

ஏற்புரையை நூலாசிரியர் மல்லியப்புசந்தி திலகர் வழங்க நிகழ்ச்சிகளை பிரபல அறிவிப்பாளர் நாகபூஷணி கருப்பையா தொகுத்து வழங்கவுள்ளார்.

பாக்யா பதிப்பகம் ஒழுங்கு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் இணைந்து கொள்ள அனைவருக்கும் பொது அழைப்பாக Zoom செயலி இணைப்பு முகவரி இணைக்கப்பட்டுள்ளது.

Meeting ID: 891 8665 8150
Passcode: ebook

நன்றி தினகரன் 




யாழில் வாள்வெட்டு, திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

ஆயரின் முறைப்பாட்டுக்கு IGP பதிலளிப்பு

வடக்கில் போதைப் பொருள் பாவனை, வாள்வெட்டு சம்பவங்கள், திருட்டு சம்பவங்கள் அதிகரிக்க இளையோருக்கு வேலைவாய்ப்பு இன்மையே காரணம் என பொலிஸ்மா அதிபர் தமக்கு கூறியதாக யாழ். மறைமாவட்ட பேராயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் கூறியுள்ளார். யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர் யாழ்.மறைமாவட்ட பேராயரை நேற்றுமுன்தினம் மாலை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் யாழ்.ஆயர் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் எஸ்.எஸ். பியாக, டி.ஐ.ஜியாக யாழ் மாவட்டத்தில் கடமையாற்றி இருந்த ஒருவர் ஆவார். அவருக்கு யாழ்ப்பாணம் நன்றாக தெரியும், யாழ்ப்பாண மாவட்டத்தின் மீது நல்ல விருப்பம் கொண்டவர்.

இங்கே உள்ள பிரச்சினை தொடர்பில் ஆராய யாழ்.மாவட்டத்திற்கு வருகை தந்து என்னையும் சந்தித்துள்ளார்.அவ்வேளை இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பில்லாத விரக்தி நிலை காரணமாகவே போதைப் பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது என என்னிடம் தெரிவித்தார்.

அவரிடம் நான், முன்னைய காலத்தில் வீதி போக்குவரத்து விதிமுறைகள் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது. அதனை மீண்டும் பாடசாலைகளில் ஆரம்பிக்குமாறு கூறி இருக்கின்றேன். அது மாத்திரமல்லாமல் விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும், எனவும்,குறிப்பாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டப்பணம் விதிப்பதை விடுத்து அவர்களை ஒரு மணி நேரமாவது தடுத்து நிறுத்தி அவர்களுக்கு விளக்கம் அளிப்பதன் மூலம் தான் எமது மக்களுக்கு அதன் அர்த்தம் புரியும். அதனை செயற்படுத்துவதன் மூலம் பொது மக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த முடியும் என அவரிடம் கூறினேன் என தெரிவித்தார்.   நன்றி தினகரன் 




வடக்கில் வாள்வெட்டுக்கு விரைவில் முற்றுப்புள்ளி

புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா சபதம்

வடக்கில் வாள்வெட்டு சம்பவங்கள், வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது விடயம் தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், என்னுடைய பதவிக்காலத்தில் வடமாகாணத்தில் வாள்வெட்டு மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு இடமளிக்கப்போவதில்லை. வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நடவடிக்கை அத்தனையும் எடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.   நன்றி தினகரன் 




இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லையில் ஆரம்பித்த கடல் வழிப் போராட்டம் யாழில் நிறைவு!

இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லையில் ஆரம்பித்த கடல் வழிப் போராட்டம் யாழில் நிறைவு!-Protest Against Indian Fishermen

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று மு.ப. 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல் வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தை இன்று மு.ப. 9.30 மணியளவில் வந்தடைந்தது.

இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லையில் ஆரம்பித்த கடல் வழிப் போராட்டம் யாழில் நிறைவு!-Protest Against Indian Fishermen

இழுவை மடி மீன்பிடி முறை, கடற்தொழில் மற்றும் நீரியல்வள சட்டத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின் பின்னர் முற்றாக தடை செய்யப்பட்டிருந்தாலும் அது நடைமுறையில் இன்னமும் முழுமையாக செயற்படுத்தப்படாதுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் ட்றோலர் மீன்பிடி முறையின் காரணமாக வடக்கு மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்கு நீதி கோரி கடல்வழியாக இந்த கண்டனப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லையில் ஆரம்பித்த கடல் வழிப் போராட்டம் யாழில் நிறைவு!-Protest Against Indian Fishermen

இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சிறீதரன், சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்,இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லையில் ஆரம்பித்த கடல் வழிப் போராட்டம் யாழில் நிறைவு!-Protest Against Indian Fishermen

இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் பலரும் கலந்து கொண்டனர்

யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன் 



No comments: