பாரதி தரிசனம் தொடரில் கடந்த அங்கத்தில் ஈழத்து இலக்கிய இதழ் மல்லிகைக்கும் பாரதிக்குமிடையிலிருந்த தொடர்புபற்றி எழுதியிருந்தேன்.
மல்லிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த காலப்பகுதியில்
கொழும்பிலிருந்து 1971 ஆம் ஆண்டு முதல் வெளிவரத்தொடங்கிய
குமரன் இதழ் . 1983 வரையில் 77
இதழ்களை
வெளியிட்டது.
இலங்கையின் அரசியல் , கலை , இலக்கிய வரலாற்றில் சிற்றிதழான
குமரன் , மார்க்சிய வரலாற்றில், மார்க்சிய பார்வையில் பெரும் பங்காற்றியது என்றே அதன் ஆசிரியரும் மூத்த எழுத்தாளருமான செ. கணேசலிங்கன், 2006 ஆம் ஆண்டில் தொகுத்து வெளியிட்ட குமரன் இதழ்கள் ( பெருந்தொகுப்பு ) நூலின் முன்னுரையில் பதிவுசெய்துள்ளார்.
மாணவர் மாத இதழாக 15-01-1971 முதல் கொழும்பிலிருந்து வெளிவரத்தொடங்கிய குமரன், பின்னர் படிப்படியாக கலை, இலக்கிய, அறிவியல் படைப்புகளையும் மார்க்சிய
சிந்தனைகளின் அடிப்படையில் கட்டுரைகளையும் வழங்கத் தொடங்கியது.
தமது குமரன் இதழுக்கெனவே ஒரு வாசகர் குழாமை உருவாக்கிய ஆசிரியர் செ. கணேசலிங்கன், ஈழத்து இலக்கிய உலகில் மூத்த படைப்பாளியாவார். பல
நூல்களின் ஆசிரியர். இவற்றுள் நாவல்களே அதிகம்.
குமரன் இதழ் விமர்சனங்களுக்கும் அவற்றுக்கான
எதிர்வினைகளுக்கு வித்திட்ட து. பேராசிரியர் கைலாசபதிக்கும் செ. கணேசலிங்கனுக்கும் இடையே புரிந்துணர்வுமிக்க தோழமைக்கும் அப்பால், பாரதி தொடர்பாக மாற்றுக்கருத்துக்களே நிரம்பியிருந்தன.
கைலாஸின் பார்வைக்கும் கணேசலிங்கனின் பாரதி தொடர்பான பார்வைக்கும் இடையே மார்க்சிய வெளிச்சத்திலேயே வேறுபாடுகள் இருந்தன. அதன் எதிரொலியை குமரன் இதழ்களிலும் பார்க்க முடிந்தது. தனது பார்வைக்கு ஆதார சுருதி சேர்க்கும் கட்டுரைகளையும் குமரனில் கணேசலிங்கன் வரவாக்கினார். கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், நாடகம் முதலான துறைகளில் விஞ்ஞான பூர்வமான ஆக்கங்களை வெளியிட்ட குமரன் 56 ஆவது இதழுடன் தடைப்பட்டு, மீண்டும் பாரதி நூற்றாண்டு காலத்தில் 1982 நவம்பர் மாதம் முதல் வெளிவந்தது.
ஆயினும், 1983 ஜூன் மாதத்திற்குப்பின்னர் குமரன் வெளியாகவில்லை.
" மீண்டும் சிந்தனை அலைகளை எழுப்ப ' குமரன்' வெளிவருவது கண்டு மகிழ்ச்சி"
- என்று இந்திய நண்பர் ஒருவர் எழுதியிருந்தார். இங்கும் தமிழ்நாட்டிலிருந்தும் நண்பர்கள்
அடிக்கடி குமரன் பற்றி நலம் விசாரித்துக்கொண்டேயிருந்தனர். மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன.
குமரனின் வெற்றிடத்தை வேறு எந்த இதழாலும் நிரப்ப முடியவில்லை. நண்பர் பலரின் ஆர்வம்
, உறுதி, கூட்டுழைப்பாகவே குமரன் மீண்டும் வெளிவருகிறான். புதிய உருவில், புதிய சிந்தனைகளை
நிட்சயம் தருவான். பாரதி நூற்றாண்டு விழாக்கள், நூல்கள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள்
அளப்பில.
ஆயினும், முழுமையான பாரதியை விஞ்ஞானபூர்வமாக எவரும் காட்ட முனையவில்லை. " பாரதி - யார்" என்ற புலவர் இராசாமணி அவர்கள் தொடர்கட்டுரை இக்குறையைத்தீர்க்கும். பாரதியை முழுமையாகத் தரிசிக்க உதவும். பாரதி பற்றிப்பரப்பப்படும் பல பொய்மைகளை ஆராய்வாளர் பலர் அறிவர். ஆயினும் வெளியே கூற அச்சம். தம் மதிப்பு குறைந்துவிடுமோ என்ற பயம். ' அச்சமும் பேடிமையும் அடிமைச்சிறுமதியும்' என்ற பாரதி வரிகள்தான் நினைவில் வருகிறது.
இவ்வாறு பாரதி நூற்றாண்டு காலத்தில் எழுதிய கணேசலிங்கனின்
இக்கருத்துக்கள் தொடர்பாக ஈழத்து இலக்கியப்பரப்பில் சர்ச்சைகளும் தோன்றின. பாரதியைத் தரிசிப்போர், அவரைப்பல்வேறு கோணங்களில் நின்றே பார்க்கின்றனர்.
குமரனில் வெளியான இராசாமணியின் 'பாரதி -யார்' செ. கணேசலிங்கனின் 'பாரதி பற்றிய பொய்மைகள்', டாக்டர்
ந. தெய்வசுந்தரத்தின் 'பாரதியும் இந்திய விடுதலைப்போரும்' ஆகியன கவனிப்புக்குரிய பதிவுகள்.
குமரனின் 60 இதழ்களையும் மீளாய்வு செய்துள்ள செ. யோகநாதன், " பாரதி பற்றிய புதிய பாட்டாளி
வர்க்கக் கண்ணோட்டத்தை முதன் முதலில் வைத்தவன் குமரனே( 57 - 59 இதழ்கள்) தமிழ்நாட்டில்
பாரதி பற்றி நூறு நூல்கள் வந்தபோதும் இத்தகைய விஞ்ஞானப்பார்வையை எவரும் முன்வைக்கவில்லை."
எனக்குறிப்பிட்டுள்ளார்.
குமரன் இதழில் வெளியான பாரதி தொடர்பான
மறுவாசிப்பு கட்டுரைகள் பற்றி எனது இலங்கையில் பாரதி நூலில் ஏற்கனவே விரிவாக
எழுதியுள்ளேன்.
1972 ஆம் ஆண்டில் வெளியான
குமரன் இதழ் ஒன்றில் பாரதி பற்றி நாம் அறியாத செய்தி வெளிவந்திருந்தது.
அதாவது மகாத்மா காந்தி 1919 இல் சென்னைக்கு வந்தபோது, ராஜாஜியின் இல்லத்தில் அவரைப் பார்க்கவரும் பாரதி
சம்பந்தமான செய்திதான் அது.
இக்காட்சி, ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வௌியான பாரதி திரைப்படத்திலும்
வருகிறது.
அந்த இல்லத்தின் வாயில் காப்போனாக நிற்கும் பாரதியின் நண்பர் . வ. ரா.வையும் விலக்கிக்கொண்டு உட்பிரவேசிக்கும் பாரதி, காந்தியிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தான் சென்னையில் ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்திற்கு வருகை தந்து பேசுமாறு கேட்கிறார்.
உடனே, அருகிலிருக்கும் தனது செயலாளரிடம்
அதற்கு வசதியாக இருக்குமா..? என்று கேட்கிறார் காந்தி. அந்த நாளில் அவருக்கு வேறு நிகழ்ச்சியிருப்பதனால், மறுத்துவிடுகிறார்.
பாரதியும் அங்கே வந்த வேகத்திலேயே விருட்டென விடைபெற்றுவிடுகிறார்.
இந்தக்கவிஞரை பாதுகாக்க இங்கே எவரும் இல்லையா ? என்று காந்தி கேட்பார்.
இவையெல்லாம் திரையில் நாம் கண்ட காட்சிகள்.
ஆனால், 1972 இல் குமரன் இதழில் வந்த
செய்தி நாம் அறியாத ஒன்று. அது இவ்வாறு
அமைந்திருந்தது.
காந்தியை சந்தித்து, தனது கூட்டத்துக்கு
அழைப்பு விடுக்கும் பாரதி, காந்தியால் வரமுடியாது எனத் தெரிந்ததும், வேகமாகவே திரும்புகிறார்.
அப்போது “யார் இவர் ? “ என்று காந்தி அங்கிருந்தவர்களிடம் கேட்டதும்,
ராஜாஜி, “ He is a Country Fruit “ எனச்சொன்னதாக கப்பலோட்டிய தமிழன்
வ. உ. சி. யின் மகன் தெரிவித்திருப்பதாக அச்செய்தி குறிப்பிட்டிருந்தது.
“ எமக்குத்
தொழில் கவிதை, இமைப்பொழுதும்
சோராதிருத்தல், நாட்டுக்குழைத்தல். “ எனச்சொன்ன மகா கவியையா,
ராஜாஜி அவ்வாறு ஏளனமாகச் சொன்னார் என்று அதனை
வாசித்த தருணம் யோசித்தேன்.
பாரதி தொடர்பான ஆய்வுகள் ஏராளம் வெளிவந்துள்ளன. பல்கலைக்கழகங்கள் – கல்லூரிகள் மட்டத்தில் ஏராளமான
மாணவர்கள் பாரதி இயலில் பட்டங்களும் பெற்றுள்ளனர்.
ஆனால், குமரனில் வெளிவந்த அச்செய்தியை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை.
இந்திய காங்கிரஸ் பல சந்தர்ப்பங்களில்
பிளவடைந்துள்ளது. பாரதியின் காலத்திலேயே 1907 இல் கங்கிரஸ் முதல்
தடவை பிளவுபட்டது. அதன் மிதவாத – தீவிரவாத தலைவர்களுக்கிடையே நீடித்த கருத்து முரண்பாடுகள்
முற்றியதனால், 1907 இல் முறிந்து இரண்டாக பிளவுபட்ட அந்த
பேரியக்கம், 1914 ஆம் ஆண்டு வரையில் தேக்கமுற்றதாகவும், பின்னர் அன்னிபெசண்ட் அம்மையாரின் ( 1847 –
1933 ) தீவிர முயற்சியால் மீண்டும் இணைந்ததாகவும் வரலாற்றுப்பதிவுகள்
சொல்கின்றன.
1904 இல் சுதேச மித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இணைந்துகொள்ளும்
பாரதியின் அரசியல் வாழ்க்கை அக்காலப்பகுதியில் தொடங்குகிறது.
உலக அரசியல் பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும்
பாரதி
தமிழுக்கு மொழிபெயர்த்து சுதேச மித்திரனில் வெளியிடுகிறார்.
அதனால், அவருக்கு உலக அரசியல் ஞானம் பிறக்கிறது. 1905 இல் வங்காளப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்தை திலகர், விபின் சந்திரபாலர் ஆகியோர் முன்னெடுத்தபோது பாரதியும் அந்த இயக்கத்தினுள் இழுக்கப்படுகிறார்.
திலகரின் தீவிரவாத அணியிலும் இணைகிறார். சுதேச மித்திரன் ஜி. சுப்பிரமணிய
அய்யருடையது. அவரோ மிதவாதிகள் அணியைச் சார்ந்தவர். அந்தப்பத்திரிகையில் தனது கருத்துக்களை வெளியிட முடியாத நிலைக்கு பாரதி
ஆளாகின்றார்.
அதனால், தீவிரவாதிகள் பக்கம் நின்ற சுரேந்திர நாத்
ஆர்யா, வ. உ. சிதம்பரம்பிள்ளை , வக்கீல் துரைசாமி
அய்யங்கார், சக்கரைச்செட்டியார் ஆகியோரின் நட்பினாலும் உதவியினாலும் இந்தியா
பத்திரிகையின் ஆசிரியராகின்றார்.
அதுவே அக்காலப்பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து தீவிரவாதிகளின் தரப்பிலிருந்து வெளியான ஒரே ஒரு பத்திரிகை. அதன் பின்னர் பாரதி, பால பாரதா என்ற ஆங்கிலப் பத்திரிகயையும்
ஆரம்பிக்கிறார்.
இதழியல் முன்னோடி எங்கள் பாரதியார் என்ற நூலில் மேலும் விபரங்களை அறியலாம்.
1904 முதல் 1919 வரையில் 15 ஆண்டுகள் பாரதியின் வாழ்க்கை தீவிரவாதத்தின் பக்கமே நீடித்திருந்தது.
இக்காலகட்டத்தில்தான் பாரதி, 1919 இல் சென்னையில் காந்தியை சந்திக்கின்றார்.
தனது கூட்டத்துக்கு வருமாறு காந்தியை அழைக்கிறார். அவரைச்சுற்றியிருந்தவர்களில் ராஜாஜியும் ஒருவர்.
அவர் மிதவாதிகளின் அணியிலிருந்தவர்.
பாரதி அழைக்கும் கூட்டத்திற்கு காந்தி செல்லமாட்டார்
என்பதை உறுதியாகத் தெரிந்துகொண்ட ராஜாஜி, பாரதி அங்கிருந்து விருட்டென அகன்றதும், “ He is a Country Fruit “ என்று ஏளனப்படுத்தியிருக்கிறார்.
இதுபற்றி ஏதும் அறியாத பாரதி, காந்தி எப்போதும் மிதவாதிகள் பக்கம்தான் என்பதை
தெரிந்துகொண்டும், தனது தேசியத்தலைவர்கள் என்ற
தலைப்பின் கீழ் எழுதிய கவிதைகளின் வரிசையில்
மகாத்மா காந்தி பற்றி இவ்வாறு எழுதுகிறார்:
வாழ்க நீ எம்மான்
எந்தவொரு அரசியல் இயக்கங்களிலும் தீவிரவாதிகள் – மிதவாதிகள்
– சந்தர்ப்பவாதிகள் இருப்பர்.
எந்தச் சிமிழுக்குள்ளும் அகப்படாத பாரதி, தனது வாழ்நாளில் தீவிரவாதிகள் பக்கமே நின்றிருக்கிறார் என்பது தெளிவு.
காந்தியுடனான பாரதியின் சந்திப்பு குறித்து எழுத்தாளர்
பிரபஞ்சன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “ காந்தியைச்
சுற்றி நின்ற பெரியவர்கள் யாரும் முறையாகப் பாரதியை வரவேற்று, காந்தியிடம் அவருடைய
இலக்கியத் திறனை அறிமுகப்படுத்தி
வைக்கவில்லை.
காந்தி தன்னுடைய குருவாக, கோபாலகிருஷ்ண கோகலேவை
ஏற்றுக்கொண்டார் என்றால், பாரதி தன்னுடைய அரசியல் முன்னோடியாக ஏற்றுக்கொண்டது, பாலகங்காதர
திலகரை. காரணம், தேசபக்தியிலும்கூடத் தீவிரம் காட்டுவதுதான் திலகரின் குணம். அதுதான்
பாரதியின் விருப்பமுமாக இருந்தது.
இலங்கையில்
குமரன் இதழை வெளியிட்ட செ. கணேசலிங்கனும் மார்க்சீயவாதி. அத்துடன் இடதுசாரி
தீவிரவாதத்திலும் நம்பிக்கை வைத்திருந்தவர்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்குமிடையே நடந்த
போராட்டங்கள் குறித்து பாரதி ஆய்வுகளில் சொல்லப்பட்ட தகவல்களுக்கு குமரன் இதழில் கணேசலிங்கன் முன்னுரிமை வழங்கினார்.
( தொடரும் )
No comments:
Post a Comment