மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா
வண்ணத் தமிழ் கொண்டு வகைவகையாய் பாட்டெழுதி
எண்ணம் எலாம் நிறைந்திருக்கும் எங்களது தமிழ்க்கவியே
உன்நினைப்பில் நாமுள்ளோம் உயிர்மூச்சும் நீயன்றோ
உன்பிறப்பால் தமிழன்னை உவகையுடன் உலவுகிறாள்
சொன்னயமும் பொருணயமும் சுவையாகச் சேர்ந்திருக்க
கன்னல்தமிழ் கொண்டு கவிதைதந்த நாயகனே
இன்னமுதத் தமிழ்கொண்டு எத்தனையோ செய்தவன்நீ
உன்னருமை போற்றாதார் உலகிருந்து என்னபயன்
காதலும் உன்னிடத்தில் கைகோர்த்து நின்றதையா
கடமையும் உன்பாட்டில் கண்ணியமாய் தெரிந்ததையா
நீதிபற்றிச் சொன்னாலும் நியாயமதில் தெரிந்ததையா
சோதியென நீயிருந்து சொல்லிநின்றாய் பலசேதி
உன்பாட்டைப் பாடியதால் உயர்வடைந்தார் பலபேர்கள்
உன்பாட்டைப் பார்க்காமல் உழைத்தநின்றாய் ஓயாமல்
அன்புள்ளம் கொண்டவனே அனைவர்க்காய் பாடிநின்றாய்
அய்யா நீபாடியதால் ஆசைகொண்டார் தமிழின்மேல்
புதுவையின் புயலாகப் புறப்பட்டு வந்தாயே
நவகவிஞன் பாரதியின் நற்சீடன் ஆகினையே
பாரதிக்குத் தாசனாய் பவனிவந்தாய் தமிழ்த்தேரில்
பலபேரும் உன்பாட்டால் பருகிநின்றார் தமிழமுதம்
மூடத்தனத்தை மூலைவைத்த கவி மன்னா
பாடலிலே பண்பூட்டி பலபேரும் உணரவைத்தாய்
ஆடல்பாடல் சினிமாவில் அடிவைத்தும் நீயிருந்தாய்
அன்னைத் தமிழணைத்து அகமகிழ்ந்தாய் தமிழ்க்கவியே
No comments:
Post a Comment