இன்று ஜூன் 27 மல்லிகை ஜீவா பிறந்த தினம் மூவின இலக்கியவாதிகளினாலும் நேசிக்கப்பட்டவருக்கு இலங்கை அரசு நினைவு முத்திரை வெளியிடவேண்டும் ! முருகபூபதி


யாழ்ப்பாணத்தில்   சாதாரண மத்தியதரக் குடும்பத்தில்


பிறந்து,  உயர்கல்வியை பெறுவதற்குரிய  வாய்ப்பு வசதிகளை இழந்து,  அறிஞர்களினதும் முற்போக்கு எழுத்தாளர்களினதும் நூல்களை வாசித்துப்பெற்ற அனுபவங்களினாலேயே  மேதையாக வலம்வந்து, ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் மல்லிகை ஜீவா,   கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் மறைந்தார்.

அவரையும் சமகால கொரோனோ தொற்று விட்டுவைக்கவில்லை என அறியப்படுகிறது.

ஈழத்து மற்றும் தமிழகம் உட்பட உலகநாடுகள் எங்கும் யாராவது இலக்கிய ஆளுமை மறைந்தால், அவர்களுக்காக அஞ்சலிக்குறிப்பினை தமது மல்லிகையில் பதிவேற்றி வந்தவர் ஜீவா. இலங்கையில் கலை, இலக்கியம் சார்ந்த எவரும் மறைந்துவிட்டால், முடிந்தவரையில் பயணம் மேற்கொண்டு இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்துவதையும் தனது வாழ்வில் மரபாகவே  கொண்டிருந்தவர்.

இவ்வாறு ஏனையோர் துயரத்தில் பங்கேற்ற மல்லிகை ஜீவாவின் இறுதிநிகழ்வு,  அவரது ஏக புதல்வன் திலீபன் முன்னிலையில் மாத்திரம் நிகழ்ந்தது வியப்புக்கலந்த அதிர்ச்சியை அளித்தது.

மகாகவி பாரதியின் இறுதி நிகழ்வில் விரல்விட்டு


எண்ணத்தக்கவரே  கலந்துகொண்டதாக இன்றும் பேசப்படுகிறது,  எழுதப்படுகிறது.

ஆனால், எங்கள் மல்லிகைஜீவாவுக்கு அந்தப்பெருமையும் ஒரு நபருடன், அதுவும் அவரது ஏக புதல்வனுடன் குறுகிவிட்டது விதிப்பயனா..? என்று எண்ணத்தோன்றுகிறது.

யாழ்ப்பாணத்தில்  ஜோசப் – மரியம்மா தம்பதியருக்கு 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி பிறந்திருக்கும் டொமினிக் ஜீவா,  மல்லிகை கலை, இலக்கிய மாத இதழை 1966 ஆம் ஆண்டுமுதல், 2012  ஆம் ஆண்டு வரையில்  வெளியிட்டார்.  இதுவரையில் நானூறுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.

இவ்விதழ்களை நூலகம் ஆவணகத்தில் பார்க்கமுடியும்.

டொமினிக் என்பது அவரது இயற்பெயர்.  தமிழகத்திலிருந்து


பொதுவுடமை இயக்கத்தோழர் ஜீவானந்தம் பிரித்தானியர் காலத்தில் தலைமறைவாக இலங்கை வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலப்பகுதியில் அவரது கருத்துக்களினால் கவரப்பட்ட டொமினிக்,  தனது பெயருடன் ஜீவா என்ற எழுத்துக்களையும் இணைத்துக்கொண்டார்.

மல்லிகை  ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் பயணித்து சுயமுயற்சியோடு  அதனை வெளியிடத்தொடங்கியதும்,  மல்லிகை ஜீவா என பரவலாக அறியப்பட்டார்.

அவரது இந்த நாமம் இலங்கையெங்கும் மட்டுமல்ல தமிழகத்திலும் புகலிடத்திலும் இலக்கியவாதிகள் மத்தியிலும் பரவியிருந்தது.

இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருப்பின் நூறுவயதையும் எட்டியிருப்பார்.


ஜீவா முதலில் சிறுகதை எழுத்தாளரகவே இலக்கிய உலகில் பிரவேசித்தவர். அவரது முதலாவது கதைத்தொகுதி தண்ணீரும்  கண்ணீரும்.

அதற்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்தது. அதுவே இலங்கையில் தமிழில் தேசிய மட்டத்தில்   இலக்கியத்திற்காக அவ்வாறு கிடைத்த முதல்விருதுமாகும்!

 
விருதை  வாங்கிக்கொண்டு  யாழ்ப்பாணத்துக்கு  ரயிலில்              திரும்பிவருகிறார்.  ஊர்மக்கள்  அச்சமயம்  யாழ்ப்பாண               மேயராக  பதவியிலிருந்த  துரைராஜாவின்   தலைமையில்    மாலை   அணிவித்து  அவரை  வரவேற்றனர்.கம்யூனிஸ்ட்  கட்சியிலும்    அங்கத்துவம்    பெற்றிருந்தார்.                      அடிநிலை      மக்களுக்காக நடத்தப்பட்ட பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார்.    

ஒரு மேதின ஊர்வலத்தில் குறுக்கிட்ட சிலர்  அவரைத்தாக்கியதால்  அவரது மண்டையில் கடுங்காயம்  வந்து,   யாழ். ஆஸ்பத்திரிக்குச்சென்று  அதற்கு இழைபோட்டுவிட்டு மீண்டும் வந்து மேதின மேடையில் முழங்கிய கர்மவீரன் அவர்.

எப்பொழுதும் தர்மாவேசத்துடன் மேடைகளில் பேசும் அவர் இயல்பிலேயே குழந்தை உள்ளம்கொண்டவர்.

கடந்த சனிக்கிழமை ( 26 ஆம் திகதி ) யாழ்.  காலைக்கதிரிலும் கம்பவாரிதி ஜெயராஜ்,  மல்லிகை ஜீவாவின் பண்புகளை இலக்கிய ஆளுமையை விதந்து குறிப்பிட்டுள்ளார்.


தண்ணீரும்  கண்ணீரும்   கதைத்தொகுப்பைத் தொடர்ந்தும் சிறுகதைகள் எழுதிய ஜீவா, பின்னர்   பாதுகை,   சாலையின் திருப்பம்,  வாழ்வின் தரிசனம்    முதலான   தொகுதிகளையும்   மேலும்  சில                    நூல்களையும்  இலக்கிய    உலகிற்கு   வரவாக்கியவர்.


சாலையின்   திருப்பம்
   தொகுதிக்கு அவரது   நீண்ட கால நண்பர் ஜெயகாந்தன் முன்னுரை   எழுதியிருக்கிறார்.   தமிழகத்தின்   சரஸ்வதி (1958), தாமரை (1968) முதலான    இதழ்களும்    ஜீவாவின்   உருவப்படத்தை   அட்டையில்   பிரசுரித்து   அவரைப்பற்றி    எழுதி    கௌரவித்திருக்கின்றன.   குமுதம்    இலவச   இணைப்பாக   ஜீவாவின்                                   அனுபவமுத்திரைகள்   கட்டுரைகளை   மறுபிரசுரம்   செய்து  விநியோகித்திருக்கிறது.

 ஒரு   சிறுகதை    எழுத்தாளன்,    பெரிய   பொருளாதார   வசதிகளோ,  உயர்ந்த கல்விப்பின்புலமோ   இல்லாமல்   தொடர்ச்சியாக   45  ஆண்டுகளுக்கும்  மேலாக  மல்லிகை   இலக்கிய   இதழை                                 நடத்தியிருக்கிறார்  என்ற   சாதனையும்   இன்று காலம்   கடந்த   செய்திதான்.
 
 இலங்கை   நாடாளுமன்றத்தில்    விதந்து   பேசப்பட்ட                          இலக்கியவாதியான  டொமினிக் ஜீவாவுக்கு   அந்தப்பெருமையை   பெற்றுக்கொடுத்ததும்                 அவரது அயராத முயற்சியினால்   வெளியாகிக்கொண்டிருந்த    மல்லிகைதான்.

யாழ். குடாநாட்டுக்குள்ளிருந்து முதலிலும் போர் நெருக்கடி தொடங்கிய 1990 இற்குப்பின்னர் கொழும்பிலிருந்தும்

வெளியான அவரது மல்லிகை இதழில் இலங்கையின் அனைத்துப்பிரதேச எழுத்தாளர்கள் மட்டுமன்றி, தமிழகத்திலிருந்தும் புகலிட நாடுகளிலுமிருந்தும் பலர் எழுதினார்கள். 

  மாதாந்தம்   மல்லிகையை   வெளியிட்டவாறே                                         ‘மல்லிகைப்பந்தல்’   பதிப்பகத்தின் மூலம்   பல  படைப்பாளிகளின்   படைப்புகளையும்                                   நூலுருவாக்கி   விநியோகித்தார். அத்துடன் சில பிரதேச சிறப்பிதழ்களையும் வெளிக்கொணர்ந்து மண்வாசனை இலக்கியத்திற்கும்  வளம்சேர்ப்பித்தார்.

ஜீவா மறைந்த செய்தி அறிந்ததும் இலங்கையில்  வாழும் மூவின எழுத்தாளர்கள் – வாசகர்களினால் அவர் சமகால கொரோனோ நெருக்கடிக்கு மத்தியிலும் இணையவழி காணொளி ஊடாக நினைவுகூரப்பட்டார்.

தமிழகத்திலும் புகலிட நாடுகளிலும் அவர் மறைந்த நாள் முதல் தொடர்ச்சியாக ஊடகங்களிலும் பேசப்பட்டார்.

இலங்கையில் தமிழ் ஏடுகள் மற்றும் ஆங்கில சிங்கள இதழ்களிலும் ஜீவா பேசுபொருளாகத்திகழ்ந்தார்

தேசிய இன நெருக்கடிக்கு மத்தியில் இனநல்லிணக்கத்திற்காகவே தொடர்ந்து குரல் எழுப்பி


வந்துள்ளவர் மல்லிகை ஜீவா.

இத்தகைய ஒரு உன்னத புருஷருக்கு இலங்கை அரசு நினைவு முத்திரை வெளியிடவேண்டும் என்று அவர் மறைந்த நாள் முதல் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றோம்.

அதற்கு அவர் முற்றிலும் தகுதியானவர்.

இலங்கை அரசின் சாகித்திய விருது உட்பட சாகித்திய ரத்னா, மற்றும் தேசத்தின் கண் முதலான உயரிய விருதுகளையும் பெற்றவர் அவர்.  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அவருக்கு தேசத்தின் கண் விருதினை வழங்கியபோது அந்த விருதைப்பெற்ற மற்றும் ஒருவர் பிரபல விஞ்ஞான எழுத்தாளர் ஆர்த்தர் சி. கிளார்க்.

இலங்கையில் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர், சுவாமி விபுலாநந்தர், சுவாமி ஞானப்பிரகாசர், கலாயோகி ஆனந்த குமாரசாமி , பேராசிரியர் சு. வித்தியானந்தன்,  சட்டப்பேரவை அங்கத்தவர் முத்துக்குமாரசாமி ஆகியோருக்கும் சிங்கள மத்தியில் பிரபல்யமாக விளங்கிய அனகாரிக தர்மபாலா,  எழுத்தாளர் மார்டின் விக்கிரமசிங்கா, சிங்களத்திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் – அறிஞர் அஸீஸ், வழக்கறிஞர் அப்துல் காதர் உட்பட  சமூகத்திற்கு தங்களது வாழ்வை அர்ப்பணித்த பலருக்கு இலங்கை அரசு நினைவு முத்திரை வெளியிட்டு நினைவுகூர்ந்து கௌரவித்துள்ளது.

அந்தவகையில் இலங்கையில் மூவின


இலக்கியவாதிகளினாலும் ஊடகவியலாளர்கள், கலைஞர்களினாலும்  தொடர்ந்து நினைவுகூரப்படும் மல்லிகை ஜீவா அவர்களுக்கும் இலங்கை அரசு நினைவு முத்திரை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்திவருகின்றோம்.

ஜீவா மறைந்ததும் இடம்பெற்ற இணைய வழி காணொளி அரங்குகளில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லியப்பு திலகர், மற்றும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், இதழாசிரியர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் இந்தக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்.

இலங்கையிலிருக்கும் அவர்கள் முயற்சித்தால் மல்லிகை ஜீவாவுக்கு நினைவு முத்திரை வெளியிடுவது சாத்தியமாகும்.

இது தொடர்பாக தபால் அமைச்சுடனும் தபால் திணைக்களத்துடனும் தொடர்புகொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கெள்ளவேண்டும் என்று மல்லிகை ஜீவாவின் இன்றைய 94 ஆவது பிறந்த தினத்தின்போது கோருகின்றோம்.

---0---

letchumananm@gmail.com

No comments: