எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 34 அரசியலில் யார் நல்லவர்…? யார் கெட்டவர்…? தார்மீகமும் காற்றில் கலந்த பேரோசையும் ! முருகபூபதி


யாழ்ப்பாணம் பொது நூலக எரிப்புடன், அந்த 1981 ஆம் ஆண்டு கடந்துவிடவில்லை.  அந்த ஆண்டு நடுப்பகுதியில் வடக்கில் பற்றி எரிந்த தீ, படிப்படியாக மேற்கிலங்கையிலும் மலையகத்திலும் பரவியது.

அதற்கு  காலிமுகத்திடலுக்கு முன்பாக பிரிட்டிஷாரின் காலத்தில் அமைந்த நாடாளுமன்றத்தில் அரசு தரப்பு அமைச்சர்களும் எம். பி. க்களும் பேசிய பேச்சுக்கள்தான் பின்னணிக்காரணம்.

முக்கியமாக பாணந்துறை எம். பி. நெவில் பெர்னாண்டோ,


அமைச்சர் சிறில் மத்தியூ ஆகியோர் கொண்டு வந்த எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாதம்தான்.

அமிரை காலிமுகத்திடலில் கழுவேற்றிக்கொல்லவேண்டும் என்றெல்லாம் பேசினார்கள். விவாதங்கள் இரவு வரையில் தொடர்ந்தன.  அந்தச்செய்திகளை வீரகேசரியில் இரவு நேரப்பணியில்   ஒப்புநோக்கும்போது, என்னுடனிருந்த கிழக்கு மாகாணத்தில் கிரானைச்சேர்ந்த கனகசிங்கம், மற்றும் தனபாலசிங்கம் ஆகியோருடன் அரசியல் பேசிக்கொண்டிருப்பேன்.

கனகசிங்கம், பொன்னரி என்ற பெயரில் ஓவியங்களும் வரைவார். கோகிலா மகேந்திரனின் முரண்பாடுகளின் அறுவடை கதைத் தொகுதிக்கும் அவர்தான் அட்டைப்படம் வரைந்தார்.

அத்துடன் கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தையிலிருந்து வௌியான சுதந்திரன் பத்திரிகையுடன் வெளியிடப்பட்ட சுடர்  கலை, இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலும் இணைந்திருந்தார்.

சுடரில்  எழுத்தாளர் வாகரைவாணனும் பணியாற்றினார்.  சுதந்திரன் காரியாலயத்தில் அதன்  ஆசிரியர் கோவை


மகேசனும் தங்கியிருந்தார்.  அவ்வப்போது கவிஞர் காசி. ஆனந்தனும் வந்துபோவார். அவர் அக்காலப்பகுதியில் சிறை மீண்ட செம்மல்.

தனபாலசிங்கம்,  இடதுசாரி சிந்தனைகொண்டவர். அவர் தோழர் சண்முகதாசனின் அணியிலும்,  கனகசிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளராகவும் இருந்தவர்கள். நான் மற்றும் ஒரு இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளனாக அதன் வாராந்த ஏடு செஞ்சக்தியின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தேன்.

இந்தப்பின்னணியில் எமக்கிடையே அரசியல் பற்றிய பேச்சுக்கள் வரும்போது வாதப்பிரதிவாதங்களுக்கும் குறைவிருக்காது.

கனகசிங்கத்தின் குடும்பத்தினர் 1977 இல் கொழும்பு முகத்துவாரத்தில் குடியிருந்தபோது,  சிங்கள இனவாதிகளினால் தாக்கப்பட்டனர். கனகசிங்கத்தின் மனைவி கத்தி வெட்டுக்காயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டவர்.

இந்தக்குடும்பம், அந்தக்கலவரம் தொடர்பாக விசாரித்த சன்சோனி ஆணைக்குழுவின் முன்பாகத் தோன்றி சாட்சியம் வழங்கியிருக்கிறது.

இரவு உணவை , ஆமர் வீதிச்சந்தியில் கெப்பிட்டல்  தியேட்டருக்கு அருகில் அமைந்த சந்துக்குள் இயங்கிய


தீவுப்பகுதியைச்சேர்ந்தவர்களின் சாப்பாட்டுக்கடையிலும், எதிர்ப்புறம் அமைந்த அம்பள் – வாணி விலாசிலும் பெற்றுக்கொள்வோம்.

புட்டும், நண்டுக்கறியும், சம்பலும் அந்த சந்துக்கடையில் விசேடம்.  கிளிநொச்சி எம்.பி.யாகவிருந்த ஆனந்தசங்கரியும் கொழும்பில் நின்றால் அங்கேதான் சாப்பிடவருவார்.

பின்னாளில் அவர் தாவரபட்சிணியாகிவிட்டதாக அறிந்தேன்.

1981 ஜூலை மாதம் 23 ஆம் திகதி நாடாளுமன்றில் அமிருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத்தீர்மான விவாதம் எத்தகைய விளைவுகளை  ஏற்படுத்தும் என்பதை தெரிந்தோ தெரியாமலோ அதிபர் ஜே.ஆரும், பிரதமர் பிரேமதாசாவும் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக பேசுவதற்கு அனுமதித்திருந்தனர்.

பிரேமதாசா அன்றைய விவாதத்தின்போது,  வெளியூர் நிகழ்ச்சி


ஒன்றை  ஏற்பாடு செய்துகொண்டு, அகன்றுவிட்டார். அதிபர் ஜே.ஆர். நாடாளுமன்றத்திற்கு சிம்மாசனப்பிரசங்கத்திற்கு மாத்திரமே வருவார்.

அந்த விவாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் தொடர்ந்து நடந்தது. வாய்க்கு வந்தபடி ஆளும்தரப்பு எம்.பி.க்கள் சிலர் பேசினார்கள். எதிரணியிலிருந்த ஏழு சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள், அதனைக்கண்டித்து அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டதல்ல எனக்கூறி வெளிநடப்புச்செய்தார்கள்.

அரசு எம்.பி.க்கள் 121 பேர் ஆதரித்து வெற்றிகொண்டனர்.  அமைச்சர் தொண்டமானும் துணை நீதியமைச்சர் ஷெல்டன் ரணராஜாவும் வாக்களிக்க மறுத்தனர்.

இரண்டுபேரும் கண்டி,  செங்கடகல மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள்.  விஞ்ஞான கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூவை சுதந்திரமாக பேசவிட்ட ஜே.ஆர், அவரது வரம்புமீறிய பேச்சைக்கேட்டபின்னர், அவரை பதவியிலிருந்து தூக்கினார்.

ஐக்கியதேசியக்கட்சியின் தொழிற்சங்கங்க சம்மேளனத்தின் பெருந் தலைவராகவிளங்கிய பலம்பொருந்தி சக்தியான சிறில் மத்தியூவை முன்னால் விட்டு வீழ்த்திய சாணக்கியர் பிரேமதாசா, தனது எதிர்காலத் தலைமைத்துவத்திற்கான பாதையை செப்பனிடத் தொடங்கிய காலமும் அதுதான்.

சிறில் மத்தியூ , தனது அமைச்சை இழந்ததும் அவ்விடத்திற்கு வந்தவர் எங்கள் நீர்கொழும்பூர் எம்.பி. டென்ஸில் பெர்னாண்டோ.

இந்த சம்பவங்களின் எதிரொலியாக நிகழ்ந்த தொடர் அநர்த்தம்தான் 1981 ஆம் ஆண்டு கலவரம்.

அந்த ஆண்டு ஜூன் மாதம் யாழ்ப்பாணம் எரிந்தது.  ஜூலை


மாதம் இரத்தினபுரி மாவட்டமும் கம்பகா மாவட்டத்தில் எங்கள் ஊரும் எரிந்தது.

எங்கள் ஊரின் பிரதான வீதியில் பல தமிழர்களின் புடவை, நகை, பலசரக்கு கடைகள் சூறையாடப்பட்டபின்னர் எரிக்கப்பட்டன.

ஶ்ரீமுத்துமாரியம்மன் வீதியில் வசித்த ஆரம்ப வகுப்பில் எனக்கு கல்விபோதித்த திலகமணி ரீச்சரின் வீட்டுக்கு அந்த இரவு ஏதோ அலுவல்காரணமாக சென்றிருந்தபோது எதிர்ப்பறம்  அமைந்து காரைநகரைச்சேர்ந்த வர்த்தகர் தேவராஜாவின் வீடு தாக்கப்பட்ட ஓசை கேட்டது. அவருக்கு நீர்கொழும்பு - யாழ்ப்பாணம் மார்க்கத்தில் கொச்சிக்கடையில் சில வர்த்தக நிறுவனங்கள் இருந்தன.

நான் அடுத்தவீட்டுக்குள்சென்றபோது அங்கிருந்த முதிய அம்மா, பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தார்.  அவரைத்தூக்கிக்கொண்டு மொட்டை மாடிக்குச்  சென்றேன். அங்கிருந்து இருட்டில் பார்த்தபோது சிலர் தேவராஜா வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தனர்.  அப்போது வீட்டில் இருந்தது அவரது இரண்டாவது மகன் சற்குணராஜா மாத்திரமே. அவர் சமயோசிதமாக காரை எடுத்துக்கொண்டு பறந்தார்.

அவர் சென்றது கொச்சிக்கடைக்கு. அங்கே அவர்களின் கடைகள் எரிந்துகொண்டிருந்தன.

இவ்வளவும் நடந்தபின்னர்தான் பொலிஸார் வெளியே வந்தனர்.

நான் சூரியவீதியில் எங்கள் வீட்டுக்குத்திரும்பியபோது,  சிலர் புடவைக்கடைகளில் சூறையாடிய துணிவகைகள், உடு புடவைகளை சுமந்துகொண்டு சென்றனர்.

தமிழ்மக்கள் எவரும் கொல்லப்படவில்லை.  ஆனால், சூறையாடல்களும் தீவைப்பும் தொடர்ந்தது.

மறுநாளும் நிலைமை தொடரும் அச்சமும் பதட்டமும் கடற்கரை வீதியில் வாழ்ந்த ஏராளமான தமிழ்க்குடும்பங்களுக்கு வந்தது.

அந்த வீதியில்தான் மூன்று கோயில்களும் எமது தமிழ்ப்பாடசாலையும் அமைந்துள்ளன. அங்கிருந்தவர்கள் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அந்த வீதியில் கேட்தோட்டம் என்ற குடியிருப்பில் வசித்த தமிழ் இளைஞர்கள் தற்காப்பு வேலைத்திட்டத்தில் இறங்கநேர்ந்தது.

கோயில்களிலிருந்த பழைய ரியூப் லைற்றுகளை சேகரித்தோம்.  வெற்றுச்சோடாப்போத்தில்களில் மண்ணெண்ணை நிரப்பி, அதன் வாயில் துணியினால் திரிசெய்து செருகினோம்.

இரும்புப்பொல்லுகள்,  தடிகள் எடுத்துவைத்துக்கொண்டோம். அன்று இரவு அம்மன்கோயில் சந்தியிலும், செபஸ்தியார் கோயில் சந்தியிலும் சிலாபம் வீதியிலிருந்து கடற்கரை வீதிக்கு வரும் குறுக்கு ஒழுங்கையில் டச்சுக்காரர்களின் காலத்தில் வெட்டப்பட்ட கால்வாயின் மேலாகவிருந்த  பலகை பாலத்தின் மீதும் எமது இளைஞர்கள் நின்று  அவற்றின் ஊடாக வந்து தாக்கமுயன்ற வன்முறையாளர்களை விரட்டினார்கள்.

பொலிஸை நம்பிப்பிரயோசனம் இல்லை. யாழ்ப்பாணத்தில் தீவைத்தது பொலிஸ்தானே!  ஆனால், எங்கள் ஊரில் அந்தவேலையை பேரினவாதிகளின் ஏவல் சக்திகள் பொறுப்பெடுத்திருந்தன.

எங்கள் பகுதிக்குள் வரமுடியாத அந்த தீயசக்திகளின் ஏவல்படை, அங்கே ஆயுதங்கள் இருக்கின்றன என்ற புரளியை பொலிஸாரிடம் சொன்னது.

மறுநாள் மாலையில் பெருந்தொகையான பொலிஸார் குறிப்பிட்ட கேட்தோட்டம் குடியிருப்புகளை முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.  மண் நிரப்பிய போத்தல்கள் சில சிக்கின.  சில தமிழ் இளைஞர்கள் ஜீப்பில் ஏற்றப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு தடுத்துவைக்கப்பட்டனர்.

இந்த அமளி ஒரு புறம் தொடர்ந்துகொண்டிருக்கையில் கொச்சிக்கடை, தோப்பு முதலான பிரதேசங்களிலிருந்து சில தமிழ்க்குடும்பங்கள் உடுத்த உடையுடன் அகதிக்கோலத்தில் கோயிலடியில் வந்து இறங்கின. அவர்களில் பெண்களும் இருந்தமையால், கோயில் நிருவாகம் அங்கே தங்குவதற்கு அனுமதிக்கவில்லை.  பிள்ளையார் கோயிலுக்கு முன்பாகவிருந்த எமது இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் அவர்களை தங்கவைத்து சமைத்த உணவு கொடுத்தோம்.

பொலிஸார் இழுத்துச்சென்ற இளைஞர்களை விடுவிக்க பொலிஸ் நிலையம் சென்றபோது, அங்கே கம்பகா மாவட்ட சபை அரசு சார்பு உறுப்பினரும் எங்கள் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் விஞ்ஞான கைத்தொழில் அமைச்சருமான டென்ஸில் பெர்ணான்டோவும் இருந்தனர். அவர்களை பத்திரிகை நிருபராக இருந்த காலம்முதல் தெரிந்திருந்தமையால்,  அந்த இளைஞர்களை விடுவிக்குமாறு கேட்டேன்.

அதற்கு  அமைச்சர் டென்ஸில்  சொன்ன பதிலை  உலக நகைச்சுவைகளில் அடக்கலாம்.   “   முழு இலங்கையையும் அழிக்கும் ஆயுதங்கள் அவை. எப்படி விடமுடியும். இனி சட்டம் தனது கடமையை செய்யும்.  அவர்களை பொலிஸார் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவார்கள். அங்கே சென்று பேசிக்கொள்ளுங்கள்  “

அந்த டென்ஸில் பெர்னாண்டோ அமிர்தலிங்கம் சட்டக்கல்லூரியில் படித்த காலத்தில் அவரது சகமாணவனாக இருந்தவர்.  தமிழ்பேசும். கத்தோலிக்கர். 

ஒரு சமயம் முன்னக்கரை பிரதேச மீனவ மக்கள் தமக்கு பொது மலகூடம் அமைத்துத் தருமாறு அவரிடம் கேட்டபோது,  “ பன்றி வளர்க்கச்சொன்னவர் “  1966 ஆம் ஆண்டு முன்னாள் எம்.பி. குவின்ரின் பெர்ணான்டோவின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நடந்த இடைத்தேர்தல் மூலம் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தவர்.

அப்பொழுது பாடசாலை மாணவனாக இருந்த நான்,  அந்த இடைத்தேர்தல் பிரசாரக்கூட்டங்களில்தான் பிரதமர் டட்லியையும்,  அதே மேடையில் கல்குடா எம்.பி தேவநாயகத்தையும் வவுனியா எம்.பி. தா.சிவசிதம்பரத்தையும் ஜே.ஆரையும் பார்த்திருக்கின்றேன்.

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியுடன் தேன்நிலவு கொண்டாடிய  ( தேவநாயகம் தவிர்ந்த ) தமிழரசுக்கட்சி எம்.பி.க்கள், அமிர், மற்றும் இரண்டு சிவசிதம்பரங்களும் 1983 அதே ஐக்கிய தேசியக்கட்சியின் பதவிக்காலத்தில் தமிழ்நாட்டில் பாதுகாப்பிற்காக தஞ்சமடைந்தனர். அந்தக்காட்சியையும் 1984 ஆம் ஆண்டு சென்னைசென்றபோது நேரடியாகப் பார்த்தேன்.

இலங்கை அரசியலில் இப்படி எத்தனையோ நகைமுரண்கள் இன்றுவரையில்  தொடருகின்றன.

1981 ஆம் ஆண்டு ஜூலையில் எங்கள் ஊர் தமிழர்களின் கடைகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரின் மறைமுக ஆதரவு அந்த ஈனச்செயல்களுக்கு துணைபோகலாம் என்று அறிந்த ஜே.ஆர். கட்டுநாயக்காக விமானப்படை தளத்திலிருந்து விமானப்படையினரை ஊரைப்பாதுகாக்கும் பணிக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.

தமிழர் செறிந்து வாழும் கடற்கரை வீதியில்தான் அவருடன் முன்பொரு காலத்தில் ஒன்றாக படித்த இரண்டு கத்தோலிக்கர்களின் வீடுகளும் அமைந்திருந்தன.

அவர்களும் ஜே.ஆருக்கு ஊரின் நிலைமைகளை சொல்லியிருக்கவேண்டும். அதில் ஒருவரது மகன்தான் போல் பெரேரா. இவர் ஜே.ஆர். கட்டுநாயக்காவில்  அமைத்த சுதந்திர வர்த்தக வலயத்திலும் பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவிலும் உயர் பதவியில் இடம்பெற்றவர்.

அதிபர் ஜே.ஆர், பிரதமர்  பிரேமதாசாவுடன் ஒருநாள் எங்கள் ஊருக்கு வந்து எரிக்கப்பட்ட கடைத் தொகுதிகளை பார்த்தார்.  அத்துடன் தொண்டமான், செல்லச்சாமியுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட  இடங்களையும் சென்று பார்வையிட்டு நிலைமையின் தீவிரத்தை அறிந்தார்.

அன்றும் ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமை அமைப்புகளும் தமிழகத்தில் முதல்வர் எம்.ஜி. ஆரின் அரசும் இந்திய மத்திய அரசும் அழுத்தங்களை பிரயோகித்ததையடுத்து ஜே.ஆர். எதிர்காலத்தில் தனக்கு வரப்போகும் நெருக்கடிகளை உணர்ந்தார்.

அவர் எங்கள் ஊருக்கும் இரத்தினபுரி உள்ளிட்ட மலையகப்பகுதிகளுக்கும் சென்று நேரடியாக அநர்த்தங்களை பார்த்துவிட்டு திரும்பிய பின்னர், தமிழ் மக்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை பகுதியில் கடற்கரையோரமாக அமைந்த இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஆளும் கட்சியின் நிருவாகக்குழுவின் கூட்டத்தை நடத்திப்பேசிய பேச்சுக்களையும் வீரகேசரியில் ஒப்பு நோக்கநேர்ந்தது.

அதிலிருந்து சில வசனங்கள்:

 “ நான் ஆத்திரத்தில் அல்ல. மனம் நொந்து பேசுகிறேன்.  நாடெங்கும் அண்மையில் நடந்திருக்கும் வெறிச்செயல்கள் நாம் மதித்துப்போற்றிப்பின்பற்றுகின்ற உயர் சமய நெறிகள், நம்மில் சிலரை பண்புள்ள மனிதர்களாக மாற்றவேயில்லை. சில மிருகங்கள் – இதைச்சொல்லவே வெட்கப்படுகின்றேன். அதிலும் நம் கட்சியினர் சிலர் கூட இந்த வன்முறைகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றனர். எமது எம்.பி.க்கள் நாடாளுமன்றின் உள்ளும் புறமும் பேசிய பொறுப்பற்ற பேச்சுக்கள் நாடெங்கும் கொலை , கொள்ளை, கொள்ளி வைப்பு பாலியல் வன்முறை முதலான கொடுஞ்செயல்களுக்கு  காரணமாகியுள்ளன. ஒரு கட்சிக்கு தலைமை ஏற்றிருக்கும் நான் அது குறித்து பெருமையாக நினைக்கவேண்டும். அந்நிலை இல்லையாயின் நான் எதற்காக அதற்கு தலைவராக இருத்தல்வேண்டும்.  வன்முறைகளை ஏவிவிட்டு, அதன்மூலம்தான் பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் எழுந்துள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணமுடியும் என்று எவரேனும் கருதினால், அவர்களே வந்து இந்த தலைமைப்பதவியை ஏற்கட்டும்.  நான் ஒதுங்கிக்கொள்கின்றேன். “

அவரது ஆதங்கம் நிரம்பிய உரையை எமது வீரகேசரி அலுவலக நிருபர் எழுதிக்கொண்டு வந்தார். கெமராமேன் படம் எடுத்துக்கொண்டு வந்தார். செய்தி ஆசிரியர் டேவிட் ராஜூ செம்மைப்படுத்தினார்.

அதனை அச்சுக்கோப்பாளர்கள் அச்சுக்கோர்த்தனர். நாம் ஒப்புநோக்கினோம். பத்திரிகை அச்சாகி  தமிழ் மக்களிடம் சென்றது.  

அந்த மக்கள்,  “ ஆகா…. ஜனாதிபதி நல்லவர்தான். அவருக்கு கீழே இருப்பவர்கள்தான் கெட்டவர்கள்  “ என்ற முடிவுக்கு வந்தார்கள்.

ஜே.ஆர். அன்று பேசிய பேச்சு அச்சில் வெளியானாலும், வெள்ளவத்தை கடற்கரைக்கு அருகில்  இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்திலிருந்து நிகழ்த்தப்பட்டமையால், கடல் காற்றோடு இரண்டறக்கலந்து காணாமல் போய்விட்டதோ என்றும் யோசித்தேன்.

அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் 1983 ஆம் ஆண்டு பெரிய இனக்கலவரம் வந்தது.

 “ மிஸ்டர் தர்மிஸ்டர் ஜே.ஆர். அவர்களே… நீங்கள் நல்லவரா..? கெட்டவரா..?  “ என்ற தொனியில் கேட்பதற்கு சந்தர்ப்பம் கிட்டவில்லை.

இத்தகையதோர்  வசனத்தை 1987 ஆம் ஆண்டு வெளிவந்த  கமல் நடித்த நாயகன் படத்தில் வேலுநாயக்கரின் பேரன்,   நாயக்கரிடம் கேட்பான்.

இது இவ்விதமிருக்க, நீர்கொழும்பில் தமிழர்களுக்கு நேர்ந்த இன்னல்கள் பாதிப்புகள் குறித்த படங்கள் மற்றும் ஆதாரங்களுடன் எம்மூர் அன்பர்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பில் எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கத்தை சந்திக்கச்சென்றேன்.

அவருடன் அச்சமயம்  இருந்தவர்கள் யாழ்ப்பாணம், கோப்பாய் எம்.பி. மார் யோகேஸ்வரனும் ஆலாலசுந்தரமும்.

இந்தச் சந்திப்பு பற்றி ஏற்கனவே அமிர் அண்ணன் பற்றிய எனது பதிவில் எழுதியிருக்கின்றேன்.

அன்று எமது மக்களின் பாதுகாப்புக்காக அரண் அமைத்து காவல் நின்ற தமிழ் இளைஞர்கள் பொலிஸாரால் கைதாகி சிறை வைக்கப்பட்டபோது அவர்களின் விடுதலைக்காக நீதிமன்றில் வாதாடிய தமிழ்பேசும் சட்டத்தரணியான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, பின்னாளில்  தமிழ் போராளிகளின் தாக்குதலினால் கொல்லப்பட்டார்.

அமிர், யோகேஸ், ஆலாலசுந்தரம், தருமலிங்கம் உட்பட பல தமிழ்த்தலைவர்களும் அதே தமிழ்ப்போராளிகள் எனச்சொல்லப்படுபவர்களினால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டனர்.

தார்மீகம் பேசிய  ஜே.ஆரும், இனவாதம் கக்கிய சிறில் மத்தியூவும்  இயற்கை மரணம் எய்தினார்.

ஒரு சமயம் நாடாளுமன்றில், அமிர்தலிங்கத்தைப் பார்த்து சிறில் மத்தியூ ஒரு கதை சொன்னார்.

மகாத்மா காந்தி கொல்லப்பட்டபோது,  அங்கே கவர்னராக இருந்த மவுண்ட்பேர்ட்டன்,   “ பிரிட்டிஷாருக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்த காந்தியின் மீது எந்தவொரு பிரிட்டிஷ் பிரஜையும் கைவைக்கவில்லை. எந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக அவர் குரல் கொடுத்தாரோ அதே தேசத்தின் பிரஜைதான் காந்தியை சுட்டான்.    “ என்றார்.

“ இதனை கௌரவ  எதிர்க்கட்சித்தலைவருக்கு சொல்கிறேன்.  வளர்த்த கடா மார்பில் பாயலாம்.  “

என்னைப்போன்றவர்கள் இந்த வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கின்றோம் !

இனிச்சொல்லுங்கள் : யார் நல்லவர்…? யார்…? கெட்டவர்…?

( தொடரும் )

letchumananm@gmail.com

 

 

 

 

 

   

No comments: