ஸ்வீட் சிக்ஸ்டி 9- பாசமலர் - ச சுந்தரதாஸ்

 .


அண்ணன் தங்கை பாசத்தை விளக்கும் ஏராளமான படங்கள் தமிழில் வந்துள்ளதன ஆனாலும் 60 ஆண்டுகள் கடந்தும் சகோதர பாசத்திற்கு இலக்கணமாக விளங்குவது போல் மக்கள் மனதில் பதிந்து இருக்கும் படம்தான் பாசமலர். இன்று கூட இந்த படத்தை பார்த்துவிட்டு கண் கலங்காத ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம், அந்த அளவிற்கு உணர்ச்சிகரமான காட்சிகள் , நெஞ்சை உருக்கும் சம்பவம்கள் தத்ரூபமான நடிப்பு என்று எல்லாம் சேர்ந்தாற்போல் படத்தை இயக்கியிருந்தார் பீம்சிங். மலையாளத்தில் பிரபலமான கதாசிரியர் கே பி கொட்டாரக்கார எழுதிய கதையை ராஜாமணி பிக்சர்சார் தயாரித்தார்கள். சிவாஜியின் தாயார் பெயரில் நிறுவப்பட்ட பட நிறுவனத்தின் உரிமையாளர்கள் நடிகர் எம் ஆர் சந்தானம் இவர் டைரக்டர் சந்தான பாரதியின் தந்தையாவார், மற்றையவர் மோகன் . அட்வர்டைசிங் நிறுவனத்தின் உரிமையாளர் கே மோகன். சிவாஜியின் அனுசரணையுடன் இவர்கள் இந்தப் படத்தை தயாரித்தார்கள் .

இந்தப் படத்தின் மூலமாகத்தான் பிற்காலத்தில் புகழ்பெற்ற வசனகர்த்தாவான ஆரூர்தாஸ் சிவாஜியின் படங்களுக்கு வசனம் எழுத அமர்த்தப்பட்டார். படத்தில் அவர் எழுதிய வசனங்கள் பெரும் வரவேற்பை பெற்றவே பிற்காலத்தில் ஏராளமான சிவாஜியின் படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அவரை தேடி வந்தது.படத்தில் இடம்பெற்ற எட்டு பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதினார் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல பாடல் ரசிகர்களை உருக்கியது. வாராய் என் தோழி வாராயோ பாடல் எல்லா கல்யாண வீடுகளிலும் ஒலித்தது படத்துக்கு இசை அமைத்தவர்கள் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி பிற்காலத்தில் பல பாடல்களை பாடிய எம் எஸ் விஸ்வநாதன் இந்த படத்தின் மூலம்தான் அன்புமலர் என்ற பாடல் மூலம் பாடகராகவும் அவதாரம் எடுத்தார்.

பாசமலர் படத்தில் இடம்பெற்ற எங்களுக்கும் காலம் வரும் , பாட்டொன்று கேட்டேன் மயங்குகிறாள் ஒரு மாது, ஆகிய பாடல்களின் முதல் வரிகளில் பிற்காலத்தில் மூன்று படங்களில் தலைப்பாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பாசக்கார அண்ணனாக சிவாஜியும் அன்பு தங்கையாக சாவித்திரியும் நடித்து ரசிகர்களை நெகிழவும் உருக்கவும் செய்தார்கள் .அதிலும் கடைசி காட்சியில் சிவாஜி கைவீசம்மா கைவீசு என்று வசனம் பேசி நடித்த போது கலங்காத, கண்ணீர் விடாத ரசிகர்களே இல்லை எனலாம்.

ஜெமினிக்கு முக்கிய வேடம் அமைந்த போதும் சிவாஜி சாவித்திரி நடிப்பு அவரை பின்னுக்கு தள்ளி விட்டது. இவர்களுடன் நம்பியார் தங்கவேலு பிஎஸ் ஞனம் எம்என் ராஜம் ஆகியோரும் நடித்தனர்

25 வாரங்கள் வெற்றிகரமாக ஓடி வெள்ளி விழா கண்ட பாசமலர் சிவாஜி சாவித்திரி நடிப்பில் ரசிகர்களின் மனதில் இன்றும் இடம் பெற்றிருக்கிறதுNo comments: