தூங்காநகர நினைவுகள் - 23: காலம்தோறும் மதங்கள்! - அ.முத்துக்கிருஷ்ணன்

 


தூங்காநகர நினைவுகள்
தூங்காநகர நினைவுகள்

மதுரை சமண நிலமாகத் திகழ்ந்ததற்கான ஏராளமான இலக்கிய, கல்வெட்டு மற்றும் படுகைகள்/குகைகள் வடிவில் சான்றுகள் உள்ளன. மதுரையைச் சுற்றிய மலைகளில் சமணப் பள்ளிகள் இருந்ததற்கான சான்றுகள் இன்றளவும் காணக்கிடைக்கின்றன.

முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்தார். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், சிவபெருமான் தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான் என்பது மதுரையில் புழங்கும் நம்பிக்கை. 2500 ஆண்டுகள் பழைமையான நகரம் என்பதால் வரலாற்றுச் சான்றுகள் மதுரை எங்கும் வியாபித்துக் கிடக்கின்றன.

மதுரை கோவில் மாநகரம் என்று இன்று அழைக்கப்படுகிறது. எங்கு திரும்பினாலும் இன்று கோவில்களை நீங்கள் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவில், குடல் அழகர் பெருமாள் கோவில், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், வண்டியூர் மாரியம்மன் கோவில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என திராவிடக் கட்டடக் கலையின் நுட்பத்திற்குச் சான்றாக அழகிய கோவில்களை நீங்கள் காணலாம்.



அழகர் குதிரை வாகனம்
அழகர் குதிரை வாகனம்

இலக்கியச் சான்றுகளின் வழியே பார்க்கும் போது சங்க இலக்கியங்களில் மதுரை நகரத்தைப் பற்றி கூடல் என்றும் நான்மாடக்கூடல் என்றும் மதுரை என்றும் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் சங்க இலக்கியங்கள் முழுமையிலும் இங்கு ஒரு சிவன் கோவில் இருப்பதாகக் குறிப்புகள் எதுவுமில்லை. சிலப்பதிகாரம் மதுரை நகரத்தையும் அதன் நடவடிக்கைகளையும் விரிவாக விவரிக்கிறது. ஆனால் அதிலும் கோவில்கள் பற்றிய குறிப்புகள் இல்லை.

மதுரைக்காஞ்சியின் 752 அடிகளிலும் மாங்குடி மருதனார் மதுரையின் வாழ்வை முழுவதுமாகப் பாடுகிறார், மதுரையின் வாழ்வியலை, அன்றாடங்களை அங்குலம் அங்குலமாக விவரிக்கிறார், மதுரையில் சமண, பௌத்த கோவில்கள் பற்றிப் பேசுகிறார். பிராமணர்கள் ஒரு வேத பாடசாலையை நடத்தினர், அங்கே வேதங்கள் ஓதப்பட்டன என்று விவரிப்புகள் வருகின்றன. மாலையில் சாமி ஊர்வலமாகச் செல்லும் விவரிப்புகள் வந்த போதும் அதிலும் நகரத்தின் மையத்தில் பெரிய கோவில் பற்றிய விவரங்கள் எங்குமில்லை.

மீனாட்சியம்மன் கோவில்
மீனாட்சியம்மன் கோவில்
என்.ஜி.மணிகண்டன்

நெடுநல்வாடையில் நக்கீரர், பாண்டிய நெடுஞ்செழியனின் போர்கள் பற்றியும், அவரைப் பிரிந்து வாடும் அரசி பற்றிய குறிப்புகளும் வைத்துள்ளார். ஆனால் அதிலும் மதுரையில் கோவில் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. பரிபாடல் வைகை நதியை, மதுரை நகரை, திருப்பரங்குன்றத்தில் இருந்த ஒரு கோவிலை விவரிக்கிறது. ஆனால் அதிலும் மதுரை நகரத்தில் கோவில் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. பிற்காலத்தைச் சேர்ந்த பரிபாடல் திரட்டு, மதுரையில் ஒரு கோவிலையும் அதைச் சுற்றிய உள் வீதிகளையும் குறிக்கிறது.

சமணம், சாவகம், பௌத்தம், ஆசீவகம், சைவம், வைணவம் என இந்த மண்ணில் பல மதங்கள் தோன்றி, தங்கள் அளவில் மக்களால் ஏற்கப்பட்டு, மன்னர்கள் உள்ளிட்டவர்கள் இந்த மதங்களைப் பின்பற்றி அவை கால மாற்றத்தில் உருமாறின. சமணம் அதிக மக்களைக் கவர்ந்ததற்கு காரணம் அது அனைத்து மனிதர்களும் சமம் என்றது. சமணத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் சாதிகள் கிடையாது. இந்தக் கருத்துகள் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பின்பற்றுவதற்கும் எளிமையாக இருந்தது. சமண மதம் சங்கங்கள் எனும் அவைகள் மூலம் வளர்க்கப்பட்டு, பரப்பப்பட்டது. மதுரை மண்ணின் வரலாற்றோடு சமண சமயத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்துள்ளது. தமிழகத்தில் சங்ககாலம் தொடங்கி கி.பி.12-ம் நூற்றாண்டுவரை சுமார் 1500 ஆண்டுக்கால வரலாறு சமணசமயத்திற்கு உண்டு. சமண சமயத்தின் செல்வாக்கு தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது. நோன்பு, விரதம், வடக்கிருத்தல், தீபாவளி, சரஸ்வதி பூஜை போன்ற பல பண்பாட்டுக் கூறுகள் சமண வைதீகச் சமயங்களுக்கும் பொதுவாகிவிட்டன. அம்மணம் (நிர்வாணம்) சம்மணன்கால் போட்டு அமர்தல் போன்ற செயல்கள் சமணத்தின் ஆழ்ந்த செல்வாக்கால் ஏற்பட்டவையே.

மதுரை சமண நிலமாகத் திகழ்ந்ததற்கான ஏராளமான இலக்கிய, கல்வெட்டு மற்றும் படுகைகள்/குகைகள் வடிவில் சான்றுகள் உள்ளன. மதுரையைச் சுற்றிய மலைகளில் சமணப் பள்ளிகள் இருந்ததற்கான சான்றுகள் இன்றளவும் காணக்கிடைக்கின்றன. திருப்பரங்குன்றம், அரிட்டாப்பட்டி, யானைமலை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம், கீழவளவு, வரிச்சூர், கருங்காலக்குடி என மதுரையின் எண் திசைகளிலும் காலத்தால் பிந்தைய சான்றுகள் வரலாற்றுச் சாட்சியாக இருக்கின்றன. தீர்த்தங்கரர்களின் காவல் தெய்வங்களாக யட்சன், யட்சி எனப்படும் இயக்கன், இயக்கி இருந்துள்ளார்கள். சுவாலாமாலினி, பத்மாவதி அம்மன், சக்ரேஸ்வரி, கூஷ்மாண்டி, வராகி, ஜினவாணி என்ற காவல் தெய்வங்கள் இருந்துள்ளனர்.

சமண காவல் தெய்வங்கள்
சமண காவல் தெய்வங்கள்

நின்றசீர்நெடுமாறன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பொழுது சமண மதத்தினைத் தழுவினார். பாண்டிய அரசி மங்கையற்கரசியாரின் அழைப்பினை ஏற்று திருஞான சம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு வருகை தந்தார். திருஞான சம்பந்தருடன் அவரது நண்பர் சேரமான் பெருமாளும் வந்தார். அவர்களின் பாடல்களிலும் மதுரையில் பெரிய கோவில் இருந்ததற்கான குறிப்புகள் இல்லை, மாறாக அவர்கள் பாடல்களில் திருப்பரங்குன்றம் பாடப்படுகிறது. திருவாசகத்திலும் மதுரையில் பெரிய கோவில் இருந்ததற்கான குறிப்புகள் இல்லை.

7-ம் நூற்றாண்டில் சமணர்கள் கழுவேற்றம் நிகழ்த்தப்பட்டது. திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்றதால் கழுவேற்றினார்கள் என்று பெரியபுராணத்தின் குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது. இதே நிகழ்வை பிற்காலப் புலவரான ஒட்டக்கூத்தர் தனது தக்கயாகப்பரணி எனும் நூலில் குறிப்பிடுகிறார். திருவிளையாடல் புராணமும் இதனைக் குறிப்பிடுகிறது. மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளில் இக்கழுவேற்றம் நடத்திக் காட்டப்படுகிறது. கழுகுமலைக் கோவில் சுவரோவியங்களிலும், மதுரை மீனாட்சியம்மன் கோவில் சுவரோவியங்களிலும் சமணர் கழுவேற்றம் சித்திரிக்கப்பட்டுள்ளதை இன்றும் நீங்கள் காணலாம். இருப்பினும் 8-9 ஆம் நூற்றாண்டில் அச்சநந்தி, அரசி பூ சுந்தரி ஆகியோரின் முயற்சிகளால் மீண்டும் சமணம் தலைத்தோங்குகியது என்பதையும் கவ்வெட்டு, வரலாற்றுச் சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன.

டேனியல்-கள் வரைந்த மதுரை கோபுரம்
டேனியல்-கள் வரைந்த மதுரை கோபுரம்

தென்பரங்குன்றம் பிரசன்னத் தேவர் வேண்டுகோளுக்கிணங்க முதல் மாறவர்ம சுந்தரபாண்டியன் சில தானங்களை வழங்கியமைக்கான சான்றுகள் உள்ளன. அங்கிருந்த தீர்த்தங்கரர் சிற்பங்கள் அழிக்கப்பட்டு அர்த்தநாரி உருவம் வெட்டப்பட்டுள்ளது. அங்கிருக்கும் கல்ப மரம் சமணத்தின் சின்னம். அதனை வைதீகக் கோவில்களில் எங்கும் காண முடியாது. மூவர், மாணிக்க வாசகர், பைரவர், சிவ துறவியின் சிலை, விநாயகர் என சைவத்தை வளர்த்தவர்களின் சிலைகள் இடம்பெற்றன. இவை எல்லாம் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். இருப்பினும் வாடிப்பட்டிக்கு அருகில் 13-ம் நூற்றாண்டில் சமண அறப்பள்ளி இருந்ததற்கான, அங்கே ஒரு சமண ஆச்சார்யா இருந்ததற்கான குறிப்புகள் அங்கு கிடைத்த தீர்த்தங்கரர் சிலையில் உள்ளன. மதுரையில் பெருவாரியான சமணர்கள் பயத்தால் சைவர்களாக மாறினார்கள், மற்றவர்கள் வந்தவாசி, விழுப்புரம் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்றார்கள்.

மக்கள் கடம்ப மரங்களை வழிபட்டிருக்கிறார்கள், இந்த நிலம் கடம்பக் காடுகளாக இருந்துள்ளது. முதலில் ஒரு மரம்தான் தலவிருட்சமாக இருந்துள்ளது, அதனையே வணங்கியிருக்கிறார்கள். ஒரு குளத்தின் அருகில் இந்தத் தலவிருட்சம் இருந்துள்ளது. குளக்கரையில் ஒரு கோவில் கட்டி வழிபட்டிருக்கிறார்கள். மெல்ல மெல்லதான் இந்தக் கோவில் பெரிய கோவிலாக மாற்றம் பெறுகிறது. 8-ம் நூற்றாண்டுக்குப் பின்தான் இந்தக் கோவிலும் அதன் வழிபாடும் தொடங்குகிறது. பாண்டியர் காலத்தில் நந்தி, சப்தகன்னிகள் உருவங்கள் கோவிலை வந்தடைகின்றன. ஒவ்வொரு மன்னரும் தன் பங்கிற்கு இந்தக் கோவிலுக்குச் சிறப்பான நிதி அளிக்கிறார்கள். நாயக்கர்கள் காலத்தில்தான் இந்தக் கோவில் (Temple), கோவில் வளாகமாகவும் (Temple Complex) பின்னர் கோவில் நகரமாகவும் (Temple City) மாறுகிறது.

மதுரை கிழக்குக் கோபுரம் மற்றும் அம்மன் சன்னதி
மதுரை கிழக்குக் கோபுரம் மற்றும் அம்மன் சன்னதி

13ஆம் நூற்றாண்டில் சடயவர்ம சுந்தர பாண்டியன் கிழக்குக் கோபுரத்தை கட்டுகிறார், 14ஆம் நூற்றாண்டின் மையத்தில் மேற்குக் கோபுரத்தை பராக்கிரம பாண்டியன் கட்டுகிறார், தெற்குக் கோபுரமும் ஏராளமான பிரகாரங்களும் புதுமண்டபமும் நாயக்கர்கள் காலத்தில் கட்டப்படுகின்றன. அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், புதுமண்டபம், இசைத் தூண்கள் எனக் காலம்தோறும் இந்தக் கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. வடக்குக் கோபுரத்திற்கான அடித்தளம் நாயக்கர் காலத்தில் எழுப்பப்படுகிறது.

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

ஆனால், அவர்களால் ஆட்சி மாற்றம் மற்றும் வீழ்ச்சியின் காரணமாக இந்த வேலைகளை முடிக்க முடியவில்லை. அமராவதி புதுரைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தைச் சார்ந்த வெங்கடாசலம் செட்டியார், நாகப்ப செட்டியார் ஆகிய பருத்தி வணிகம் செய்த குடும்பத்தார் 19ஆம் நூற்றாண்டில் வடக்குக் கோபுரத்தைக் கட்டி முடித்தார்கள்.

பக்தி இயக்கக் காலத்திற்குப் பின்புதான் சைவ- வைணவ மதங்கள் வலுப்பெற்று மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கின்றன. அந்த நேரம் அவர்களின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த அவர்களுக்கு பிரமாண்டங்கள் தேவைப்படுகின்றன. இந்தத் தேவையின் பொருட்டுதான் மன்னர்களின் ஆசியுடன் பெரும் செல்வங்களை அரசுக் கருவூலத்திலிருந்து குவித்து திருப்பணிகள் விடாது நடைபெறுகின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் பற்றிய விவரங்கள் திருவிளையாடல் கோவில் திருப்பணிமாலை, ஸ்தல வரலாறு மற்றும் ஸ்தானிக வரலாறு ஆகியவை முதல் பனுவல்களாகக் கிடைக்கின்றன.

மீனாட்சிஅம்மன் கோவிலின் வடக்கு பிராகாரம்
மீனாட்சிஅம்மன் கோவிலின் வடக்கு பிராகாரம்

மதுரையின் பெரும் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோவில் திகழ்ந்தபோதும் இந்தக் கோவிலுக்குள் இந்த நிலத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த எவரும் நுழைய அனுமதியில்லாமல்தான் இருந்தது. இவ்வளவு பெரும் கோவில்களைக் கட்டிய கைகள் எட்ட நின்றே வேடிக்கை பார்த்துள்ளன. நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வந்ததும்கூட மதுரையின் வரலாற்றில் மிக முக்கிய தருணமே.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வரைபடம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வரைபடம்

1937-ல் மதுரைக் கோவிலின் நிர்வாக அதிகாரியான ஆர்.எஸ்.நாயுடு மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞரான வைத்தியநாத அய்யரும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அரிசன ஆலயப் பிரவேசம் நடத்தத் தீர்மானித்தனர். 1939-ல் வைத்தியநாத அய்யர் இது குறித்து வெளிப்படையாக பொதுக்கூட்டங்களில் பேசத்தொடங்கினார். அவரது மேலப்பெருமாள் மேஸ்திரி வீட்டில் வைத்து 50 பேருக்கு சத்தியாகிரகப் பயிற்சிகளையும் வழங்கினார். இந்த நடவடிக்கைகளைக் கண்டு ஆலயத்தின் பிராமணப் பணியாளர்கள் மற்றும் சனாதனிகள் கொந்தளிப்பு அடைந்தனர். இந்தச் சூழலில் 1939 ஜூலை 8-ம் தேதி வைத்தியநாத அய்யர் 6 பேருடன் கோவிலுக்குள் நுழைந்தார்.

கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என உடன் கோவிலின் கதவுகளை சனாதனிகள் பூட்டிவிட்டனர். நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.நாயுடு உடன் ஒரு மாஜிஸ்திரேட்டை அழைத்து வந்து கோவிலின் கதவுகளைத் திறந்தார். வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத் தலைவர் ஆறுபதி நடேச அய்யர் கோவில் நிர்வாகத்தை எதிர்த்துப் பல வழக்குகளைத் தொடுத்தார். சனாதனிகள் தானப்ப முதலி தெருவில் உள்ள 'மங்கள நிவாசம்' பங்களாவில் தினசரி கூடி பூசைகள் செய்தனர். இன்றைய செந்தமிழ்க் கல்லூரி அருகில் உள்ள இடத்தில் புதிய மீனாட்சியம்மன் கோவில் கட்டி அங்கே வழிபாடுகள் நடத்தினார்கள்.

1920களில் பொற்றாமரைக்குளம்
1920களில் பொற்றாமரைக்குளம்

ஆலய நுழைவைக் கண்டித்து ‘மதுரை பேச்சியம்மன் கோவில் ரஸ்தா லேட் பத்மனாபய்யர்கள் பாரி பாகீரதி அம்மாள்’ என்பவர் ஆலய எதிர்ப்பு கும்மிப் பாட்டு என்கிற பெயரில் இரண்டணா விலையில் 16 பக்க பாட்டுப் புத்தகம் வெளியிட்டார். 1940-ல் மதுரை கமலத் தோப்புத் தெரு எஸ்.தர்மாம்பாள் என்பவர் ஆலயப் பிரவேசக் கண்டனப் பாட்டு புஸ்தகம் என்கிற பெயரில் 28 பக்கத்தில் பாட்டுப் புத்தகம் வெளியிட்டார். இதில் அரிசனங்கள் நுழைந்தவுடன் மீனாட்சியம்மன் அங்கிருந்து வெளியேறிவிட்டாள், அவளைத் தேடுவோம் வாருங்கள் என்றார்கள். வைத்தியநாத அய்யர் கைதாகாமல் இருக்க அவசரச் சட்டத்தை இயற்றி அவரைக் காப்பாற்றிய ராஜாஜியைக் கண்டிக்கிறது இந்தப் பாட்டுப் புத்தகம். சனாதனிகளின் இந்த நடவடிக்கைக்கு வடநாட்டில் இருக்கும் சாமியார்களின் ஆசி இருக்கிறது என்று தெளிவுபடக் கூறுகிறது இந்தப் பாட்டுப் புத்தகம். இந்தப் புத்தகத்தில் உள்ள கடுமையான சொற்களும் வசவுகளும் எந்த அளவிற்கு சனாதனிகள் ஆதிக்கம் செலுத்துவதில் தீவிரமாக இருந்தார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

அம்மன் சன்னதி 1958
அம்மன் சன்னதி 1958
1945 வரை போராடிப் பார்த்தார்கள். முடியவில்லை என்றவுடன் அனைவரும் மீனாட்சியம்மன் கோவிலுக்கே திரும்பினார்கள், மீண்டும் கோவில் பணிகளில் ஈடுபட்டார்கள். அவர்கள் கட்டிய புதிய மீனாட்சியம்மன் கோவிலில் பூஜைகளை நிறுத்தினார்கள், அந்தக் கோவிலை மூடினார்கள், அடுத்து சுவடு தெரியாமல் இடித்தும் தள்ளினார்கள் என்பது வரலாறு.
தூங்காநகர நினைவுகள் - 22: வெயிலைப் பருக வந்தவன்!

ஒரு தேசமே சுதந்திர வேள்வியில் பற்றி எரியும் நேரத்தில்கூட, மதுரையில் நம் முன்னோர்கள் எதற்கு எதிராக எல்லாம் போராட வேண்டியதிருந்தது என்பதை நினைக்கும்போது பெரும் வருத்தம் மனதை ஆட்கொள்கிறது. சுதந்திர வேள்வித்தீ துளியும் தங்களைத் தீண்டாது தங்களின் சனாதன நலன் என்கிற ஒற்றை நிலைப்பாட்டில் எப்படி இந்தச் சமூகத்தின் ஒரு பிரிவினர் இருந்தார்கள் என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

திருவாதவூர்-ஒவாமலை
திருவாதவூர்-ஒவாமலை

மதுரை நகரின் வரலாறு இன்றும் முற்றுப்பெறவில்லை, கீழடி ஒரு புதிய தொடக்கம் எனில் இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்த இதுவரை படிக்கப்படாத 400க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை தற்போது ஆய்வாளர்கள் படியெடுத்து, படித்து வருகிறார்கள். இதன் முடிவுகள் நமக்கு வரலாற்றைக் குறித்த இன்னும் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சும். மதுரையின் வெளி வீதிகளுக்கு உட்பட்ட நகரத்தின் பெரும் அகழ்வாய்வுகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை, அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் இன்னும் துல்லியமான பல சான்றுகள் நமக்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

இங்கே கடவுள்கள், சடங்குகள், திருவிழாக்கள் என எல்லாமே மதம் விட்டு மதம் கலாச்சாரப் பரிமாற்றமாக ஒன்றோடு ஒன்று கொடுத்து வாங்கியுமே வரலாறு நெடுகிலும் பயணித்து வந்துள்ளன. வழிபாட்டுத் தளங்கள் உருமாற்றம் பெற்றுள்ளன. ஒரு மதத்தின் நம்பிக்கைகள்கூட அப்படியே மற்ற மதங்கள் பின்பற்றியுள்ளன, மனித குல வரலாறு இந்தப் பரிமாற்றங்களின் மூலம் மனித சமூகங்கள் செழித்ததாகவே நமக்குப் பாடம் கற்பிக்கிறது.

மதுரை என்பது சமணம், சாவகம், பௌத்தம், ஆசீவகம், சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்துவம் என வரலாறு நெடுகிலும் பல மதங்களின் அரவணைப்பில் இருந்துள்ளது, பல மதங்களை அரவணைத்தும் உள்ளது. மதுரை அனைத்தையும் ஏற்கும் மாற்றத்தின் நிலம், நவீனத்தின் நிலம். மதுரை என்றாலே மாற்றம் தான், காலம்தோறும் இந்த மாற்றம்தான் மதுரையின் வரலாறு.

நன்றி:

பண்பாட்டு அசைவுகள் - அறிஞர் தொ.பரமசிவன்

மதுரையில் சமணம் - முனைவர் சொ.சாந்தலிங்கம்

MADURAI TEMPLE COMPLEX- A.V.Jeyachandrun MKU Publication

தோற்றவர் கழுவி லேறித் - பெரிய புராணம் 2754

சமணரைக் கழுவேற்றிய படலம் - பெரியபுராணம்

படங்கள் நன்றி: பிரசாத்


nantri Vikadan

No comments: