கடந்த 46 ஆம் அங்கத்தில், பாரதியாரின் மனைவி செல்லம்மா, தி. ஜானகிராமனின் மனைவி, மற்றும் ஏ.வி. மெய்யப்பச்செட்டியாரின் மனைவி இராஜேஸ்வரி ஆகியோர், தத்தம் கணவர்மார் பற்றி தெரிவித்த கருத்துக்கள் பற்றி எழுதியிருந்தேன்.
இந்த அங்கத்தில் மற்றுமொருவரின் மனைவி பற்றி சொல்லநேர்ந்தது, எதிர்பாராத தற்செயல் நிகழ்வுதான். அவர்தான் திருமதி பார்வதி அம்மா கண்ணதாசன்.
ஜூன் மாதம் 24 ஆம் திகதியை என்னால் மறக்கமுடியாது.
அன்றுதான் கவியரசு கண்ணதாசன் – முத்தையா என்ற இயற்பெயருடன் பிறந்த தினம்.
எனது மகன் முகுந்தன் பிறந்த தினமும் அதுதான் !
1984 ஆம் ஆண்டு தமிழகப்பயணம் சென்றிருந்தபோது, நான் முதல் முதலில் தரிசித்த தமிழக எழுத்தாளர் – கவிஞரின் இல்லம் கவியரசு கண்ணதாசனின் வாசஸ்தலம்தான்.
அதற்கு முன்னர் அவரது பாடல்களை விரும்பிக்கேட்டிருந்தாலும், அவரது வனவாசம் – மனவாசம் – அர்த்தமுள்ள இந்து மதம், மாங்கனி காவியம் முதலானவற்றை படித்திருந்தாலும், அவர் பற்றி நான் எழுதத்தொடங்கியது, அந்த 1984 ஆம் ஆண்டு சென்னைப்பயணத்தின் பின்னர்தான்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எங்கள் ஊர் மாணவர்கள் விக்னேஸ்வரன், சுபாஸ்கரன் ஆகியோர் படித்துக்கொண்டிருந்தனர்.
கவிஞருமான விக்னேஸ்வரனுக்கு கவியரசர் மீது அலாதிப்பிரியம். தனது முதல் கவிதைத் தொகுதிக்கு தென்றல் விடு தூது எனப்பெயரிட்டு, தனது புனைபெயரிலேயே அதனை வெளியிட்டுமிருந்தார்.
இந்த விக்னேஸ்வரனின் அக்கா மாலதியைத்தான் நான் பிற்காலத்தில் திருமணம் முடித்தேன்.
விக்னேஸ்வரனின் புனைபெயர் முத்துதாசன். கவியரசரின் இயற்பெயர் முத்தையா. பச்சையப்பன் கல்லூரியில் விக்னேஸ்வரன் படிக்கும்போது சூளைமேட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து நண்பர்களுடன் தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்தார்.
அத்துடன் தமிழமுது என்ற இலக்கிய இதழையும் நண்பர்களுடன் இணைந்து நடத்தினார். அக்காலப்பகுதியில் வடக்கிலிருந்து வந்து சேர்ந்த புளட் செயல் அதிபர் உமா மகேஸ்வரனும் அவ்வப்போது அங்கு வந்து செல்வதாக அறிந்தேன்.
விக்னேஸ்வரன் எமது நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் பணிகளிலும் இணைந்து இயங்கியவர். இவர் அங்கு மாணவராக இருந்த காலப்பகுதியிலேயே கவிதை எழுதுவதிலும் மேடைப்பேச்சுக்களிலும் மிகுந்த ஆர்வம்கொண்டிருந்தவர்.
ஒரு சமயம் நான் அங்கே செயலாளராக இயங்கிய வேளையில் இவர் ஒரு சமயவிழாவிலும் செல்வன் விக்னேஸ்வரன் என்று மேடையில் தோன்றினார். இவருடன் அன்று மேடை ஏறிப்பேசிய சிறுமி செல்வி கனகலதா, பின்னாளில் எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் மிளிர்ந்தார். கனகலதா தற்போது சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிகையில் பணியாற்றுகிறார்.
விக்னேஸ்வரன், லண்டனில் வதியும் கலை, இலக்கிய ஆர்வலர்
பத்மநாப அய்யரின் பாசமிக்க நண்பர். மு. தளையசிங்கத்தின் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்ற தொடர் பிரசுரமான கண்டியிலிருந்து வெளிவந்த செய்தி என்ற பத்திரிகையை கொழும்பு தேசிய சுவடிகள் திணைக்களத்திற்குச்சென்று தேடிப்பெற்று, அங்கிருந்து பிரதி எடுத்துக்கொடுத்தவரும் இந்த விக்னேஸ்வரன்தான். குறிப்பிட்ட தொடர் பத்மநாப அய்யரின் முயற்சியினால் சென்னை க்ரியா இராமகிருஷ்ணனால் வெளியிடப்பட்டது.
இவ்வாறு தாயகத்தில் எமது ஊரிலிருக்கும்போதே இலக்கிய ஆர்வத்துடன் இயங்கிய விக்னேஸ்வரன் சென்னை சென்றும் தனது இலக்கிய ஈடுபாட்டை குறைத்துக்கொள்ளவில்லை.
கவியரசர் மீது தீவிர பற்றுக்கொண்டிருந்த விக்னேஸ்வரன் பல
நாட்கள், கவியரசர் வாழ்ந்த அந்த தி நகர் ஹென்ஸ்மன் வீதியின் முனைக்கு காலையிலேயே சென்று கவியரசரின் தரிசனத்துக்கு காத்து நிற்பவர்.
( பின்னாளில் இந்த வீதி கண்ணதாசன் சாலையாக பெயர் மாற்றம் பெற்றது )
அவர் வீட்டு வாசலில் கார்கள் வரிசையாக தரித்து நிற்கும். அதில் வந்திருப்பவர்கள் பெரும்பாலும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், வசனகர்த்தாக்கள், இயக்குநர்களாக இருப்பார்கள். அத்துடன் கவியரசரின் உதவியாளர்கள் பஞ்சு அருணாசலம், மற்றும் சகோதரர் இராம. கண்ணப்பன். இவ்வாறு பலரும் அந்த வீட்டை முற்றுகையிட்டிருந்தமையால், மாணவன் விக்னேஸ்வரனுக்கு கவியரசரின் தரிசனம் நேருக்கு நேர் கிடைக்கவில்லை. இறுதியில் கவியரசர் யாருடைய காரிலாவது ஏறிப்புறப்படும் காட்சிதான் விக்னேஸ்வரனுக்கு கிடைத்திருக்கும்.
கவியரசரின் தரிசனம் கிடைத்து, பேசக்கிடைத்திருந்தால், “ எதுக்காக இங்கே வந்து அலைகிறாய்..? முதலில் படிக்கிற வேலையைப்பார் “ என்றுதான் சொல்லியிருப்பார். அந்தத் தயக்கத்தினாலோ என்னவோ, கவியரசரின் முகத்தை பார்த்துவிட்டு திரும்பும் நிலையில் முன்னர் விக்னேஸ்வரன் இருந்திருக்கிறார்.
கவிரசர் 1981 ஆம் ஆண்டு மறைந்தபின்னர், அவரது
குடும்பத்தினருடன் நெருங்கிப்பழகியிருக்கும் விக்னேஸ்வரன் அவர்களின் குடும்பத்தில் ஒருவராகியிருந்தார்.
பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டே கண்ணதாசன் பதிப்பகத்திலும் பகுதி நேரமாக வேலை செய்தார்.
அதனால் அங்கே அடிக்கடி சென்று வரும் அவருக்கு விக்கி என்ற செல்லப்பெயரும் வந்தது.
நான் விக்கியின் சூளைமேட்டு வாடகை வீட்டில் சில நாட்கள் நிற்கநேர்ந்தது. ஒரு நாள் அவர் என்னை கவியரசர் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அன்று தொடங்கிய கவியரசர் குடும்பத்துடனான நட்பு இன்றளவும் நீடிக்கிறது.
கவியரசரின் துணைவியார் பார்வதி அம்மாவுடன் அந்த வீட்டின் முன் விறாந்தாவில் அமர்ந்து நீண்டநேரம் பேசினேன். தமது கணவர் பற்றி பல சுவாரசியமான தகவல்களைச் சொன்னார்.
அந்த வீட்டின் முன் விறாந்தா சுவரில் கண்ணதாசனின் பெரிய படத்துடன் , தமிழக ஆஸ்தான கவிஞர் என்ற பெயர்ப்பலகையும் அப்பொழுது காணப்பட்டது.
வீட்டுக்கு முன்னால் சிறிய பூங்கா. அங்கிருந்தும் கவிஞர் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
அங்கே காலைவேளையில் பறவைகள் வந்து குரல் எழுப்பும்.
தொலைவிலிருந்து ஆலயமணியோசை கேட்கும். அத்தகைய ரம்மியமான ஒரு தருணத்தில்தான் பாலும் பழமும் திரைப்படத்தில் வரும் ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன். அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்… “ என்ற பாடல் கவிஞருக்கு பிறந்தது என்று பார்வதி அம்மா சொன்னார்கள்.
தன்னைவைத்து அவர் எழுதிய பாவ மன்னிப்பு திரைப்படப்பாடல்தான், காலங்களில் அவள் வசந்தம் – என்றார்.
“ அம்மா… கவிஞர் தொடர்ந்தும் எம்.ஜீ. ஆரை கடுமையாக விமர்சித்தவர் அல்லவா..? அந்த மக்கள் திலகம் அண்ணா தி. மு. க. ஆரம்பித்தபோது, அக்கட்சி நூறுநாட்கள் ஓடும் என்றெல்லாம் கிண்டல் செய்தவர் அல்லவா கவிஞர். அப்படி இருக்கும்போது எப்படி எம்.ஜீ. ஆர், அவருக்கு தமிழக ஆஸ்தான கவிஞர் பதவியை கொடுத்து வாகனம் அலுவலகம் உதவியாளர்கள் எல்லாம் வழங்கினார்…? “ எனக்கேட்டேன்.
அதற்கு பார்வதி அம்மா, ஒரே வார்த்தையில் இரத்தினச் சுருக்கமாக இப்படி பதில் அளித்தார்:
“ எல்லாம் இவருடைய வாயை மூடுவதற்குத்தான் “
ஆம், கவியரசர் யாரையும் விட்டுவைக்காதவர். பெருந்தலைவர் காமராஜரை கக்கூஸில் கிடக்கும் அல்வாத்துண்டு என்றும், தந்தை பெரியாரை நரிக்குறவர் என்றும் சொன்னவர் அல்லவா…?
கவியரசர், கலைஞர் கருணாநிதியையும் விட்டு வைக்கவில்லை. கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்தில், கலைஞர் ஓடாமல் நின்ற ரயிலுக்கு முன்னால்தான் படுத்தார் என்றும் ஒரு குண்டை தனது வனவாசம் நூலில் போட்டுள்ளார்.
பின்னாளில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் அந்த குண்டை தனது தேவை கருதி சட்டசபையில் வெடிக்கவைத்தார்.
வனவாசம் – மனவாசம் இப்பொழுதும் பல பதிப்புகளை கண்டுவருகிறது.
அன்றைய சந்திப்பின்போது, பார்வதி அம்மா எனது குடும்பம் பற்றியும் கேட்டறிந்தார். எனக்கு அப்போது இரண்டு பெண் குழந்தைகள்.
“ தம்பி… அடுத்து உமக்கு ஒரு ஆண் குழந்தைதான் பிறக்கும். கண்ணன் பெயராகப்பார்த்து வைங்க. “ என்றார்.
எனது வாழ்வில் அது தேவவாக்காகியது. அப்பொழுது அவர் சொன்ன பெயர் முகுந்தன். “ ஏற்கனவே அந்தப்பெயரை எனது தங்கை மகனுக்கு வைத்துவிட்டேனே அம்மா.. “ என்றேன்.
“ அதனால் என்ன உங்கள் குடும்பத்தில் இரண்டு முகுந்தன்கள் இருக்கக்கூடாதா… முகுந்தன் என்றே வைத்துவிடுங்கள் “ என்றார்.
அவ்வாறே 1987 ஜூன் 24 ஆம் திகதி பிறந்த எனது மகனுக்கு வைத்தேன். மீண்டும் 1990 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் எனது அம்மா, மற்றும் குடும்பம் சகிதம் கண்ணதாசன் இல்லம் சென்றவேளையில் மூன்றுவயதிலிருந்த எனது மகன் முகுந்தன், கண்ணதாசனின் பேரக்குழந்தைகளுடன் அதே விறாந்தாவில் விளையாடினான்.
அந்த ஏப்ரில் மாதம்தான் பார்வதி அம்மா, சுகவீனமுற்று விஜயா மருத்துவமனையில் திடீரென மறைந்தார்கள். அவரது இறுதி நிகழ்விலும் கலந்துகொண்டேன்.
சென்னை செல்லும் சந்தர்ப்பங்களில் கண்ணதாசன் இல்லத்திற்கும் செல்லத் தவறுவதில்லை. பின்னாளில் கவியரசரின் மூத்த புதல்வர் காந்தி கண்ணதாசன் தமது மனைவி மீனா மற்றும் மகன்மார் சகிதம் அவுஸ்திரேலியாவுக்கு எமது வீட்டுக்கும் வந்து சென்றார்கள்.
எனது மனைவி மாலதியின் அக்கா பத்மினியின் சமையல் கலை பற்றிய ஒரு நூலும் கண்ணதாசன் பதிப்பகத்தினால் வெளியானது.
கவிஞர் முத்துதாசன் விக்னேஸ்வரன், பலரது பார்வையில் கண்ணதாசன் என்ற நூலையும் தொகுத்து கண்ணதாசன் பதிப்பகத்தால் வெளியிட்டார்.
அதில் கலைஞர், தமிழருவி மணியன், பஞ்சு அருணாசலம் உட்பட பலர் எழுதிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன..
கவியரசரின் மற்றும் ஒரு புதல்வர் கலைவாணன் கண்ணதாசன், கண்மணி சுப்பு ஆகியோரும் திரையுலகத்துடன் தொடர்புள்ளவர்கள்.
கலைவாணன் கண்ணதாசனின் சில படங்களிலும் விக்னேஸ்வரன் துணை இயக்குநராக பணியாற்றினார். அத்துடன் அவரது வா அருகில் வா என்ற மர்மத்திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
1984 இல் அந்தப்பயணத்தில் சித்திரைப்புத்தாண்டு தினத்தில் எனக்கு கண்ணதாசன் இல்லத்தில்தான் விருந்து. நான் சந்தித்த பார்வதி அம்மா மற்றும் காந்தி கண்ணதாசன் பற்றியும் கவியரசரின் மனைவி சொன்ன பல சுவாரஸ்யமான தகவல்களைப்பற்றியும் இலங்கை திரும்பியதும் வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதினேன்.
அதில் வேடிக்கை என்னவென்றால், அதே கட்டுரையை ஒரு வெளிநாட்டு பத்திரிகை அப்படியே வரிக்கு வரி எடுத்து மறுபிரசுரம் செய்திருந்தது.
ஆனால், எனது பெயர் இல்லை.
நான் வீரகேசரியில் இணைந்திருந்த அக்காலப்பகுதியிலேயே இத்தகைய Download Journalism தொடங்கிவிட்டது. சமகால இணைய உலகில் இனி கேட்கவும் வேண்டுமா..?!
1981 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கவியரசர் சிக்காக்கோவில் மறைந்து அவருடை பூதவுடல் நாடு திரும்பியதும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட முதல்வர் எம். ஜீ. ஆர், ஒரு கட்டத்தில் கவியரசரின் முகம் பொது மக்களுக்கு சரியாகத் தெரியவில்லை எனச்சொல்லிக்கொண்டு, அவரே பூதவுடல் வந்த வாகனத்தின் மீது ஏறி, கவியரசரின் தலையை நிமிர்த்தி முகத்தை மக்கள் பார்க்கத்தக்கதாக சரி செய்தாராம்.
அந்த ஊர்வலத்துடன் கவியரசரின் சகாப்தம் முடியவில்லை.
அவருக்கு, அவர் பிறந்த காரைக்குடியில் நினைவு மண்டபம் அமைப்பதில் அன்று தாமதம் நீடித்தது. அதற்கு தி.மு. க. – அனைந்திந்திய அ. தி. மு. க அரசியல் சடுகுடுவும் காரணமாக இருந்தது.
இதனை அவதானித்துவிட்டு வீரகேசரியிலும் – மித்திரன் வாரமலரிலும் கவியரசருக்கு நினைவு மண்டபம் எப்போது..? என்ற தலைப்பிலும் செய்திக்கட்டுரைகள் எழுதினேன்.
பின்னாளில் கவியரசருக்கு சென்னையில் சிலையும் காரைக்குடியில் நினைவு மண்டபமும் அமைக்கப்பட்டது.
செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இந்த விடயங்கள் சாத்தியமானது. இன்றும் கவியரசரின் புதல்வர் காந்தி தந்தையின் சிலைக்கு மாலை அணிவித்து வருகிறார். மற்றும் ஒரு புதல்வர் அண்ணாத்துரை, காணொளி வாயிலாக கவியரசரின் வாழ்வில் நிகழ்ந்த ஏராளமான சம்பவங்களையும் அவர் இயற்றிய பாடல்கள் பிறந்த கதையையும் சொல்லிவருகிறார்.
புதல்வர் காந்தி கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகத்தின் மூலம் நூல்களை பதிப்பித்துவருகிறார்.
உலகெங்கும் கண்ணதாசனின் பாடல்கள் ஒவ்வொரு கணமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
கவியரசர் பற்றி யாராவது எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழ் வாழும் வரையில் கவியரசரும் வாழ்வார்.
-------
மீண்டும் விக்னேஸ்வரன் குடியிருந்த சூளைமேடு வாடகை வீட்டுக்கு வருகின்றேன்.
ஒருநாள் காலையில் குளியலறையிலிருந்து நான் முகச் சவரம் செய்துகொண்டிருந்தேன்.
யாரோ ஒருவர் பின்னால் வந்து, எனது தோளைத் தொட்டு, “ தோழர் எப்போது டெல்லியிலிருந்து வந்தீர்கள்…? “ எனக்கேட்டார்.
“ என்ன…டெல்லியிலிருந்தா…. ? “ எனக்கேட்டு திரும்பிப்பார்த்தேன்.
“ நீங்கள் அவர்தானே..? ! “ என்று தயக்கத்துடன் கேட்டார்.
நான், “ யார்…. அந்த அவர்…? “ எனக்கேட்டேன்.
“ அதுதான் உமா மகேஸ்வரன்…? “
“ மன்னிக்கவும். நான் அவர் இல்லை. விக்கியின் நண்பன். இலங்கையிலிருந்து வந்துள்ளேன். “ என்றேன்.
மீண்டும் ஒருநாள், மாம்பழத்திலிருந்து சூளைமேட்டுக்கு பல்லவன் பஸ்ஸில் திரும்பிக்கொண்டிருந்தேன். எனக்கு அருகில் வந்து அமர்ந்த ஒரு இளைஞர், “ எப்போது டில்லியிலிருந்து வந்தீர்கள்…? “ எனக்கேட்டார். நான் அவரையும் ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
அவரும், “ நீங்கள் உமாதானே…? “ என்றார். நான் உஷாரடைந்தேன்.
அறைக்குத் திரும்பியதும் விக்னேஸ்வரனிடம் எனக்கு கிட்டிய அனுபவங்களை சொன்னேன்.
அவரும் , “ ஓமோம்.. நீங்களும் அவரும் தோற்றத்தில் ஒரேமாதிரித்தான் இருக்கிறீர்கள். “ – என்றார்.
எனக்கு அப்போது 1981 ஆம் ஆண்டு சென்னை பாண்டிபஜாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச்சம்பவம்தான் நினைவுக்கு வந்தது, அச்செய்தியை வீரகேசரியில் ஒப்புநோக்கியிருக்கின்றேன்.
மறுநாள் காலையில் எழுந்ததும், விக்கியிடம் வழிகேட்டு ஒரு சிகையலங்கார நிலையம் சென்று எனது சாயிபாபா தலைமுடியை குட்டையாக வெட்டிக்கொண்டேன்.
தப்பித்தவறி இலங்கைத் தம்பிமார் என்னை சென்னையில் பரலோகம் அனுப்புவதற்கு முன்னர் சுதாரித்துக்கொண்டேன்.
ஒரு நாள் நண்பர் காவலூர் ஜெகநாதனிடத்தில் இந்த சம்பவங்களைச் சொல்லிவிட்டு, “ உமா மகேஸ்வரனை ஒரு தடவை பார்க்கவேண்டும். என்னை அவர் இருக்கும் இடத்துக்கு அழைத்துச்செல்ல முடியுமா..? “ எனக்கேட்டேன்.
உலகத்தில் ஒருவரைப்போன்று எழுபேர் ஒரே தோற்றத்தில் இருப்பார்களாம் ! உமாவும் நானும் அப்படியா என்று பார்க்கும் நோக்கமும் அப்போது எனக்கு வந்தது.
உடனே காவலூர் ஜெகநாதன், “ அதற்கும் காலம் கனிந்துள்ளது நண்பா. நாம் சமாதான தூதுவராக உமா தங்கியிருக்கும் சென்னை எம். எல். ஏ. விடுதிக்குச் செல்லவேண்டியிருக்கிறது. “ எனக்கூறிக்கொண்டு, அவரது வீட்டுக்கு வந்திருந்த மெலிந்த தோற்றமுள்ள அழகிய இளம் யுவதியை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
அவரது பெயர் தற்போது எனக்கு நினைவில்லை. அந்தப்பெண்தான் வடக்கிலும் கிழக்கிலும் மற்றும் ஒரு விடுதலை இயக்கத்தை அறிமுகப்படுத்திய தமிழ் ஈழ தீவிர செயற்பாட்டாளர் ஒருவரின் தங்கை.
அந்த யுவதி வாடிய முகத்துடன், தன்னையும் தனது காதல் கணவரையும் ஒன்று சேர்த்துவிடவேண்டும் என்ற உருக்கமான கோரிக்கையோடு வந்திருந்தார்.
யார் அவர்…?
எனக்கும் அவரை நன்கு தெரியும். யாழ். பல்கலைக்கழகத்தில் படித்தவர். நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு அங்கே நடந்தபோது, ஒருநாள் இரவு அதில் கலந்துகொண்டவர்களுக்கு மூத்த எழுத்தாளர் கே. டானியல் தமது நல்லூர் கோவில் வீதி இல்லத்தில் இராப்போசன விருந்து வழங்கியபோது, பேராசிரியர் கைலாசபதியிடத்தில் தான் விவசாய பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்று உரத்துக்குரல் கொடுத்தார்.
கைலாசபதி அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவரில்லை என்பதையும் இடித்துரைத்தார். இறுதியில் அந்த விருந்திலிருந்து அக்கவிஞரின் பேராசிரியையான ஒருவர்தான் “ போதும் நிறுத்தும்.. “ - என்று அவரை கட்டுப்படுத்தினார்.
அன்று அந்த யுவதியை சந்தித்தபோது எனக்கு கடந்த காலம் யாவும் நினைவுக்கு வந்தது.
அன்று மதியமே நானும் காவலூர் ஜெகநாதனும் எம். எல். ஏ. விடுதிக்கு உமா மகேஸ்வரனை பார்க்கச்சென்றோம். ஆனால், அவர் இல்லை. அந்தக்கவிஞரும் மற்றும் ஒரு மூத்த ஈழத்து எழுத்தாளரும் அங்கே இருந்தனர்.
அந்த எழுத்தாளர் பிரபல நாவலாசிரியர்.
இலங்கையில் மக்கள் புரட்சி தோன்றும் என்பதை இந்திய நக்சலைட் தீவிர வாத இயக்கத்தலைவர் மஜுந்தாரின் செயல்பாடுகளின் பின்னணியில் ஒரு நாவலை எழுதியிருந்தவர்.
அன்று அவர் என்னைக்கண்டதும் முகம் மலர அணைத்துக்கொண்டார். இறுதியாக அவரை கைலாசபதியின் ( 1982 இல் ) இறுதி நிகழ்வில்தான் கண்டிருந்தேன். அன்று சென்னை சந்திப்பில் அவர் எழுதிய மற்றும் ஒரு புதிய நாவலையும் எனக்குத்தந்தார்.
அது அன்றைய இலங்கை ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்திருந்தது.
சமாதானத் தூதுவர்களாக அங்கே சென்ற நானும் காவலூர் ஜெகநாதனும் ஏமாற்றத்துடன் திரும்பினோம்.
எழுத்தாளர்களில்தான் எத்தனை கோணம்…? எத்தனை பார்வை..?
எழுத்தாளர்களின் மனைவிமாரிடமும் ஏராளமான கதைகள் இருக்கின்றன.
ஆனால், அவர்கள் வெளியே சொல்வதில்லை. எழுதுவதுமில்லை !
( தொடரும் )
letchumananm@gmail.com
No comments:
Post a Comment