இலட்சக்கணக்கான மக்களின் உயிர்த் தியாகத்தினால் ஈட்டிய பாரத தேசத்தின் விடுதலை

 Sunday, August 15, 2021 - 6:00am

- இந்திய 75 ஆவது சுதந்திர தினம் இன்று (15/08/2021)

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை இன்று (15) கொண்டாடுகின்றது. பல ஆண்டுகளாக கட்டப்பட்டிருந்த அடிமைச் சங்கிலியை உடைத்தெறிந்து, ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாள் நாளை கொண்டாடப்படுகின்றது.

இந்திய சுதந்திரத்தின் பின்னணியில் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்த் தியாகங்களும், வலிகளும், வேதனைகளும் இருக்கின்றன. இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி மூலம் தங்கள் சாம்ராஜ்யத்தை 1757ஆம் ஆண்டு கட்டமைத்தனர். இந்நிறுவனம் சுமார் 100 ஆண்டுகள் இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இந்நிலையில், 1857 இல் முதல் இந்திய சுதந்திரப் போர் வெடித்தது. ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் வேண்டும் என்ற வேட்கை இந்த சிப்பாய்ப் புரட்சியின் மூலம்தான் உதயமானது. இதனை ஆங்கிலேயர்கள் வெற்றிகரமாக முறியடித்து இந்தியர்களை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

அதன் பிறகு ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையில் எடுத்தனர். பின்னர் பிரிட்டிஷாரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்தியா வந்தது. இங்கிலாந்தில் இருந்து கொண்டே உரிய பிரதிநிதிகளை நிர்ணயித்து ஆட்சி செய்து வந்தனர். இதன் போது இந்தியர்களை மிகுந்த ஒடுக்குமுறைக்கு ஆளாக்கினர். ஒருகட்டத்தில் சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக ஒலிக்கத் தொடங்கியது.

இதற்கு ஏராளமான தலைவர்களின் கலகக் குரல்களும் காரணமாகும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங், மங்கள் பாண்டே, மகாத்மா காந்தி, ராணி லக்ஷ்மிபாய், சரோஜினி நாயுடு, சந்திர சேகர் ஆசாத், அம்பேத்கர் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டனர். இவர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக மிகவும் தைரியமாக புரட்சிக் கனலை பற்ற வைத்தனர்.

இவற்றில் அஹிம்சை வழியிலான மகாத்மா காந்தியின் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஆங்கிலேயர்களின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்தது.

இத்தகைய புரட்சிகள், போராட்டங்கள், உயிர்த் தியாகங்கள் உள்ளிட்டவற்றின் விளைவாக 1947 ஓகஸ்ட் 15 இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. அப்போது இஸ்லாமியர்கள் தங்களுக்கென்று தனிநாடாக பாகிஸ்தானைப் பிரித்துக் கொண்டனர். ஒரு நாடாக இருந்த இந்தியா இரு தேசமாகியது.

இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்ற போது, அதற்காகப் போராடிய தன்னலமற்ற தியாகிகளை நினைத்து பார்க்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி சுதந்திரத்தைக் கட்டி காப்பது இந்திய மக்களின் கடமை. இதையொட்டி நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வுகள் நாளை அரங்கேறும்.

தியாகிகள் கௌரவிக்கப்படுவர். சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். எனினும் கொரோனா தொற்று காரணமாக அவை பெரும்பாலும் மக்கள் பங்கேற்காத நிகழ்வுகளாகவே அமையும். தேசிய நலனுக்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். நாட்டு மக்களை உற்சாகமூட்டும் வகையிலான உரைகளை தலைவர்கள் நிகழ்த்துவர்.

குறிப்பாக சுதந்திர தினத்தன்று டெல்லியின் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போது பிரதமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். இதேபோல் நாடு முழுவதும் முதலமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் தேசியக் கொடிய ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்வர்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பெரிய அளவில் வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சின் வழிகாட்டுதலின்படி, போதிய சமூக இடைவெளி, முகக்கவசம், கைச் சுகாதாரம் உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். தேசபக்தியை வெளிப்படுத்தும் நோக்கில் நோய்த் தொற்றில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்பதே அரசின் முக்கிய அறிவுறுத்தலாக இருக்கிறது.  நன்றி தினகரன் 


No comments: