அஞ்சலிக்குறிப்பு : நூறாண்டு காலம் வாழ்ந்து விடைபெற்ற திருமதி மகேஸ்வரி சொக்கநாதர் அம்மையார் ! முருகபூபதிஇந்த அஞ்சலிக்குறிப்பினை குற்றவுணர்வுடனேயே பதிவுசெய்கின்றேன்.

கடந்த ஆண்டு ( 2020 ) ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதிதான்  எமது மதிப்பிற்குரிய திருமதி மகேஸ்வரி சொக்கநாதன் அம்மையாரின் நூறாவது பிறந்த தினத்தை  அவரது  மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், மற்றும் உறவினர்கள், குடும்ப நண்பர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவரும்  மானசீகமாக வாழ்த்திக்கொண்டாடியதை அறிந்திருந்தேன்.

எலிஸபெத் மகாராணியாரும் அம்மையாரை வாழ்த்தி சான்றிதழ் வழங்கியிருந்தார். அவுஸ்திரேலியப்பிரதமர்,  ஆளுநர் தம்பதியர் உட்பட  நாடாளுமன்ற உறுப்பினரும்  வாழ்த்தியிருந்தார்.

சமூகத்திற்கு பயன்மிக்க பணிகளை மேற்கொண்டவர்கள் பற்றி, முடிந்தவரையில் அவ்வப்போது அவர்கள் வாழும் காலப்பகுதியிலேயே எனது அவதானக்குறிப்புகளை எழுதிவந்திருக்கின்றேன்.

எனினும்,   எனது கணினியில் நேர்ந்த வைரஸ்  தாக்கத்தினால், அம்மையாரின் படங்கள், தேடிச்சேமித்துவைத்திருந்த சில குறிப்புகள் மறைந்துவிட்டன.

பின்னர் எழுதலாம் என்று காலம் கடந்தது.  சமகாலத்தின் கொரோனோ வைரஸ் தாக்கத்தினால்  இடைவெளி பேணும் கலாசாரத்திற்கு கட்டுப்பட்டு,  வீடடங்கியிருந்து இணையவெளி அரங்குகளில் நேரத்தையும்  காலத்தையும்  செலவிட்டதனால்,  உடனடியாக அம்மையார் பற்றி எழுதமுடியாமல் போனதையிட்டு, இதனைப்படிக்கும் அன்னாரின் குடும்ப உறவுகளிடமும்,  வாசகர்களிடத்திலும் மன்னிப்பு கேட்டவாறே இந்த அஞ்சலிப்பதிவுக்குள் வருகின்றேன்.

மக்களுக்காக, குறிப்பாக மாணவர் சமுதாயத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்து சேவையாற்றுபவர்கள், வாழும் காலத்திலேயே பாராட்டி கௌரவிக்கப்படவேண்டியவர்கள். அவர்கள் மறைந்த பின்னர்  பாராட்டுவதும்,   விருது வழங்கி கௌரவிப்பதும் எம்மை நாமே திருப்திப்படுத்திக்கொள்ளும் சுயவிருப்ப இயல்புதான்.

எனினும்,  மறைந்தவர்களின் ஆன்மா எங்கிருந்தாலும்,  பார்த்துக்கொண்டிருக்கும்  என்ற குருட்டு நம்பிக்கையுடனயே மறைந்தவர்கள் பற்றிப்பேசி கொண்டாடி வருகின்றோம்.

ஒவ்வொருவரது பிறந்த தினம் வரும்போதும், அவர்களது


நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்கள்,  “ நூறாண்டு காலம் வாழ்க…  நோய் நொடி இல்லாமல் வளர்க,  ஊராண்ட மன்னர் புகழ் போலே,  உலகாண்ட புலவர் தமிழ் போலே,  நூறாண்டு காலம்  வாழ்க  “   என்று மானசீகமாக வாழ்த்துவார்கள்.

ஆனால், அந்த வாழ்த்துக்கேற்ப நூறாண்டுகள்  வாழ்ந்து சாதனை புரிபவர்கள் சொற்பம்தான்.

திருமதி மகேஸ்வரி சொக்கநாதர் அம்மையார் அவர்கள்                 06 – 08 – 1920 ஆம் திகதி  இலங்கையில் பிறந்து,  கடந்த 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி தனது நூறாவது பிறந்த தினத்தையும் அமைதியாக கொண்டாடிவிட்டு, இந்த 2021 ஆம் ஆண்டு,  கடந்த 14 ஆம் திகதி ( 14-04-2021 )  தனது பாசமிகு கணவர்,  ஈழத்தின் மூத்த கவிஞர் நவாலியூர் சொக்கநாதன் அவர்களிடமே போய்ச்சேர்ந்துவிட்டார்.


கவிஞர் சொக்கநாதன் கொழும்பில் பிரபல வர்த்தக ஸ்தாபனமாகத்திகழ்ந்த மகாராஜாஸ், ஸ்ரேலிங்ஸ் முதலான நிறுவனங்களின் உரிமையாளர்களின் இரத்த உறவினர். அத்துடன் ஸ்ரேலிங்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளராகவும் பணியாற்றியவர்.  மகேஸ்வரி அம்மையாரை 1947 ஆம் ஆண்டு மணமுடித்தார்.

அவர்  தமிழ் கவிதைத்துறையிலும்  மகேஸ்வரி அம்மையார் ஆங்கில இலக்கியத்திலும்,  கணித பாடத்திலும்  ஈடுபாடு காண்பித்தவர்கள்.

 மகேஸ்வரி அம்மையார் மாத்தளை புனித தோமையார் பெண்கள் பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றியவர்.

அம்மையார்,  மாத்தளையில்  தான் கற்பித்த பாடசாலையில் ஆங்கிலத்தையும் கணிதத்தையும் பிரதான பாடமாக கற்பித்தவாறே,  அதற்கும் அப்பால் தினமும் வீடு திரும்பிய


பின்னரும் வீட்டில் மேலதிக வகுப்புகளை நடத்தி,  குறிப்பிட்ட பாடங்களில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு மேலதிக பயிற்சியை வழங்கியவர்.

பெரும்பாலான ஆசிரியர்களுக்கு பாடசாலைகளில்   ஐந்து நாட்கள்தான் கடமைகள்  இருக்கும். ஆனால், ஆசிரியை மகேஸ்வரிக்கோ வாரம் ஏழு நாட்களும் மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டிய  கடமை நிரந்தரமாகியிருக்கும் என்று அவரிடம் கற்ற கல்விச்சமூகம் நன்றியோடு நினைவு கூர்ந்துவருகிறது.


மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் உதவும் கரங்கள் செயற்திட்டத்திற்கு இவரும், இவருடைய கணவரும் பிள்ளைகளும் பக்கபலமாக விளங்கியவர்கள். அத்துடன், மாத்தளை வேவல் மட தமிழ் வித்தியாலயம், பாக்கியம் தேசியக்கல்லூரி ஆகியனவற்றில் கல்வி பயின்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவினார்கள்.

மகேஸ்வரி அம்மையார் மறையும் வரையில் வாசிக்கும் பழக்கத்தினை கைவிடவில்லை என்பதும்,  ஆங்கில இதழ்களில்  வரும்  குறுக்கெழுத்து விளையாட்டுகளில் தீவிர கவனம் செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தகுந்த விடயங்கள்.

அந்த குறுக்கொழுத்துப்போட்டிகளில் அடிக்கடி அவர் வென்று பெற்றுக்கொள்ளும் பதக்கங்கள், பரிசுப்பொருட்களையும் தனது உறவுகளின் பிள்ளைகளிடம் வழங்கிவிடுபவர்.

அம்மையாரின் நினைவாற்றலுக்கு இந்த


குறுக்கெழுத்துப்போட்டி  ஈடுபாடும் ஒரு முக்கிய காரணமாகவிருக்கலாம் என நம்புகின்றேன். முதுமையினால், உடல் சோர்வுற்று தளர்ந்தாலும்,  மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைத்து,  சிந்திக்கும் ஆற்றலை  தக்கவைத்துக்கொண்டிருப்பவர்களை நினைவு மறதி உபாதை தாக்காது என்பதற்கு எம்மத்தியில் வாழ்ந்திருக்கும் மகேஸ்வரி அம்மையார் அவர்கள் மிகச்சிறந்த உதாரணம்.

அன்னாரின் கணவர் நவாலியூர் சொக்கநாதர் அவர்கள் ஈழத்தில் மூத்த கவிஞர், மாத்தளை முத்துமாரியம்மன் குறவஞ்சியை இயற்றியவர். இந்நூலின் இரண்டாவது பதிப்பை, மாத்தளை செல்வா என அழைக்கப்படும் எமது நண்பர் எச். எச். விக்கிரமசிங்க தமது சங்கரா வெளியீட்டகத்தினால் 1993 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

திருமுருக கிருபானந்தவாரியார் அந்த நூலுக்கு அணிந்துரையும், கவிஞர் வி. கந்தவனம் மதிப்புரையும் எழுதினார்கள்.

அத்துடன்  நவாலியூர் சொக்கநாதன்,  கவிஞர்கள் வி. கந்தவனம், ஈழவாணன் ஆகியோருடன் இணைந்து சிட்டுக்குருவி என்ற கவிதை நூலையும் வெளியிட்டவர்.  இந்நூலின் இரண்டாம் பதிப்பு சிட்னியில் வதியும் எழுத்தாளர் மாத்தளை சோமுவின் முன்முயற்சியினால், தமிழகத்தில் அச்சிடப்பட்டு வெளியானது.


மெல்பனில் நண்பர் நடேசன் நடத்திய உதயம் மாத இதழின் சார்பில்  ஒழுங்கு செய்யப்பட்ட   உதயம் ஆண்டுவிழா பிரஸ்டன் நகர மண்டபத்தில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்தபோது,  சிட்டுக்குருவியின்  வெளியீட்டு அரங்கினையும்  ஏற்பாடு செய்திருந்தோம்.

சிட்டுக்குருவி நூலின் மதிப்பீட்டுரையை திருமதி ரேணுகா தனஸ்கந்தா நிகழ்த்தினார்.

அக்காலப்பகுதி சிட்னியில் வதியும் எமது மூத்த கவிஞர் அம்பியின் பவளவிழாக் காலம்.  அவரையும் அந்த விழாவிற்கு அழைத்து  பாராட்டி கௌரவித்து விருது வழங்கினோம்.

தனது  அருமைக் கணவரின் சிட்டுக்குருவி சிறகடிக்கும் காட்சியை அன்று கண்டுகளிப்பதற்கு  வருகை தந்து    சிறப்பித்தவர் மகேஸ்வரி அம்மையார்.

மெல்பனில் தமிழ் மூத்த பிரஜைகள் அமைப்பிலும் அங்கம்


வகித்தவர். அதனால், அவரது நண்பர்கள், தோழிகள் வட்டமும் பெரியது.

அவரது இளைய மகள் காயத்திரிக்கு எமது நீர்கொழும்பூர் குடும்ப நண்பர் சுப்பிரமணியம் தில்லைநாதனை நிச்சயம் செய்வித்து திருமணத்தையும் முன்னின்று நடத்தியது முதல், எனக்கும் மகேஸ்வரி அம்மையார் ஒரு பாசமிகு தாயாக விளங்கியவர்.

அவரைச்  சந்திக்கும்போதெல்லாம்  ஊர் அனுபவங்களையும் தமது பாடசாலைக்காலத்தையும் வெகு உற்சாகமாக நினைவூட்டிப் பேசுவார்.

அவ்வேளைகளிலும்  அவரது கரத்தில் குறுக்கெழுத்து விளையாட்டு இதழ்களை காணமுடியும்.


சிறந்த ஆங்கிலப்புலமை அவருக்கிருந்தமையால், குறிப்பிட்ட ஆங்கில குறுக்கொழுத்து விளையாட்டில் எளிதாக வெற்றியும் பெற்றுவிடுவார்.

 “ மறைவதற்கு சில நாட்களுக்கு முன்னரும் எனது பெயரைச்சொல்லி, நினைவுபடுத்தி பேசினார் அம்மா  “ என்று அன்னாரின் பிள்ளைகள் இறுதி நிகழ்வின்போது என்னிடம் சொன்னபோது  மனம் கலங்கிவிட்டேன்.

அம்மையார் பற்றி இதுவரை காலமும் எழுதாமல்


விட்டுவிட்டேனே, என்ற குற்றவுணர்வு வருத்தியது.

சொக்கநாதன் – மகேஸ்வரி தம்பதியர் தாயகத்தில் பல சமூகப்பணிகளில் ஈடுபட்டவர்கள்.  அவர்களின் வாரிசுகள் புலம்பெயர்ந்து வாழும் அவுஸ்திரேலியாவில், தமது பெற்றோரை ஆதர்சமாகக்கொண்டு சமூகப்பணிகளை தொடருகின்றனர்.

இதுவே மறைந்த இந்தப்பெரியோர்களின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தனையாக  அவர்கள் மேற்கொண்டுவரும் ஆக்கபூர்வமான பணியாகும்.

அமரத்துவம் எய்தியிருக்கும் திருமதி மகேஸ்வரி சொக்கநாதன் அம்மையாரின் ஆத்மா சாந்தியடையும் !

----0----

letchumananm@gmail.com

 

  

No comments: