உலகச் செய்திகள்

இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று 

பன்றி சம்பந்தமில்லை; இந்தோனேசியாவுக்கு 'அஸ்ட்ராசெனகா' பதில்

இஸ்ரேலில் 2 ஆண்டுகளில் நான்காவது பொதுத் தேர்தல்

‘சினோவக்’ தடுப்பூசி: எழுவருக்கு சுகவீனம்

சுயஸ் கால்வாயில் குறுக்காக சிக்கியுள்ள கப்பலால் நெரிசல்

மோடி - ஜி ஜின்பிங் உட்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு பைடன் அழைப்பு

ஸ்ரீலங்கா போன்று சீனாவிடம் சிக்க மாட்டோம்! பங்களாதேஷ் இறுமாப்பு


இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் பைசுல் சுல்தான் தெரிவித்துள்ளார்.

68 வயதான இம்ரான் கான் தற்போது சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாக சுகாதார அமைச்சர் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான இம்ரான் கான் கொரோனா தொற்றுக்கு எதிராக முதலாவது தடுப்பூசியை பெற்று இரண்டு நாட்களிலேயே நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.

சிறிய இருமல் ஏற்பட்டு அவருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டதாகவும் தற்போது சிறிய காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் அவரது மூத்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் 623,135 கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 13,799 பேர் உயிரிழந்துள்ளனர். கொவிட்–19 தொற்றுக்குக் காரணமான வைரஸுக்கு எதிராக எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்த தடுப்பூசி உதவுகின்றபோதும் பொதுவாக அந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டு ஒருசில வாரங்களிலேயே எதிர்ப்புச் சக்தி உருவாகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 
பன்றி சம்பந்தமில்லை; இந்தோனேசியாவுக்கு 'அஸ்ட்ராசெனகா' பதில்

அஸ்ட்ராசெனகா நிறுவனம் அதன் கொவிட்–19 தடுப்பு மருந்தில் பன்றி சம்பந்தப்பட்ட பொருள் ஏதும் இல்லை என முஸ்லிம் நாடான இந்தோனேசியாவிடம் உத்தரவாதம் அளித்துள்ளது.

'அஸ்ட்ராசெனகா தடுப்பூசி இஸ்லாமிய சமயத்திற்கெதிரானது. அதில் பன்றிக் கணையத்திலான டிரிப்சின் சேர்க்கப்பட்டுள்ளது' என இந்தோனேசியாவின் மிக உயரிய இஸ்லாமிய தலைவர்களின் இந்தோனேசியா உலமா சபை கடந்த வெள்ளிக்கிழமையன்று அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டது.

இருப்பினும், வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அவசரநிலை காரணமாக அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு அது ஒப்புதல் வழங்கியது.

இதற்கிடையில் தடுப்புமருந்து உற்பத்தியின் எல்லா நிலைகளிலும், பன்றி சம்பந்தப்பட்ட பொருளோ மற்ற விலங்குகள் சம்பந்தப்பட்ட பொருளோ கலக்கப்படுவதில்லை என அஸ்ட்ராசெனகாவின் இந்தோனேசிய பேச்சாளர் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.  நன்றி தினகரன் 
இஸ்ரேலில் 2 ஆண்டுகளில் நான்காவது பொதுத் தேர்தல்

இஸ்ரேலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்காவது பொதுத் தேர்தலில் நேற்று மக்கள் வாக்களித்தனர். இந்தத் தேர்தல் பதவியில் உள்ள பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு சவால் மிக்கதாக பார்க்கப்படுகிறது.

முந்தைய மூன்று தேர்தல்களிலும் எந்தத் தரப்பும் உறுதியான வெற்றி ஒன்றை பதிவு செய்யவில்லை. இழுபறியை முடிவுக்குக் கொண்டுவர அமைக்கப்பட்ட ஐக்கிய அரசாங்கமும் கடந்த டிசம்பர் மாதம் முறிந்தது.

இந்நிலையில் தற்போதை தேர்தல் முடிவுகளும் முட்டுக்கட்டை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் கொரோனா தொற்றுக்கு எதிரான முடக்கநிலையில் இருந்து திரும்பும் சூழலில், நெதன்யாகுவுக்கு எதிரான ஊழல் விசாரணை ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையிலேயே இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு நெதன்யாகு முகம்கொடுத்துள்ளார். தம் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் அவர், அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்று குறிப்பிடுகிறார்.

எனினும் நெதன்யாகுவை பதவி விலகக் கோரி இஸ்ரேலில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 
‘சினோவக்’ தடுப்பூசி: எழுவருக்கு சுகவீனம்

ஹொங்கொங் நகரில் சீனாவின் சினோவக் தடுப்பீசியை பெற்ற குறைந்தது ஏழு பேர் சுகவீனமுற்றிருப்பதாக ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி கடந்த ஒரு வாரத்தில் இந்த தடுப்பு மருந்தை பெற்ற பின் மொத்தம் 18 பேர் மருத்துவ சிகிச்சைக்கு ஆளாகி இருப்பதோடு இது சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்ற சுமார் 91,800 பேரில் 0.019 வீதமானவர்களாக இருப்பதாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

கொவிட்–19 தொற்று சீனாவில் இருந்தே தற்போது உலகெங்கும் பரவியமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 
சுயஸ் கால்வாயில் குறுக்காக சிக்கியுள்ள கப்பலால் நெரிசல்

இராட்சத கொள்கலன் கப்பல் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து குறுக்காக சிக்கிக்கொண்டதால் எகிப்தின் சுயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் பயணத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

400 மீற்றர் நீளம் மற்றும் 59 மீற்றர் அகலம் கொண்ட இந்தக் கப்பலுக்கு உதவியாக இழுவைப் படகுகள் அனுப்பப்பட்டபோதும் நிலைமையை சீர்செய்ய பல நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று அஞ்சப்படுகிறது.

சுயஸ் கால்வாயின் வடக்காக கடந்த செவ்வாய்க்கிழமை காலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. மத்தியதரைக் கடலில் இருந்து செங்கடலை இணைக்கும் இந்த நீர்ப்பாதை ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையிலான குறுகிய கடல் பாதையாக உள்ளது.

பனாமாவில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கப்பல், சீனாவில் இருந்து நெதர்லாந்தின் ரொட்டர்டாம் துறைமுகத்தை நோக்கி பயணித்துள்ளது.

கால்வாயை முழுமையாக தடுக்கும் வகையில் குறுக்காக சிக்கி இருப்பதால் இரு பக்கங்களில் இருந்து வரும் கப்பல்களும் முன்னேற முடியாமல் நெரிசலுக்கு உள்ளாகியுள்ளன.

போக்குவரத்து தடைபட்டதால், 100க்கும் அதிகமான கப்பல்கள் கால்வாயைக் கடந்து செல்ல காத்துக்கொண்டிருப்பதாக புலும்பர்க் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

சர்வதேச கடல்துறை வர்த்தகத்தில், சுமார் 10 வீதமானது சுயஸ் கால்வாயை கடந்து செல்கிறது. கடந்த ஆண்டு, சுமார் 19,000 கப்பல்கள் கால்வாயைக் கடந்து சென்றன. அதில் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குகளின் மொத்த எடை 1 பில்லியன் தொன்களுக்கு அதிகம்.

சுயஸ் கால்வாய் மூன்று இயற்கையான ஏரிகளை இணைத்து அமைக்கப்பட்ட 193 கிலோமீற்றர் நீளமான நீர்ப்பாதையாகும்.   நன்றி தினகரன் 
மோடி - ஜி ஜின்பிங் உட்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு பைடன் அழைப்பு


27/03/2021 பருவநிலை மெய்நிகர் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் எதிர்வரும் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பருவநிலை மாற்றம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் புதைபடிம எரிபொருள்கள் பயன்பாடு, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலையைக் குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கையின் மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின் பிங், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு நவம்பரில் கிளாஸ்கோவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டிற்கான முக்கிய மைல்கல்லாக இந்த உச்சி மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டின் விவாதங்கள் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி 

ஸ்ரீலங்கா போன்று சீனாவிடம் சிக்க மாட்டோம்! பங்களாதேஷ் இறுமாப்பு


27/03/2021 ஸ்ரீலங்கா சீனாவின் கடன் பொறியில் சிக்கியுள்ளது. நாங்கள் சீனாவின் அப்பொறிக்குள் சிக்காது விடயங்களை முறையாக கையாள்வோம் என பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆலோசகர் ஒருவரை மேற்கோள்காட்டி அந்நாட்டு பத்திரிகை ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

அபிவிருத்தியடைந்து வரும் பல நாடுகள் தற்போது சீனாவின் அழுத்தங்களுக்கு அடிபணிய நேரிட்டுள்ளதாக பங்களாதேஷ் பிரதமரின் ஆலோசகர் கூறியுள்ளார்.

அத்துடன் சீனாவுடன் செயற்படும் போது மிகவும் கவனத்துடன் செயற்படுவதாகவும் ஸ்ரீலங்கா போன்று கஷ்டத்தில் விழாது கவனமாக செயற்பட்டு வருவதாகவும்,

ஸ்ரீலங்கா, சீனாவுடன் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடும் போது பெரும் கஷ்டத்தில் விழுந்த விதத்தை நன்றாக புரிந்துகொண்டு, அதில் பாடத்தை கற்று பங்களாதேஷ் அரசாங்கம் மிகவும் கவனமாக சீனாவுடன் கொடுக்கல், வாங்கல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி 
No comments: