பிருந்தா சாரதி கவிதை

 .



நேசிப்பவர்களை உதாசீனப்படுத்துவதும்
உதாசீனப்படுத்துபவர்களை
நேசிப்பதுமாகவே ஓடிவிட்டது
இத்தனைக் காலம்.
ஒரு ரோஜாப் பூவைப் பறிப்பதற்காக
ஆயிரம் முறை விரல்களைக்
குத்திக்கொண்டாலும் இந்தக் கைகள்
மீண்டும் மீண்டும்
அந்த ரோஜாவையே தேடிப் போவதேன்?
அந்த அறிவீனத்தையாவது விட்டுவிடுவோம்...
நிராகரிக்கப்படுவதன் அவமானத்துக்காவது
அஞ்ச வேண்டுமல்லவா?
வெட்கமே இல்லாமல்
மூடிய வாசலில் முன்னால்
இதயத்தை ஏந்தி
இத்தனைக் காலம் நான் நிற்பதேன்?


யாரையோ கேட்பது போல்
எனக்குள் நானே பேசிக்கொள்கிறேன்.
ஒரு மகுடம் போல் மவுனத்தை
எவ்வளவு காலம் நீ
சூட்டிக்கொண்டிருப்பாய்?
எனக்குத்தான் யாசிக்கும் வெட்கமில்லை
நீயாவது இல்லை என்று
மறுதலிப்பதின் துக்கத்தை
உணரக்கூடாதா?
மீண்டும் ஒருமுறை
நீ நீயாகவும்
நான் நானாகவுமா
இப்புவியில் பிறக்கப்போகிறோம்?
இவ்வளவு காதலை
அடை மழைக் காலம் சொல்லும்
அளவீடுகள்கூட அறிந்திருக்குமா?
நீயே சொல்.
நிறம் மாறவில்லை ஆனால்
வற்றிவிட்டது நான் சுமந்துவந்த மேகம்.
இந்தக் கடைசி மழைத்துளியை
உன் முள்ளின் மீது தெரிந்தே விடுகிறேன்.
உன் இதழ்களில்
கண்ணீர் துளிபோல் அரும்பும்
காலைப் பனித்துளி
என் மீது விழுந்து அதிலாவது 
ஐக்கியமாகட்டும் எனதுயிர்.
காத்திருந்த மல்லிகை
முல்லைக் கனகாம்பரங்கள் 
விட்ட சாபமோ என்னவோ?
இதுதான் இந்த இப்பிறவியில்
என் வீடுபேறு போலும்.


நன்றி https://www.hindutamil.in/

No comments: