உலகச் செய்திகள்

 ஆப்கானில் ஐந்து நாட்களுக்குள் 8 நகரங்கள் தலிபான் வசம்

தலிபான்களுக்கு எதிராக ஆப்கானிய பெண்கள் ஆர்ப்பாட்டம்

ஈரானுடன் பதற்றம்: சி.ஐ.ஏ தலைவர் வில்லியம் பேர்ன் இஸ்ரேல் பயணம்

சீனாவில் பயங்கர வெள்ளம்: ‘சிவப்பு எச்சரிக்கை’ அறிவிப்பு

ஹெய்ட்டியில் பாரிய நிலநடுக்கம்; இதுவரை 300 இற்கும் அதிகமானோர் பலி



ஆப்கானில் ஐந்து நாட்களுக்குள் 8 நகரங்கள் தலிபான் வசம்

தலிபான்கள் ஆப்கானில் மேலும் இரண்டு நகரங்களை கைப்பற்றிய நிலையில் அந்தக் குழு கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் கைப்பற்றிய மாகாணத் தலைநகரங்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.

தெற்கு மாகாணத்தின் பராஹ் நகர் மற்றும் வடக்கு மாகாணமான பக்லானின் புலே கும்ரி ஆகிய நகரங்களே கடந்த செவ்வாய்க்கிழமை தலிபான்களிடம் வீழ்ந்துள்ளன. உள்ளூர் தரப்புகள் தலிபான்களின் முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளன.

‘பாதுகாப்பு படையினருடன் சிறிய மோதலுக்கு பின்னர் இன்று மாலை (செவ்வாய்க்கிழமை) பராஹ் நகருக்குள் தலிபான்கள் நுழைந்தனர். அவர்கள் ஆளுநரின் அலுவலகம் மற்றும் பொலிஸ் தலைமையகத்தை கைப்பற்றினர்’ என்று பராஹ் மாகாண சபை உறுப்பினரான ஷஹ்லா அக்பர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

தலிபான்கள் மாகாணத்தின் மத்திய சிறைச்சாலையையும் கைப்பற்றிவிட்டனர் என்று பாராளுமன்ற உறுப்பினரான அப்துல் நஸ்ரி பராஹி தெரிவித்தார்.

ஆப்கானின் தென்மேற்கில் தலிபான்கள் வசமாகும் இரண்டாவது நகராக பராஹ் உள்ளது. இதற்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை அண்டை மாகாணமான நிம்ருஸை தலிபான்கள் கைப்பற்றினர்.

பராஹ்வை கைப்பற்றியதன் மூலம் தலிபான்களுக்கு ஈரானுடனான மற்றொரு எல்லைக் கடவை கிடைத்துள்ளது.

உள்ளூர் பாதுகாப்புப் படையினர் நகருக்கு வெளியில் இருக்கும் இராணுவ முகாம் ஒன்றை நோக்கி பின்வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.

மறுபுறம் தலைநகர் காபுலில் இருந்து வடக்காக சுமார் 200 கி.மீ. தொலைவில் இருக்கும் பக்லான் மாகாணத் தலைநகர் புலே கும்ரியையும் தலிபான்கள் செவ்வாயன்று கைப்பற்றியதாக அந்தப் பகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இராணுவத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

‘சுமார் இரண்டு மணி நேர சண்டையில் இராணுவம் முறியடிக்கப்பட்டு பின்வாங்கினர்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் மமூர் அஹமதுசாய் தெரிவித்தார்.

புலே கும்ரியை கைப்பற்றியதன் மூலம் வடக்கு மாகாணத்தின் மூன்று எல்லை பகுதிகளை தன்வசமாக்க முடிந்துள்ளது.

இந்த வார ஆரம்பத்தில் குந்துஸ் மற்றும் தகார் நகர்களை தலிபான்கள் கைப்பற்றினர். இதன்மூலம் காபுல் தொடக்கம் வடகிழக்கு மாகாணமான பதக்ஷான் வரையான ஒட்டுமொத்தமான 378 கிலோமீற்றர் வீதியும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அந்த வீதி பயணிகள், வர்த்தக வாகனங்கள் மற்றும் நார்கோடிக் உட்பட சட்டவிரோத பொருட்களை எடுத்துச் செல்லும் பிரதான பாதையாக உள்ளது. இதன்படி தலிபான்கள் ஒருவார காலத்திற்குள்ளேயே ஆப்கானின் 34 மாகாணத் தலைநகரங்களில் எட்டு தலைநகரங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலிபான்கள் தற்போது ஆப்கானின் 65 வீதமான பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 11 மாகாணத் தலைநகரங்களை கைப்பற்றும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் நாட்டின் வடக்கில் இராணுவத்திற்கு வழக்கமாக உள்ள ஆதரவை முறியடிக்க அவர்கள் முயல்வதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் 20 ஆண்டு இராணுவ நடவடிக்கைக்கு பின் அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு படையினர் ஆப்கானில் இருந்து வெளியேறும் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையிலேயே தலிபான்கள் கடந்த மே மாதம் தொடக்கம் தாக்குதல்களை ஆரம்பித்தனர். அது தொடக்கம் அந்தக் குழு கிராமப் பகுதிகளில் முன்னேற்றம் கண்ட நிலையில் தற்போது நகரங்களை இலக்கு வைத்து உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தலிபான்கள் தற்போது நாட்டின் வடக்கில் ஆறு மாகாணங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு தென்மேற்கில் நிம்ருஸ் மாகாணத் தலைநகர் சரன்ஜ் நகரையும் கைப்பற்றியுள்ளனர்.

அந்தப் பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரான மசாரே சரீபை தாம் நெருங்கிவிட்டதாக தலிபான்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கூறியிருந்தனர். இந்த நகர் தலிபான்களிடம் சென்றால் நாட்டில் வடக்கில் அரசு தனது கட்டுப்பாட்டை இழந்து விடும் நிலை உள்ளது.

மறுபுறம் ஈரான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உடனான எல்லைச் சாவடிகளையும் அவர்கள் கைப்பற்றியுள்ளர்.

எல்லைச் சாவடிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் வரும் வாகனங்கள் கொடுக்கும் சுங்க வரி மூலம் தலிபான்கள் பெருமளவு பொருள் ஈட்ட முடியும். இந்த அமைப்பு எல்லைச் சாவடிகளை மட்டுமல்லாமல் நகரங்களை இணைக்கும் முக்கிய வீதிகளையும் கைப்பற்றியுள்ளது.

இதனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அண்மைய மாதங்களில் ஆப்கானில் சுமார் 400,000 பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இதில் ஒப்பீட்டளவில் பாதுகாப்புக் கொண்ட தலைநகர் காபுலில் சிலர் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

மோதலில் சிக்குண்ட 4,000க்கும் அதிகமான மக்களுக்கு கடந்த பத்து நாட்களில் மருத்துவ சிகிச்சை அளித்ததாக செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது. தலிபான்கள் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் தமது துருப்புகளை வாபஸ்பெறுவதை இட்டு கவலை அடையவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஒன்றுபட்டு தமது நாட்டுக்காக போராடும்படி ஆப்கான் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், வான் உதவி வழங்குவது, இராணுவத்திற்கு சம்பளம் வழங்குவது மற்றும் ஆப்கான் படைக்கான உணவு மற்றும் உபகரணம் வழங்குவது போன்ற ஆப்கானுக்கான கடப்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பைடன் தெரிவித்தார்.

ஆனால் இந்தப் போரை அவர்கள் தான் செய்ய வேண்டும் என்று பைடன் வலியுறுத்தியுள்ளார்.   நன்றி தினகரன் 



தலிபான்களுக்கு எதிராக ஆப்கானிய பெண்கள் ஆர்ப்பாட்டம்

ஆப்காபனிஸ்தானின் நகரங்கள் அடுத்தடுத்து தலிபான் வசம் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் உலகின் பல பாகங்களிலும் வாழும் ஆப்கபனியர்கள் தலிபான்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மனித குலத்துககு எதிராக மிருகத்தனமான குற்றச்செயல்களில் தலிபான்கள ஈடுபட்டு வருவதாக லொஸ்ஏஞ்சலிஸ் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆப்கானிய பெண்கள் தெரிவித்ததாக ஆப்கானிஸ்தான் இராஜதந்திரிகள் தமது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

இதே சமயம் ஆப்கானின் முக்கிய நகரமான குண்டூஸ் தலிபான் வசம் வீழ்ச்சி கண்டுள்ளது. நகரைச் சேர்ந்த ஒரு உள்ளூர் அதிகாரி, விமானத்தளத்தைத் தவிர ஏனைய பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி இருப்பதாகவும் நகர் மத்தியில் தலிபான் கொடியை பார்க்க முடிவதாகவும் பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

இதுவரை நான்கு முக்கிய பிராந்தியத் தலைநகரங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். இவற்றில் குண்டூஸ் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது.   நன்றி தினகரன் 




ஈரானுடன் பதற்றம்: சி.ஐ.ஏ தலைவர் வில்லியம் பேர்ன் இஸ்ரேல் பயணம்

பொது எதிரியான ஈரான் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க மத்திய உளவுப் பிரிவான சி.ஐ.ஏவின் தலைவர் வில்லியம் பேர்ன் நேற்று இஸ்ரேல் பயணமானார்.

எனினும் பேர்ன் உடன் இடம்பெறவிருக்கும் பேச்சுவார்த்தை தொடர்பான விபரத்தை இஸ்ரேல் பிரதமர் நப்டாலி பென்னட்டின் பேச்சாளர் வெளியிடவில்லை.

எனினும் இதன்போது ஈரானின் அணுத் திட்டம் மற்றும் பிராந்தியத்தில் அதன் செயற்பாடுகள் பற்றி இஸ்ரேல் பிரதமர் மற்றும் சி.ஐ.ஏ தலைவரிடையே பேச்சுவார்த்தை இடம்பெறும் என்று வெல்லா நியுஸ் என்ற இணைய செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது பேர்ன் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் ரமல்லாவுக்கும் சென்று பலஸ்தீன ஜனாதிபதி மஹமூத் அப்பாஸ் மற்றும் உளவுப்பிரிவுத் தலைவர் பஜீத் பராஜ்ஜையும் சந்திப்பார் என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் இஸ்ரேலின் எண்ணெய் கப்பல் ஒன்று தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஈரான் மீது குற்றம்சாட்டப்படும் பதற்றமான சூழலிலேயே சி.ஐ.ஏ தலைவரின் பயணம் இடம்பெற்றுள்ளது.

ஓமானிய கடற்பகுதிக்கு அப்பால் கடந்த மாதம் எம்.டீ மெர்சர் ஸ்ட்ரீட் என்ற அந்த எண்ணெய் கப்பல் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் இடம்பெற்றது. இதில் அந்தக் கப்பலில் இருந்த பிரிட்டன் மற்றும் ருமேனிய நாட்டவர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு ஈரான் காரணம் என்று ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடந்த வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டி இருந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட ஆளில்லா விமானம் ஈரானில் தயாரிக்கப்பட்டது என்று அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டது.

எனினும் ஈரான் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

ஒரு இராஜதந்திரியாக இருக்கும் பேர்ன், ஈரானுடனான 2015 அணு உடன்படிக்கையில் அமெரிக்காவின் அணுகல் தொடர்பில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

இஸ்ரேலுடன் அதிகம் நெருக்கம் காட்டிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2018 ஆம் ஆண்டு இந்த உடன் படிக்கையில் இருந்து விலகியதோடு ஈரான் மீது மீண்டும் தடைகளை கொண்டுவந்தார்.   

எனினும் அவருக்கு பின்னர் வந்த தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் உடன்படிக்கையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவர ஈரானுடன் பல சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.    நன்றி தினகரன் 





சீனாவில் பயங்கர வெள்ளம்: ‘சிவப்பு எச்சரிக்கை’ அறிவிப்பு

சீனாவில் கனத்த மழையால் பெருகிய வெள்ளத்தில் 21 பேர் உயிரிழந்திருப்பதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய ஹுபெய் மாநிலத்தின் 5 நகரங்களில் ‘சிவப்பு எச்சரிக்கை’ அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து சுமார் 6,000 பேர் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2,700க்கும் அதிகமான வீடுகளும் கடைகளும் வெள்ளத்தில் சேதமடைந்தன.

மின்சார விநியோகம், போக்குவரத்து, தொலைத்தொடர்புச் சேவைகள் ஆகியவையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக சின்ஹுவா தெரிவித்தது.

அத்தோடு, ஹுபெய் மாநிலத்தில் சுமார் 8,110 ஹெக்டர் விவசாய நிலம் பாழானது. வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்த இடங்களுக்கு மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் ஏற்பட்ட மொத்த இழப்பு சுமார் 16.67 மில்லியன் டொலர் என சைனா டெய்லி செய்தி நிறுவனம் தகவல் அளித்தது.  

கடந்த ஒரு மாதமாக சீனாவில் பெய்து வரும் பலத்த மழைக்கு 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




ஹெய்ட்டியில் பாரிய நிலநடுக்கம்; இதுவரை 300 இற்கும் அதிகமானோர் பலி

ஹெய்ட்டியில் பாரிய நிலநடுக்கம்; இதுவரை 300 இற்கும் அதிகமானோர் பலி -Haiti 7.2 magnitude Earthquake

- 1,800 பேர் காயம்; பலரை காணவில்லை

ஹெய்ட்டியில் ஏற்பட்ட 7.2 மெக்னிடியூட் நிலநடுக்கத்தினால் இதுவரை 304 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹெய்ட்டியில் பாரிய நிலநடுக்கம்; இதுவரை 300 இற்கும் அதிகமானோர் பலி -Haiti 7.2 magnitude Earthquake

நேற்றைய தினம் (14) ஏற்பட்டுள்ள இந்நிலநடுக்கத்தில் சிக்கி 1,800 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹெய்ட்டியில் பாரிய நிலநடுக்கம்; இதுவரை 300 இற்கும் அதிகமானோர் பலி -Haiti 7.2 magnitude Earthquake

வீடுகள், அரச தனியார் கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு, இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதோடு, பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹெய்ட்டியில் பாரிய நிலநடுக்கம்; இதுவரை 300 இற்கும் அதிகமானோர் பலி -Haiti 7.2 magnitude Earthquake

இவ்வனர்த்தத்தை தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி, ஒரு மாத அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

ஹெய்ட்டியில் பாரிய நிலநடுக்கம்; இதுவரை 300 இற்கும் அதிகமானோர் பலி -Haiti 7.2 magnitude Earthquake

ஹெய்ட்டி கடந்த 2010 இல் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கத்திலிருந்து இன்னும் மீண்டு கொண்டிருக்கும் நிலையில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 






No comments: