மவுண்ட்றூயிட் தமிழ்க் கல்விநிலையம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை - 2021 பரமபுத்திரன்


மவுண்ட்றூயிட் தமிழ்ப் பள்ளியின் தமிழ்மொழி கற்றல் - கற்பித்தல் செயற்பாடு தொடர்பான நடப்பு நிலையும், எதிர்காலத் தேவையும் என்ற கருத்துநிலை அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் பயிற்சிப் பட்டறையை நடாத்துவது வழக்கமான ஒன்று. அந்தவகையில் இவ்வாண்டுக்கான ஆசிரியர் பயிற்சிப் பட்டறை 21/03/2021 ஞாயிற்றுக்கிழமை  காலை ஒன்பது மணி முதல் ஒரு மணிவரை  ‘கொலிற்றன்’ அரச பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

 


 

மவுண்ட்றூயிட் தமிழ்ப் பள்ளியின் பதின்னான்கு ஆசிரியர்கள்,


மற்றும் நிர்வாகத்தலைவர், அதிபர், கல்விக்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர் சந்திரலேகா வாமதேவா  அவர்களும் செயலமர்வில் பங்குபற்றினார். நிர்வாகத்தலைவர் கில்பேட் தேவதாசன் அவர்கள் தலைமையுரை வழங்கி நிகழ்வினைத் தொடக்கிவைத்தார். தனது தலைமையுரையில் பாடசாலையின் வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் செய்யும் சேவையினைப் பாராட்டிய அதேவேளை, இன்னும் மேன்மையடைய ஒத்துழைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு, மேலும் எங்கள் மாணவர்கள் தமிழ்ப் பண்பாடுகளைத் தெரிந்து, அன்பு பண்பு நிறைந்தவர்களாக வாழப் பயிற்றுவித்தல் எங்கள் கடமையும் பொறுப்பும், எனவே நாம் எல்லோரும் இணைந்து அதனை நிறைவேற்றவேண்டும் என்று கூறி, இந்தச் செயலமர்வு அதற்கான உந்துசக்தியாக அமையவேண்டும் எனத்தெரிவித்து தனது உரையினைச்  சுருக்கமாக நிறைவுசெய்தார்.

 


தொடர்ந்து அதிபர் பாலசுப்பிரமணியம் முரளிதரன் அவர்கள்  செயலமர்வினை நெறிப்படுத்தினார். ஏற்கனவே ஆசிரியர்களுடன் கலந்துரையாடி முடிவு செய்யப்பட்டிருந்த ஏழு தலைப்புகள் ஆசிரியர்களிடம் ஆய்வுக்காக வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட  தலைப்புகளாவன பெற்றோர்களிடமும்


பிள்ளைகளிடமும் தமிழ்மொழி கற்றல் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தல், மாணவர்களிடம் காணப்படும் தனிப்பட்ட திறமைகளை இனம் கண்டு ஆளுமையை வளர்த்தெடுத்தல், எல்லா மாணவர்களும் தமிழ்  எழுத்துகளில்  சிறப்புத் தேர்ச்சி பெற்றுக் கொண்டமையை  உறுதிசெய்தல், கற்றல்- கற்பித்தலுக்கு  நவீன தொழில் நுட்பத்தை வினத்திறனுள்ள வகையில் பயன்படுத்தல், மாணவர்கள் அவ்வவ் ஆண்டுக்குரிய அடைவுமட்டத்தினை அடைதலை  உறுதிப்படுத்தல், மாணவர்கள் ஒழுக்க விதிகளை தொடர்ச்சியாகக்  கடைப்பிடிக்க வழிப்படுத்தல்,  பாடசாலையின் தரத்தினை மேம்படுத்த பயன்படுத்தக்கூடிய புதிய உத்திகள் என்பனவாகும். முன்பே திட்டமிட்டபடி  ஆசிரியர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். கலாநிதி சந்திரலேகா வாமதேவா ஒவ்வொரு குழுக்களுடனும் தனித்தனியாகக் கலந்துரையாடி தனது அனுபவ அடிப்படையில் செயலமர்வினை வழிப்படுத்தினார்.

 


 


ஆரம்பநிலை வகுப்புகள் தொடர்பாக இரு குழுக்கள்  தொழிற்பட்டன. ஒரு குழுவில் ஆசிரியர்கள் நிரூபா ஜனார்த்தனன், தயாளினி முரளிதரன், சரஸ்வதி விஜயசங்கர், மோகனரெஜினா கெங்காதரன் ஆகியோரும் மற்றைய குழுவில் பாமரதி மகேஸ்வரமூர்த்தி, கஜந்தி சதீஸ்கரன், நிஷாந்தி முரளிதரன் ஆகியோரும், இடைநிலை வகுப்புகளுக்காக ஆசிரியர்கள் அனிதா சிவசங்கர், எல்விஸ் எமிலியானுஸ், சாந்தி ஜெயதேவன், விஜயசுதா குகனேஸ்வரன் மற்றும் முதுநிலை வகுப்புகளுக்காக ஆசிரியர்கள் இராஜேஸ்வரி குலவீரசிங்கம், செல்வராஜி இரங்கநாதன், பரமேசுவரன் இரங்கநாதன் ஆகியோரும் செயற்பட்டனர்.

 



அடுத்ததாக ஒவ்வொரு குழுக்களும் தாங்கள் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் முடிவுகளைச் சமர்ப்பித்தனர். தாய்மொழி தமிழை கற்பதன் மூலம் மாணவர்கள் இரு மொழித்திறனுள்ளவர்களாகும் வாய்ப்பு உண்டாகும். அத்துடன் தொழில்வாய்ப்புக்கும், பல்கலைக்கழக அனுமதிக்கும் ஆங்கில பாடத்துக்கு இணையாக தமிழும் இருப்பதால் தாய்மொழி கற்றல் நன்மை பயக்கும் என்பதனை வளர்ந்த மாணவர்கள் மட்டத்தில் ஆசிரியர்களும், மற்றும் பெற்றோர் கலந்துரையாடல்கள் மூலம் பெற்றோர்களிடம் நிர்வாகமும் எடுத்துச் செல்லமுடியும் எனக் கருத்துத் தெரிவித்தனர்.

 



மாணவர்களிடம் காணப்படும் தனிப்பட்ட திறமைகளை இனம் கண்டு அவர்களின் ஆற்றல்களுக்கேற்ப பேசுதல், எழுதல் வாசித்தல், ஆடல், பாடல் அபிநயம் செய்தல் என்பவற்றின் மூலம் தமிழில் வளர்த்தெடுக்க முடியும் என்றும், இதனூடாக தமிழ் ஆளுமையை விருத்தி செய்யமுடியும் எனவும், ஆசிரியர்கள் தொடர்ச்சியான கணிப்பீடுகளை மேற்கொள்வதன் மூலமும், வாய்மொழித் தொடர்பாடலுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதன் ஊடாகவும், எல்லா மாணவர்களும் தமிழ்  எழுத்துகள் தொடர்பாக பேசுதல், எழுதுதலில்  சிறப்புத் தேர்ச்சி பெற்றுக் கொண்டமையை  உறுதிப்படுத்த முடியும் எனவும், நவீன கற்றல் சாதனங்களைப் பயன்படுத்தி படங்களைக் காட்டிக்  கதை கூறக்கேட்டல், பின்பு அதனை எழுதுவித்தல், சிறு கதைகள், விவரணங்கள் என்பவற்றைக்  கேட்க அல்லது  பார்க்கச்செய்து அது தொடர்பான விளக்கம் வழங்க வாய்ப்புகள் கொடுத்தல்  போன்றவற்றிற்கு  நவீன தொழில் நுட்பத்தை வினத்திறனுள்ள வகையில் பயன்படுத்தலாம் எனவும், மாணவர்களின் தொடர்ச்சியான வகுப்பறைச்  செயற்பாடுகளை  அவதானித்தும், தவணை இறுதி பரீட்சைகளையும் இணைத்து அவதானிப்பதன் மூலம்  மாணவர்கள் அவ்வவ் ஆண்டுக்குரிய அடைவுமட்டத்தினை அடைதலை  உறுதிப்படுத்த முடியும் என்றும், பாடசாலைக்குள் புகும் மாணவர்களை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் தொடர்ச்சியாக வழிப்படுத்தல் மூலம் மாணவர்கள் ஒழுக்க விதிகள்  தவறாது சரியாகக் கடைப்பிடிக்கச் செய்யமுடியும் எனவும், இவற்றை  எல்லாம் நிறைவேற்றும் போது   பாடசாலையின் தரம் தானாக மேம்படும் என்றும் தங்கள் தொகுப்புகளை வழங்கினர்.


 


செயலமர்வின் நிறைவுப்பகுதியில் கலாநிதி சந்திரலேகா வாமதேவா அவர்கள் கருத்துரை வழங்கினார். அதன்போது மாணவர்களுக்கு அதிகமான செய்திகளை கற்பிப்பது தேவை என எண்ணாது, கற்பித்த செய்திகளை விளங்கிக்கொள்ளும் திறனை வளர்த்தல் அவசியம் எனவும், மாணவர்களை தங்கள் வகுப்பு வேலைகளை தொடர்ச்சியாக அக்கறையுடன் செய்வதற்கு ஊக்குவித்தல் நற்பலனைத் தரும் எனவும், மேலும் முதுநிலை மாணவர்களின் ஆய்வு செய்யும் திறன், எழுதும் திறன் என்பவற்றை அதிகரிக்க வழிகாட்டுதலானது பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு  இலகுவாக பரீட்சை எழுத உதவும் எனவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்தது அதிபர் அவர்கள் செயலமர்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இன்றைய தீர்மானங்களின் அடிப்படையில் பாடசாலையில் தொழிற்படுவோம் செயலமர்வினை நிறைவுசெய்து வைத்தார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக உப அதிபர் கொலின்தேவராஜா சதீஸ்கரன் அவர்களும், தொழில்நுட்ப ஒழுங்கமைப்பாளராக குலசேகரம் முரளிதரன் அவர்களும், மற்றும் கல்விக்குழு உறுப்பினர் சீவரத்தினம் சுதாகரன், பொருளாளர்  பேரம்பலம் மகேஸ்வரமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர். செயலர்மவின் முடிவில் அனைவரும் ஒன்றுகூடி மதியபோசனம் அருந்தி மகிழ்ந்தனர்.  

 



No comments: