பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - நீரும் நெருப்பும் - ச. சுந்தரதாஸ் - பகுதி 9

.

இந்திய திரையுலகில் சாதனைகள் பல புரிந்து புகழ் பெற்ற நிறுவனம் ஜெமினி பிக்சர்ஸ். இதின் அதிபர் எஸ் எஸ் வாசன் தயாரித்த சந்திரலேகா அபூர்வ சகோதரர்கள், அவ்வையார், நந்தனார் போன்ற படங்கள் தமிழ் திரை வரலாற்றில் மறக்கமுடியாத படங்களாக இடம்பெற்றுள்ளன. அவ்வாறு வாசனால் உருவாக்கப்பட்ட அபூர்வ சகோதரர்கள் படத்தை 1971ஆம் ஆண்டு மணி கேசினி புரடக்சன்சார் வாசனின் அனுசரணையுடன் மீண்டும் நீரும் நெருப்பும் என்ற பெயரில் படமாக்கியது.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் இரட்டை வேடத்தில் எம் கே ராதாவும் கதாநாயகியாக பி பானுமதியும் நடித்தனர். புதிய படத்தில் இரட்டை வேடத்தில் எம் ஜி ஆர் நடித்தார் அவருக்கு ஜோடியாக ஜெயலலிதா. கலரில் பிரம்மாண்டமான செட் போட்டு ஜெமினி ஸ்டூடியோவில் நீரும் நெருப்பும் உருவானது.

எம்ஜிஆர் பால வயதில் நாடக சபையில் இருந்த போது அவருக்கு அன்பும் பரிவும் காட்டிய எம் கே ராதா நடித்த இரூ மாறுபட்ட கதாபாத்திரத்தை எம்ஜிஆர் ஏற்று திறம்பட நடித்திருந்தார்.

இரடடையர்களாக ஒட்டிப்பிறந்த குழந்தைகளை அரண்மனை வைத்தியர் பிரித்தெடு க்கிறார் உருவங்களை பிடித்தாலும் அவர்களின் உணர்ச்சிகளை பிரிக்க அவரால் இயலவில்லை. இதனால் ஒருவனுடைய மன உணர்ச்சி மற்றவனையும் பாதிக்கிறது ஒருவருடைய காதல் உணர்வுகள் மற்றவனை வாட்டி வதைக்கிறது. இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது.இவ்வாறு அமைந்த கதையில் எம்ஜிஆருக்கு முரட்டுத்தனம் கொண்ட வில்லன் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதனை நல்லவிதமாக செய்திருந்தார் மேக்கப்பும் ஒத்துழைத்தது.. ஜெயலலிதா விதவிதமான ஆடைகளுடன் காட்சி அளித்தார். பானுமதியின் நடிப்பில் இருந்த அழுத்தம் இவரிடம் காணப்படவில்லை எனலாம். மனோரமா , தேங்காய் சீனிவாசன் இருவரும் நகைச்சுவையை பார்த்துக் கொண்டார்கள்.

படத்தில் வில்லனாக வரும் அசோகன் அட்டகாசமாக நடித்திருந்தார் இறுதியில் எம்ஜிஆருடன் அவர் மோதும் காட்சிகள் விறுவிறுப்பாக படமாகி இருந்தது. அதேபோல் எம்ஜிஆரும் எம்ஜிஆரும் மோதும் காட்சியிலும் தூள் பறந்தது. ஸ்டண்ட் நடிகரான கே பி ராமகிருஷ்ணன் எம்ஜிஆருக்கு டூப் போட்டு நடித்தார். அவரின் திறமையும் பளிச்சிட்டது.

கடவுள் வாழ்த்து பாடும் இளம் காலை நேர பாட்டு பாடல் மிகவும் பிரபலமடைந்தது கன்னி ஒருத்தி மடியில் காளை ஒருவன் பாடல் இலங்கை வானொலியில் பல ஆண்டுகளாக ஒலி பரப்பப்படாமல் ஏனோ தடுக்கப்பட்டிருந்தது. எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்தும் ஏனைய பாடல்கள் எழும்பவில்லை.

ப. நீலகண்டன் படத்தை இயக்கினார் விறுவிறுப்பாக காட்சிகள் நகர்ந்தன. மனோகர் டீகே பகவதி ஆகியோரின் நடிப்பு மெச்சும்படி இருந்தன. சிறந்த முறையில் நீரும் நெருப்பும் உருவான போதும் எம்ஜிஆருக்கு வில்லன் எம்ஜிஆர் என்பதை ரசிகர்கள் ரசிக்கவில்லை இதனால் எதிர்பார்த்த வெற்றியை படம் பெறவில்லை. படத்தை தொடங்கிய வாசன் படம் வெளியாகும்போது அமரராகி இருந்தார்.No comments: