.
என்
வயதினையொத்தவர்களின்
அம்மாக்கள்
அவர்கள் காலத்தில்
பதினாறு பதினேழு
வயதுகளில்
தன் கனவுகளை
துறந்தவர்கள்
ஆனால்
துறவிகளைப்போலில்லை
அவர்களின்
அம்மாக்களின்
அறியாமையினாலும்
அப்பாக்களின்
பிடிவாதங்களினாலும்
தன் ஆசைகளை
துறந்தவர்கள்
அதனால்
துறவிகளைப்போலில்லை
வீட்டின்
எளிமைகளினாலும்
தன் மனதை
துறந்தவர்கள்
ஆதலால்
துறவிகளைப்போலில்லை
தனக்குப்பின்னால்
பிறந்த தம்பி தங்கைகளுக்கு
அக்காக்களும்
இன்னுமொரு
தாயென்பதால்
தன் இலட்சியங்களை
துறந்தவர்கள்
எனவே
துறவிகளைப்போலில்லை
அப்பாக்களின்
கடமைகளிலொன்றான
திருமணத்தினாலும்
தன் உணர்வுகளை
துறந்தவர்கள்
ஆகவேதான்
துறவிகளைப்போலில்லை
என்
வயதினையொத்தவர்களின்
அம்மாக்கள்
அவர்கள் காலத்தில்
பதினாறு பதினேழு
வயதில் தன்
துறவுகளை
துறவிகளைப்போல்
விரும்பியேற்கவில்லை
ஆனாலும்
உள்ளுக்குள்
பக்குவமெனும்
ஞானம்பெற்றவர்கள்
வெளியில்
அமைதியெனும்
ஒளி சூழ்ந்தவர்கள்
அதனால்
அவர்கள்
துறவிகளைப்போலில்லை.
மயிலிறகு மனசு ஷிஃபானா
1 comment:
Thank u
Post a Comment