63 ஆண்டுகள் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீடு - ஒரு ரவுண்ட்அப்!

 .

ஒரு நடுத்தரக் குடும்பத்தின் குடியிருப்பாகக் காட்சியளிக்கும் வீட்டின் முகப்பில் ஒரு பக்கம் கருணாநிதியின் பெயரும், இன்னொரு பக்கம் அஞ்சுகம் அம்மாளின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

கோபாலபுரம் நான்காவது தெருவிருக்கும் இந்த வீட்டைத் தவிர்த்துவிட்டு இந்திய அரசியலை எழுதமுடியாது. தலைவர்கள், தொண்டர்கள், காவலர்கள், மீடியாக்கள் என எப்போதும் பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்த கருணாநிதியின் வீடு, இப்போது ஆழ்ந்த அமைதியில் உறைந்திருக்கிறது.

தெருவின் இருபுறங்களிலும் பிறந்தநாள்களுக்காக கருணாநிதி நட்ட செடிகள் மரங்களாகி நிழல் பரப்பி நிற்கின்றன. எவ்விதப் பகட்டும் இல்லாமல் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் குடியிருப்பாகக் காட்சியளிக்கும் வீட்டின் முகப்பில் ஒரு பக்கம் கருணாநிதியின் பெயரும், இன்னொரு பக்கம் அஞ்சுகம் அம்மாளின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.போர்டிகோவில் கருணாநிதி இறுதிக்காலத்தில் பயன்படுத்திய டொயட்டோ அல்ஃபார்ட் கார் நிற்கிறது. முதுமையிலும் தளராமல் பயணங்களை மேற்கொண்ட அவருக்காக ஜப்பானிலிருந்து தருவிக்கப்பட்ட இந்தக் காரின் சிறப்பு, சொகுசான இருக்கைகள்தான். 7 பேர் அமரக்கூடிய இந்த காரில் கருணாநிதிக்கென்று ஒரு சக்கர இருக்கை பொருத்தப்பட்டிருந்தது. ரிமோட் மூலம் அந்த இருக்கையை வெளியில் இறக்கவும் ஏற்றவும் முடியும். இந்த ஹைபிரிட் கார் இன்னும் இந்தியாவுக்கு விற்பனைக்கு வரவில்லை. கருணாநிதியின் ஓட்டுநர் கோபி தினமும் வந்து காரைச் சுத்தம் செய்து வெளியில் எடுத்து, வீல் சேரை இயக்கி மீண்டும் அதே இடத்தில் நிறுத்துகிறார்.
போர்டிகோவைக் கடந்து உள்நுழைந்தால் ஒரு நூற்றாண்டு திராவிட இயக்க வரலாற்றைச் சொல்லும் புகைப்படங்களைத் தாங்கிய வரவேற்பறை. கருணாநிதியின் பொன்மொழிகளை சட்டமிட்டு ஆங்காங்கே மாட்டியிருக்கிறார்கள்.

உள் அறையின் வாசலுக்கு நேரே கருணாநிதியின் மனம் கவர்ந்த இரண்டு படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. கருணாநிதி அமர்ந்திருக்க, அண்ணா வீர உரையாற்றும் படம் ஒன்று. பெரியாரோடு கருணாநிதி அமர்ந்திருக்கும் படம் ஒன்று. தினந்தோறும் அந்த இடத்தைக் கடக்கும் முன்பு ஒரு நொடி நின்று அந்தப் படங்களைப் பார்த்துவிட்டுச் செல்வாராம் கருணாநிதி. வரவேற்பறையின் கிழக்கில் கருணாநிதியும் அஞ்சுகமும் இருக்கும் ஆளுயரப் புகைப்படத்தில் விளக்கு எரிகிறது. அருகிலேயே முரசொலி மாறனின் புகைப்படம் மலரலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. கருணாநிதியின் முதுமைக்காக புதிதாக அமைக்கப்பட்ட லிப்ட் அந்த வீட்டின் சூழலோடு ஒட்டவேயில்லை. அவர் காலமானபிறகு, லிப்ட் இயங்குவதில்லை.
வரவேற்பறையின் மேற்கில் கருணாநிதியின் நிழல்களென அறியப்படும் ராஜமாணிக்கம், சண்முகநாதன் இருவருக்குமான ஒரு சிற்றறை. டைப்ரைட்டர் கம்ப்யூட்டராக மாறியிருக்கிறது. மற்றபடி ஆவணங்களும் நூல்களும் அப்போது போலவே இப்போதும் நிறைந்திருக்கின்றன அறையில். கருணாநிதி முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் இருவரும். 24 பாகங்களாக விரைவில் வெளிவர உள்ளன அந்த நூல்கள்.
வரவேற்பையைக் கடந்து முன்னறைக்குச் சென்றால், ஒரு பக்கம் கணபதி ஸ்தபதி செய்தளித்த அஞ்சுகம் அம்மா சிலை... இன்னொரு பக்கம், சிற்பி தீனதயாளன் செய்த முத்துவேலர் சிலை. நடுவில் முகம் மலர்ந்து சிரிக்கிறார் கருணாநிதி. மலர்களால் எளிமையாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது கருணாநிதியின் படம். இருபுறமும் மின்சாரத்தில் எரிகின்றன இரண்டு மெழுகுவர்த்திகள்.
கருணாநிதியின் குடும்ப உறவுகளின் புகைப்படங்கள் இந்த அறையில் நிறைந்திருக்கின்றன. இரண்டு பிள்ளைகளின் கரம் பற்றியபடி கருணாநிதி நிற்கும் படமொன்று மனதை ஈர்க்கிறது. தயாளு அம்மாளுடனும் பத்மாவதி அம்மையாருடனும் கருணாநிதி இருக்கும் புகைப்படங்களோடு முக.முத்து, ஸ்டாலின், அழகிரி, தமிழரசு ஆகியோரின் புகைப்படங்களும் நிறைந்திருக்கின்றன. பராசக்தி மற்றும் பாலைவன ரோஜாக்கள் படங்களுக்காக கருணாநிதி பெற்ற இரண்டு கேடயங்கள் இந்த அறையில் பாதுகாக்கப்படுகின்றன.முன்னறையில் இருந்து மேற்கில் விலகிச் செல்லும் 19 படிக்கட்டுகளும் பல லட்சம் பாதங்களைக் கண்டவை. முதல் தளத்திலிருக்கும் கருணாநிதியின் அறைக்குச் செல்ல தலைவர்கள் பலரும் அந்தப் படிக்கட்டுகளில்தான் காத்திருப்பார்கள்.

முதல்தளத்தில் கருணாநிதியின் அறை. சாதாரணமான ஒரு படுக்கை... அறையெங்கும் புத்தகங்கள்... பேராசிரியர், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி போன்ற ஒரு சிலருக்குத்தான் அதற்குள் அனுமதி. இங்கிருந்தபடிதான் உடன்பிறப்புகளுக்கான கடிதங்கள் முதல் நெஞ்சுக்கு நீதி வரை எழுதிக் குவித்தார் கருணாநிதி. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்றும் மேலே இருக்கிறது.

6124 சதுர அடிகள் பரப்புகொண்ட இந்த வீட்டின் கீழ்தளத்தில் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, தயாளு அம்மாள் ஆகியோருக்காக நான்கு அறைகள் உண்டு.

புதையல் படத்துக்கு வசனம் எழுதிக் கிடைத்த 45 ஆயிரம் ரூபாயில் 1955-ல் சரபேஷ்வர அய்யர் என்பவரிடமிருந்து இந்த வீட்டை வாங்கினார் கருணாநிதி. தன் சகோதரிகளோடு இந்த வீட்டுக்கு குடிவந்த கருணாநிதி 2018 ஆகஸ்ட் 7ம் தேதி மறையும்வரை இந்த வீட்டோடு கலந்திருந்தார். முரசொலி மாறனின் திருமணம், கலைஞரின் நான்கு பிள்ளைகளின் திருமணம் என இந்த வீடு பல மங்கள நிகழ்வுகளைக் கண்டிருக்கிறது.

வாழ்ந்த காலம் முழுமையும் கோபாலபுரம் மக்களின் விருப்பத்துக்குரிய மனிதராகவே கருணாநிதி இருந்தார்.

கருணாநிதியின் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறது, ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில். அந்தக் கோயிலின் அன்றாடச் செயல்பாடுகள் எதுவும் தன்னை நாடி வரும் உடன்பிறப்புகளால் பாதிக்கப்படக்கூடாது என்பதில் தனிக்கவனம் செலுத்தினார் கருணாநிதி. பண்டிகைக்காலங்களில் கருணாநிதியின் வீடு கடந்தும் வழிபாட்டுக்கான கூட்டம் நீளும். செல்வியும் தயாளு அம்மாளும் அந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவதுண்டு என்கிறார் அந்தக் கோயிலின் அர்ச்சகர் வேங்கட சுப்பிரமணியன்.

கருணாநிதியின் வீட்டையொட்டி கோயிலை நம்பி நான்கு பூக்கடைகள் இருக்கின்றன, கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் அருகிலிருந்த பூக்கடைகளை அகற்ற முனைந்திருக்கிறார்கள் அதிகாரிகள். பூக்கொடுக்க சென்ற தருணத்தில் தயாளு அம்மாளிடம் கண்ணீர் மல்க இதைத் தெரிவித்திருக்கிறார்கள் கடை நடத்தும் பெண்கள். உடனடியாக தன் கணவரின் கவனத்துக்குக் கொண்டு சென்று கடைகளை சற்று தள்ளி அமைத்துக்கொள்ள அனுமதி பெற்றுத்தந்த தயாளு அம்மாள், கடை நடத்தும் அத்தனை பேருக்கும் பள்ளிக்கரணையில் அரசு வீடும் பெற்றுத்தந்திருக்கிறார்.


இப்போது... தயாளு அம்மாள் மட்டும்தான் இந்த கோபாலபுரம் வீட்டில் இருக்கிறார். நெருக்கமானவர்களை மட்டும் அவருக்கு அடையாளம் தெரிகிறது. வசந்தி என்பவர் தயாளு அம்மாவை கூடவே இருந்து கவனித்துக்கொள்கிறார். மலர்க்கொடி, சரோஜா இருவரும் வீட்டுப்பணிகளைச் செய்கிறார்கள். கருணாநிதி காலத்திலிருந்து சமையல் செய்து தரும் பிரகாஷ், இப்போதும் தயாளு அம்மாளுக்காக வீட்டுக்கு வந்து சமைத்துத் தருகிறார். இளவரசி, சுகன்யா ஆகிய இரண்டு செவிலியர்கள் ஷிப்ட் முறையில் தயாளு அம்மாவின் மருத்துவத் தேவைகளைப் பார்த்துக்கொள்கிறார்கள். மோகன், வடிவேலு இருவரும் வீட்டைக் கவனித்துக்கொள்கிறார்கள்.

தினமும் காலையும் மாலையும் வந்து தன் தாயின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் செல்வி. முக தமிழரசுவும் அவரது மனைவியும் பேரன் மகிழனோடு அவ்வப்போது வந்து தயாளு அம்மாவைப் பார்த்துச் செல்கிறார்கள். கிடைக்கும் நேரத்தில் தன் மனைவியுடன் வந்து அம்மாவைப் பார்த்துச் செல்கிறார் ஸ்டாலின்.

நன்றி https://www.vikatan.com/


No comments: