எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 38 புறக்கணிப்புக்கும் அங்கீகாரத்திற்கும் மத்தியில் தேடிய உண்மைகள் ! எத்தனை கோணம்…? எத்தனை பார்வை…? முருகபூபதிதமிழ் சமூகத்தில் வாழும் தமிழ் எழுத்தாளருக்கு அவரது குடும்பத்தில் எத்தகைய அங்கீகாரம் கிடைக்கிறது என்பது அவரவர்க்கே வெளிச்சம்.

இதுவிடயத்தில் மகாகவி பாரதிக்கு நடந்தது பரகசியம் !

கேரள எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளை இந்திய சாகித்திய அக்கடமி விருது பெற்றவர் என்ற தகவலே தெரியாமல் வளர்ந்தாள் அவரது மகளான கல்லூரி மாணவி.

கணவர் பெரிய எழுத்தாளராக இருப்பார்.  மனைவி அதனைக்கண்டுகொள்ளமாட்டார்.  மனைவி பெரிய எழுத்தாளராக இருப்பார், கணவன் அது குறித்து அலட்டிக்கொள்ளமாட்டார்.

எழுத்தாளரின் பிள்ளைகள் அங்கீகரித்தால் அதுவே பெரிய பாக்கியம்தான்.


எனது வாழ்வில் அங்கீகாரமும் புறக்கணிப்பும் நிகழ்ந்திருக்கின்றன.

சிறுவயதில் தாத்தா பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்தமையால், பின்னாளில் எழுத்தாளனாகிவிட்டேன்.

பால்ய வயதில்  பாடசாலைப்புத்தகங்கள் தவிர வேறு எதுவும் படிக்க வீட்டில் அனுமதி இல்லை. எங்கள் ஊரில்  கடலும் நதியும் சங்கமிக்கும் பகுதியில் முன்னக்கரை  என்ற  இடத்தில் வசித்த கணித ஆசிரியர் டேவிட் அவர்களிடம் மாலைவேளைகளில் ரியூஷனுக்கு செல்லும்போது, தென்படும் மாநகர சபையின் பொது நூலகத்திற்குள் எனது  கால்கள் என்னையறியாமலே சென்றுவிடும்.

அங்குதான் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், கல்கண்டு, கண்ணன்  படித்தேன். அதில் வந்த தொடர்கதைகள் எனது விருப்பத்திற்குரியவை.

1970 இற்குப்பின்னர் எழுத்தாளனாகியதை  எனது  அம்மா விரும்பவில்லை.  பாடசாலை பருவத்தில் தமிழ்ப்பாட ஆசிரியர் சுஃபியான் அவர்கள், சிறுகதை எழுதும் பயிற்சி தந்தபோது நான் எழுதிய முதல் கதை சிறு துளி பெருவெள்ளம். அந்தத்தலைப்பினை தந்தவரும் அவர்தான். வகுப்பில் எனது கதையைத்தான் சிறந்தது என்று பாராட்டி எழுதி தனது கையொப்பமும்  இட்டிருந்தார்.

அம்மாவிடம் காண்பித்தபோது, பெரிய எழுத்தாளனாகத்தான் வருவாயோ..? என்று அம்மா மனதிற்குள் குமைந்தார்களா..? அங்கீகரித்தார்களா..? என்பது புரியவில்லை.

மல்லிகையால் அறிமுகமாகி, கதைகள் எழுதிக்கொண்டிருந்தபோதும், எழுத்தாளர்களுடன் சுற்றியலைந்தபோதும் அம்மாவும், எமது தாய் மாமனாரும் அவரது மனைவியான எமது  அத்தையும் அதனை விரும்பவில்லை.

நான் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்துடன்


அலைவதைப்பார்த்த அத்தை, “  இவன் என்ன… சாத்திரக்காரன்மாதிரி அலையிறான்  “ என்பார்கள்.

அம்மா,  “  இவன் உருப்படமாட்டான் போலத் தெரிகிறது அத்தாச்சி  “ என்பார்கள்.

  மாமா – அத்தையின் மூத்த மகள் தேவசேனா பாடசாலையில் படிக்கும்போதே பாடசாலை மலர்களில் எழுதியவர். அத்துடன் தினபதி தினம் ஒரு சிறுகதை பகுதியிலும் அவரது ஒரு கதை வெளிவந்திருந்தது.

எனது ஏற்பாட்டில் தேவசேனாவின் கதை, கட்டுரைகள் மல்லிகை, பூரணி, புதுயுகம் முதலான இதழ்களிலும் வெளிவந்தன. தற்போது ஜெர்மனியில் வதியும் அவர்,  தேவி என்ற புனைபெயரிலேயே எழுதினார்.

நான் எழுத்துலகில் பிரவேசித்த காலப்பகுதியில் எனது படைப்புகளை செப்பனிட்டுத்தந்தவரும் தேவாதான்.   “ நானும் கெட்டு,  தனது மகளையும் இவன் கெடுக்கப்போகிறான்.  “  என்று மாமாவுக்கு கவலை.

ஆனால், அப்பா மாத்திரம் எனது நடவடிக்கைகளை மௌனமாக அவதானித்தார்.

அவரது மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதையும் புரிந்துகொண்டேன்.  அவரது தாய் மாமன்மார் தொ.மு. பாஸ்கரத் தொண்டமான், தொ. மு. சிதம்பர ரகுநாதன் ஆகியோர் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்.


அதனால் அவர்களின் மரபணு எனக்கும் இருக்கும் என்பது அப்பாவின் நம்பிக்கை. அம்மா கண்டிப்பானவர். அவர் பிரிட்டிஷாரின் பொலிஸ் சார்ஜன்டின் மகள். அந்தக்கண்டிப்பு அம்மாவின் மரபணுவில் இருந்திருக்கவேண்டும்.

அப்பா எமக்கு செல்லம்கொடுத்து வளர்த்தவர்.  அதனால் அப்பாவிடத்தில் துளியளவும் பயம் இல்லை.  ஆனால், அம்மாவின் ஒன்றுவிட்ட அண்ணனான எமது தாய்மாமாவுக்கு முன்னால் அமரவும் மாட்டோம். அவர் முகம் பார்த்து பேசவும் தயக்கம்.

பின்னாளில் அப்பா எங்கள் ஊர் கணேசன் கஃபேயிலும் பவாணி விலாசிலும்  கெஷியராக பணியாற்றியபோது, அங்கே விற்பனைக்கு வந்த வீரகேசரி பிரசுர நாவல்களை எனக்கும் மச்சாள் தேவாவுக்கும் தங்கைக்கும் தந்தார்.

வீட்டில் நான் இல்லாத சந்தர்ப்பங்களில் யாரேனும் எழுத்தாளர் வந்துவிட்டால், அம்மா  வரவேற்கவும் மாட்டார்கள். திரும்பியும் பார்க்கமாட்டார்கள். ஆனால், அப்பா அப்படி அல்ல!

கடைக்குச்சென்று குளிர்பானம் வாங்கி வந்து உபசரித்து அனுப்புவார்.

அப்பா, அக்காலப்பகுதியில் நான் ஒழுங்குசெய்த


இலக்கியக்கூட்டங்களுக்கும் வருவார்.  எனது முதல் புத்தக வௌியீட்டுக்கும் ( 1975 ) வந்தார். கொழும்பில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய தேசிய ஒருமைப்பாடு மாநாட்டிற்கும், 1983 மார்ச் மாதம் நடந்த  பாரதி நூற்றாண்டு விழாவுக்கும் அப்பா வந்தார்.

அம்மா இதனையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை.

அப்பா கடைசியாக கலந்துகொண்ட இலக்கிய நிகழ்ச்சி அந்த பாரதி நூற்றாண்டு விழாதான்.  அந்த ஆண்டு நடுப்பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்தின்போது அப்பாவின் வெளியூர் வர்த்தக நண்பர்கள் சிலர் மலையகத்தில் கொல்லப்பட்டனர்.

அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனா அந்தக்கலவரத்தின் பழியை நான் இணைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இடதுசாரிக்கட்சிகள் மீதும் சுமத்தி தடைசெய்தார்.

மக்கள் விடுதலை முன்னணி செயலாளர் தோழர் லயனல்போப்பகே கைதாகி தடுத்துவைக்கப்பட்டார்.  பலர் தேடப்பட்டனர். பலர் தலைமறைவாகினர்.

இறுதியாக நடந்த ஜனாதிபதித்தேர்தலில் அப்பாவும் எனது வேண்டுகோளை ஏற்று ம.வி.முன்னணி வேட்பாளர் தோழர் விஜேவீராவுக்கு ( மணிச்சின்னம் ) வாக்களித்தார்.


அம்மா யாருக்கு வாக்களித்தாரோ தெரியாது.

கட்சி தடைசெய்யப்பட்டபோது, என்னிடமிருந்த இடது சாரி சிந்தனை கொண்ட பல நூல்களை அப்பாதான் ஒரு பெட்டியில் சேகரித்து பின்புறமுள்ள ஒரு  கடற்றொழிலாளர்  வீட்டில் மறைத்துவைத்தார்.

என்னையும் குடும்பத்தினரையும் ஊரைவிட்டு தப்பிச்செல்லுமாறு பணித்தார். அரியாலையைச்சேர்ந்த ஒரு குடும்ப நண்பரின் ஏற்பாட்டில் ஒரு வாகனம் ஒழுங்கு செய்துகொண்டு ஊரைவிட்டு புறப்பட்டோம்.

அக்கா குடும்பம் பலாங்கொடையில். தங்கை குடும்பம் வவுனியாவில். மூத்த தம்பி மத்திய கிழக்கில். சின்னத்தம்பி அம்மா அப்பாவுடன் ஊரோடு இருந்தான்.

எனது இரண்டு பெண்குழந்தைகளில் இளையவள் தவழும் பருவத்திலிருந்தவள். அப்பாவின் தோள்களில் உறங்குவாள். மூத்தவள் அப்பாவுடன் நடைப்பயிற்சி செய்பவள்.

அவர்கள் இருவரையும் விட்டுப்பிரிந்த சோகம் அப்பாவை வாட்டியிருக்கவேண்டும். எனது குழந்தைகளுக்கு யாழ்ப்பாணம் – அரியாலை புது இடம். அங்கு சந்திக்கும் மனிதர்களும் புதியவர்கள். அந்தப்  புதிய சூழல் அவர்களுக்கும் தாத்தா குறித்த ஏக்கத்தை தோற்றுவித்துவிட்டது.

தாத்தாவை நினைத்து அழுவார்கள். தாத்தாவும் அவ்வாறே


ஊரில் அழுதிருக்கிறார்.

ஒரு நாள் அப்பா திடீரென மாரடைப்பால் காலமானார். தம்பியின் மடியில் அவரது உயிர் பிரிந்தது.

அவர் மதியம் மறைந்தார். எனது மூத்த மகள் பாரதி, அன்று காலையிலிருந்து அழுதுகொண்டிருந்தாள்.  தாத்தா வாசலில் வந்து நின்று அழைப்பதாக சொல்லி பிதற்றிக்கொண்டிருந்தாள்

அப்பாவின் ஆத்மா காற்றோடு கலந்து வந்து அரியாலை வீட்டின் முன்னால் நின்றதா…?

இந்தப்புதிரை என்னால் அவிழ்க்க முடியவேயில்லை.

அப்பாவின் ஆசியுடன் வீரகேசரியில் முதலில் பிரதேச நிருபர் பணியும்,  பின்னர்  அலுவலகத்தில்  வேலையும் கிடைத்தது.

எனது குடும்ப உறவுகளிடம் அப்பா தவிர்ந்த ஏனையோரிடமிருந்து  வந்த புறக்கணிப்புக்கும்,  அதற்கப்பால்  வெளியில் கிடைத்த அங்கீகாரத்திற்கும் மத்தியில் நான் உண்மைகளைத் தேடினேன்.

சம்பவம் -01

ஒரு நாள் காலை பணிக்கு புறப்பட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு அன்பர் தனது சைக்கிளில் விரைந்து வந்தார். அவரது குடும்பத்தினர்  பிரதான வீதியில் புடவைக்கடை நடத்திக்கொண்டிருந்த வர்த்தகர்கள்.

என்றைக்குமே எனது வீட்டு வாசல் படி ஏறாதவர்,  அன்று வந்தார்.

அவரது அண்ணன் முதல் நாள் சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் சுங்கப்பகுதியில் அவரது  பொதிகளை சோதனையிட முனைந்த ஒரு சுங்க அதிகாரி,  “ எங்கிருந்து வருகிறீர்..?  “எனக்கேட்டுள்ளார்.

அவர் எமது ஊரைச்சொன்னதும்,  “ உங்களுக்கு முருகபூபதியை தெரியுமா..?  “ எனக்கேட்டுள்ளார்.

 “ ஓம் தெரியுமே. அவர் எங்கள் குடும்ப நண்பர். எழுத்தாளர். எங்கள் ஊர் சங்கங்களில் முக்கியஸ்தர். வீரகேசரியில் வேலை செய்கிறார்  “ என்று என்னைப்பற்றி புளுகியிருக்கிறார்.

 “ அப்படியா… சரி… சென்று வாருங்கள்  “ என்று சொல்லி, அவரது பொதிகளை சோதனையிடாமல் அனுமதித்திருக்கிறார்.

சென்னை சென்றவர், தாமதிக்காமல் ஊரிலிருந்த தம்பியிடம் தொலைபேசி ஊடாக தகவல் சொல்லியிருக்கிறார். அத்துடன் நின்றிருந்தால் சரி. ஆனால், அதற்கு மேலும் ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறார்.

                              “தாமதிக்காமல் முருகபூபதியை சென்று பார். அவரது ஒரு நண்பரோ அல்லது நன்கு தெரிந்தவரோதான் அந்த சுங்க அதிகாரி. அவர் எந்தெந்த திகதிகளில் எந்தெந்த நேரங்களில் கடமையில் இருப்பார் என்பதை கேட்டுத்தெரிந்து வந்துசொல்  “

என்னைத் தேடி வந்திருக்கும் அந்த அருமைத்தம்பியின்  நோக்கம் புரிந்துவிட்டது.

அவ்வாறு விமானநிலையத்தில் சுங்கப்பகுதியில் யார் எனக்குத் தெரிந்தவர் இருக்கிறார் என்பது உடனடியாக நினைவுக்கு வரவில்லை.

 “ அவ்வாறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.  “ என்று சொல்லி,  வந்தவரை திருப்பி அனுப்பிவிட்டேன்.

அவர் முகம் வாட்டமடைந்தது.

சம்பவம் – 02

எங்கள் ஊரைச்சேர்ந்த ஒரு முஸ்லிம் நண்பரின் உறவினர்களின் திருமண வைபவம் மருதானையில் நடந்தது. அதற்கு பலரும் அந்த நண்பரும் ஒரு வாகனத்தில் சென்றுள்ளார்கள்.

வீட்டிலிருந்து புறப்படும்போது  வந்த தாமதத்தை தவிர்ப்பதற்காக அந்த வாகனம் வேகமாக விரைந்தது. மருதானையில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை கவனிக்கும் ஒரு பொலிஸ்காரர், விரைந்து வந்த அந்த வாகனத்தை தடுத்திருக்கிறார்.

வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வந்துள்ளது.  சாரதியிடம் வாகன அனுமதிப்பத்திரத்தை வாங்கி சோதிக்கும்போது, எனது நண்பர் குறுக்கிட்டு, தாங்கள் ஒரு திருமண வைபவத்திற்கு செல்வதாகச்சொல்லியிருக்கிறார்.

அந்த பொலிஸ்காரர்  “ எங்கிருந்து வருகிறீர்கள்..?  “ எனக்கேட்டதும், நண்பர்  “ நீர்கொழும்பு  “என்றிருக்கிறார்.

அந்தப்பொலிஸ்காரர் தமிழர். என்னையும் நன்கு தெரிந்தவர்.

எங்கள் ஊரின் பெயரைச்சொன்னதும்,  “ எனது பெயரைச்சொல்லி, தெரியுமா..?  “எனக்கேட்டுள்ளார்.

அந்த முஸ்லிம் நண்பரும் ஆகா ஓகோ என்று எமது நட்பின் பெருமையை பறைசாற்றியுள்ளார்.

அந்தப்பொலிஸ்காரர் சாரதியை எச்சரித்து, மன்னித்து, அபராதம் எதுவும் விதிக்காமல், அனுமதிப்பத்திரத்தை பறிமுதல் செய்யாமல் விடுவித்துள்ளார்.

குறிப்பிட்ட நண்பர் பின்னர் என்னைத்தேடி வந்து, அந்த பொலிஸ்காரரின் முகவரி கேட்டார்.

 “ தெரியாது  “ என்று சொன்னேன்.

முகவரி கேட்பதற்கான சூட்சுமத்தை புரியாதவனா நான் !

சம்பவம் – 03

1983 ஆம் ஆண்டு கலவர காலத்தில் எங்கள் ஊரில் தமிழர்களின் புடவைக்கடைகள், நகைக்கடைகள் யாவும் சூறையாடப்பட்டு, தீக்கிரையாகிவிட்டன.

எனது பெரிய தம்பிக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. மணகள் எமது உறவில் அத்தை மகள். குருநாகலில் இருந்தார்கள்.

கூறைச்சேலை, தாலிக்கொடி, மாற்று  மோதிரம் ஆகியன வாங்குவதற்காக தம்பியும் மணமகளின் அண்ணனும் அண்ணியும் யாழ்ப்பாணம் சென்றார்கள்.

அப்போது ரயில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.  தனியார் பஸ்ஸில் சென்று,  தேவைப்பட்டவற்றை வாங்கிக்கொண்டு திரும்பும் வழியில் எங்கள் ஊருக்கு நேரடியாக பஸ் சேவை இல்லாத நிலையில் வவுனியாவுக்கு வந்து அங்கிருந்து எமது ஊருக்கு புறப்படும் எண்ணத்தில் வவுனியாவில் இறங்கியிருக்கிறார்கள்.

அப்போது மாலை நேரம்.  கடும் மழை. வவுனியா பஸ் நிலையமும் வெள்ளத்தால் நிரம்பிவிட்டது.  கால நிலை சீராக இல்லாதிருந்தமையால், கொழும்பு மார்க்கத்தில் பஸ்சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

தம்பியும் உறவினர்களும் கைகளில் நகைகள், மற்றும் கூறைச்சேலை உட்பட திருமண வைபவத்திற்கு தேவையான அத்தியாவசியப்பொருட்களுடன் தவித்துக்கொண்டு நின்றிருக்கிறார்.

அப்போதும் கடும்மழை.

ஒருவர் அவர்களிடம் எதிர்ப்படுகிறார். அவரும் அன்று கொழும்பு திரும்பவேண்டியவர்.  வவுனியாவிலிருந்த தமது குடும்பத்தினரிடம் வந்துவிட்டு,  அன்று மாலை  வவுனியா பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

பஸ் சேவை இல்லை.

எனது தம்பியையும் உறவினர்களையும் பார்த்து,  “ எங்கே போவதற்கு வந்தீர்கள் …?  “ எனக்கேட்கிறார்.

உடனே எனது தம்பி,  “ யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறோம். நீர்கொழும்பு செல்லவேண்டும்.  “எனச்சொன்னதும்,

அந்த அன்பர், “  அப்படியா… நீர்கொழும்பா…? உங்களுக்கு முருகபூபதியை தெரியுமா..?  “என்று கேட்டுள்ளார்.

“  அவர் எனது அண்ணன்.  “

 “ உண்மையாகவா…? “

 “ ஆம். எனது அண்ணன்தான். அவரும் இந்தப்பயணத்தில் வரவிருந்தார். அவருக்கு லீவு இல்லை. அதனால் வரமுடியவில்லை.

 “ அப்படியா… உங்கள் அண்ணன் எங்கே வேலை செய்கிறார்…?

 “ வீரகேசரியில்  “

 “ அப்படியா… நீங்கள் எங்கள் முருகபூபதியின் தம்பியா…,?  யோசிக்கவேண்டாம். இனி கொழும்பு மார்க்கத்தில் பஸ் இருக்காது. எனது பயணமும் இந்த மழையால் தடைப்பட்டுவிட்டது. வாருங்கள் எங்கள் வீட்டுக்கு. இன்று இரவு தங்கியிருந்து நாளை காலையில் புறப்படலாம்.  நானும் நாளை உங்களுடனேயே புறப்படுகிறேன்  “ எனச்சொல்லியிருக்கிறார் அந்த அன்பர்.

எனது தம்பிக்கும் உறவினர்களுக்கும் தயக்கம். மணமகளின் அண்ணிக்கோ, கையில் தாலிக்கொடி , மோதிரங்கள் உட்பட நகைகள் புத்தம் புதிய கூறைச்சேலை. இந்த நிலையில் முன்பின் தெரியாத ஒருவரை நம்பி, அவருடன் சென்று அவர் வீட்டில் இரவு தங்குவதா.. என்ற  பயம்.

நேரம் கரைகிறது. மழையும் வஞ்சகம் இல்லாமல் கொட்டித்தீர்க்கிறது.

அந்த அன்பர், அவர்களை வற்புறுத்தி அழைத்துச் செல்கிறார். வீட்டில் தனது மனைவி பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி, இரவு விருந்தும் வழங்கி தங்கவைத்திருந்து மறுநாள் அவர்களுடன் தானும் புறப்பட்டுள்ளார்.

பத்திரமாக வீடு திரும்பிய தம்பியும் உறவினர்களும்  நடந்த சம்பவங்களையும்  விபரித்து,  அந்த அன்பரின் பெயரையும் சொல்லி  அவரது பெருந்தன்மையையும்  புகழ்ந்தார்கள்.

அன்று அந்த மழைக்காலத்தில் எனது உறவுகளுக்கு தஞ்சமளித்த அந்த அன்பர்,  பின்னாளில் ஒரு தமிழ் அமைச்சரின் பொது சன தொடர்பு அதிகாரியாக ( P R O – Public Relation Officer ) பணியாற்றினார்

அச்சம்பவத்தைக் கேட்டுக்கொண்டிருந்த எனது அம்மா என்னையே பார்த்தார். மணமகளின் தாயார் அதாவது எங்கள் அத்தை,  “ எங்கட மருமகன் பூபதி எழுதுவதைப் பார்த்து, ஏளனம் செய்தீங்களே… பார்த்தீங்களா அத்தாச்சி,  பூபதி தம்பிக்கு நாலு ஊரும் தெரியும். நாலு மனுஷரும் தெரியும். அதனால் எனது மகனும் மருமகளும் மாப்பிள்ளையும் பத்திரமாக வந்து சேர்ந்திருக்கிறாங்க…. “ என்றார்கள்.

அந்த அத்தை அதிகம் படிக்காதவர். ஆனால், எனது அம்மா ஆங்கில மொழிமூலம் படித்தவர்.

பின்னாளில் நான் அவுஸ்திரேலியா வந்த பிறகு 1997 ஆம் ஆண்டு தாயகம் சென்றவேளையில் எங்கள் ஊரில் எனது இலக்கியப்பிரவேச வெள்ளிவிழா நடந்தது.

அவ்விழாவில் என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகை ஜீவாவை பாராட்டி விருது வழங்கி கௌரவித்தேன்.

அம்மாவும், எனது தாய்மாமனாரும்தான் மங்கள விளக்கேற்றினார்கள். அதன்பிறகு அங்கே எனது பிரசன்னம் இல்லாமலே எமது கல்லூரியில் நடந்த எனது நூல்களின் வெளியீட்டு விழாவையும் அம்மாவும் தாய்மாமனாரும் முன்னின்று நடத்தினார்கள். 

மல்லிகை ஜீவாவையும் எழுத்தாளர் நண்பர்களையும் மாணவர்கள் அணிவகுத்து நின்று  வரவேற்றார்கள். அந்த விழாவில் நூல் விற்பனையில் கிடைத்த பணம் முழுவதையும் அம்மா கல்லூரியின் வளர்ச்சி நிதிக்கே வழங்கினார்கள்.

2003 ஆம் ஆண்டு எனது முதல் நாவல் பறவைகள் நூலுக்கு தேசிய சாகித்திய விருது கிடைத்த தகவலை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு எனக்கு முதலில் சொன்னதும் அம்மாதான்.

அம்மாவின் கட்டாய அழைப்பில் சென்று அந்த விருதை அம்மாவின் முன்னிலையிலேயே இலங்கைப்பிரதமரிடம் பெற்றேன்.

அம்மா கலந்துகொண்ட  இறுதி நிகழ்ச்சியும் அதுதான். அந்த ஆண்டு அம்மா கண்களை மூடினார்.

இந்தக்காட்சிகளை பார்க்க அப்பா இருக்கவில்லை.

புறக்கணிப்புக்கும் அங்கீகாரத்துக்கும் மத்தியில் உண்மைகளை இவ்வாறுதான் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

(  தொடரும் )   

letchumananm@gmail.com

 

 

 

 

 

 

 

 

No comments: