வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவு அஞ்சலி


   ……. பல்வைத்திய கலாநிதி; பாரதி இளமுருகனார்



சீவன்முத்தராகத் திருத்தக வாழ்ந்த வைத்தீசுவரக்குருக்கள ‘அண்டமெலாம் அருள்விரிக்கும் அந்தி வண்ணன் அருட்சோதி தனிற்கலந்தார் தெய்வந்; தானே’ என்று நான் அவரின் பிரிவை ஆற்றாது யாத்த கவிதைகளிலே அவர் ஒரு சீவன்முத்தராகவே வாழ்ந்து பிறவாப் பேரின்னமுற்றார் என்பதைக் குறிக்கும் இறுதிக்கட்ட நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன். சித்தர்கள் தாங்கள் சமாதி அடையும் கால நேரத்தை முன்கூட்டியே தங்களின் சீடர்களுக்கு அறிவிப்பதைப் போலவே வைத்தீசுவரக்குருக்கள் ஐயா அவர்களும் செயற்பட்டவிதம் அவரை ஓர் சீவன்முத்தரெனவே கொள்ளவேண்டியுள்ளது. குருக்கள் ஐயா அவர்கள் முத்தியடைந்த ஆறாவது நினைவு ஆண்டிலே அந்தக் கவிதைகளை வாசகர்களுடன் பகிர்வதிலே மகிழ்வடைகிறேன்.

 

நிலைக்காத உடல்நீத்து ஆவி பிரியுமுன்.

  நினைந்துருகி வழிபடுந்தன் கூத்த னாரின்

கலைக்கோலக் குடமுழுக்குக் காட்சி காணக்

  காததூரம் பலசெல்ல விழைந்த குருக்களை

அலைக்காது அன்றிரவு அதிசய மாயவர்

  அறையிருந்தே முழுநிகழ்வைப் பார்த்தின் புறவே

தொலைக்காட்சி ஒலிபரப்புச் செய்த தென்றால்

  சுந்தரேசப் பெருமானருள் சொல்லப் போமோ?.

 

உற்றநண்பன் இளமுருகன் உவந்தே யாத்த

  ஒப்பரிய சிதம்பரபு ராணத் திற்குக்

கற்றறிந்த புலவோரும் நாணா நிற்கக்

  கலைமகளின் அருள்பெற்று உரைவி ரித்த

பொற்புமிகு பரமேசுவரி அம்மை யாரின்

  புகலரிய நல்வாழ்க்கைச் சரிதம் எழுதி

அற்புதத்தல புராணமதிற் சேர்க்கத் தாரீர்

  அவசரமிது” எனவெனக்குப் பணித்தவ ரெங்கே?

 

 

இறுதிநாள்களில் இப்படியோர் விருப்பந் தோன்ற             

  எனக்குத்தொலை பேசியிலே அன்பாய்ப் பேசி

மறதியென்ற பேச்சிற்கே இடந்தரா(து) என்தாய்

  மாணவியாய் இருந்திட்ட காலத் திலவர்

திறமைகண்டு அவரின்ஆ சிரியர் எழுதிய

  சீர்பாடும் செய்தித்தாள் தேடி யெடுத்து

இறப்பெய்த முன்னாள்வி யாழ னன்று

  எனக்கனுப்ப விழைந்தமனம் சென்ற தெங்கே?

 

 

பேரிரைச்சற் சுழற்காற்றோ கந்தரோ டையிற்

  பெருவேக மாய்வீசப் பிள்ளைகள் பயந்து

ஐயையோ” இந்தச்சா மத்திலிப் படியா

  அஞ்சுகிறோம்! ‘ஐயையோ’ எனக்குருக் களையா

பொய்யிற்கும் அப்படிச்சொல் லாதீர் நீவிர்

  புலனடக்கிச் “சிவசிவ”வென் றோதுவீர்” என்றபின்

மெய்யாக ஈரைந்து நிமிடத் திற்குள்

  வித்தகனார் பூத்தேரிச் சென்ற தெங்கே?

 

அகவைதொண் ணூற்றொன்பதை அடைந்த போதும்

  ஐயாவின் சிந்தைமிகத் தெளிந்த நிலையில்

பகலிரவாயச் ‘சிவசிவ’வென் றோதி இறுதிப்

  பாலருந்தத் தரச்சொல்லிப் பருகும் போது

சுகமாகத் தான்யோகர் சுவாமி யோடு

  சோதிநிலை கண்டுற்றேன் அஞ்சற் க’வென்று

தவமாகப் பெற்றிட்ட பிள்ளைகட் காறுதல்

  தயவாகக் கூறியபின் சோதியிற் கலந்தார்.

 

செந்தண்மை பூண்டொழுகி வாழ்ந்த செம்மல்

  திருப்பொலியும் வைத்தீஸ்வரக் குருக்க ளாரை

பந்தமறுத்(து) ஆட்கொள்ள உகந்த வேளை

  பார்த்திருந்த அந்திவண்ணன் அருள்நோக் கதனால்

அந்தகனை ஏவாது வாயு தேவன்

  அலங்காரத் தேரேற்றி அழைக்கப் பணிக்க

விந்தையிது “சிவசிவ” வென் றோதிய வண்ணம்

  விருப்பொடுசிவன் விரைமலர்த்தாள் அடைந்தா ரன்றோ?

 

  

கண்டவுடன் எழுந்திருகை கூப்பும் பண்பு!

  காதலொடு இன்சொல்லே உகுக்கும் கேண்மை!

கொண்டஞான முதிர்ச்சிதனைக் காட்டும் பார்வை!

  கோடிகொடுத் துங்காணா அன்பு நெஞ்சம்!

தொண்டராகிப் பலபணிகள் செய்யும் பெற்றி!

  தொண் ணூற்று ஒன்பதிலும் தொடர்ந்த தம்மா!

அண்டமெலாம் அருள்விரிக்கும் அந்தி வண்ணன்

  அருட்சோதி தனிற்கலந்தார் தெய்வம் தானே!

 

 

 

 



பண்டிதர் - கலாநிதி - வைத்தீசுவரக் குருக்கள் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு-----

 திருஉத்தரகோசமங்கையிலிருந்து காரைநகருக்கு அழைத்து வரப்பெற்றவர் அந்தணர் பரம்பரையில் உதித்த கணபதீசுவரக் குருக்கள் ஆவர். கணபதீசுவரக்குருக்கள் - சிவயோக

சுந்தராம்பாள் தம்பதியினருக்கு மூன்றாவது புதல்வராக 22.09.1916 அன்று திண்ணபுரம் என்னும் ஆன்மீக வளம் மிகுந்த சிவபூமியில் வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் பிறந்தார்.

கல்வி:- இவர் தமது ஆரம்பக் கல்வியைக் காரைநகர் வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலையிலும் - இடைநிலைக் கல்வியைக் காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையிலும் - ஆங்கிலக் கல்வியைக் காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் அளவெட்டி அருணோதயாக் கல்லூரியிலே கல்வி கற்றுச் சிரேட்ட பாடசாலைத் தராதரப் பரீட்சையில் சித்தியடைந்தார். சுன்னாகம் பிராசீன பாடசாலையில் வடமொழியும் தமிழும் கற்று வடமொழியில் பிரவேச பண்டிதர் பரீட்சையிலும் தமிழில் பாலபண்டிதர் பரீட்சையிலும் சித்தியடைந்தார். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் மாணவனாகிய வித்தகர் ச. கந்தையாபிள்ளையிடம் சைவசித்தாந்தம் கற்றார். மகாவித்துவான் சி. கணேசையரிடம் தமிழ் இலக்கணத்தை முறையாகக் பயின்றார். 1939 ஆம் ஆண்டு பண்டிதர் பரீட்சையிலும் சித்தியடைந்தார். 1939 ஆம் ஆண்டில் பரமேசுவரா ஆசிரியர் கலாசாலையிலே கற்றுப் பயிற்றப்பட்ட ஆசிரியரானார். முன்னாள் ஆட்சிமன்ற உறுப்பினர் அ. நடேசபிள்ளை அவர்களிடம் தர்க்க சாத்திரமும் கற்றார்.

இல்லறவாழ்க்கை:  சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த பிரம்மசிறீ ச. சிவராமலிங்கஐயர் - ஞானாம்பிகை தம்பதிகளின் மூத்த மகள் சிவயோகசுந்தராம்பாளைக் கைத்தலம்பற்றிச் செம்மை வாழ்க்கையை அறவழி இயற்றினார். வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள்    சச்சிதானந்த சர்மா - இராணி - இராசம் ஆகிய மும்மணிகளுடன் இன்பத்திலே திழைத்து இல்வாழ்க்கையில் நிறைவு பெற்றார்.

ஆசிரியப்பணி:   1940 ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்தாக் கல்லூரியில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். பணியாற்றிய காலத்தில் கொழும்பு விவேகானந்த சபையால் நடத்தப்பட்டு வந்த அகில இலங்கைச் சைவசமய பாடப் பரீட்சைக் குழுவில் அங்கம் வகித்துச் சேவை செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளுக்கு அறிவுரை வழங்கி வந்தார். நாட்டின் பல்வேறு பாகங்களிலும் ஆசிரியப் பணியாற்றி வட்டுக்கோட்டை துணைவி அ. மி. த. க. பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றி 1971ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

சமயப்பணி:   தவத்திரு யோகர் சுவாமிகளின் ஆசியுடன் 01.01.1940 ஆம் ஆண்டு காரைநகர் மணிவாசகர் சபையை குருக்கள் ஐயா நிறுவினார். மணிவாசகர் சபை மார்கழி மாத திருவெம்பாவைக் காலத்தில் 1955ஆம் ஆண்டு முதல் மணிவாசகர் விழாவினை நடத்தி வருவதற்கும் - மணிவாசகர் விழாவில் எமது நாட்டிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் சைவத் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு சமயச் சொற்பொழிவாற்றி வருவதற்கும் சிவசிறீ வைத்தீசுவரக்குருக்கள் மணிவாசகர் சபையோடு இணைந்து இறுதிவரை பெரும் பணியாற்றி வந்துள்ளார்.

தமிழ்பணி:    1960ஆம் ஆண்டு காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தினை நிறுவினார்.   இதன்மூலம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தமிழ்மொழி மாதிரி வினாக்கள் அடங்கிய பத்திரங்களை வெளியிட்டு மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக் கொள்வதற்கு உதவினார். தமிழ் இலக்கிய விளக்கம் - மதிப்பீட்டுப் பயிற்சிகள் - கட்டுரைக்கோவை முதலிய நூல்களையும் வெளியிட்டு மாணவர்களின் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலினார்.;. திண்ணபுரத்திற்கு அருகாமையில் சடையாளி என்ற இடத்தில்  மணிவாசகர் சனசமூகநிலையம்| அமைவதற்கு மூலகர்த்தாவாக இருந்துள்ளார்.

இவராற் பதிப்பிக்கப்பெற்ற நூல்கள்:

இவர் புட்கலை சமேத ஐயனார் வரலாற்றைக் கூறும்  ‘ஆண்டிகேணி ஐயனார் புராணம்| என்னும் நூலை வட்டுக்கோட்டைப் பண்டிதர் க. மயில்வாகனனார் மூலம் இயற்றுவித்ததுடன் சைவப்புலவர் சு. செல்லத்துரை அவர்களைக்கொண்டு அதற்கு உரையும் எழுதுவித்து வெளியீடு செய்தார். காரைநர் கார்த்திகேயப் புலவரால் ஆக்கப்பெற்ற சேத்திரத் திருவெண்பா - அருள்நெறித் திரட்டு - திக்கரையந்தாதி -திருவெழு கூற்றிருக்கை - தன்னை அந்தாதி - திருப்போசை வெண்பா -  நாவலர் பிள்ளைத் தமிழ் - கட்டுரைக் கோவை போன்ற நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டார்.  பதிப்பாசிரியப்; பணிக்கு மகுடம் வைத்தாற் போன்று நவாலி ஊர் புலவர்மணி இளமுருகனார் அருளிய ஒப்பற்ற தல புராணமாகிய ‘ஈழத்துச் சிதம்பர புராணம்’என்ற நூலைப்   பதிப்பித்தமையே!.

இவரது ஆக்கங்கள்: தொடர் மொழிக்கு ஒரு சொல் -எதிர்சொற்கோவை பா-ரத இதிகாசத்தில் வரும் பாத்திரங்களின் குணவியல்பு - காரைநகரில் சைவசமய வளர்ச்சி -உரைநடையாக்கம் - மதிப்பீட்டுப் பயிற்சிக்கோவை - தமிழ் மொழி (கா.பொ.த. சாதாரண வகுப்பிற்குரியது) ஆகிய நூல்களை வெளியிட்டமை இவரின் ஆக்கத்திறமையை எடுத்தியம்பியது.

தொகுப்பாசிரியர்:    காரைநர் சைவமகாசபை பொன்விழா மலர் -காரைநகர் மணிவாசகர் சபை வெள்ளிவிழா மலர் - காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் குமாபிடேக மலர் - சைவக் களஞ்சியம் போன்ற நூல்களின் தொகுப்பாசிரியராகவும் பணியாற்றினார்.

பெற்ற பட்டங்கள்:   12.12.2002இல் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தத்துவ கலாநிதிப் பட்டம்  வழங்கப்பெற்றது. 1995இல் இலங்கை கம்பன் கழகத்தினால் ‘மூதறிஞர்| என்னும் பட்டம் வழங்கப்பெறற்து. 18.11.2001இல் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு - மற்றும் தமிழ் விவகாரங்கள் அமைச்சு நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற்ற மூத்த கலைஞர்கள் கௌரவிப்பின்போது ; கலைஞானகேசரி| என்ற பல்துறைக்கான பட்டம் வழங்கப்பெற்றது. 04.11.2007இல் சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத்தினால் சிவாகம கிரியா பூ\ணம்| என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 2008இல் காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவினரால் நடத்தப்பெற்ற கலை இலக்கிய விழாவில் ‘கலைஞானச்சுடர்| என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 04.02.2006இல் திருவாவடுதுறை ஆதீனம் விருதுவழங்கிக் கௌரவித்தது. சைவசமய அருள்நெறி மன்றம் வலி - கிழக்கு கோப்பாய் இவரது சமயப்பணியைப் பாராட்டி ‘அருட்சுடர்மணி| என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. திண்ணபுர அந்தாதி வெளியீட்டு விழாவில் ‘செந்தமிழ் ஞாயிறு| என்னும் பட்டமும் வழங்கப்பெற்றது. பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரனின் மணிவிழாக்குழுவினரால் ‘சமூகமாமணி| என்னும் பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பெற்றார்.

பெயரையோ புகழையோ அவாவி நில்லாது மிக அமைதியான முறையில் திருத்தக வாழ்ந்தவர் குருக்கள் ஐயா அவர்கள் சுந்தரேசப் பெருமானின் ஆலயம் உயர்வுக்கும் - திருநெறிய தமிழும் தெய்வச் சைவசமயமும் தழைக்கவும் அரிய பல தொண்டுகள் செய்த சிவசிறீ க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் ஏப்ரல் மாதம் இருபத்திநான்காம் நாள் (24-04-2015) வெள்ளிக்கிழமை பூர்வபட்ச சப்தமி திதியில் அதி காலை 3 மணிக்கு பிறவிப் பெருங்கடலை நீத்துக் கூத்தப்பெருமானின் பாதாரவிந்தத்திலே இறவாப் பேரின்பம் துய்த்தின்புற்றிருக்க அத்துவிதமானார். 

 

 



No comments: