இலங்கைக்கு எதிரான பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
ஐ.நா தீர்மானத்தால் இலங்கைக்கு குந்தகம்
குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை
ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இலங்கை - பங்களாதேஷ் கைச்சாத்து
இரு தரப்பு பரஸ்பர நாணய பரிமாறல் உடன்படிக்கை
பொன்சேகாவிடமிருந்து ரூ. 100 கோடி கோரும் முத்தையா முரளிதரன்
வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்
இராணுவ மயமாக்கல் வேண்டாம்! தென்னிலங்கையில் வெடித்தது போராட்டம்
கொள்கை தோல்வியுற்றால் நாடு அழிவுப் பாதைக்குள் செல்லும் - கோட்டாபய எச்சரிக்கை
ஸ்ரீதரன் எம்.பியின் மகன் மீது தாக்குதல் நடத்தியமைக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது
இலங்கைக்கு எதிரான பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
- சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் எதிர்த்து வாக்களிப்பு
- இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான் நடுநிலை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை 11 மேலதி வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான குறித்த பிரேரணையை எதிர்த்து பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா உள்ளிட்ட 11 நாடுகள் வாக்களித்திருந்த நிலையில், இந்தோனேஷியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிக்காது நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், இத்தாலி, பிரேசில், ஆர்ஜென்டீனா உள்ளிட்ட 22 நாடுகள், இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறல் தொடர்பான விவாதம் நேற்று (22) இடம்பெற்று வாக்களிப்பு மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், விவாதத்தை ஒழுங்குப்படுத்துவது தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, குறித்த விவாதம் இன்று (23) வரை பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
ஐ.நா தீர்மானத்தால் இலங்கைக்கு குந்தகம்
எனினும் வழமைபோல் அரசு நிராகரிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விவாதத்தில் நேற்று இலங்கை சார்பில் ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சி.ஏ.சந்திரபிரேமா கருத்துரைத்திருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானத்தை வழக்கம் போல இலங்கை நிராகரிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
இதேநேரம் இலங்கை தொடர்பான ஐ.நாவின் குறித்த தீர்மானம் இலங்கைக்கு குந்தகம் விளைவிக்கும் எனவும் அவர் இதன்போது எச்சரித்துள்ளார்.
இதேவேளை குறித்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த பிலிப்பைன்ஸானது, இலங்கைக்கு எதிரான குறித்த பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழர்களின் பிரச்சினையை ஆதரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தெரிவித்திருந்தது.
அத்துடன் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. நன்றி தினகரன்
குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை
வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு
25 நாடுகள் பிரேரணைக்கு எதிரான நிலைப்பாட்டில்
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக அதன் அங்கத்துவ நாடுகள் செயற்பட முடியாது என்பதை சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர், அந்த கொள்கைக்கு முரணான வகையிலேயே ஒருங்கிணைந்த நாடுகள் செயற்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட `பிரேரணை நேற்றைய தினம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்து நேற்று பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன;
47 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 22 நாடுகள் மட்டுமே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. அந்தவகையில் 11 நாடுகள் பிரேரணைக்கு எதிராகவே வாக்களித்துள்ளன.
அத்துடன் மேற்படி வாக்களிப்பில் 14 நாடுகள் கலந்து கொள்ளாத நிலையில் 25 நாடுகள் மேற்படி பிரேரணை தொடரபில் எதிரான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளன. அந்த வகையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையை முன்வைத்த நாடுகளினால் மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.
இலங்கையில் நாட்டின் இறையாண்மை மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அரசியலமைப்பு, உயர் நீதிமன்றம் உட்பட நீதிமன்ற கட்டமைப்பு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் மூலம் நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்படுகின்றது.
நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் என அனைத்து இன,மத மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் கொண்டுவரப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை அடிப்படையற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக அதன் அங்கத்துவ நாடுகள் செயற்பட முடியாது என்ற நிலையில் அதன் அடிப்படைக் கொள்கைகளை மீறி அந்த நாடுகள் இலங்கை தொடர்பான பிரேரணையைக் கொண்டு வந்துள்ளன. அந்த வகையில் ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன்
ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இலங்கை - பங்களாதேஷ் கைச்சாத்து
இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் விஜயத்தின் போது இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில் நடைபெற்றது.
இளைஞர் விவகார மேம்பாடு, விவசாயத்துறை, திறன் அபிவிருத்தி பரிமாற்றம், சுகாதார தாதிகள் சேவை பரிமாற்றம், அனைத்துலக ஒத்துழைப்பு கல்வி மற்றும் 2021/-2025 வரையிலான அனைத்து கலாசார பரிமாற்ற செயற்றிட்டம் ஆகிய விடயங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
COVID-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இதன்போது தமது பாராட்டினை தெரிவித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது பொருளாதாரம், முதலீடு, சந்தை, தொழில்நுட்பம், விவசாயம், கடற்றொழில் கைத்தொழில் மற்றும் அரசியல் உறவு ஆகியவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளினதும் மத்திய வங்கிகளுக்கு இடையில் புரிந்துணர்வை தொழில்நுட்ப ரீதீயில் மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 50 ஆவது வருட ஆரம்பத்தை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையில் விரிவுபடுத்தப்பட்ட அரசியல் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பிலான யோசனைகள் இதன்போது பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.
பிரதமருடன் பங்களாதேஷ் சென்றுள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பங்களாதேஷின் மத்திய வங்கி ஆளுநரை சந்தித்தார்.
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலும் இதன்போது இணைந்துகொண்டிருந்தார். நன்றி தினகரன்
இரு தரப்பு பரஸ்பர நாணய பரிமாறல் உடன்படிக்கை
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான இருதரப்பு பணப் பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி மற்றும் சீன மக்கள் வங்கி ஆகியன மேற்படி இருதரப்பு பணப் பரிமாற்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதுடன் அதற்கான ஒப்பந்த கைச்சாத்து நேற்று இடம்பெற்றது. அதற்கிணங்க சீன மக்கள் வங்கி இலங்கை மத்திய வங்கியுடன் 1.5 பில்லியன் அமெரிக்கன் டொலர் பணப் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் நேரடி முதலீட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணப் பரிமாற்ற உடன்படிக்கை மூன்று வருட காலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் பரிந்துரைக்கு அமைய இப்பணப்பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதற்கான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பணப்பரிமாற்ற உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியூ.டி. லக்ஷ்மன் மற்றும் சீன அரசாங்கத்தின் சார்பில் சீன மக்கள் வங்கியின் ஆளுநர் கலாநிதி யீ கென் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சீனாவிடமிருந்து பெருமளவில் பொருட்கள் இறக்குமதியை மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த வருடம் சீனாவிலிருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அது இலங்கை இறக்குமதியில் நூற்றுக்கு 22.3 வீதமாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன்
பொன்சேகாவிடமிருந்து ரூ. 100 கோடி கோரும் முத்தையா முரளிதரன்
முத்தையா முரளிதரன் எனும் ஒருவர் உள்ளார் அல்லவா? முன்பு அவரை எங்களுக்கு மிகப் பிடிக்கும். பந்தை வீசும் போது, நாங்கள் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்போம். உண்ண, குடிக்க எமக்கு தேவைப்படவில்லை. இப்போது அவர் பந்தை மாற்றி மாற்றி மஹிந்த ராஜபக்ஷவினரின் ஆடைகளுக்குள்ளேயே வீசுகிறார். அதற்கு காரணம் என்னவென்றால், முத்தையா முரளிதரனுக்கு வெலிக்கந்தவில் 2,000 ஏக்கர் வழங்கப்பட்டுள்ளது. நான் வனஜீவராசிகள் அமைச்சராக இருந்த போது அதனை பார்வையிடச் சென்றிருந்தேன். 3 ஆனையிறவுகளை அடைத்து வேலியிட்டுள்ளார். அதற்குள் அந்த இந்த மாதிரியானவற்றையும் இட்டுள்ளார். உலோபித்தனத்தினாலும், சுயநலத்தினாலும் அதனை சுற்றி வளைத்துள்ளார்கள். ஒரு யானையால் கூட அங்கு செல்ல முடியாது. எனவே இவ்வாறான வேலைகளைச் செய்வதையே அவர்கள் சூழலை பாதுகாப்பதாக சொல்கிறார்கள்.
(பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பேரணியொன்றில் தெரிவித்ததாக முரளிதரனின் சட்ட நிறுவனம் தெரிவித்துள்ள கருத்தின் மொழி பெயர்ப்பு)
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் ரூபா 100 கோடி மான நஷ்டஈடு கோரியுள்ளார்.
நேற்றையதினம் (24) திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றின் ஊடாக, சட்ட நிறுவனம் ஒன்றின் மூலம் குறித்த ரூபா 1 பில்லியன் (ரூ. 1,000,000,000) நஷ்டஈட்டை வழங்குமாறு முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் 15ஆம் திகதி அரசியல் பேரணி ஒன்றில், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து, அவதூறானது என்றும் சட்டத்திற்கு முரணானது என்னும் தெரிவித்து, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் குறித்த மான நஷ்ட கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த பேரணியில், சரத் பொன்சேகா தெரிவித்ததாக அதில் (சிங்களத்தில்) குறிப்பிடப்பட்டுள்ள கருத்து வருமாறு,
முத்தையா முரளிதரன் எனும் ஒருவர் உள்ளார் அல்லவா? முன்பு அவரை எங்களுக்கு மிகப் பிடிக்கும். பந்தை வீசும் போது, நாங்கள் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்போம். உண்ண, குடிக்க எமக்கு தேவைப்படவில்லை. இப்போது அவர் பந்தை மாற்றி மாற்றி மஹிந்த ராஜபக்ஷவினரின் ஆடைகளுக்குள்ளேயே வீசுகிறார். அதற்கு காரணம் என்னவென்றால், முத்தையா முரளிதரனுக்கு வெலிக்கந்தவில் 2,000 ஏக்கர் வழங்கப்பட்டுள்ளது. நான் வனஜீவராசிகள் அமைச்சராக இருந்த போது அதனை பார்வையிடச் சென்றிருந்தேன். 3 ஆனையிறவுகளை அடைத்து வேலியிட்டுள்ளார். அதற்குள் அந்த இந்த மாதிரியானவற்றையும் இட்டுள்ளார். உலோபித்தனத்தினாலும், சுயநலத்தினாலும் அதனை சுற்றி வளைத்துள்ளார்கள். ஒரு யானையால் கூட அங்கு செல்ல முடியாது. எனவே இவ்வாறான வேலைகளைச் செய்வதையே அவர்கள் சூழலை பாதுகாப்பதாக சொல்கிறார்கள். நன்றி தினகரன்
வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்
- பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்
வடக்கு - கிழக்கு பகுதிகளில் முறையான அனுமதி பெறப்படாது நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் பார்வையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,
வவுனியாவில் பல இடங்களில் நடைபெறும் சூழலை சேதப்படும் செயற்பாடுகளை அவதானித்தோம். ஒரு பகுதியில் காடழிப்பு இடம்பெற்று 20அடிக்கு மேல் கிடங்கு வெட்டி மண் அகழ்வு இடம்பெறுகிறது. நாங்கள் சென்றபோது அங்கிருந்து வாகனங்கள் சென்று விட்டன. இதேபோல் இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் பாரிய சூழலுக்கு எதிரான விடயங்கள் நடைபெறுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுகிறது. அது தொடர்பில் பிரதேச அபிவிருதிக் கூட்டத்தில் நிறுத்துமாறு கோரிய போதும் இன்று வரை நிறுத்தப்படவில்லை. வடக்கு - கிழக்கு பகுதிகளில் முறையான அனுமதி பெறப்படாது நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் பார்வையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
வவுனியா விசேட நிருபர் - நன்றி தினகரன்
இராணுவ மயமாக்கல் வேண்டாம்! தென்னிலங்கையில் வெடித்தது போராட்டம்
27/03/2021 அரசாங்கம் படிப்படியாக நாட்டை இராணுவ ஆட்சிக்குள் தள்ளி, மியன்மார் நாட்டைப்போல மாற்றி வருவதாக சிவில் அமைப்புகளால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை நாட்டு மக்களுக்கு மிகவும் சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக சட்டத்தரணியும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான அச்சலா செனவிரத்ன எச்சரித்துள்ளார்.
விசாரணையின்றி தடுப்புக்காவலைப் பயன்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு போதுமான எதிர்ப்புகள் நாட்டில் வெளிப்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
”இராணுவ மயமாக்காதீர்கள், மக்களின் எதிர்பார்ப்புகளை அழிக்க வேண்டாம், இலங்கையின் வெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்த வேண்டாம், இனக்குழுக்களுக்கு பாகுபாடு காட்ட வேண்டாம், சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தாதீர்கள்” எனச் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, "இலங்கை தேசத்தின் நீதி, நேர்மைக்காக மக்களின் போராட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
”பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் நாங்கள் யாரும் அதில் கவனம் செலுத்தவில்லை.
ஆனால் அந்த வர்த்தமானி அறிவிப்பை பாருங்கள் அந்த அறிவிப்பின் மூலம் ஒரு வருடத்திற்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் ஒருவரை வைத்திருக்க வாய்ப்புள்ளது.
இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது. மக்கள் இதைப் பற்றி பேசுவதில்லை. ஊடகங்கள் இதைப் பற்றி பேசவில்லை. இனவெறி அல்லது மதத்தைப் பற்றி பேசுவதாக சந்தேகத்தின் பேரில் யாரையும் நாளை கைது செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. " என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டை ரயில் நிலையம் முன்பாக, இடம்பெற்ற இந்தப் போராட்டடத்தை, மக்கள் சக்தி அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நாடு பெண்களுக்கும் பாதுகாப்பற்ற இடமாக மாறி வருவதாக சட்டத்தரணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், மக்களுக்கு எதிராக அல்ல, நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராகவே, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
"இந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கைளால் நாட்டு மக்களின் உரிமைகள், பிரஜைகளின் மனித உரிமைகள் அனைத்தும் மீறப்பட்டன.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட வர்க்கம் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, மக்கள் சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் சுதேஷ் நந்திமல் வலியுறுத்தினார்.
"எதிர்காலத்தில் இந்த நாட்டு மக்களுக்கு வாழ்வதற்கான உரிமை கூட கிடைக்குமா என்பது குறித்து எங்களுக்கு சந்தேகம் காணப்படுகின்றது." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் வன வளங்களை அழிப்பதன் மூலமும், விலங்குகள் கூட வாழ முடியாத சூழலை உருவாக்குவதன் மூலமும் பழங்குடி மக்களின் முழு வாழ்க்கை முறையையும் மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுதேஷ் நந்திமல் சில்வா மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் வாழும் பல்வேறு இனத்தவர்களுக்கு தமது கலாச்சாரத்தை பாதுகாக்க முடியவில்லை என சுட்டிக்காட்டியுள்ள சுதேஷ் நந்திமல், அரசாங்கம் மக்களின் கலாச்சாரத்தை மாற்றியமைக்க முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனவாதம் மற்றும் மதவாதத்தின் ஊடாக அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாக குற்றம் சாட்டிய அவர், வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பிறப்பிடம் அந்த மக்களின் தாயகம் என வலியுறுத்தினார்.
”ஒருவர் இந்த நாட்டில் பிறந்திருந்தால், அவர் ஒரு தமிழரா? ஒரு முஸ்லீமா? அல்லது சிங்களவரா? என்பது முக்கியமல்ல. இந்த நாடு அவரது தாய் நாடாக இருக்க வேண்டும். அவர் இந்த நாட்டில் பிறந்திருந்தால், அவரது தாய்நாடு இந்த நாடு” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்காலத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைத்து குரல் எழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சுதேஷ் நந்திமல் சில்வா இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி
கொள்கை தோல்வியுற்றால் நாடு அழிவுப் பாதைக்குள் செல்லும் - கோட்டாபய எச்சரிக்கை
27/03/2021 தனிநபர்களை அல்லாது அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
கொள்கைகள் தோல்வியுற்றால், நாடு மீண்டும் அழிவுக்கு உள்ளாவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து அபிவிருத்தி பணிகளை தொடர வேண்டும். அரசாங்கத்தின் திட்டங்களை முறையாக செயற்படுத்துவதன் மூலம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
தனிநபர்களை அல்லாமல், அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். கொள்கைகள் தோல்வியுற்றால் நாடு மீண்டும் அழிவுக்கு உள்ளாவதை தவிர்க்க முடியாது.
அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு அளித்த ஆதரவையும் அர்ப்பணிப்பையும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை முன்னெடுப்பதில் அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி
ஸ்ரீதரன் எம்.பியின் மகன் மீது தாக்குதல் நடத்தியமைக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது
27/03/2021 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வீட்டின் முன்னால் இனந்தெரியாத 08 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தாக்குதலுக்கான காரணம் வெளியாகி உள்ளது.
2020 /2021 உயர்தரப்பிரிவில் கற்கும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் கைகலப்பாக மாறியே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் இரண்டாவது மகனின் நண்பர் ஒருவருக்கும் தாக்குதல் நடத்த வந்த நபர்களுக்குமிடையே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது இரு தரப்புக்கும் மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீதரன் எம்.பியின் இரண்டாவது மகன் மூத்த மகனை அழைத்துக் கொண்டு தனது நண்பனுடன் வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்களை பின் தொடர்ந்து 04 மோட்டார் சைக்கிளில் வந்த 08 பேர் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பி, பொல்லுகளுடன் வந்து தாக்குதல் நடத்த முற்பட்டனர். தாக்குதலிலிருந்து தப்பும் நோக்குடன் வீட்டுக்குள் ஓடியுள்ளனர். ஆத்திரமடைந்த குழுவினர் மோட்டார் சைக்கிளை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதல் நடத்த வந்த குழுவினர் ஸ்ரீதரன் எம்.பியின் வீட்டைத் தாக்குவதற்காகவோ அல்லது அவரது மகன்மாரை தாக்கும் எண்ணத்துடனோ வரவில்லையென்றும் அவர்கள் ஸ்ரீதரன் எம்.பியின் இரண்டாவது மகனின் நண்பரை இலக்கு வைத்து தாக்குவதற்காக வந்ததாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விளக்கமளித்தார்.
எவ்வாறாயினும் இத்தாக்குதல் சம்பவத்துடன் தொர்புடைய 08 பேரும் கைது செய்யப்படவுள்ளனர். அவர்கள் வந்த 04 மோட்டார் சைக்கிள்களின் இலக்கங்கள் CCTV கமராக்களில் பதிவாகியுள்ளதை பயன்படுத்தி பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இத் தாக்குதல் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி
No comments:
Post a Comment