எனது இராமாயணம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்.

 .

நான் இந்த நாட்டிற்கு 1995ல் வந்தேன்.


எனது நாட்டிய நாடகங்கள் மிகவும் பிரபல்யமாக இருந்ததால் இங்கு வந்த என்னைஈழத்தமிழர் கழகம்எனது இராமாயணத்தை மீண்டும் இங்கு மேடையேற்றும் படி கேட்டார்கள். இந்த இராமாயணம் முன்னர் கொழும்பு, யாழ்ப்பாணம், சென்னை ஆகிய இடங்களில் மேடையேற்றம் கண்டிருந்தது.

இன்று ATBC வானொலியில் பிரபலமாக இருக்கும் பத்மஸ்ரீ. மகாதேவா, சிவசம்பு.பிரபாகரன், ஸ்ரீபாலன் மற்றும் எனது மகன் அமிழ்தன், போன்ற பிரபல நடிகர்கள் இத்தனை பேரும் இராமாயணத்தில் ஆண் பாத்திரம் எடுக்க, பல இளம் பெண்கள் பெண் பாத்திரம் ஏற்று ஆடநான்கு மாதங்களில் இராமாயணம் தயாரானது. Blacktown Theatre இல் இது அமோக வெற்றியுடன் நடைபெற்றது. இதை உங்களில் பலரும் கூட இதைப்  பார்த்திருக்கலாம்.

ஆமாம், இராமாயணம் என்ற கர்னபரம்பரைக் கதை வாய் மொழியாக இந்தியா பூராவும் இருந்து வந்தது. இந்து சமயத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் திருமாலின் அவதாரம் என இராமனைப் பூஜிக்கிறது. இதே போன்று இந்தோனேஷிய இந்துக்கள் இராமனையே தம் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

எனது இராமாயணம் முதன் முதலில் 1974ம் ஆண்டு முதன் முறையாக மேடையேறியது. இதன் பின் 2வது தடவையாக மேடையேறப்போவதாகப் பத்திரிகையில் விளம்பரங்களும் விமர்சனங்களும் வெளியாகின. இதனால் இந்தோனேஷிய உயர்ஸ்தானிகர் ஆலயத்தில் இருந்து இந்தோனேஷிய High Commissioner அதைப் பார்வையிட விரும்புவதாகவும்; மேலும், அந்த நாட்டியத்தை இந்தோனேஷியாவில் காட்டுதற்கு முடியுமா என்று கேட்டும் ஒரு அழைப்பிதழ் வந்திருந்தது. எனக்கும் என் குழுவுக்கும் வந்திருந்த அந்த அழைப்பைப் பல்வேறு காரணங்களால் ஏற்றுக் கொள்ள இயலாது போயிற்று என்ற வருத்தம் எனக்கு இன்றைக்கும் உண்டு.பின்பொருகால், சென்னையில் நான் இருந்த சமயம் இந்தோனேஷிய இராமாயனம் ஒன்று வந்து மேடையேறியதுஇது, இந்தோனேஷிய இந்துக் கோயில்களிலே எமது சுதேச கூத்துக்களைப் போல திறந்த வெளி அரங்கில் பத்து நாட்கள் நடைபெறும். இதில் வரும் வாலி, சுக்கிரீவன் யுத்தம் யாவும் மல்யுத்தமாகவே நடைபெறும்.

இந்தோனேஷிய ஆடல் கலைஞர்கள் இதைச் சென்னையில் உள்ள Music Academy யில் ஆடிக் காட்டினார்கள். திறந்த வெளியானால் போர் காட்சிகள் எல்லாம் மிக மிக விறுவிறுப்பாக இருந்திருக்கும். இங்கு மேடையில் ஆடுவதால் விறுவிறுப்பு குறைந்தே காணப்படுகிறது என்றார்கள்.

எனது இராமாயணத்தில் இராம இலக்குவர் வானரப் படையை திரட்டிப் போருக்குச் செல்வது, மற்றும் இராம இராவண யுத்தம் இவை யாவற்றையும் இலங்கையில் கிழக்குப் பிரதேசமான மட்டக்களப்புக்கே உரித்தான வடமோடி ஆடல் வகையில் அமைத்திருந்தேன். இந்த ஆடலைச் சென்னையில் பார்த்த கலைஞர்கள், ’இது என்ன ஆடல் வகை? வெகு அருமையாக இருந்தது அந்த யுத்தக் காட்சிஎன வினவினார்கள். மிகப் பெருமையுடன் இது இலங்கைத் தமிழரின் ஆடற்கலை என எடுத்துக் கூறினேன்.


(
இது வடமோடி நாட்டுக்கூத்து மரபின் தன்மையை எடுத்துக் காட்டும் இராவணேசன் நாட்டுக் கூத்தின் ஒரு சிறு பகுதி)

பிற்பாடு தமிழ்நாட்டு அரசின் பண்பாட்டுத் துறை இந்த ஆடல் - அது தான் எமது வடமோடி ஆடல் பற்றி ஒரு Work Shop நடாத்தித் தரக் கோரியது. இருந்த போதும், இந்த ஆடல் முறை சாஸ்திரிய அதாவது, Classical Art என்ற அந்தஸ்தைப் பெறவில்லைஏதோ கிராமியக் கூத்து என்றே பலராலும் விமர்சிக்கப்பட்டது. கருதப்பட்டது என்றும் கூடச் சொல்லலாம். ஏன் இப்பொழுதும் அப்படி எண்ணுபவர்கள் உண்டு. ஆனால் இந்த ஆடல் முறையை ஸாஸ்திரியக் கலையாக்கி அதாவது Classical Art ஆக்கிClassical மேடைகளில் ஆடியது எனது தயாரிப்பான இந்த இராமாயனத்திலேயே! எமது கையிலே சரக்கை வைத்துக் கொண்டு, அதை நாமே சரியாக மதிப்பீடு செய்யாதது எம்மவரின் குறையே. கையிலே வெண்ணையிருக்க நெய்யிற்கு நாம் அலைவானேன்?

எனது இராமாயணத்தைப் பார்ப்பதற்கு முன் தம்மைக் கலையில் பாதுகாவலர் என எண்ணிய சிலர் வழுவூராரிடம் அழகிய பரதத்தைப் பயின்றதன் பின் ஏன் இப்படி நாட்டுக்கூத்தை ஆட வேண்டும் என விமர்சித்தனர்நாட்டிய நாடகத்தைக் கண்டு உண்மையாகவே மெய் சிலிர்த்ததாக வேறு சிலர் கூறினர்.

இராவணனும் அனுமானும் பரதம் ஆட முடியுமோ?

சென்னையிலே நான் வாழ்ந்த காலத்தில், நான் அறிந்து கொண்டவை பல. இந்த இராமாயணம் பற்றியும் பல விஷயங்களை நான் அறிந்து கொள்ள முடிந்தது. அதில், மகாராஷ்டிரத்தில் இராமாயணத்தைக் கணவனும் மனைவியுமாக சேர்ந்து கதையாகக் கூறும் பழக்கம் உண்டு என்பதும் ஒன்று.


ஒரு பெரிய திரைச் சீலையிலே, நல்லதொரு நாளிலே, ஒரு சிறுமியின் கையில் தூரிகையைக் கொடுத்து இராமாயணக் காட்சிகளை வரையச் சொல்வார்கள். இதைத் தொடர்ந்து இராமாயணக் காட்சிகள் அதில் வரையப்பட்டு பத்திரப்படுத்தப்படும். இந்தத் திரைச் சீலையில் வரைந்த காட்சிகள் இடமிருந்து வலமாக போகும். கணவன் மனைவியான இந்தக் கலைஞர்கள் இரவு நேரத்தில் எண்ணையில் எரியும் தூண்டாமணி விளக்கை இந்தக் காட்சியின் முன் பிடிப்பார்கள். காட்சி தெரியும். கணவனும் மனைவியும் பாத்திரங்களாக மாறி சம்பாஷனை செய்து அந்தக் கட்டத்தை நடித்துக் காட்டுவார்கள்.

ஆமாம், அந்த இருளில் குரல் தான் கேட்கும். ஆனால் திரையில் வரைந்த படம் தெரியும். இந்தக் கலைஞர்கள் மிகவும் கைதேர்ந்த நடிகர்கள். இவர்களைப் பார்ப்பதற்கு மக்கள் திரளாகக் கூடுவார்கள். இந்தத் திரையிலே வரையப்பட்ட படம் மங்கிக் களை இழந்ததும் அதற்குப் பல பூஜைகள் செய்து கடலிலே கொண்டுபோய் போடுவார்கள். தங்கள் உயிரின் ஒரு பகுதியைக் கடலில் போடுவதைப் போல இதைச் செய்வது பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருக்கும். இதை நான் எங்கு கண்டேன் என்கிறீர்களா? இந்திய தொலைக்காட்சி - அதுதான் தூரதர்ஷனில் தான் இதை நான் பார்த்தேன்.

இங்கு கணவன் மனைவியான ஜோடி முழுக் கதையையும் நடித்துக் காட்டுவதாகக் கூறினேன் அல்லவா? எம் எல்லோருக்கும் இராமனுக்கு லவ, குச என இரு குழந்தைகள் இருந்தது தெரியும். அவர்களே இராம கதையைக் கூறினார்கள் என்பது அவர்களது ஐதீகம்நாடகவியலாளர்களின் கருத்துப்படி, நாடகம் என்று வேஷம் போட்டு நடிப்பதற்கு முன் இந்த லவன் குசன் என்ற இருவரே நடித்தும் பாடியும் இராமாயனத்தை கூறி வந்தார்கள்; அதாவது இருவர் சேர்ந்து கதையைக் கூறுவதும்; அவர் தம்மை இராமனின் பிள்ளைகள் எனக் கூறுவதும் அன்றய சம்பிருதாயமாக இருந்திருக்கும் எனக் கருதுகிறார்கள்.

குகன் என்ற காட்டுவாசி இராமனில் அளவில்லாத அன்பு கொண்டவன் என்ற கதை நம் எல்லோருக்கும் தெரியும்.ஒரிஸா மாநிலத்தின் இராமாயணத்தில் குகன் இராமனில் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒரு காட்சி கட்டாயமாக அமைந்திருக்கும். இராமன் குகனிடம் விடை பெறப் போகிறார். குகனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இராமனின் கால்களை வருடுகிறான். உணர்ச்சி மேலீட்டால் திரும்பத் திரும்ப இராமனின் கால்களிலே முத்தங்கள் கொடுக்கிறான். கால்களைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொள்ளுகிறான். கண்ணீரும் கம்பலையுமாக இராமனை வழியனுப்பியவன், பிரிவுத் துயர் தாங்காது இராமன் நடந்த பாதத்தின் அடி பதிந்த இடத்திலேல்லாம் அழுது புரளுகிறான். ஆமாம், ஒரு அப்பாவியான காட்டுவாசியின் அன்பை அது ஆழமாக; அழகாக எடுத்துக் காட்டியது.

ஒடிசி நாட்டியத்தில் பிரபலமாக விளங்கிய மகாபத்திரர். அவர்  தனது மனைவியான மிருனாள் சென்னுடன் இதை ஆடிக் காட்டினார். இருவருமே தேர்ந்த ஆடல் விற்பன்னர்கள். பார்ப்போர் கண்களில் கண்ணீர் வரவைக்க வல்லவர்கள். ஆமாம், இப்படியான ஒரு கட்டம் கம்பராமாயணத்தில் இல்லை. இது ஒரிஸாவின் இராமாயணம்.

ஆமாம், பாரத மாதா செப்பு மொழி 18 உடையாள் எனப் பாரதி பாடினான் அல்லவா? அத்தனை மொழிகளிலும் இராமாயணம் உண்டு. அது அவரவர் இராமாயனம். அவரவர் பிரதேச வழக்குகளுடன் அது அமைந்திருக்கும்.

சிங்களத் தீவினிலே பிரபலமாக இருப்பது கண்டி நடனம். மற்றயது கீழைத்தேய நடனம். இந்த சப்பிரகமுவ ஆடல் வகையில் பல நாடக அம்சத்தைக் காணலாம். இவர்கள் இராமாயணத்தையும் விட்டு வைக்கவில்லை. சீதை கற்புடையவளா இல்லையா என துணி துவைக்கும் துறையில் ஒரு வண்ணான் பேசியதாகவும்; அதனால் இராமன் அவளது தூய்மையைப் பறைசாற்ற அவளைத் தீக்குளிக்க வைத்தான் என்பதும் நாம் கேட்டு வளர்ந்த கர்னபரம்பரைக் கதை. இதை இந்த சப்பிரகமுவ மாகாண ஆடல் வகையில் அவர்கள அழகாகக் காட்சிப்படுத்திக் காட்டுவார்கள்.

இந்தியாவிலே படியாத பாட்டியும் இராமர் கதை அறிவாள்.ஒருத்தியைப் பிடிக்கா விட்டால் சூர்ப்பனகை என்பார்கள். சூழ்ச்சிக்காரி என்றால் அவளைக் கூனி என்பார்கள்செட்டி வீட்டிலே ஆண்கள் பர்மாவில் சென்று தங்கி வியாபாரம் செய்து சில வருடங்களிலே நாடு திரும்புவது வழமை. ஒருநாள் இப்படியான செட்டி ஆச்சியிடம், குசும்பாக, ‘ஆச்சி இந்தச் செட்டிமார்கள் இப்படிப் பலவருடம் தங்கி வருகிரார்களே! அங்கு நல்லவிதமாக நடந்து கொள்வார்களோ?’ என்று கேட்டேன். ஆச்சிக்கு கணவரை நேராகக் குறை கூற மனம் வருமா? ’இவர்கள் என்ன இராமச் சந்திர மூர்த்திகளா?’ என்றார்.

ஆமாம் இராமச் சந்திரன் ஏக பத்தினி விரதனல்லவா?


 
(
இது இந்தோனேஷிய இராமாயணத்தில் அனுமான் சீதையிடம் செல்லும் காட்சி)


No comments: