.
அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதி மீது, திடீரென ஒரு பொருள் குறுக்காக எழுந்து நின்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அங்கே.
மணவிழாவின் கண்கொள்ளாக் காட்சியை நேரிலும், சுவர் வழியே
தொங்கிக் கொண்டிருக்கும் எல்.சி.டி ஊடாகவும் பார்த்துக் கொண்டிருந்தவர்களின்
கண்கள், சிவபூசையில் புகுந்த கரடி மீது குவிந்தன.
திடீரெனப் பிரசன்னமான இராசப்புவின் கையில் பளிச்சென மின்னியது `ஐ போன்’. ஒவ்வொரு மேசையாக அலைந்து, தன் சுட்டு விரலினால் ஐ போனைத் தட்டி, முதல் நாள் தான் நடித்திருந்த நாடகமொன்றின் காட்சிகளைக் காட்டிக் கொண்டிருந்தார்.
அப்பு முதல் நாள் ஆச்சி வேடமிட்டிருந்தார்.
அமைதியாக திருமணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அந்தக் காட்சி எரிச்சலைத் தந்தது.
“எப்படி இருக்கு என்ரை கிழவி வேசம். கொஸ்ரியூமிற்கு மாத்திரம் இருநூறு டொலர்கள் செலவாச்சு…..” வாயின் இருபக்கத்து அந்தங்களும் காதுவரை நீண்டிருக்க, `இகும் இகும்’ என்று சிரித்தபடி சொன்னதையே திரும்பச் சொல்லியபடி இருந்தார். ஏழெட்டுப்பெண்களின் மத்தியில், ஒரு ஆசனம் வெறுமையாக இருக்க அதற்குள் புகுந்துகொண்டார் அவர். தனது `ஐ போனை’ நீட்டி, சுற்றிச் சுழலவிடச் சென்னபோது அங்கே சலசலப்பு ஏற்பட்டது.
இதையெல்லாம் தூரத்தே இருந்து அவதானித்துக் கொண்டிருந்த
ஒரு முதிய பெண்மணி கடுப்பானார். இராசப்பு
திருமணத்தைக் குழப்பிவிடுவார் என்று எண்ணினார். அப்புவுக்கு ஆப்பு வைக்க
திடீரென கூட்டத்துனுள்ளே புகுந்தார் அந்தப் பெண்மணி. இராசப்புவைக் குற இழுவையாக
இழுத்துச் சென்று விசாரணை செய்தார்.
“எப்படி இருக்கு என்ரை கிழவி வேசம். கொஸ்ரியூமிற்கு மாத்திரம் இருநூறு டொலர்கள் செலவாச்சு…..” அந்த முதிய பெண்மணிக்கும் அதையே சொன்னார்.
“நீங்கள் மாப்பிள்ளையின் உறவினரா?“ அந்தப்பெண்மணி இராசப்புவிடம் கேட்டார்.
“ஆமாம். மாப்பிள்ளையின் அப்பாவின் நண்பர்.”
“நான் - மணப்பெண்ணின் அம்மாவின் அக்கா” சொல்லியபடி இராசப்புவின் ரெலிபோனை வாங்கிப் பார்த்தார் அந்த முதிய பெண்மணி.
“சும்மா சொல்லப்படாது. அச்சாவா நடிச்சிருக்கிறியள். நானே கிழவி. என்னைவிட உங்கள் நடிப்புப் பிரம்மாதம்” இராசப்புவின் காதிற்குள் இரகசியம் பேசினார். அவரது ரெலிபோனை வாங்கிக் கொண்டு விறுவிறெண்டு உள்ளே போனார். இராசப்பு ஒரு ஓரமாக நின்று எல்.சி.டி பனலைப் பார்த்த வண்ணம் நின்றார்.
“மணப்பெண் கூறை மாற்றப் போகின்றார். அந்த நேர இடைவெளியில் உங்களுக்கு ஒரு அதிசயம் காத்திருக்கின்றது. அமைதியாக இருந்து இரசித்துப் பாருங்கள்” ஒலிபெருக்கியில் அறிவிப்பு வந்தது. இராசப்புவின் கிழவி வேடம் எல்.சி.டி இல் தோன்றியது.
வந்த வேலை முடிந்தது என எண்ணிய இராசப்பு, தனது ஐ போனைப் பெற்றுக் கொள்வதற்காக அந்த முதிய பெண்மணியைத் தேடிப் போனார். அவரைக் காணவில்லை. திருமணக் காட்சிகளை ஒளிபரப்புச் செய்துகொண்டிருந்தவரிடம் அந்த முதிய பெண்மணியைப் பற்றி விசாரித்தார்.
“ஒரு பெண்மணி வந்தவர் தான். ரெலிபோனைத் தந்து நீங்கள் நடித்த அந்த நாடகத்தின் காட்சிகளைப் போடச் சொன்னார். பிறகு அந்த போனை வாங்கிக் கொண்டு போய்விட்டார்.”
“பெண்மணி… பெண்மணி எண்டு சொல்லாதையுங்கோ…. அது மணப்பெண்ணின் அம்மாவின் அக்கா” பதட்டத்துடன் சொன்னார் இராசப்பு.
“எனக்கு மணப்பெண்ணின் குடும்பத்தினரை நன்றாகத் தெரியும். மணப்பெண்ணின் அம்மாவுக்கு அக்கா இல்லை.” அவர் கெக்கட்டம் விட்டுச் சிரித்தார்.
“அப்ப என்ரை போன்? வெயர் இஸ் மை போன்?” இராசப்பு தலையைப் போட்டு விறாண்டினார். அது புறாக்கூடு போல விரிந்தது.
”அப்ப கிழவி வேடம் போட்டது ஆர்?” கோபத்துடன் கத்தினார் இராசப்பு.
“அது நீர் தான்” என்றார் அவர்.
•
No comments:
Post a Comment