இலங்கையில் மலேய் மக்களின்வருகையும் அவர்களின் வாழ்வும் - ஏலையா க.முருகதாசன்

.

இலங்கை வரலாற்றோடு சோழ பாண்டிய வருகையும் அவர்களின் படையெடுப்பின்  போது வருகை தந்த கணிசமான தொகையினர் இலங்கை மக்களோடு மக்களாக கலந்துவிட்டது போன்று பிற்காலத்தில் போத்துக்கீசரின் வருகையின் போது ஆபிரிக்காவிலிருந்து ஆபிரிக்க மக்கள் தொழிலாளர்களாக கொணடுவரப்பட்டதும் அவர்களின் பரவல் புத்தளம் பகுதியில் இருப்பதும் அவர்களில் கணிசமான தொகையினர் சிங்களவர்களுடனும் தமிழர்களுடனும் கலப்புத் திருமண முறையில் கலந்து கலப்பினமாக மாறியிருக்கின்றனர்.

பிரித்தானியாவுக்கு கீழ் இலங்கை காலணித்துவ ஆட்சியாக இருந்த போது தமிழகத்திலிருந்து தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழர்கள் கொண்டுவரப்பட்டனர்.அவர்களும் இலங்கையர்களாக தமது பழக்க வழக்கங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் வறுமையில் வாடிக் கொண்டும் தமது வாழ்வாதாரத்திற்காக வேலை தேடித் திரிந்த மக்களுக்கு கடல்கடந்த சீமையில் வேலை என்றவுடன் வாட்டிவதைத்த வறுமை அவர்களை இலங்கையில் கொண்டு வந்து நிறுத்தியது.

இலங்கையில் பிரித்தானியரின் காலணித்தவ ஆட்சி காலத்தில் தென்னாபிரிக்காவிலிருந்த பூவர் சிறைக்கைதிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு சுத்தமான காற்றுக் கிடைக்க வேண்டுமென்பதற்காக தலவாக்கொல்லையில் சிறைவைக்கப்பட்டார்கள் என்ற செய்தியும் உண்டு.

காலப்போக்கில் மீண்டும் இவர்கள் தென்னாபிரிக்காவிற்கு திரும்பினார்களா அல்லது இலங்கை மக்களோடு கலந்து வாழத் தொடங்கினார்களா என்பதை தெளிவாக அறிய முடியவில்லை


ஓவ்வொரு நாட்டினுடைய காலணித்துவ ஆட்சியின் போதும் ஏதோ ஒரு நாட்டிலிருந்து இலங்கைக்கு மக்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றார்கள்.

அதைப் போன்று இலங்கையும் இந்தோனேசியாவும்  ஒல்லாந்தரின் காலணித்துவ ஆட்சியிலிருந்த போத அவர்களால் மலே மக்களும் 1796லிருந்து 1948 காலவரைப் பகுதிகளில் மலே தீபகற்பகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றார்கள்.

இவர்கள் போர்த்துக்கீசர்களால் ஆபிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் போலவோ, பிரித்தானியரால் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக கொண்டு வரப்பட்டவர்கள் போலவோ அன்றி இவர்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் மட்டுமே ஆங்காங்கே தேடுதலில் கிடைத்திருக்கின்றது.

இவர்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவியவர்களாக இருந்தபடியால் காலப் போக்கில் இலங்கை முஸ்லீம் சமூகத்துடன் இணைந்து வாழக்கூடியவர்களாக மாறியுள்ளமையை அறிய முடிகின்றது.

பேருவளையில் இவர்களில் பெரும்பாலோனோர் வாழ்ந்து வருகின்றனர்.தமிழ்மொழியையே இவர்கள் பேசி வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலானோர் இரத்தினக் கற்கள் சம்பந்தப்பட்ட வணிகத்துறையிலும் இருக்கின்றனர்.

இவர்கள் கிழக்கு சுமத்திரா மலாய் தீபகற்பம்,கடலோர போர்னியாவை தாயகமாகக் கொண்ட இனக்குழுமம் ஆகும்.இவர்கள் வாழுகின்ற சிறிய தீவுகள் மலாய் உலகம் என அழைக்கப்படுகின்றது

மலேசியா, இந்தோனேசியா (சுமத்திரா, ஜவா,பாங்கா,பெலிதுங் தீவுகள்,போர்னியோ, ரியால் தீவுகள்,தாய்லாந்தின் தெற்குப் பகுதி,பட்டானி,சாதுன்,சாங்க்லா,யலா,நாரதிவத்,சிங்கப்பூர்,புருனே,தாருஸ்லாம் ஆகிய நாடுகளில் இவர்கள் வாழ்கிறார்கள்.

ஆனால் இவர்களுக்கிடையே பழக்க வழக்கங்கங்களிலும் வாழ்க்கை முறையிலும் வேறுபாடுகளைக் காண காண முடிகின்றது.

மலாய் மக்கள் தமது பிள்ளைகளுக்கு பெயர் இடுதலை குழந்தை பிறந்து ஏழாவது நாளில் அல்லது நாற்பதாவது நாளில் அல்லது மூன்று மாதங்களுக்குள் நடத்துவர்.

மத அலுவலரே குழந்தைக்கு பெயரிடுவார்.பெயரிடும் நாளில் பெயரிடுதல் சடங்குக்கு வருகை தருவோருக்கு மதிய உணவு விருந்தளித்தலும் இடம்பெறும்.பெரும்பாலான மலாய்க்காரர்களின் பெயர்கள் மலாய் வம்சாவழிப் பெயர்களையோ அல்லது அரபு பெயர்கiயோ கொண்டுள்ளனர்.

அரபு பண்பாடு பெரும்பான்மையான நிகழ்வுகளில் இடம்பெறுகின்றன.மலாய் இனத்தவர்களில் குடும்பப்பெயராக மலாய் வம்சாவழிப் பெயராகவோ அன்றி சமஸ்கிருதப் பெயராகவோ இருப்பதைக் கவனிக்கிறார்கள்.

மலாய் மக்களுக்கும் சமஸ்கிருதம் பேசும் மக்களுக்குமடையில் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்று கவனிக்கும் போது இந்தோனேசியா மற்றும் மலேய் தீபகற்ப வரலாற்றோடு சேர்ந்து சிந்திக்க வேண்டியதாகியுள்ளது.

இந்தோனேசியா நாடு ஒரு இந்து நாடாகவிருந்து இஸ்லாமிய நாடாக மாறியதிலிருந்து அம்மக்களின் வேர்கள் சமஸ்கிருதம் சார்ந்தவையாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரத் தோன்றுகின்றது.

புழைய காலத்தில் நாற்பதாம் நாளில் பெயரிடும் குழந்தைகளின் பெயர்களை சூனியம் செய்பவர்களுக்கு பயந்து இரகசியமாகவே வைத்திருந்ததாக அறியப்படுகின்றது.

ஒரு மலேயின் உருவப்படம்' என்ற நூலை எழுதிய பி.டி.கே.சால்டின் என்பவருக்கு துவான் சிங்கசிறி என்றே அவருக்குப் பெயரிடப்பட்டிருந்தது.ஆனால் பிற்காலத்தில் பாபா தீன் கிட்கில் சாடின் என்றே வழங்கப்பட்டது.குழந்தைகள் பிறக்கும் போது இருக்கும் பருவகாலத்தைப் பொறுத்தும் அவர்களுக்கு பெயரிடும் வழக்கம் மலேய் மக்களிடம் இருக்கின்றது.

உதாரணமாக நோன்பு காலத்தில் பிறந்த குழந்தைக்கு பூசா என்றும் செவ்வாய்க்கிழமைகளில் பிறந்த குழநதைக்கு செலாசா என்றும் பெயரிட்டிருப்பார்கள்.

முந்தைய காலத்தில் பாகஸ்,பிண்டன், கிசில், கசுமா என்ற தனிப்பட்ட பெயர்களையும் மலாய் மக்கள் வைத்திருநமுதார்கள்.அவை காரணப் பெயர்களாக இருந்திருக்கலாம்.

கிச்சில் என்றால் சிறியது பாகஸ் என்றால் நன்று பிண்டன் என்றால் நட்சத்திரம் என்று அர்த்தம் கொண்டிருந்தனர்.தமிழில் கிச்சான் என்று அழைக்கும் பழக்கம் உண்டு.மலாயாவுக்கு சென்று அங்கு பலகாலம் வாழ்ந்தவர்கள் செல்லமாக கிச்சான் என்று இளையவர்களை அழைக்கும் பழக்கம் இருந்தது.

நிஜ உதாரணமாக ஒன்றைப் பதிவிடுகிறேன்.மகாஜனக் கல்லூரியின் அதிபர் திரு.தெ.து.ஜெயரத்தினம் அவர்களின் ஒன்றுவிட்ட தம்பியார் மலேசியாவிலிருந்து வந்து மகாஜனாக் கல்லூரியில் படித்தவர்.அவருக்கு இயற்பெயர் ஒன்றிருந்தது.ஆனால் அவரைக் கிச்சான் என்றே அழைப்பார்கள்.எனது தாயாரும் அவ்வாறே விளித்துக் கதைத்ததை நான் அவதானித்திருக்கிறேன்.எனது உறவினர் ஒருவரின் மகனின் வீட்டுச் செல்லப் பெயர் கிச்சான் என்பதாகும்.எனது உறவினர் பலர் மலேயாவில் வேலை செய்தவர்கள் அவர்கள் இந்தப் பெயரை வைத்திருக்கலாம்.

மலேய் பெயர்கள் தமிழச் சமூகத்தில் கலந்திருப்பதைக் காணமுடியும்.இன்னொரு உதாரணமாக எமது மூதாதையரில் கணிசமான தொகையினர் சரத்தை (சாரம் என்று சொல்வதுமுண்டு) கைலி என்று விளிப்பது உண்டு இது மலேய்ச் சொல்லாகும்.

மலேய் பெண்களுக்கு கார்த்தினி,காடினி,மெலதி என்ற பெயர்கள் உண்டு.இவற்றில் கார்த்தினி,மெலதி என்ற பெயர்கள் தமிழ்ப் பிள்ளைகளுக்கும்  இடத் தொடங்கிவிட்டனர்.

மலேய் மக்கள் சிறுவர்களுக்கு அஜேரி, பிரவீரா என்ற பெயர்களையும்,சிறுமிகளுக்கு மெலாதி,சூரத்னி என்ற பெயர்களை வைப்பதுண்டு.அதே வேளை அரபு வம்சாவழிப் பெயர்களை விரும்புகிறவர்கள் இத்தகைய பெயர்களை வைப்பதில் விருப்பம் கொள்ள மாட்டார்கள்.ஆண்களுக்கு அகீல்,சலீம்,தஸ்லீம் என்ற பெயர்களையும்,பெண்களுக்கு கப்சா,ஜீனத்,ரைகானா என்ற பெயர்களையும் வைப்பார்கள்.

மலாய் மக்களின் வாழ்க்கையில் சிறுமிகளுக்கு காது குத்துதல் என்பது ஒரு குறிப்பிடக்கூடிய சடங்காகும்.(தமிழர்கள் மத்தியிலும் சிறுமிகளுக்கு காது குத்துதல் என்பது ஒரு குறிப்பிடத்தக்க சடங்காக கொள்ளப்படுகிறது.தமிழ்நாட்டில் உறவினர்களுடன் விருந்துண்டு மகிழும் நிகழ்வாக இது இடம்பெறுவதும், இலங்கையிலும் தமிழர்கள் மத்தியில் குடும்ப உறவினர்கள் ஒன்றுகூடி மகிழும் விழாவாகவும்,சிலர் அந்நாளில் கோவில்களுக்குச் சென்று வழிபடுவதும் உண்டு.ஊருக்கு ஊர் குடும்பத்துக்கு குடும்பம் இலங்கையில் காது குத்துதல் நிகழ்வின் செயல்பாடு வித்தியாசப்படும்.ஆனால் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மத்தியில் சிறுமிகளுக்கு காது குத்துதல் என்பது சாதாரண விடயமாகும்.இங்குள்ள நகைக்கடைகளில் சட்ட அனுமதி பெற்றவர்களால் காது குத்தி விடப்படுகின்றது) மலாய் மக்கள் சிறுமிகளுக்கு காது குத்தும் நிகழ்வின் போது விருந்து வைத்துக் கொண்டாடுவார்கள்.

மலாய் பெண்கள் பாரம்பரியமாக காதணிகளை அணிவதில் விருப்பம் உடையவர்கள்.கராபு என்றழைக்கப்படும் கராபு ஸ்டட்டுக்கள் என்ற அலங்கார காதணிகளை எல்லாப் பெண்களும் அணிகிறார்கள்.இந்த கராபு என்பது மலாய் மொழியிலிருந்து தோற்றம் பெற்ற கிராபு அல்லது கெராபு என்ற சொல்லாக அறியப்படுகின்றது.

இந்தக் காது ஸ்டட் என்பது வட்டமான தடடையான உருவத்திலிருக்கும்.இந்து காதணியில் ஒரு கல்லோ அலலது சிறிய கற்களோ இருக்கும்.தங்கத்திலான சிறிய காதணிகளும் உண்டு.சிலர் வைரக் கல்லைப் பதிய வைத்த கிராபு காதணிகளை அணிவார்கள்(உலகில் உள்ள ஒவ்வொரு இனக்குழுமங்களும் ஆண் பெண்களுக்கான அலங்கார ஆபரணங்களை பாரம்பரியமாக தொடர்ச்சியாக அணிதலும் அவை காலப் போக்கில் ஆபரண நாகரீகமாக பல இனக்குழுமஙங்களால் உள்வாங்கப்பட்டு இன்று அவை ஒரு பொது நிலைக்கு வந்துள்ளமையை கவனத்தில் கொள்ளலாம்)

மலாய் மக்களும் முஸ்லீம்களின் வாழ்வியல் பண்புகளைக் கொண்டவர்களாகையால் அவர்களின் சடங்குகளைக் கைகொணN; வருகின்றனர்.

அவர்களின் முக்கிய சடங்குகளில் ஒன்று சிறுவர்களுக்கான விருத்த சேதனம் என்று சொல்லப்படுகின்ற சுன்னத்துச் சடங்காகும்.ஏழு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு இச்சுன்னத்துச் சடங்கு செய்து வைக்கப்படுகின்றது.

சுன்னத்துச் சடங்கு கொண்டாட்டமாகவே செய்யப்படுகின்றது.ஆரம்ப காலங்களில் ஏழு வயதிற்கு மேற்பட்ட நிலையில உள்ள சிறுவர்களுக்கே இது செய்யப்பட்டதெனினும் இப்பொழுது குழந்தைப் பருவத்திலேயே செய்யப்படுவதாக அறிய முடிகின்றது.

சிறுவர்களின் ஆண்குறியின் தடிப்பான நுணிப்பகுதியைச் சுற்றி மூடி நிற்கும் தோல் பகுதி அனுபவசாலி ஒருவரால் வெட்டி எடுக்கப்படுகின்றது.இது பரிந்துரைக்கப்பட்ட இஸ்லாமிய முறையாகும்.

இது ஒரு சுத்தமும் சுகாதாரமும் சம்பந்தப்பட்டு தேவையற்ற தோலை அகற்றும் முறையாகும்.சிறுநீர் கழிக்கும் போது,கழித்தலின் பின் நுனிப்பகுதியின் துவாரத்தின் சுற்றுப்பகுதியை தோல் மூடிய நிலையில் ஆண்குறியின் கழுத்துப் பகுதியில் சிறுநீரின் ஈரலிப்புத் தன்மை தொடர்ச்சியாக காயாமால் நிலை கொள்கையில் அப்பதியில் சிறுநீரில் உள்ள வேதியல் காரணமாக ஒரு ஈரலிப்பான வெள்ளைநிறத் தன்மை உருவாகும் போது நோய்க்கிருமிகள் உருவாவதற்கு ஏதுவாகி விடுவதுடன்,ஆணுறுப்பின் நுனிப்பகுதிக்கு அடுத்த கழுத்துப் பகுதியின் மென்மைத்தன்மையான தசைப்பகுதிகள் கிருமிகளினால் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்ல துர்நாற்றமும் வீசும் நிலை உருவாகின்றது.

விருத்த சேதனம் என்ற சுன்னத்துச் சடங்கு செய்யப்படுகின்று சிறுவன் குளிப்பாட்டப்பட்டு, இச்சடங்குக்கு விருந்தினர்கள் வருவதற்கு முன்னரே தற்காலிக சிம்மாசனம் ஒன்றில் இருத்தி வைக்கப்படுவான்.புதிய ஆடைகளை அவனுக்கு உடுத்தி சாங்கோக் என்ற தலைப்பாகையை அணிவித்திருப்பார்கள்.

அனுபவசாலிகளான மூப்பர்கள் சிறுவனின் உள்ளங் கைகளை நறுமணம் மிக்க நீரால் அபிசேகம் செய்வது போல கழுவுவார்கள்.

கடந்த காலங்களில் சுன்னத்து செய்யப்படும் சிறுவர்களின் கைகளுக்கு மருதாணி பூசும் வழக்கமும் இருந்தது.

ஒஸ்டா என்று அழைக்கப்படுபவர்  முடிதிருத்தும் கத்தியால் சுன்னத்து செய்யப்படுவதற்கு முன்னர் மல்லூட் என்ற பாராயணம் பாடப்பட்டு மதிய விருந்து அல்லது இரவு விருந்து வழங்கும் முறை இச்சடங்கில் இடம்பெறுவது வழக்கம்.

சுன்னத்து செய்யப்படுகின்ற சிறுவனை தலைகீழாக அதற்கேற்ற ஆசனத்தில் வைக்கப்பட்டு சுன்னத்து செய்யப்படும்.சிறுவனின் கைகளை ஒருவர் பின்னுக்க வைத்து இறுக்கிப் வபிடிக்கு இன்னொருவர் கால்களை அகட்டிப் பிடிப்பார்.

சுன்னத்து செய்யப்படும் போது சிறுவனிலிருந்து வரம் அழுகுரல் கேட்காதவாறு பாடியோ இசைத்தோ ஆண்கள் சொரபினா அல்லது தபேலாவை  வாசிப்பார்கள்.பெண்கள் ரபானா என்ற ஒரு பக்கம் தோலினால் மூடிய வாத்தியக் கருவியை    ஐந்து அல்லது ஆறு பெண்கள் அக்கருவியைச் சுற்றி இருந்து கொண்டு அதன் விளிம்புகளில் தட்டி ஒலி எழுப்பிக் கொண்டிருப்பார்கள்.(ரபானா வாசிக்கும் முறை, சிங்களச் சமூகத்தின் குடும்ப விழாக்களில் நடைமுறையிலிருந்து வருகிறது.ஐந்து அல்லது ஆறு பெண்கள் ரபானைச் சுற்றியிருந்து மகிழ்ச்சியாக சிரித்தவாறு அதன் விளிம்புகளை தட்டி ஒலி எழுப்புவார்கள்.அவர்களின் குடும்ப விழாக்களில் இக்கருவி வாசிப்பு என்பது இன்றியமையாத இசையாக இடம் பெற்றுவிட்டது.ரபான் வாசிப்பு சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களோடு அயலவர்களாகவும் கலந்து வாழும் தமிழ்ச் சமூக குடும்ப நிகழ்வுகளில்கூட இடம்பெறுவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.சிங்கள தமிழப் பெண்கள் ஒன்றாக அமர்ந்து வாசிப்பார்கள்.இதனை சிலாபத்திலிருந்த எனது தங்கையின் மகளின் முதல் நன்மை விழாவில் ரபான் வாசிப்பு இடம்பெற்றிருந்த பொது நான் அங்கிருந்து கண்டேன்)

சுன்னத்து அறுவை நிறைவேறியதும் அக்காயத்துக்கு சாம்பல் வைத்துக் கட்டும் வழக்கம் ஒரு காலத்தில் இருந்தது.ஆனால் அந்த முறைஉ தவிர்க்கப்பட்டு நவீன மருந்துகள் இடப்படுகின்றன.

சுன்னத்து அறுவை செய்யப்பட்ட சிறுவன் ஒரு பாய்மீது படுக்க வைக்கப்பட்டு அவனின் உடலில் தொடாதவாறு ஒரு வெள்ளைத் துணி முகம் தவிர்த்துப் போர்த்தப்பட்டிருக்கும்.இக்கொண்டாட்டம் ஏழு நாள் வரை இடம்பெறுவது உண்டு.அதன் பின்னர் சிறுவன் பெற்றோர்களுடன் தொழுகைக்காக மசூதிக்கு செல்வான்.

சிறுவர்களுக்கு செய்யப்படும் விருத்த சேதனம் போன்று சிறுமிகளுக்கும் செய்யப்படும்.சிறுமிகளுக்க பெயரிடும் நாளிலேயே அவர்களுக்கு மொட்டை அடித்து குளிப்பாட்டி புத்தாடை அணிவித்து செய்யப்படும். இது பெண்குறிமூலத்தின் சிறுநீர்ப் பகுதியை மூடிநிற்கும் முன்தோலை அகற்றுவதாகும்.இது சுகாதார முறைக்கான இஸ்லாமிய பரிந்துரைப்பாகும்.இந்தோனேசியா, மலேயா , புருனே போன்ற நாடுகளில் அரசால் அனுமதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவ மனைகளிலேயே இவ்விருத்த சேதனம் செய்யப்படுகின்றது.

இலங்கையில் அம்பாந்தோட்டைப் பகுதியில் வாழ்ந்த மலேய் மக்கள் சுன்னத்துச் சடங்கு செய்யப்பட்ட சிறுவனை ஏழாம் நாளுக்கப் பிறகு தினமும் கடலுக்கு குளிக்க அழைத்துச் செல்வார்கள்.சுன்னத்து அறுவைக் காயம் ஆறும்வரைக்கும் இக்குளிப்புத் தொடர்ந்து பிறகு சிறுவனுக்கு புதிய ஆடை அணிவிக்கப்படும்.

அக்காலத்தில் மலாய் மொழியில் பச்சூர் என்றழைக்கப்படும் பாச்சோறு சுச்சூர் என்று மலேய் மொழியில் அழைக்கப்படும் கேக்குகள்,பிசாங் என்று மலேய் மொழியில் அழைக்கப்படும் வாழைப்பழங்கள் கொண்ட விருந்து வைக்கப்படும்.இவ்விருந்தில் நெருங்கிய உறவினர்களே பங்கேற்பார்கள்.

இச்சடங்கானது ஆண்குறி, பெண்குறி ஆகியவற்றின் ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும்,சுத்தத்தையும்  பேணுவதற்கான மருத்துவச் சிறப்புக் கொண்ட செயல்பாடாகும்.

மலாய் மக்களின் திருமணங்கள் பாரம்பரிய முறையைக் கொண்டதெனிலும் இன்றைய இளைய தலைமுறை அதனை இஸ்லாமிய முறையிலிருந்து விலகாது நவீனமாகவும் கைக்கொள்கின்றனர்.

ஆரம்ப காலங்களில் திருமண வயது என்பது கொஞ்சம் இருபது வயதுக்கு மேற்பட்டதாக இருந்தது.அந்த வயதெல்லையை மலாய் சமூகம் அங்கீகரித்திருந்தது.

ஆனால் இப்பொழுது மலாய் இளைஞர்களும் யுவதிகளும் இருபதுக்கு குறைவான வயதில் அல்லது இருபதாவது வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

முன்பெல்லாம் திருமணம் செய்யப் போகும் ஆணும் பெண்ணும் வீடுகளுக்குச் சென்று திருமணத்துக்கு உறவினர்களை அழைப்பது வழக்கம். குறிப்பாக மலாய் மொழியில் ககேக் உண்டாங் என்று அழைக்கப்படுகின்ற தாத்தாவையும் நேநெக் உண்டாங் என்று மலாய் மொழியில் அழைக்கப்படுகின்ற பாட்டியையும் திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்னரும் பின்னர் திருமணம் நடைபெறவிருக்கும் அண்மித்த நாட்களிலும் சென்று அழைப்பார்கள்.

இன்றைய நவீன உலகில் அழைப்பிதழ்களே அழைத்தலை வகிக்கின்றன.மலாய் சமூகத்தில் திருமணத்திற்கு பின்னரே நிச்சயதார்த்தம் இடம்பெற்றிருந்தன.ஆனால் இப்பொழுது  நிச்சயதார்த்தத்துக்கு பின்னரே திருமணங்கள் இடம்பெறுகின்றன. நிச்சயதார்த்தத்திற்கு வருகை தரும்போது பழங்களுமு; கேக்குகளும் கொண்டு வரப்படுகின்றன.நிச்சயதார்த்தத்தை நடத்த வரும் வக்கீலின் தாயாரோ சகோதரியோதான்; மணப்பெண்ணின் விரல்களில் மலேய் மொழியில் சிங்கிங் அரட்டுர்கா என்ற மோதிரத்தை அணிவித்து விடுவர்.

சூரதுல் பகத்திமா என்ற குர்ஆனின் ஆரம்ப வேதம் ஓதப்பட்டு நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்படுகின்றது.இது திருமணம் மூலமாக இல்லற வாழ்விற்குள் நுழையும் மணமக்களுக்கு கொடுக்கப்படும் ஆசீர்வாதமாகும்.மதிய விருந்து அல்லது இரவு விருந்தும் நிச்சயதார்த்தத்தில் இடம்பெறுவது வழக்கம்.மணப்பெண்ணின் கைகளில் புள்ளிகளாக மருதாணியை பெண்கள் இட்டுவிடுவார்கள்.

மலாய் திருமணங்களிலும் சீதனம் கொடுக்கும் முறை இருக்கின்றது. நிச்சயதார்த்ததற்கு முன்னரே மணமகளின் பெற்றோர் சீதனமாக கொடுப்பவற்றை ஒரு பெட்டியில் வைத்துக் கொடுக்கும் முறை மலாய் திருமணங்களில் இருந்தது.

மலாய் திருமணத்தின் போது மணமகள் ஒரு சிம்மாசனம் போன்று ஒரு இருக்கையில் இருக்கும் வழக்கம் உண்டு.மணப்பெண்ணின் இருகைகளிலும் மலாய் மொழியில் சீரி என்று சொல்லப்படுகின்ற இரு வெற்றிலைச்; சுருள்கள் கொடுக்கப்பட்டிருக்கும்(இந்து (சைவ)திருமணங்களில் வெற்றிலைக்கு முக்கியத்துவம் இருப்பதுடன் திருமணத்திற்கு முன்னர் மணமகனுக்கும் மணமகளுக்கும் பால் அறுகம்புல்லு வைத்து தோய வார்க்கும் முன்னர் இருகைகளிலும் வெற்றிலைச் சுருள்களும் அதற்குள் மஞ்சளும் வைத்துக் கொடுக்கும் சம்பிரதாயம் உண்டு) அதற்குள் மஞ்சள் மல்லிகை சுண்ணாம்பு இருக்கும்.இச்சம்பிரதாயம் கெட்ட சக்திகளை அகற்றுவதற்கென நம்பப்படுகின்றது.

மணமகன் வருகை தந்ததும் வெற்றிலைச் சுருள்களை எடுத்து மணப்பெண்ணின் தோளுக்கு மேலாகவும் தலைக்கு மேலாகவும் எறிவார்கள்.

தாலிகட்டும் சடங்கில் பதக்கம் இருக்கும் சங்கிலியை மணமகன் மணமகளுக்கு அணிவிப்பார்.பதக்கத்தின் பின்னால்  ஒரு பிறை இருக்கும்.1940 வரை மணமகளுக்கு அணிவிக்கப்படும் தாலி தடிப்பாகவே இருந்தது.காலப் போக்கில் அது மாறிவிட்டது.

மலாய் மக்களின் பாரம்பரிய திருமணத்தின் போது மணமகள் வெள்ளை முக்காடுடன் வெள்ளை உடை உடுத்தியிருப்பார்.மணமகன் நீளக்கையுடைய மேல் சட்டையும்  நீளக் காற்சட்டையும் உடுத்தி இடுப்பில் சரோங் என்ற உடை சுற்றிக் கட்டியிருப்பதுடன் சாங்க்கோ என்று தொப்பியை அணிந்திருப்பார்.பாரம்பரிய முறையைப் பேணுவதற்குh கிரிஸ் கத்தியை சரோங் என்ற இடுப்புத் துணியில் செருகியிருப்பார்( கிரிஸ் கத்தி என்ற கத்தி தமிழர் மத்தியில் புழக்கத்தில் இருக்கிறது.இந்த அழைத்தல் மொழியும் இந்தக் கத்தியும் மலே மக்களிடம் இருந்து பரவியதாகும்)

தாலி அணிவித்த பின் மணமகள் கீழ்படிதலைக் காட்டுவதற்காகவும் கணவனின் காலடியே சொர்க்கம் என்பதைக் காட்டுவதற்காகவும் மணமகனின் காலைத் தொட்டு வணங்கும் முறை உண்டு.ஆனால் இப்பொழுது இப்படி வணங்குவது முறையற்றது என மலாய் இனத்தவர்கள் தவிர்த்து வருகிறார்கள்.

தாலி கட்டுதலும் மதநம்பிக்கை சடங்குகளும் முடிந்த பின்னர் மணமகள் மணமகனின் இடதுபுறத்தில் அமர்ந்திருப்பாள்.இது ஆதாம் என்று ஆண் தனது இடது பக்க விலா எலும்பை எடுத்து ஏவாளை உருவாக்கியதாக நம்பிக்கையை மேற்கொண்ட செயலாகும்.

மலாய் மக்களின் இறுதிச் சடங்குகள் எளிமையானவை.அடக்கம் முடிந்த பின் உடைக்கப்பட்ட மெல்லிய அரிசி உணவு வழங்கப்படுகின்றது.

இறந்தவரின் வீட்டில் சூரிய உதயத்தின் போதும் சூரிய அஸ்தமனத்தின் போதும் பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன.(இந்துத் (சைவம்) தமிழரின் வீடுகளிலும் இறந்தவர்களின் வீடுகளில் ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை காலை மாலை வேளைகளில் இறந்தவரை வயதானவர்கள் நினைவு கூர்தல் உண்டு.)

மலாய் சமூகத்தில் 3,15,20,30, 40தாவது நாட்கள் நினைவுகூரும் நாட்களாகவும் 40தாவது நாளில் பிச்சை எடுத்தல் என்ற நிகழ்வும் இடம்பெறும்.

40தாவது நாள் என்பது நினைவுகூர்தலில் மிக முக்கிய நாளாகும்.பிராத்தனையும் இடம்பெறும்.பெரிய விருந்தும் இடம்பெறும்.இரவு முழுக்க விருந்து இடம்பெறும்.முக்கிய உறவினர்கள் முழு இரவு விருந்திலும் பங்கேற்பர்.பிராத்தனை நடைபெறும் மண்டபத்தின் மையப் பகுதியில் பழங்களும் இனிப்புகளும் வைக்கப்பட்டிருக்கும்.

பிரார்த்தனை நிறைவு பெற்றதும் உணவுகள் மசூதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.அங்கு லெபே அல்லது முஅதீனுக்கு (ஜெபத்துக்கு அழைப்பவருக்கு அல்லது ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது.

 

No comments: