கதையால் பழகும் கி.ரா.!

 .

முதுபெரும் படைப்பாளி கி.ராஜநாராயணன் தனது 98-வது வயதில் கொண்டுவந்திருக்கும் புத்தகம் ‘மிச்சக் கதைகள்’. நெடிய அனுபவத்தின் தொடர்ச்சியான இந்தக் கதைகள் பற்றி கி.ரா. இப்படிச் சொல்கிறார்: “ஒரு நகை செய்யும்போது கூடவே சேதாரமும் வரும். அந்தச் சேதாரங்களையெல்லாம் சேகரித்து ஒரு நகை செய்யலாம். தங்கம் எப்போதும் வீண்போகாது!” சேதாரங்களிலிருந்து உருவாக்கியிருப்பதாகச் சொல்லும் இந்த ‘மிச்சக் கதைக’ளை அபூர்வ ஆபரணமாக மாற்றியிருக்கிறார் புதுவை இளவேனில். கி.ரா.வின் வாசகர்கள் தவறவிடக் கூடாத பொக்கிஷப் பதிப்பாக்கியிருக்கிறது ‘அன்னம்’ பதிப்பகம்.

இந்த வயதில் கி.ரா.வின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்பதே இந்தப் புத்தகத்தை ஆரம்பிப்பதற்கு முன்பான ஆவலாக இருந்தது. அதைத் தெரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பாகத் தோன்றியது. அந்த வகையில் நமக்குப் பிடிபடுவது என்னவென்றால், கி.ரா.வின் மனதை நினைவுகளே ஆக்கிரமித்திருக்கின்றன என்பது. அதுவும் பூர்வீக ஊரின் நினைவுகள்; இந்தக் கால மாற்றத்தில் கரைந்துபோன வாழ்வனுபவங்கள்; தனது ஊருக்கே உரித்தான சொற்கள்; அவரது மூதாதையர் சொன்ன கதைகள்!


கி.ரா. தன்னுடைய அனுபவங்களையும், தான் கேட்ட கதைகளையும் நம்மிடம் ஒரு கதையாகச் சொல்லும்போது காலத்தை அவர் கையாளும் விதம் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. நம்மிடம் கதை சொல்லிக்கொண்டிருப்பது இந்த நூற்றாண்டில். இங்கிருந்து நினைவுகள் வழியாக, அவருடன் எப்போதோ உரையாடிய ஒரு நபரைத் தொட்டு, அங்கிருந்து சில பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நகர்ந்து ஒரு ஆளுமை சொன்ன கூற்றை இணைத்து, அதற்கும் பின்னால் புராண காலம் சென்று, அந்தக் காலத்தை இப்போது பேசிக்கொண்டிருப்பதோடு பொருத்திவிடுகிறார். ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு இவ்வளவு காலங்களோடு முன்னும் பின்னும் பாய்ந்து நடத்தும் கி.ரா.வின் ஆட்டம்தான் மிகச் சிறிய இந்த அனுபவக் கதைகளை முக்கியமாக்குகிறது எனலாம்.

‘வர்ணம்’ கதையை எடுத்துக்கொள்வோம். இந்தக் கதையில் ஒன்றிரண்டு ஊர்க்காரர்கள் வருகிறார்கள். இவர்களோடு பாரதியார், சிட்டி சுந்தரராஜன், எம்.கே.டி., என்.எஸ்.கிருஷ்ணன், ராமன், கிருஷ்ணன், ஷேக்ஸ்பியர், எஸ்.ஜி.கிட்டப்பா, லட்சுமிகாந்தன், அஸ்வத்தாமா ஆகியோரும் வருகிறார்கள். ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத இவ்வளவு பேரையும் ஒரே கண்ணியில் இணைக்கிறார். காலத்துக்கும் வெளிக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இந்தப் பாய்ச்சலுக்கு ஒரு சொல் போதுமானதாக இருக்கிறது.

இப்படி எல்லாவற்றையும் இணைப்பது ஒரு பாணி என்றால், சம்பந்தம் இல்லாமல் எங்கெங்கோ அலைபாய்வது இன்னொரு உத்தியாக இருக்கிறது. ‘வித்தியாசமான, சுவாரஸ்யமான ஆள் ஒருத்தர் இருந்தார்’, ‘இப்படித்தான் ஒருநாள் நண்பர்களோடு வந்துகொண்டிருந்தபோது’ என்று கி.ரா. கதை சொல்லத் தொடங்குகிறார். இங்கிருந்து எங்கெங்கோ போய்விட்டு, சொல்லவந்ததை விட்டுவிட்டு எதையோ பேசிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லி, அதற்காக மன்னிப்பும் கேட்ட கையோடு சம்பந்தமில்லாத வேறு விஷயத்துக்கு நகர்ந்து குசும்புகாட்டுகிறார். பகடியும் எள்ளலும் நிரம்பிய மொழியால் கட்டிப்போடுகிறார்.

கி.ரா. சொல்லும் கதைகள் கி.ரா.வின் அனுபவங்கள் மட்டுமல்ல; கி.ரா.வின் பெரிய பாட்டி சொன்ன கதைகளாலும் ஆனவை. அவருடைய அனுபவங்கள் இவற்றாலும் நிரம்பியிருக்கின்றன என்பதால் கி.ரா.வின் எழுத்துகள் ஒரு நூற்றாண்டையும் கடந்த அனுபவ வசீகரத்தைத் தாங்கியிருக்கின்றன. இந்த அனுபவக் கதைகளிலிருந்து முளைத்துவரும் விடை தெரியாத கேள்விகளும் அசாதாரண தருணங்களும் நினைவேக்கமாகவோ துயரமாகவோ கோபமாகவோ வெளிப்படுவதில்லை என்பது முக்கியமானது. கணநேர உறை நிலையாகஅவை வெளிப்படுகின்றன. உதாரணமாக, “நாம் வணங்கும் சாமிகளான கண்ணனும் ராமனும் சரியான கருப்புதான் என்றாலும் கருப்பசாமி என்று சொல்ல மாட்டேன் என்கிறது நமது நாக்கு” என்று சொல்வதோடு, அடுத்த விஷயத்துக்கு நகர்ந்துவிடுவார். இன்னொரு இடத்தில், “அவள் நம்ம வீட்டுக்கு விருப்பப்பட்டு வந்த செல்ல மருமகள். அவளை ரொம்பவும்தான் கேலி பண்ண வேண்டாம்” என்று சொல்லும்போது, பாட்டி சொல்கிறாள்: “நானும்கூட இந்த வீட்டுக்கு மருமகளாக வந்தவள்தான்.” இப்படியான தருணங்களில் கதைசொல்லியோ கதாபாத்திரமோ ஸ்தம்பித்து நிற்கின்றன. அவ்வளவுதான்.

ஒரே ஒரு கதையில் மட்டும் கி.ரா.வின் ஏக்கம் வெளிப்படுகிறது. உயிரோட்டமான ஒரு வாழ்க்கை முறையை வெறும் தேங்காயை மட்டுமே வைத்து விவரித்துவிட்டுக் கடைசியில், “எல்லாம் போன மூலை தெரியவில்லை” என்று சொல்லும்போது, பெரும் வெறுமை சூழ்ந்துகொள்கிறது. அதுவும் கி.ரா. இதைச் சொல்வதாக நினைத்துப் பார்க்கும்போது வெறுமை மீது நூற்றாண்டின் கனம் ஏறிக்கொள்கிறது.

கி.ரா.வின் இந்த நினைவுக் கதைகளில் இசை உண்டு, அந்தரங்க விஷயங்கள் இருக்கின்றன, நிறைய மனிதர்கள் வருகிறார்கள், முக்கியமே இல்லாத சமாச்சாரங்கள் பேசப்படுகின்றன, கல்யாண மணம் வீசுகிறது, அனுதாப ப்ரியம் இருக்கிறது, ருசிகூட உச்சமடைகிறது. போலவே, கி.ரா.வின் கதைகளில் வரும் மனிதர்கள் கண்ணால் பழகுகிறார்கள், பேச்சால் பழகுகிறார்கள். கி.ரா. நம்மோடு கதையால் பழகுகிறார்!

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

நன்றி https://www.hindutamil.in/

No comments: