அந்தணராய் பிறந்த சிந்தனையாளர் உமாபதி சிவாச்சாரியார்


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா

 

      உமாபதி சிவாச்சாரியார் என்றதும் நினைவுக்கு வருவது   " திருவருட்பயன் " என்னும்


உயரிய நூலாகும். அவரால் பல நூல்கள் ஆக்கப்பட்டாலும் என் நினைவில் பதிந்திருப்பது " திருவருட்பயன் " என்றே சொல்லுவேன். உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத நல்லதொரு பாடத்திட்ட அமைப்பு இலங்கை
 யில்த்தான் இருக்கிறது. அதாவது சமயபாடம் பாடத்திட்டத்தில் இணைந்திருப்பதேயாகும். இந்தியா சமயங்கள் பிறந்த இடமென்றும் ,வேதங்கள் தோன்றிய இடமென்றும்அருளாளர்கள் பலர் அவதரித்த இடமென்றும் திரு முறைகள் எழுந்த இடமென்றும் திரும்பிய பக்கமெலாம் ஆலயங்கள் அமைந்திருக்கும் இடமென்றும் விதந்து போற்ற ப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் அந்த நாட்டில் சமயம் பாடசாலைகளில் பாடமாகக் கற்பிக்கப் படுவதில்லை. அதனால் அங்கு கற்கின்ற மாணவர்களுக்கு திருமுறைகளோ அல்லது உமாபதி சிவாச்சாரியார் போன்ற தத்துவ வித்தகர் களையோ அறியும் வாய்ப்பு என்பது இல்லை என்றே சொல்லலாம். ஆனால் இலங்கையில் இருக்கின்ற தமிழ்ப் பிள்ளைகளுக்கு குறிப்பாகச் சைவப்பிள்ளைகளுக்கு சைவசமயத்தைப் பற்றிய பல விஷயங்கள் சிறிய வகுப்பிலிருந்தே ஊட்டப்படுகிறது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

  உமாபதி சிவாச்சாரியரைப் பற்றி எழுதவந்து விட்டு என்ன கதையா சொல்லுகிறீர்கள்


என்று எண்ணிவிடாதீர்கள். கதையல்ல கருத்துட ன்தான் பயணிக்கிறேன். க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு சைவசமய பாடம் முக்கியமானதாகும். அந்தப் பாடத்தில் " திருவருட்பயன் " என்பது கட்டாயம்
 படிக்கவேண் டிய நிலை இருந்தது. 1963 ஆம் ஆண்டில் நான் க.பொ. த. சாதாரண வகுப்பில் படிக்கும் பொழுது திருவருட்பயன் என்னும் பெயரினைக் கேட்டாலே கணக்கும் பாடத்தைவிட கசக்கும் நிலை காணப்பட்டது. காரணம் திருவருட்பயனில் நூறு குறட்பாக்கள் இருக்கும்.அத்தனையும்

பாடமாக்கி வகுப்பில் ஒப்புவிக்க வேண்டும்.பாடமாக்குவது என்பதுதான் வேம்பங்காய் சாப்பிடுவதற்கு ஒப்பாகும். சமய பாடம் வந்ததும் அதற்கான ஆசிரியர் வருவார். வந்தவுடன் கேட்கும் கேள்வி திருவருட்பயன் பாடமாக்காதவர்கள் எல்லாம் முழங்காலில் நில்லு


என்பதாகும். ஆசிரியர் பிரம்புடன் வருவார். உனக்கு எத்தனை பாட்டுக்குள் தெரியும் என்று கேட்பார். அவர் கேட்கும் பாட்டினைச் சொல்லாவிட்டால் அதாவது அவர் ஐம்பதாவது பாட்டைக் கேட்டால் அதனைச் சொல்லாவிட்டால் விரல்களின் மொளியில் ஐம்பது முறை ஓங்கி அடிப்பார். முழங்காலில் இருந்து வாய்விட்டுக் கத்துவர் அனைவரும். அவரோ அடுத்த நாள் பாடமாக்கி வருமாறு கடுமையான தொனியில் கூறிவிட்டு போலீஸ்காரர் போல கதிரையில் அமர்ந்து விடுவார்.
 சிலமாணவர் தப்புவதற்காக தொண்ணூறாவது பாட்டைச் சொல்லிவிடுவர். உடனே அவர் எண்பதாவது பாட்டைக் கேட்பார் அப்போது மாணவர் விழிப்பார். பிரம்பு தனது கடமையைச் செய்யும். அந்த ஆசிரியப் பெருந்தகையை நான் இன்றும் உள்ளத்தில் வைத்துப் போற்றி மகிழ்கின்றேன். காரணம் அவரின் அடிக்குப் பயந்து " திருவருட்பயன் " நூறு குறட் பாக்களையும் இளம் வயதில் அர்த்தம் விளங்காமல் பாடமாக்கினேன். அர்த்தம் புரிந்த பின்தான் அதன் அவசியமும் ஆழமும் தெரிந்தது. வில்லங்ககமாய் பாடமாக்கிய அந்த அரும் பெரும் பொக்கிஷம் சைவைத்தின் அத்தனை தத்துவங்களையும் சுருங்கச் சொல்லி விளங்கவைத்திருக்கிறது என்பதை இப்பொழு துதான் உணர்ந்து கொண்டிருகிறேன் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

  சமயபாடத்தில் சந்தான குரவர் பற்றி ஆசிரியர் பாடம் நடத்துவார். ஒன்றுமே விளங்காது. அகச்சந்தான குரவர் என்றும் புறச்சந்தான குரவர் என்றும் ..... அவர் பாடம் நடத்துவார் ஒன்றுமே தலைக்குள் புகுந்துவிட மாட்டாது. திரும்பக் கேட்டால் அடிப்பார் என்ற பயம். இப்படியே பயபக்தியுடன் சமயம் கற்றேன். அதனால் இன்று பயபக்தி என்னிடம் நிறையவே வந்திருக்கிறது எனலாம்.

   சைவசமயத்தில் அன்பு நெறி பக்தி நெறி என்று இரண்டு நெறிகள் இருக்கின்றன. பக்தி நெறியில் நின்றவர்களை நாயன்மார்கள் என்கிறோம். அன்பு நெறியினை வளர்த்தவர்களை சந்தான குரவர்கள் என்கிறோம். சந்தான குரவர்களை அகச் சந்தான குரவர்புறச் சந்தான குரவர் என்று அழைக்கின்றோம். திருநந்தி தேவரை பரம்பரையாகக் கொண்டு திருக்கைலாயத்திலிரு ந்து தொடங்கும் பரம்பரையினையே அகச்சந்தான குரவர் என்கி றோம்.அந்த பரம்பரையில் திருநந்தி தேவர்சனற்குமாரர்சத்திய ஞான தரிசினிகள்பரஞ் சோதியார் ஆகியோர் வருகிறார்கள்.இந்தப் பரம்பரைக்கு குருவாக இருப்பவர் திருநந்தி தேவராவார்.

  பரஞ்சோதியாரைக் குருவாய்க் கொண்டு அடுத்துவரும் சீடர்களாய் - மெய்கண்ட தேவர்அருணந்தி சிவாச்சாரியார்மறைஞான சம்பந்தர் உமாபதி சிவாச்சாரியார் வந்து அமைகிறார்கள். இந்தப் பரம்பரையி னையே புறச்சந்தான குரவர் என்று சைவம் போற்றுகிறது எனலாம். கணித வாய்ப்பாடு போல் தெரிகிறதா இதனை பதின் மூன்று பதினா ன்கு வயதில் சொன்னால் எப்படி மனதில் பதியும் ! விளக்கம்தான் வந்திடுமா ஆனால் பாடமாக்கினேன்.ஆசிரியருக்குப் பயந்து. ஆனால் அது பிற்காலத்தில் பல விளங்களுக்கு விடையாகியது.

  பதினெட்டாம் நூற்றாண்டு முதல் மெய்கண்டான சந்தான பரம் பரையானது தமிழ்நாட்டில் தோற்றம் பெறுகிறது என்பதை அறி கிறோம். நந்தியெம் பெருமானுக்கு திருக்கைலாயத்தில் எம் பெரு மான் சிவனால் சைவசித்தாந்தம் போதிக்கப்பட  நந்தியெம் பெரு மானினால் சந்தான குரவர்களுக்கு வழங்கப்பட்டு மெய்கண்ட ஞான பரம்பரை வழியாக சைவசித்தாத்தம் வெளிச்சமாய் வெளிப்படுகிறது எனலாம்.

  சைவசித்தாந்த கருத்தினை சிறப்பாய் வழங்கும் பணியினைத் தலைமேற் கொண்டு உமாபதி சிவாச்சாரியார் என்னும் தில்லைவாழ் அந்தணர் புறப்பட்டார் என்னும் அருங்கருத்தைப் பின்னாளில்த்தான் நான் உணர்ந்து கொண்டேன். அவ்வாறு உணர்வதற்கு இளமையில் விரும்பமின்றி சமய பாடத்தில் நான் கற்ற திருவருட்பயனே மூல காரணமாகும். திருவருட்பயன் மட்டுமல்லாது - சிவப்பிரகாசம்வினாவெண்பாபோற்றிப்பஃறொடைகொடிக்கவிநெஞ்சுவிடுதூதுஉண்மை நெறி விளக்கம்சங்கற்ப நிராகரணம்ஆகிய நூல்களையும் ஆக்கி அளித்தார் எனலாம். இந்த நூல்களை சைவசிந்த்தாத்த அட்டகம் என்று சைவர்கள் போற்றிப் படிக்கிறார்கள் என்பது மனங் கொள்ளத்தக்கதாகும்.

    " தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் " என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளால் போற்றப்பட்ட தில்லைநகர்வாழ் அந்தணர் பரம்பரையில் வந்த சித்தாந்த வித்தகர்சிவனருள் பெற்ற சிவாச்சாரியார் உமாபதியார் ஆவார். தில்லைத் தலத்திலே சிவனு க்குப் பூஜை செய்யும் அந்தணப் பெருமகனாய் விளங்கினார்  இவர்.சம்பு தீட்சிதர் கெளரி அம்மையார் தம்பதிகளுக்கு பதிமூன் றாம் நூற்றாண்டில் இவர் பிறக்கின்றார்.வேதங்களை ஐயந்திரிபறக் கற்கின்றார். வடமொழி தென்மொழிகளில் பாண்டித்தியமும் பெறுகின்றார்.

அக்கால மரபுப்படி பதினாறாம் வயதிலேயே இல்லறத்தில் இணை ந்தும் விடுகிறார். தில்லைக்கூத்தனுக்குப் பணியாற்றுவதில் அவரின் கவனம் அமைகிறது எனலாம்.

  பூஜையில் கவனம் இருந்தாலும் நூல்களையும் அதன் வழி நிற்ற லையும் அவர் மனம் மறந்துவிடவே இல்லை. அக்காலத்தில் வட மொழியில் அமைந்த புட்கர ஆகமத்துக்கு - வட மொழியிலேயே விருத்தியுரையினைச் செய்தார். அத்துடன் சிவபரத்துவமான கருத்துக்களோடு ஶ்ரீநடராஜ ஆலய அமைப்பைப் புலப்படுத்துகின்ற               " குஞ்சிதாங்கிரி ஸ்தவம் " என்னும் வட மொழி ஸ்தோத்திர நூலினையும் ஆக்குகின்றார்.

    " பட்டகட்டையிற் பகற்குருடு போகிறது " என்று சமய பாட ஆசியர் கூறியதும் அதுபற்றிய கதையினைச் சுவையாகச் செல்லியதும் நினைவில் பதிந்துபோய் இருக்கிறது. ஆனால் அப்போது கதையா கவே மனதில் பதிந்தது. இப்போது அதன் உள்ளர்த்தமும் வாழ்க்கைத் தத்துவமும் உணர்வில் கலக்கிறது எனலாம். பட்டகட்டையிற் பகற் குருடு போகிறது என்னும் பழிப்பும் இழிப்பும் கிடைத்தது யாருக்குத் தெரியுமா சிந்தாந்த அட்டகத்தை சைவ உலகுக்கு அளித்திட்ட சிவாச்சாரியப் பெருமகன் உமாபதி அவர்களுக்கே !

  கல்வி கேள்விகளால் சிறந்து விளங்கிய உமாபதி சிவாச்சாரியார் குடை கொடி ஆலவட்டம்பந்தங்கள் சூழ பல்லக்கில் வீதியால் சென்று கொண்டிருந்தார்.சந்தான குரவர்களில் மூன்றாவதாய் இருக் கும் மறைஞான சம்பந்தரே பல்லக்குப் பவனியில் வந்த உமாபதி சிவாசாரியாரை விளிக்கின்றார். திருவருள் ஆட்கொள்ளும் பாங்கு பலவிதத்தில் பலருக்கு அமையும். மணிவாசகருக்கு மரநிழலில் வாய்த்தது. சம்பந்தருக்கு திருமணத்தில் வாய்த்தது. சுந்தரருக்கும் அவ்வாறே. எங்கள் யோகர் சுவாமிகளுக்கு நல்லூரான் தேரடியில் வாய்த்தது. உமாபதி சிவாச்சாரியாருக்கோ பல்லக்குப் பவனியில் வந்தமைந்தது.

    இவரைப் பழித்த மறையானசம்பர் இவரின் மடைமற்றத்துக்கு வித்தானார். அத்துடன் அவரின் குருவாயும் ஆகிவிட்டார். சிவ ஞானத்தைத் தேக்கி வைத்திருந்த மறைஞானசம்பந்தர் உமாபதி சிவாச்சாரியருக்கு அதனை உணர்த்தினார். உணர்த்தினார் என்றால் பல சோதனைகளுக்கு பின்னே கொடுத்தார் எனலாம். மறைஞான சம்பந்தருக்குப் பின்னே உமாபதியார் சுற்றியபடியே இருந்தார். ஒரு நாள் நெசவுத் தொழில் செய்வார் தெரிவில் மறைஞாசம்பந்தர் சென்று கொண்டிருக்கிறார்.  திடீரென மறைஞானசம்பந்தர் நெசவுக் காரரிடம் அவர்களின் கஞ்சியை வாங்கிக் குடிக்கின்றார். குடிக்கும் வேளை அவரின் புறங்கை வழியாக வழிந்த கஞ்சியை பக்தி சிரத் தையுடன் பின்னே தொடர்ந்து வந்த உமாபதியார் திருவருட் பிரசாதாமாய் கருதி அருந்தினார். குருவின் அருள் உமாபதியாருக்கு வாய்த்தது அவ்வேளை எனலாம்இவரின் இச்செயல் தில்லைவாழ் அந்தணர்களுக்கு நெருப்பாய் சுட்டது எனலாம். அந்தணகுலத்தவர் அல்லாதவருடன்  அந்தண குலத்தவரான அதுவும் தில்லைவாழ் அந்தணகுலத்தவர் இவ்வாறு நடந்தமையை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆகிவிடவே - உமாபதி சிவாச்சாரியரை தில்லை வாழ் அந்தணர்கள் விலத்தி வைத்தார்கள். அவர் பூஜை செய்வதற்கும் தங்கள் அக்கிரகாரத்துள் வசிப்பபதற்கு தடைவிதித்தா ர்கள்.

 

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்

மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவுக்கே பிச்சி யானாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்

தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

 

என்று நாவுக்கரசர் காட்டிய நிலையில் உமாபதி சிவாச்சாரியார் வந்து நின்றார். குருவினது திருவருள் அவருள்ளத்தில் அமர்ந்த காரணத்தால் சைவசிந்தாந்தக் கருத்துகள் பல நூல்களாய் வெளிவந்தன. சிந்தாந்த அட்டகம் அவரின் சிந்தையினால் சைவ உலகத்துப் பெரும் பொக்கிஷமாய் வந்தது சேர்ந்தது எனலாம்.

  தில்லை அந்தணர்கள் அவரை தீண்டத் தகாதவர் என்று ஒதுக்கினா  ர்கள். ஆனால் அவரோ அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் தன் பாதையை மாற்றி - தில்லைக்குப் பக்கத்திலே இருக் கும் கொற்றவன் குடியினைத் தேர்ந்தெடுத்து அங்கு திருமடம் ஒன்றி னை நிறுவி சைவ சிந்தாந்தக் கருத்துக்களை யாவருக்கும் பரப்பும் வகையில் செயற்பட்டு நின்றார். உமாபதி சிவாசாரியாரிடம் பயின்ற மாணவர்களினால்  " கொற்றவன் குடி உமாபதி சிவம் மடம் " நிறுவ ப்பட்டது. இம்மடம் சிதம்பரத்தின் கிழக்கே அண்ணாமலை நகர் செல் லும் வழியில் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

  அந்தணர் அல்லாதவர் தொடர்பை ஏற்படுத்தியதால் ஒதுக்கப்பட்ட உமாபதி சிவாச்சாரியாரின் உண்மைத் தன்மையைபக்தியை ,யாவரு க்கும் உணர்த்திட எம்பெருமான் தில்லைக்கூத்தன் திருவிளையா டல் ஒன்றை நடத்திக் காட்டினார்.தில்லையில் மகோற்சவ தொடக்க நாள் கொடியேற்ற சிவாச்சாரியார் வந்து நிற்கிறார். பல சிவாச்சாரி யார்கள் வேதங்களை முழங்குகிறார்கள். ஆனால் கொடிச் சீலை மட்டும் கொடிமரத்தில் ஏற மறுக்கிறது. தில்லைவாழ் அந்தணர் களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவ் வேளை இறை வனது குரலாய் விண்ணின்றும் வந்ததது ஒரு திருக்கட்டளை.                  " உமாபதி வந்தால் கொடியேறும் " என்பதே அக்கட்டளை !

ஒதுக்கியவர்கள் ஓடினார்கள் ! உமாபதி சிவாச்சாரியாரை நாடி னார்கள் ! திருக்கட்டளையினைச் செப்பினார்கள். ! மன்னிக்குமாறு மன்றாடினார்கள் ! உமாபதி சிவாச்சாரியாரை தில்லைக்குத் தக்க மரியாதைகளுடன் அழைத்து வந்தார்கள். அவரும் ஆலயத்தின் கொடி மரத்தருகில் வந்து - ஐந்து பாடல்களைப் பாடினார். இப்பா டல்களே " கொடிக்கவி " என்று அழைக்கப்படுகிறது. பாடல் பாடிய வுடன் ஏறாத கொடிச்சீலை ஏறியது .

 

       " அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

        செந்தண்மை பூண்டொழுக லான் " 

 

 என்னும் வள்ளுவப் பெருந்தகையின் கருத்தினை மனத்தில் பதித்து உமாபதி சிவாச்சாரியார்  வாழ்ந்தார் என்று அறிஞர்கள் விதந்துரைக் கின்றார்கள்.  

  அந்தணர் குலத்தில் அதுவும் தில்லைவாழ் அந்தணகுலத்தில் பிறந்தவர் ஆசாரத்தைத் தலைமேற் கொள்ளும் அக்காலத்திலேயே அந்தணர் அல்லாதவரைக் குருவாய்க் கொள்ளுகின்றார். அவர் உண்ட எச்சிலை உண்ணுகின்றார். பெற்றான் சாம்பான் என்னும் தாழ்ந்த ஜாதிக் காரனுக்குத் முத்தியும் வழங்குகின்றார். இந்த நிலை யினை நோக்கும் பொழுது உமாபதி சிவாச்சாரியாரின் முற்போக்குச் சிந்தனையும் , புரட்சியும் புலனாகி நிற்கிறதல்லவா ?

 உமாபதி சிவாச்சாரியாரைப் பற்றிச் சிந்திக்கும் வேளை அவர் அன்பு வழியில் பயணிப்பவராகவும், சமுதாய நோக்கிலோ பார்ப்பவராக வுமே இருந்திருக்கிறார் என்று அறிய முடிகிறது. அவர் தனது மாணாக்கர்களுக்கு சைவ சித்தாந்தத்தை விரித்துரைக்கும் வகை யிலே பக்தி இயக்கத்துடன் சங்கமிக்கும் ஒருவராய் மலர்கிறார் என் பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.சைவசித்தாந்த தத்துவ மானது ஒருவகையில் சைவ பக்தியியக்கத்தின் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் கொள்ளப்படுகிறது என்பதும் கருத்திருத்த வேண்டி யதேயாகும்.உமாபதி சிவாச்சாரியாரினால் எழுதப்பட்ட - சேக்கிழார் நாயனார் புராணம் , திருமுறை கண்ட புராணம் ஆகிய நூல்கள் சைவபக்தி இயக்க நிலைகளைக் காட்டுதற்கு அரணாக இருக்கின்றன என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

  தத்துவ வித்தகராய் விளங்கிய உமாபதி சிவாச்சாரியார் - புதுமைக் கருத்துக்கள் கொண்ட இலக்கியப் படைப்பாளராயும் விளங்கி இருக் கிறார் என்பதை அவரின் கூற்றின் வாயிலாகவே அறிந்திட முடிகி றது.இவரால் ஆக்கப்பட்ட " சிவப்பிரகாசம் " என்னும் நூலில்

 

" தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா இன்று

  தோன்றிய நூல் எனும் எவையும் தீ தாகா " ( 12 ஆம் பாடல் )

 

இதன்படி - ' தொன்மையானவை என்பதற்காக எல்லாவற்றையும் நன்று எனக் கொண்டு ஏற்கவேண்டியதில்லை. இன்று புதிதாகத் தோன்றியவை என்பதற்காக எல்லாவற்றையும் தீதென்று ஒதுக்கித் தள்ள வேண்டியதுமில்லை' என்பதுதான் இதன் பொருளாய் அமை கிறது. அக்காலத்திலே இவ்வாறான ஒரு சிந்தனையினை உமாபதி சிவாச்சாரியார் வெளிப்படுத்தினார் என்றால் அவரின் முற்போக்கு நிலை தெள்ளிதிற் புலப்பட்டு நிற்கிறதல்லவா !

 உமாபதி சிவாச்சாரியார் என்பவரை சிந்தாந்த அட்டகம் தந்தவர் என்று எடுத்து நோக்குவதைவிட சிறந்த சிந்தனைமிக்க அந்தணராய் மிளிர்ந்தார் என்னும் பாங்கில் நோக்குதலே மிகவும் சிறந்ததென்று கருதுகின்றேன்.அவரை ஒதுக்கிய தில்லைவாழ் அந்தணர்களே அவரை மீண்டும் கெளரவம் கொடுத்து அணைத்துக் கொள்ளுகிறார் கள். உமாபதி சிவாச்சாரியாரின் சமய, சமூக, தத்துவ , பேராளுமை தான் அவரை இன்றுவரை நினைப்பதற்கும் அவரைக் குருவாய் எண்ணி குருபூஜை செய்வதற்கும் வழி சமைத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம்.

 

  " சீராண்ட தில்லை நகர் உமாபதியார்

    செம்பதுமத் திருத்தாள் போற்றி "
சந்தானகுரவர்கள்                                     உமாபதி சிவாச்சாரியார் 

No comments: