இலங்கைச் செய்திகள்

 PCR, Rapid Antigen Test உச்சபட்ச கட்டண வர்த்தமானி வெளியீடு

தடுப்பூசி பெற்று இந்தியாவிலிருந்து வரும் இலங்கையருக்கு அனுமதி அவசியமில்லை

கொவிட்-19 தொற்றுக்குள்ளாகும் சிறார்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை வழங்க தீர்மானம்

பேராதனை தாவரவியல் பூங்காவின் 200 வருட பூர்த்தி

நல்லூர் உற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை!


 PCR, Rapid Antigen Test உச்சபட்ச கட்டண வர்த்தமானி வெளியீடு

PCR, Rapid Antigen Test உச்சபட்ச கட்டண வர்த்தமானி வெளியீடுMaximum Fee Fixed for PCR & Rapid Antigen Tests-Extraordinary Gazette Issued

கொவிட்-19 தொடர்பான PCR பரிசோதனை மற்றும் Rapid Antigen சோதனைகளுக்கு உச்சபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (11) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  அதற்கமைய,

  • PCR பரிசோதனை - ரூ. 6,500
  • Rapid Antigen Test - ரூ. 2,000

கொவிட்-19 பரவலின் உக்கிரம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஒரு சில  வைத்தியசாலைகள் கொவிட்-19 சோதனை தொடர்பில் அதிகளவிலான கட்டணங்களை அறவிடுவதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தி குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் தடுப்பூசி பெற்று இந்தியாவிலிருந்து வரும் இலங்கையருக்கு அனுமதி அவசியமில்லை

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வர விரும்பும் இலங்கையர்களுக்கு அல்லது இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு, வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கை வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகாரசபை (CAA) இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன், வந்திறங்கும்போது மேற்கொள்ளப்படும் கொவிட்-19 தொடர்பான முதலாவது PCR சோதனை முடிவின் அடிப்படையில் 24 மணி நேர தனிமைப்படுத்தலின் பின்னர் வீடு திரும்ப அனுமதி வழங்கப்படுமென சபை தெரிவித்துள்ளது.  நன்றி தினகரன் 

கொவிட்-19 தொற்றுக்குள்ளாகும் சிறார்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை வழங்க தீர்மானம்

இரண்டு வயதுக்கு மேற்பட்ட கொவிட்- 19 தொற்றுக்குள்ளாகும் சிறுவர், சிறுமியருக்கு தமது வீடுகளிலேயே தங்க வைத்து சிகிச்சை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் டொக்டர் ஷன்ன டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நோய் அறிகுறிகள் தென்படாத மற்றும் சிறு நோய் அறிகுறிகள் தென்படுகின்ற சிறுவர், சிறுமிகளை வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு வைத்தியர்கள் கோரியுள்ளனர்.

தொற்றா நோய் மற்றும் நீண்ட கால நோய்களுக்காக சிகிச்சைகளை பெறாத சிறுவர், சிறுமியர்களுக்கே இவ்வாறு வீடுகளில் சிகிச்சை வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுக்குள்ளாகும் சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை, வெகுவாக அதிகரித்துள்ளதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

வீடுகளில் சிகிச்சை பெறும் சிறுவர், சிறுமியர்களை அவதானித்துக்கொள்ள வேண்டியது, வீட்டிலுள்ள மூத்தவர்களின் பொறுப்பு என்பதுடன், தொலைபேசியூடாக வழங்கப்படும் ஆலோசனைகளுக்கமைய சிகிச்சைகளை வழங்கும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  நன்றி தினகரன் 
பேராதனை தாவரவியல் பூங்காவின் 200 வருட பூர்த்தி

வரலாற்று சிறப்புமிக்க 200 வருட வரலாற்றை காெண்ட பேராதனை தாவரவியல் பூங்காவை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்

பேராதனை தாவரவியல் பூங்காவின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தில் நேற்று (11) காலை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் :

1747 முதல் 1780 வரை மூன்றாம் விக்ரமபாகு மன்னர் காலத்தில் இந்த தாவரவியல் பூங்கா அரச தோட்டமாக கருதப்பட்டது. அதன் பிறகு ராஜா ராஜராஜசிங்க பேராதனை தாவரவியல் பூங்காவில் ஒரு தற்காலிக குடியிருப்பை கட்டியதாகவும், 1780 இல் அது தாவரவியல் பூங்காவாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பூங்காவின்போது,., காபி மற்றும் தேநீர் பிரதானமாக இருந்தன. 40 ஏக்கரில் தொடங்கிய இந்த தாவரவியல் பூங்கா தற்பொழுது 147 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

2006 இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில்தான் தேசிய தாவரவியல் பூங்கா துறை நிறுவப்பட்டது. இந்த நாட்டில் தாவரவியல் பூங்காக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்பொழுது பல்வேறுபட்ட நவீன தொழில்நுட்பத்துடன் சேவைகள் இடம்பெற்றுவருகின்றன

பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக எங்களிடம் தரவு உள்ளது. ஈஸ்டர் தாக்குதலால் சுற்றுலா பயணிகள் வருகை தடைப்பட்டது. பின்னர் கொரோனா தொற்றுநோயால் சரிந்தது. கொரோனா தொற்றுநோய் இருந்தபோதிலும், தாவரவியல் பூங்காவிற்கு வருபவர்களுக்கு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

(எம்.ஏ.அமீனுல்லா) -  நன்றி தினகரன் 
நல்லூர் உற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை!

கொரோனா அச்சுறுத்தலால் கண்டிப்பான நடைமுறை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நல்லூர் ஆலயத்திற்குள் வருவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. எனவே ஆலயத்திற்கு வருவதை தவிருங்கள் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே கேட்டுக் கொண்டார்.

நல்லூர் உற்சவ பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 25 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது.

“தற்போது நாட்டில் கொரோனா நிலைமை மிகவும் தீவிரமாக காணப்படுகின்றது.

தற்போதுள்ள கொரோனா தீவிர நிலையில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சினால் சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த சுற்றுநிருபங்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாநகரசபை, ஆலய நிர்வாகம் மற்றும் பொலிசார் இணைந்து ஆலய உற்சவத்தினை பாதுகாப்பான முறையில் எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுத்துள்ளோம்.

அந்த முடிவின் பிரகாரம் நல்லூர் ஆலய வளாகத்திற்குள் ஆலய நிர்வாகத்தினரால் அடையாள அட்டை வழங்கப்பட்டோர் மாத்திரம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வேறு எவரும் ஆலய வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

எனவே பொதுமக்கள் தற்போதுள்ள தொற்று நிலைமையினை கருத்திற் கொண்டு ஆலயத்துக்கு வருவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

யாழ்.விசேட நிருபர்நன்றி தினகரன் 
No comments: