தமது இளம் வயதில் சிங்கள மொழியை இரண்டாம் பாடமாக பயிலும் பிற இனத்துப்பிள்ளைகளும் குறிப்பிட்ட புத்தசரித்தய நூலைப்படிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிட்டும்.
அந்நாட்களில் குமாரோதய, புத்த சரித்தய முதலான பாட நூல்கள் இலங்கையில் பிரசித்தம்.
இன்றைய நேபாள எல்லைக்குள் இருக்கும் கபிலவஸ்து நகரத்தின் மன்னர் சுத்தோதனனின் பிள்ளையாகப்பிறந்த புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தன்.
அரண்மனைவாசியாகவே வாழ்ந்திருக்கும் சித்தார்த்தன் அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்தார். தனது பதினாறாவது வயதில் உறவப்பெண்ணான யசோதராவை மணம்முடித்து ராகுலன் என்ற ஆண் மகவுக்கும் தந்தையானார்.
அரண்மனையை விட்டு வெளியே செல்லும் சந்தர்ப்பம் அவருக்கு கிட்டியபோது, ஒரு முதியவரையும், ஒரு நோயாளியையும் , ஒரு மரணமுற்றவரையும், ஒரு துறவியையும் காண்கிறார்.
அவர் அதுவரையில் வாழ்ந்துகொண்டிருக்கும் அரண்மனையில் காணாத காட்சிகளை அந்த நால்வரின் தோற்றத்திலும் காண்கிறார்.
அரண்மனை வாழ்க்கைக்கும் அப்பால் மற்றும் ஒரு வாழ்க்கை வெளியே இருக்கிறது என்பதை உணர்ந்தார்.
இரவோடு இரவாக மனைவி யசோதராவையும் புதல்வன் இராகுலனையும் விட்டுவிட்டு, நாடும் வேண்டாம், அரண்மனை சுகமும் வேண்டாம், மணிமுடியும் வேண்டாம் என்று வனம் சென்று துறவறம் பூண்டு, நாடெங்கும் அலைந்து அன்புமார்க்கத்தை போதித்தார்.
அவருடைய போதனைகள் நான்கு உண்மைகள் பொதிந்தவை. அவை: 01. மனித வாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது. 02. அந்தத் துன்பத்திற்கு காரணம் அவர்களின் சுயநலனும், ஆசையும். 03. மனிதனால் தன்னலத்தையும், ஆசையையும் அடக்க முடியும். 04. மக்கள் தன்னலம், ஆசை ஆகியனவற்றிலிருந்து தப்பிக்க எட்டு மார்க்கம் உண்டு. அவை: நேர்மையான கருத்து, நேர்மையான எண்ணம், நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான சித்தம், நேர்மையான தியானம் .
இந்த அரிச்சுவடியெல்லாம் நன்கு தெரிந்தவர்கள்தான் எமது தேசத்தின் ஆட்சியாளர்களும், அவர்களை ஆட்டிப்படைக்கும் பௌத்த தேரர்களும்.
இந்தத் தேரர்களின் மூத்த தலைமுறையினர் ஒருசிலர் இற்றைக்கு அறுபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1959 ஆம் ஆண்டு, கௌதம புத்தரின் புனித பாதம் பதிந்ததாக ஐதீகத்தில் கூறப்படும் களனி ரஜமஹாவிகாரையில், ஒரு சதியை திட்டமிட்டு மேற்கொண்டு நிறைவேற்றினார்கள்.
குறிப்பிட்ட களனி ரஜமகா விஹாரையின் பிரதம குரு மாபிட்டி கமபுத்தரகித்த தேரோ ( 1921-1967) தலைமையில் தல்துவே சோமராம தேரோ (1915-1962) திருமதி விமலா விஜயவர்தனா என்ற அன்றைய சுகாதார நலத்துறை அமைச்சர் உள்ளிட்ட எட்டுப்பேர் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவை கொலைசெய்ய சதித்திட்டம் உருவாக்கி செயல்படுத்தினர்.
அவர்களின் திட்டத்தின் பிரகாரம் பண்டாரநாயக்கா, 1959 செப்டெம்பர் 25 ஆம் திகதியன்று அவரது ரோஸ்மீட் பிளேஸ் வாசஸ்தலத்தில் சுடப்பட்டு மறுநாள் இறந்தார்.
25 ஆம் திகதி அவர் ஐ.நா. சபைக்கூட்டத்தொடருக்கு பயணமாகவிருந்த தருணத்தில்தான் இந்தத் துன்பியல் சம்பவம் நடந்தது.
உலகநாடுகளில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதற்காகவும் அமைக்கப்பட்டதுதான் ஐக்கியநாடுகள் சபை.
அதற்குப்புறப்படவிருந்த வேளையில்- அமைதியையும் சமாதானத்தையும் அன்பு மார்க்கத்தையும் போதிக்க அவதரித்த புத்தரின் புனித பாதம் பதிந்த, அவர் நீராடிய களனி கங்கைக்கரையிலிருந்து, அண்ணல் காந்தியின் புனித அஸ்தி கரைக்கப்பட்ட இடத்திலிருந்து தொடங்கியது அந்த அரசியல் சதி.
ஆனால், தற்போது பௌத்த தேரர்கள் சந்திக்கே வந்து நடுத்தெருவில் அமர்ந்து இன்றைய ராஜபக்ஷ அரசுக்கு எதிராக குரல் எழுப்பத்தொடங்கிவிட்டனர்.
நாடும் வேண்டாம், அரண்மனை சுகமும் வேண்டாம், மணிமுடியும் வேண்டாம் எனச்சொன்னவரின் அடிச்சுவட்டில் வந்திருக்கும் இவர்கள் அரசியலை உரத்துப்பேசுகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேசியப்பட்டியல் எம். பி. பதவிக்காக தமக்குள் சமரும் செய்கின்றனர்.
இந்தக் கொரோனோ தொற்றுக்காலத்தில் ,
காணொளிகள் வாயிலாக அரசை கடுமையான வார்த்தைப்பிரயோகங்களில் வசைபாடுகின்றனர்.
படித்தவர் முதல் பாமரர்கள் வரையில் அவர்களது ஆக்ரோஷமான குரல் சென்றடைகிறது.
விகாரைகளில் வாழ்ந்தவாறு மக்கள் தரும் தானங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர், அதாவது மதியம் பன்னிரண்டு மணிக்கு முன்னர் சாப்பிட்டு, புலனடக்கி அன்பு மார்க்கத்தை போதிக்கவேண்டியவர்கள், வீதிக்கு வந்து வாய்க்கு வந்தபடி பேசுகின்றார்கள்.
இந்த அதிசயம் எவ்வாறு நிகழ்கின்றது.
இதற்கும் ஒரு வரலாற்றுப்பின்னணி இருக்கின்றது.
தான் முன்பு அங்கம் வகித்த ஐக்கிய தேசியக்கட்சியில் தன்னை விட ஜூனியராகவிருந்த டட்லிசேனாநாயக்காவை, தனது அரசியல் வாரிசாக்க அன்றைய முதல் பிரதமர் டீ. எஸ். சேனாநாயக்கா திட்டமிட்டதனால் பலத்த ஏமாற்றமடைந்த எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா, ஐம்பெரும் சக்திகள் என்ற மக்கள் திரளை உருவாக்கினார்.
அதனை சிங்களத்தில் பஞ்மா பலவேகய என அழைப்பர்.
அதில் இடம்பெற்றவர்கள் : தொழிலாளிகள், விவசாயிகள், ஆசிரியர்கள், வைத்தியர்கள். இவர்களுடன் மேலும் ஒரு சக்தியை அவர் அன்று இணைத்துக்கொண்டார்.
அந்த சக்திதான் காவி உடை தரித்த முற்றும் தறந்த துறவிகளான பெளத்த பிக்குகள்.
இந்த ஐம்பெரும் சக்திகளுடன் அன்று பதவிக்கு வந்த அவர், அதில் ஒரு சக்தியின் துப்பாக்கி வேட்டிலேயே பலியாகி பரலோகம் சென்றார்.
தற்போது, பெளத்த பிக்குகள் வீதியில் இறங்கியும், காணொளியில் தோன்றியும் வாய்வேட்டுக்களை தீர்க்கின்றனர்.
இது எங்கே சென்று முடியும்..?
கொரோனோ தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக அரசு நாட்டை முடக்கியதன் எதிரொலியால் விளைந்த குரலாகத்தான் அந்த எதிர்வினைகளை அவதானிக்கமுடிகிறது.
புத்தர் சிலைகளை முடிந்த வரையில் காணும் இடங்கள் தோறும் நிறுவ முயற்சிப்பது, புத்தரின் அன்பு மார்க்கத்தை போதிப்பதற்காக அல்லாமல் நில ஆக்கிரமிப்புக்கான மார்க்கம்தான் என்பது புரிந்துகொள்ளப்பட்டதுதான்.
தற்போது, புலனடக்கி வாழவேண்டிய பெளத்த துறவிகள் தாங்களும் சேர்ந்து உருவாக்கிய அரசுக்கு எதிராக கடுங்குரல் எடுத்து பேசுகிறார்கள் என்றால், அதன் விளைவு எப்படி அமையும் என்பதைப்பற்றி சிந்திக்கவேண்டிய காலம் அரசுக்கு கனிந்துள்ளது.
( நன்றி: யாழ். தீம்புனல் )
No comments:
Post a Comment