நேற்று இன்று நாளை தமிழ் பெண்கள் - செ .பாஸ்கரன் ( C.Paskaran )

 .

ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் 14.08.2021 அன்று கவிஞர் பாடும்மீன்

ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் ZOOM வழியாக நடத்திய பதினேழு கவிஞர்கள்

பங்குபற்றிய கவியரங்க நிகழ்வில் இடம்பெற்ற என் கவிதை




நேற்று இன்று நாளை பற்றி

நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்

நெஞ்சில் வந்து போவதெல்லாம்

தமிழ் பெண்கள் வாழ்வின் நினைவுகள்


நேற்றைய காலம்

சின்னவளாய் நீ இருந்தபோது

உன் கனவு, உன் உலகம் , உன் வாழ்வென்றிருந்தாய்

எந்தப் பூட்டுக்களும் உன்னை கட்டுப்படுத்தவில்லை

நண்பர்கள் குழாமில் ஆண் பெண் பேதம்

அறவே இல்லை

ஓடினாய், சிரித்தாய், உயரத்தில் ஏறினாய்

சண்டைகள் போட்டு வீதியில் புரண்டாய்

சற்றே வளர்ந்தபின் சிறுமி என்றழைத்தனர்

மெலலச் சிரிஎன்று அம்மா சொன்னாள்

மரத்தில் ஏறுதல் மாபெரும் குற்றம்

அப்பா கம்புடன் அருகே வந்தார்

என்னடி பொடியன் தொட்டு பேசுறான்

ஆச்சிக் கிழவி அனலாய் கொதித்தாள்

விலங்குச் சங்கிலி சுற்றத் தொடங்கினர்


பெரியவள் ஆகி பெண்ணென்றானாய்

நிமிர்ந்து நடப்பததே தவறென்றுரைத்தனர்

தலையை குனிந்து நடக்கச் சொல்லினர்

வெளியில் போனால் காவல் பிசாசுகள்

அண்ணனும் தம்பியும் அருகே வந்தனர்

படித்தது போதும் பள்ளியை நிறுத்தினர்

வீட்டு வேலைகள் உனக்கெனத் தந்தனர்

பெருக்குதல், சமைத்தல், கழுவுதல், துடைத்தல்

அண்ணன் தம்பிக்கு கோப்பி கொடுத்தல்

அனைத்தும் அழகாய் செய்வதாய் சொல்லி

வேலைக்காரியாய் மாற்றியே வைத்தனர்


காதல் அரும்ப கடைக்கண் வீசினாய்

உணர்வின் சங்கமம் உனக்குள் எழுந்தது

பையனைப் பிடித்து நையப்புடைத்தனர்

காதல் என்பது சாபமென்றுரைத்தனர்

சாதி சமயம் சாத்திரமென்று ஆயிரம் பார்த்தனர்

சீதனம் என்ற கழுதையை கொடுத்து

உனக்கொரு மாப்பிள்ளை விலைக்கு வாங்கினர்

உன் கனவு ,உன் உலகம், உன் வாழ்க்கை

எல்லாம் இழந்து பதுமையாய் நின்றாய்

குழந்தைகள் பெற்றாய் அவர்களை வளர்த்தாய்

குழந்தைகள் வாழ்வே என்வாழ்வென்றாய்

கணவனை இழந்தவள் கைம்பெண் என்று

எரியும் நெருப்பில் இறங்கச் சொல்லினர்

தலையை முழுவதும் மழிக்கச் செய்தனர்

முன்னுக்கு நிற்பது பாவம் என்றனர்

சபையில் தூர இருக்கச் செய்தனர்

மனது வெந்து மரித்துக் கிடந்தாய்

நடைபிணமாக நடந்தே திருந்தாய்

இறக்கும்போது உன்கனவுகளோடு

சேர்ந்தே இறந்தாய்

நேற்றைய பெண்ணாய் நீயும் மறைந்தாய்


இன்றைய பெண்ணைத் திரும்பி பார்க்கிறேன்

நின்று நிமிர்ந்து என்னைப் பார்க்கிறாய்

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்

கண்களில் தெரியும் கேள்வியின் வீச்சு

என்ன வேணும் என்கிறாய் போலும்

என் தலை சற்றுத் தாழ்ந்தே போனது

விதவிதமான விரும்பிய உடைகள்

அம்மா பார்க்கிறாள் அச்சம் கொள்கிறாள்

பிள்ளை கொஞ்சம் நீளமாய்ப் போடுமன்

தயங்கித் தயங்கியே வார்த்தைகள் வந்தது

திஸ் இஸ் பாஷன், மிடுக்காய் பதில்கள் வெளியே வந்தது நண்பர்களோடு வெளியே செல்கிறாள்

ஆணும் பெண்ணும் வேற்றுமை இல்லை

நண்பர்கள் என்றால் நட்பு மட்டுமே

பாலினம் இல்லை வேற்றுமை இல்லை சாதிகள் இல்லை

தனக்குப் பிடித்த சரிநிகர் வாழ்க்கை

வேலைத்தலத்தில் தலைமைப் பொறுப்பு

விடுதலைப்போரில் வெற்றிகள் பட்டியல்

எங்கும் எதிலும் நிறைந்தே நிற்கிறாள்

முடியாதென்று கூறிய அனைத்தையும்

முடித்துக் காட்டி வெளியே வந்தாள்

காதல் செய்தாள் , கணவனை தேர்ந்தாள்

சாதகம் இல்லை, சாதிகள் இல்லை

தனக்குப் பிடித்த வாழ்க்கையை பெற்றாள்

குழந்தை குடும்பம் உறவுகள் என்றால்

கணவனும் மனைவியும் சுமத்தலே என்றாள்

வேலைகள் பகிர்ந்தாள், சொத்தில் இணைந்தாள்  

கணவனை இழந்து ஒற்றையாய் நின்றும்

காரியம் அனைத்திலும் முன்னே நின்றாள்

திருமணத் தாலியை தொட்டு கொடுத்தல்

ஆசீர்வதித்து அறிவுரை சொல்லுதல்

பிள்ளைகள் உயர கற்றுக் கொடுத்தல்

அனைத்தையும் பெருமையாய் செய்து முடித்தாள்

ஏதும் தெரியா பெண்ணெனச் சொன்னவர்

வியக்கும் வண்ணம் உயர்ந்தே நின்றாள்

இறுதிக்காலம் முடியும் வரைக்கும்

சொந்தக்காலிலே நிற்கப் பயின்றாய்

கனவாய் கண்ட வாழ்க்கையை வென்றவள்

இன்றைய பெண்ணென பார்த்து மகிழ்ந்தேன்


நாளைய பெண்கள் என்ன செய்வார்கள்

எல்லாம் கிடைத்த, எங்கும் நிறைந்த

பெண்கள் இனமாய் தோற்றம் பெறுவர்

ஆணோ பெண்ணோ அணைந்தே போதல்

அவரவர் விரும்பிய விதமாய் வாழுதல்

அறிவின் மூலம் உலகை ஆளுதல்

எங்கும் நிறைந்த சக்தியாய் நிற்பினும்

அவளே குழந்தைகள் பெற்றுத் தருவாள்

அன்னையாய் எம்முன் எழுந்தே நிற்பாள்

நாளைய பெண்ணாய் நம்முன் எழுவாள்

நாளைய பெண்ணாய் நம்முன் எழுவாள்.

நேற்று இன்று நாளை






நன்றி 

செ .பாஸ்கரன் 









No comments: