அஞ்சலிக்குறிப்பு ஆசிரியப் பெருந்தகை மணிமேகலை ( 1939 – 2021 ) பொன்னம்பலம் விடைபெற்றார் முருகபூபதி

எங்கள் நீர்கொழும்பூரில்  நாம் குழந்தைகளாக இருந்தபோது, எமக்கு


பாலர் வகுப்பிலும், அதன் பின்னர் ஆரம்ப  வகுப்புகளிலும் கற்பித்த மணிமேகலை ரீச்சர் லண்டனில் நேற்றைய தினம் ( ஓகஸ்ட் 10 ஆம் திகதி ) மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்தது.

தனது  82 வயதில் மறைந்திருக்கும் எங்கள் மணிமேகலை ரீச்சர்  பசுமையான  எண்ணிறைந்த நினைவுகளை தந்துவிட்டு விடைபெற்றுவிட்டார்.

நீர்கொழும்பில்  இரண்டு ஆண் சகோதரர்களுடனும்  சில பெண் சகோதரிகளுடனும்  எமக்கு  1954 ஆம் ஆண்டிற்குப்பின்னர் அறிமுகமான மணிமேகலை ஆசிரியையின் அக்கா கௌரி ரீச்சர்  எமக்கு ஆங்கில பாடத்திற்கும்  மணிமேகலை ரீச்சர்  தமிழுக்கும்  சமயத்திற்கும்  ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள்.

இவர்களின் பெற்றோர் கார்த்திகேசு -  பாக்கியம் தம்பதியர் எமது குடும்பத்துடனும்  மற்றும் நீர்கொழும்பு  வாழ் சைவத்தமிழ் குடும்பங்களிடத்தும்   உற்ற உறவினர்கள் போன்று பழகியவர்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து எங்கள் ஊருக்கு தொழில் நிமித்தம் கார்த்திகேசு அய்யா,  இடம்பெயர்ந்து வந்த  காலப்பகுதியில் அங்கே   பிறந்த  சைவசமயத்தைச்சேர்ந்த தமிழ்ப்பிள்ளைகளுக்கென ஒரு பாடசாலை இருக்கவில்லை.

இவருடைய  மூத்த பிள்ளைகள்  அனைவரும் பிரதான வீதியில் அமைந்த புனித மரியாள் கலவன் வித்தியாலயத்திலேயே பயின்றனர்.


நீர்கொழும்பு கடற்கரை வீதியில் அமைந்த இந்து வாலிபர் சங்கத்தில் , நகர பிதா எஸ்.கே. விஜயரத்தினம் அவர்கள் தலைவராக இயங்கிய காலப்பகுதியில் இச்சங்கத்தில் இணைந்திருந்தவர்தான் கார்த்திகேசு அய்யா.

இந்த மண்டபத்தில் 1954 ஆம் ஆண்டு விஜயதசமியின்போது 32 குழந்தைகளுக்கு ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்விக்கப்பட்டபோது, அதில் ஒரு குழந்தையாக இருந்த நான்தான் தற்போது இந்த வரலாற்றுடன் எங்கள் பாசமிகு ஆசிரியை மணிமேகலை அவர்கள் பற்றிய நினைவுப்பதிவை எழுதுகின்றேன்.

பண்டிதர் க. மயில்வாகனனை தலைமை ஆசிரியராகவும் அவருக்கு உதவியாக திருமதி மரியம்மா திருச்செல்வம் அவர்களையும் செல்வி திலகமணி ரீச்சரையும் வைத்துக்கொண்டு தொடங்கப்பட்ட அன்றைய விவேகானந்தா வித்தியாலயம்தான் பின்னாளில்  மகா வித்தியாலயமாகவும் காலம் கடந்து அதன் நிறுவனர் விஜயரத்தினம் அவர்களின் பெயரையும் தாங்கி, கம்பகா மாவட்டத்திலேயே ஒரே ஒரு இந்து மத்திய கல்லூரியாகவும் தரமுயர்ந்துள்ளது.

  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களையும் நூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் கொண்டிருக்கும் இக்கல்லூரி வித்தியாலய தரத்திலிருந்தபோது எமக்கு ஆரம்பக்கல்வியை போதித்த மணிமேகலை ரீச்சர் சொல்லித்தந்த கதைகளும் பாடல்களும் மனதை விட்டு நீங்காதவை.

அக்காலத்தில் ஆசிரியர் – மாணவர் உறவு வகுப்பு அறையின் எல்லையுடன் முடிந்துவிடவில்லை.  மாணவர்களை தமது பிள்ளைகளாக நேசித்தவர்கள் அன்றைய ஆசிரியர்கள்.

அதனால் வித்தியாலயத்தில் பெற்றோர் – ஆசிரியர் சங்கம் என்ற அமைப்பும் உருவாகியிருந்தது. 

மணிமேகலை ரீச்சரிடமும் அவரது  அக்கா கௌரி ரீச்சரிடமும் 1963 ஆம் ஆண்டு வரையில் நான் கல்வி கற்றேன்.  அதன்பின்னரும்  அவர்களுடனான உறவு நீடித்தது. 

மணிமேகலை ரீச்சர் பண்டாரவளை வித்தியாலயம்  ஒன்றிற்கு இடமாற்றலாகிச்சென்றபோது, அங்கு பிரதான வீதியில் வேல்ஸ்  ஸ்ரோர்ஸ்  என்ற வர்த்தக ஸ்தாபனம்  ஒன்றை நடத்திவந்தவர் எமது அப்பாவின் நல்ல நண்பர். அந்த நட்பின் அடிப்படையில் மணிமேகலை ரீச்சர் அவரின் வீட்டிலிருந்தே அங்கு கடமைக்குச்சென்று வந்தார்.

எங்கள் அப்பா வர்த்தக  நிமித்தம் மலையகம் செல்லும் சந்தர்ப்பங்களில்  நீர்கொழும்பிலிருக்கும் மணிமேகலை ரீச்சரின் பெற்றோருக்கும்   பண்டாரவளையிலிருந்த ரீச்சருக்கும் அப்பாதான் பாலமாக விளங்கினார்.

இந்த அன்புப்பாலத்தின் ஊடாக ரீச்சருக்குத்  தேவையானவை பரிமாறப்படும்.   

மணிமேகலை ரீச்சரின் ஒரு தங்கை சத்தியவாணி எனது அக்காவுடனும் ஒரு தங்கை இந்திராணி எனது தங்கையுடனும்  படித்தவர்கள்.  ரீச்சரின் ஒரு தம்பி ஆனந்த சிவம் பின்னாளில் எமது வித்தியாலயத்தின் அபிவிருத்திச்சங்கத்திலும் இந்து இளைஞர் மன்றத்திலும் முக்கிய பங்காற்றி அவற்றின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் உதவியவர்.

மணிமேகலை ரீச்சர் வடபுலத்தில் குப்பிழானில் திருமண பந்தத்தில் இணைந்த பின்னர், எனது மைத்துனர்  ஒருவரும் அந்தப்பிரதேசத்தில் பெண் எடுத்தார். அந்த குடும்பத்தின் ஊடல்கள் – உரசல்களின்போதும் மணிமேகலை ரீச்சர் ஒரு சமாதான நீதிபதியாக இயங்கினார்.

இந்தச்செய்திகள் எனது தனிப்பட்ட விடயங்களாக இருந்தபோதிலும், அன்றைய ஆசிரியர்கள் எவ்வாறு தமது மாணவர்களுடன் நேசத்தை பகிர்ந்தார்கள் என்பதை பதிவுசெய்வதே இந்த அஞ்சலிக்குறிப்பின் நோக்கமாகும்.

மாணவர்களை தங்கள் சொந்தப்பிள்ளைகளாக பராமரித்த  எமது


வித்தியாலயத்தின் ஆசிரியப்பெருந்தகைகள் பலர்.  பண்டிதர் க. மயில்வாகனன், பெரிய ரீச்சர் மரியம்மா திருச்செல்வம், திலகமணி, கௌரி, மணிமேகலை, சோமாஸ்கந்தர்,  நிக்கலஸ் அல்ஃபிரட், இராமலிங்கம்,  சுப்பிரமணியம் -  சிவஞானசுந்தரி  தம்பதியர் ஆகியோரை எம்மால் இன்றளவும் மறக்கமுடியாதிருப்பதற்கு காரணமே,  அவர்கள் எம்மை யாரோ பெற்றெடுத்த பிள்ளைகள் எனக்கருதாமல் தங்கள் சொந்தப்பிள்ளைகளாக பாசத்துடனும் கண்டிப்புடனும் வளர்த்தமைதான்.

இவர்களில் சுப்பிரமணியம் -  சிவஞானசுந்தரி  தம்பதியரின் அருமை மகள் ஶ்ரீரஞ்சனிதான் தற்போது கனடாவில் வதியும் எழுத்தாளர்.

வித்தியாலய முன்றலில் எம்மை சுற்றிவர நிற்கச்செய்துவிட்டு, நடுவில் ஒரு ஆசனத்தில் அமர்ந்து மணிமேகலை ரீச்சர் சொல்லித்தந்த பாலர் பாடல்கள், சிறுவர் கதைகள்  நினைவில் நிறைந்திருப்பவை.

வகுப்பறையினுள்ளும், மைதானத்திலும் அவர் பழக்கிய சிறுவர் நாடகங்கள்,  மாணவர்களின் சுய ஆற்றலையும் வளர்க்கத்துணையாக இருந்தவை.

மணிமேகலை ரீச்சரின் அக்கா கௌரி ரீச்சர் ஆளுமை மிக்க பெண்மணி. போர்க்காலத்தில் கெளரி ரீச்சரின் ஆண்பிள்ளைகளும் காணாமல் போய்விட்டனர்.

காணாமல் போனவர்களை மீட்கும் அறப்போரட்டத்தை ஜெனீவா வரையில் எடுத்துச்சென்று குரல் எழுப்பியவர் எங்கள் கௌரி ரீச்சர். அவரது குரல் வெளிநாட்டு ஊடகங்களிலும் பதிவாகியிருக்கிறது.

2019 ஆம் ஆண்டு  பிரான்ஸ் சென்றபோது, மணிமேகலை ரீச்சரின் தங்கைமாரை பார்த்துவிட்டு, திரும்பியபோது, எங்கள் ஊரில் பண்டிதர் மயில்வாகனன் அவர்களின் நூற்றாண்டு விழாவையும் நடத்தினோம்.

இவ்விழாவிலும் மணிமேகலை ரீச்சரின் தங்கைமார் கலந்து சிறப்பித்தனர்.

எமது வித்தியாலயத்தின் வைரவிழாவின் போது நாம் தொகுத்து வெளியிட்ட நெய்தல் மலரிலும் எமது ஆசான்களின்  சிறப்பியல்புகளை பதிவுசெய்துள்ளோம்.

எங்கள் குடும்பங்களிலும் ஒருவராக விளங்கிய மணிமேகலை ரீச்சரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் அன்னாரின் மறைவினால் ஆழ்ந்த கவலைக்குள்ளாகியிருப்பவர்களின் துயரத்திலும் பங்கேற்கிறோம்.

--------0000--------

letchumananm@gmail.com

 

 

No comments: