உலகச் செய்திகள்

ஜோர்ஜ் பிளொயிட் கொலை வழக்கு; பொலிஸார் குற்றவாளியாக தீர்ப்பு

மியன்மாரில் ஜப்பான் செய்தியாளர் கைது

அமெரிக்காவில் கறுப்பின சிறுமி பொலிஸாரால் சுட்டுக் கொலை

சர்வதேச பயணங்களுக்கு தடுப்பூசி தேவையில்லை

இரத்தம் உறைவு சம்பவங்கள் குறித்து கூடுதல் விசாரணை

வெப்பவாயுவின் வெளியேற்றத்தை பாதியாகக் குறைக்க அமெ. திட்டம்

கிழக்கு ஜெரூசலத்தில் மோதல்: பலரும் காயம்


 ஜோர்ஜ் பிளொயிட் கொலை வழக்கு; பொலிஸார் குற்றவாளியாக தீர்ப்பு

அமெரிக்காவில் கறுப்பின ஆடவர் ஜோர்ஜ் பிளொயிட் கொல்லப்பட்டது தொடர்பில், முன்னாள் பொலிஸ் அதிகாரி டெரக் சொவின் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

12 பேர் கொண்ட நீதிபதிகள் குழு 24 மணி நேரத்துக்குள் அந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு மினியாபொலிஸ் நகரில் பொலிஸ் அதிகாரியாக இருந்த சொவின், கறுப்பின ஆடவர் பிளொயிட்டை கைது செய்தார். சுமார் 9 நிமிடங்களுக்கும் கூடுதலாக பிளொயிட்டின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தியதால் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

அந்தச் சம்பவத்தின் வீடியோ உலக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மூன்று குற்றச்சாட்டுகளில் சொவின் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தண்டனை குறித்து அறிவிக்கப்படும் வரை சொவின் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பல தசாப்தங்கள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக சொவின் மேன்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்த வழக்குக்குக் கிடைத்த அதீத ஊடக வெளிச்சம் அரசுத் தரப்பு நீதிபதிகள் குழு மீது தாக்கம் செலுத்தி இருக்கலாம் என்ற வாதத்தின் அடிப்படையில் டெரெக் சொவின் தரப்பில் மேல் முறையீடு செய்யப்படலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

இந்தத் தீர்ப்பை அடுத்து நீதிமன்றத்திற்கு வெளியில் கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கரகோசம் இட்டு மகிழ்ச்சியை வெளியிட்டனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் தீர்ப்பு வெளியானதும் ஜோர்ஜ் பிளொயிடின் குடும்பத்தினருடன் பேசினர்.   

“குறைந்தபட்சம் இப்போது கொஞ்சம் நீதி கிடைத்துள்ளது. நாங்கள் இன்னும் நிறைய செய்ய உள்ளோம். அமைப்பு ரீதியான இனவெறியைக் கையாள்வதில் இது முதல் அடியாக இருக்கும்” என்று ஜனாதிபதி பைடன் அவர்களிடம் கூறுவதைக் கேட்க முடிகிறது.

 நன்றி தினகரன் 




மியன்மாரில் ஜப்பான் செய்தியாளர் கைது

மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது செய்தியாளரை விடுவிக்கும்படி ஜப்பான் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜப்பானியச் செய்தியாளர் யூக்கி கிட்டாஸூமி, யங்கூனிலுள்ள அவரது இல்லத்தில் கடந்த ஞாயிறு இரவு மியன்மார் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாக அதை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கைகளைத் தூக்கியபடி காணப்பட்ட கிட்டாஸுமி, காரில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்ததாக, பி.பி.சி பர்மிஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அந்தக் கைது நடவடிக்கைக்கு விளக்கம் தருமாறு, மியன்மார் அதிகாரிகளைக் கேட்டிருப்பதாகத் தலைமை பாராளுமன்ற செயலாளர் கட்சுனோபு காடோ கூறினார்.

கிட்டாஸுமி மீது இன்னமும் முறையாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவில்லை.

இரவோடு இரவாக அவர், காவல்துறைக் கண்காணிப்பு நிலையத்திலிருந்து இன்சேனிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிறையிலுள்ள அவரைச் சென்று காண இராஜதந்திரிகள் அனுமதி கேட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் ஜப்பானியப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

ஏற்கனவே கிட்டாஸுமி, பெப்ரவரி மாதப் பிற்பகுதியில் குறுகிய காலத்துக்குத் தடுத்துவைக்கப்பட்டார்.   நன்றி தினகரன் 




அமெரிக்காவில் கறுப்பின சிறுமி பொலிஸாரால் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் 15 வயது கறுப்பின சிறுமி ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

அந்த மாநிலத் தலைநகரான கொலம்பஸில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மக்கியா பிரைன்ட் என்ற சிறுமியே கொல்லப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கத்திக்குத்து தாக்குதல் முயற்சி ஒன்று தொடர்பில் பொலிஸார் அழைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தம்மை பெண் ஒருவர் கத்தியால் குத்த முயற்சிப்பதாகவே பொலிஸாருக்கு அழைப்புக் கிடைத்துள்ளது.

அந்த சிறுமி அனாதை இல்லம் ஒன்றில் வசித்து வந்த நிலையில் அங்கு ஒருவருடன் அந்த சிறுமிக்கு மோதல் ஏற்பட்டதாக அவரது சித்தி என்று கூறிக்கொள்ளும் ஹாசெல் பிரியான்ட் என்பவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அப்போது அந்த சிறுமியே கத்தியை வைத்திருந்ததாகவும் அந்தக்கத்தியை கைவிட்ட பின்னரே பொலிஸார் பல முறைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 






சர்வதேச பயணங்களுக்கு தடுப்பூசி தேவையில்லை

சர்வதேச பயணம் மேற்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்று தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பின் சுயேச்சைக் குழு பரிந்துரைத்துள்ளது.

‘தடுப்பூசிக் கடப்பிதழ்’ குறித்து நிறுவனம் விவாதித்து வரும் வேளையில், தடுப்பூசிகளைப் பற்றிப் போதுமான தகவல்கள் இல்லை என்பதை அந்தக் குழு சுட்டிக்காட்டியது.

தடுப்பூசிகள், பரவலாக எல்லா நாடுகளுக்கும் கிடைக்கவில்லை. அடுத்ததாக, தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு மீண்டும் வைரஸ் தொற்றுமா, அவரால் மற்றவர்களுக்கு பாதிப்பு நேருமா என்பதும் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்பதைக் குழு சுட்டிக்காட்டியது.

பயணம் செய்வதற்குத் தடுப்பூசிச் சான்று வேண்டுமென வலியுறுத்துவது, ஏற்றத்தாழ்வை அதிகரித்து, சுதந்திரமான நடமாட்டத்தில் சமமற்ற நிலையை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பின் நெருக்கடிக்காலக் குழு தெரிவித்துள்ளது.

என்றாலும், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்று முக்கியம் என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொண்டனர்.

மீண்டும் பயணங்களை ஆரம்பிக்கும் வழிகள் குறித்து ஆராயப்படும் வேளையில், சில நாடுகள் மின்னிலக்கத் தடுப்பூசிச் சான்றிதழ்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. நன்றி தினகரன் 





இரத்தம் உறைவு சம்பவங்கள் குறித்து கூடுதல் விசாரணை

அஸ்ட்ராசெனெக்கா நிறுவனத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட சிலரிடம் இரத்தக் கட்டிகள் உருவாவது குறித்து, ஐரோப்பாவுக்கு வெளியிலுள்ள மக்களிடம் இருந்து கூடுதல் விபரங்கள் தேவை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

தடுப்பூசித் திட்டம் குறித்த, நிறுவனத்தின் உத்தியோபூர்வ ஆலோசனைக் குழு நிபுணர்கள் அதனைத் தெரிவித்தனர்.

அஸ்ட்ராசெனக்கா நிறுவனத் தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள், அதனால் ஏற்படக்கூடிய அபாயங்களை விட அதிகம் என்று அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

அந்தத் தடுப்பு மருந்தால், இரத்தக் கட்டி ஏற்படுவது ஓரளவு சாத்தியமே என்றபோதும் அது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்றனர் நிபுணர்கள்.

அத்தகைய பெரும்பாலான சம்பவங்கள், பிரிட்டனிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் மட்டுமே பதிவாகியுள்ளதை நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

ஏனைய நாடுகளில் அப்படிப்பட்ட சம்பவங்கள் மிகக் குறைவு.

150 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிரதேசங்களிலும் அந்தத் தடுப்புமருந்து பயன்படுத்தப்படுகிறது.

எனவே, ஐரோப்பிய நாடுகளுக்கு அப்பாற்பட்ட நாடுகளில் இருந்து கூடுதலான தகவல்கள் திரட்டப்பட்டு, அவை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்தினர்.   நன்றி தினகரன் 





வெப்பவாயுவின் வெளியேற்றத்தை பாதியாகக் குறைக்க அமெ. திட்டம்

அமெரிக்கா 2030க்குள் வெப்ப வாயு வெளியேற்றத்தைப் பாதியாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. பாரிஸ் பருவநிலை உடன்பாட்டின் ஓர் அங்கமாக அமெரிக்கா அந்தப் புதிய கடப்பாட்டை நிர்ணயித்துள்ளது.

பருவநிலை மாற்றம் தொடர்பாக இணையத்தில் நடத்தப்படும் இரண்டு நாள் கூட்டத்தில் உரையாற்றியபோது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அது பற்றி உறுதியளித்தார். உலகத் தலைவர்கள் பலரும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பருவநிலை மாற்ற நெருக்கடிக்குத் தீர்க்கமான முடிவு காண்பதில் நடப்புப் பத்தாண்டு முக்கியமானது என்று பைடன் கூறினார்.

ஆனால், அவர் வழங்கியிருக்கும் உறுதிமொழி, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலக்கை விடக் குறைவானது. 1990 இல் இருந்ததை விட 2035க்குள் நிலக்கரிப் பயன்பாட்டை 78 வீதம் குறைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. அதை விடவும் அமெரிக்காவின் இலக்கு குறைவானது.

வெப்ப வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சீனா புதிதாக எந்த உறுதிமொழியும் வழங்கவில்லை. ஆனால், 2025இலிருந்து நிலக்கரி பயன்படுத்துவதைக் குறைக்க அது உறுதியளித்துள்ளது.

ஜப்பான் 2030க்குள் தனது இலக்கை ஒரு மடங்கு கூட்டியுள்ளது.

2050க்குள் வெப்ப வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைக்கப் போவதாக ரஷ்யாவும் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 





கிழக்கு ஜெரூசலத்தில் மோதல்: பலரும் காயம்

தீவிர வலதுசாரி யூதச் செயற்பாட்டாளர்கள், பலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலிய பொலிஸாருக்கு இடையே கிழக்கு ஜெரூசலத்தில் இடம்பெறும் கடும் மோதல்களில் பலர் காயமடைந்துள்ளனர்.

அந்த நகரின் டமஸ்கஸ் வாயில் பகுதியில் கடந்த வியாழக்கிழமை மாலை ‘அரபிகள் ஒழிக’ என்று கோசமெழுப்பியடி வந்த நூற்றுக்கணக்காக தேசியவாத யூதர்கள் அங்கிருந்த பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

அதிர்ச்சி அளிக்கக்கூடிய கையெறி குண்டுகள், கண்ணீர் புகைப்பிரயோகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பயன்படுத்திய இஸ்ரேலிய பொலிஸார் இந்த இரு தரப்பினரையும் விலக்கி வைக்க முயன்றனர். இதன்போது பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறைகளில் குறைந்தது 100 பலஸ்தீனர்கள் காயமடைந்ததாகவும் 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி ஏற்பட்டதாகவும் பலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

டமஸ்கஸ் வாயிலுக்கு வெளியே வழக்கமாக இடம்பெறும் தமது ரமழான் மாத ஒன்றுகூடலை பொலிஸார் தடுக்க முயன்றதாக பலஸ்தீனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

‘அனைத்து வகையான வன்முறை மற்றும் கலகங்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று இஸ்ரேலிய பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினையின் மையப்புள்ளிகளில் ஒன்றாக ஜெரூசலத்தின் உரிமை பற்றிய விவகாரம் நீடித்து வருகிறது. இந்த நகரில் குறிப்பாக கிழக்கு ஜெரூசத்தில் யூத, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய புனிதத் தலங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 






No comments: