மல்லிகை ஜீவாவின் வாழ்வில் சுவாரசியமான பக்கங்கள் --- அங்கம் 09 ஜீவாவுக்கும் மேத்தாதாசனுக்குமிடையில் தந்தை – மகன் நேசம் ! அய்ரோப்பிய இதழும் சாதி அகம்பாவமும் !! முருகபூபதி


கம்பனுக்கு ஒரு தாசன் இருந்ததுபோன்று ( கம்பதாசன் ) பாரதிக்கு ஒரு தாசன் இருந்ததுபோன்று ( பாரதிதாசன் ) கவிஞர் மேத்தாவுக்கும் ஒரு தாசன் இருந்தார்.

 

அவர்தான் கவிஞர் மேத்தாதாசன்.

கவிஞர் மேத்தா,        இஸ்லாமியர்.  அவரது இயற்பெயர் முகம்மது மேத்தா.     மேத்தாவின் தாசனாகிய  கவிஞர் விஜயராகவன்       இந்து     பிராமணர்.

இந்தியாவில்      இந்துக்கள்  -    இஸ்லாமியர்      முரண்பாடுகள் 


   இந்திய சுதந்திரப்போராட்ட     காலத்திற்கு    முன்பிருந்தே    தொடங்கி பாகிஸ்தான்     பிரிவினையின்போது      உக்கிரமடைந்து ஆயிரக்கணக்கானோர்  பலியான  இரத்த  வரலாறை                                படித்திருக்கின்றோம்.  இந்தப்பின்னணியிலிருந்து மேத்தா – மேத்தாதாசனின் இலக்கிய     நேசத்தையும் நட்புறவையும்      நாம்      புரிந்துகொள்ளவேண்டும்.

 

மேத்தாவிடம்  மிகுந்த பிரியமாகவிருந்த  விஜயராகவனைப்                      (மேத்தா தாசனை) பார்த்த

   மேத்தாவின்   துணைவியார்  ஒரு  சந்தர்ப்பத்தில்                                      “ நல்லவேளை அவன் பெண்ணாகப்பிறக்கவில்லை. பிறந்திருந்தால்  என்பாடு               திண்டாட்டம்தான்   “     என்று      வேடிக்கையாகச்சொன்னார்.

 

அந்தளவுக்கு   மேத்தாவை   உளமாற     நேசித்த    கவிஞன்தான் 

  மேத்தாதாசன்.     அவரை      இலங்கைக்கு    அழைத்து     வந்து    எமக்கெல்லாம் அறிமுகப்படுத்தியவர்  எழுத்தாளர்   காவலூர்    ஜெகநாதன்.   

 

அந்தப்பயணத்தில்  மேத்தாதாசன்

எனதும்  மல்லிகைஜீவா,    கவிஞர்  மேமன்கவி ஆகியோரினதும்   உற்ற   நண்பரானார்.

மேத்தாதாசனின்     கவிதைத்    தொகுதி     காகிதக்கனவுகள்.     நர்மதா பதிப்பகம்    வெளியிட்டது.

 

அவரை முதலில் இலங்கையிலும் பின்னர் 1984 – 1990 ஆம் ஆண்டுகளில் சென்னையிலும் சந்தித்திருக்கின்றேன்

 

சகோதர வாஞ்சையுடன் உறவாடியவர்.  மல்லிகை ஜீவாவுக்கும் மேத்தாதாசனுக்கும் இடையே நீடித்திருந்தது  தந்தை – மகன் நேசம்.

பரஸ்பரம்  இருவரும் உளமாற ஒருவரை ஒருவர் நேசித்தனர்.

 

ஒரு சமயம் மல்லிகை ஜீவா சென்னை சென்றிருந்தபோது


, மேத்தாதாசன் அவருக்கு விருந்தளிக்க விரும்பினார்.  வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.

 

ஜீவாவுக்கு  மச்சம் சாப்பிடவேண்டும்.   ஆனால், அந்த பிராமணர் வீட்டில் மச்சம் சமைக்கமாட்டார்கள்.  மேத்தா தாசனின் பெற்றோர்  காப்பி, சிற்றுண்டி வழங்கி உபசரித்தார்கள்.

 

எனினும் அந்த விருந்துபசாரம் மேத்தாதாசனுக்கு திருப்தியில்லை. 

ஜீவாவை அழைத்துக்கொண்டு அசைவ உணவு பரிமாறப்படும் ஒரு உணவு விடுதிக்கு அழைத்துச்சென்றார்.

 

 “  அய்யா… உங்களுக்குத் தெரியும்தானே… நான் மச்சம் மாமிசம் சாப்பிடமாட்டேன்.  உங்களுக்கு விருப்பமானதை சொல்லுங்கள் ஓடர் கொடுக்கிறேன்.  “ எனச்சொல்லிவிட்டு,  சர்வரை அழைத்து ஜீவா கேட்டவற்றை வரவழைத்துவிட்டு, 


அய்யா, இருந்து சாப்பிடுங்கள்.  எனக்கு பக்கத்தில் ஒரு சின்ன அலுவல் இருக்கிறது. சென்று விரைவில் வருகிறேன்  “ எனச்சொல்லிவிட்டு அகன்றுள்ளார்.

 

அந்த பிராமண இளைஞனால்  அங்கு பரவியிருந்த மச்சம் – மாமிச கவிச்சி வாடையை சகிக்கமுடியாது.

 

ஜீவாவையும் விட்டு நகர முடியாது.  பக்கத்தில் செல்வதாக பொய் சொல்லிவிட்டு, வெளியே வந்து அந்த விடுதி வாசலில் காத்து நின்றார்.

 

சில நிமிடங்களில் வந்து ஜீவா உணவருந்தி முடிந்த பின்னர்,  அதற்குரிய பணத்தை செலுத்திவிட்டு, மீண்டும் ஜீவாவை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.

 

மேத்தாதாசனிடம் ஒரு மோட்டார் சைக்கிள் இருந்தது.  நான்


சென்னைக்கு சென்ற சந்தர்ப்பங்களிலும் அவர் என்னை அதில் இருத்தி அழைத்துச்சென்றிருக்கிறார்.

அன்றும் ஜீவாவை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டுதான் சென்னையையும் காண்பித்தார். அவ்வாறு இருவரும் அந்த மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது, 1987 ஆம் ஆண்டு சாலை விபத்தில் கொல்லப்பட்ட எழுத்தாளர் சுப்பிரமணிய ராஜூ பற்றியும் மேத்தா தாசன் நினைவுபடுத்தியதுடன், அந்த விபத்து நடந்த இடத்தையும் ஜீவாவுக்கு காண்பித்தார்.

 

அப்போது ஜீவா, அவரிடம்  “ தம்பி… நீயும் கவனம் ராசா… வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டாதே.   “  என்று தந்தையின் பரிவோடு சொல்லியிருக்கிறார். சுப்பிரமணிய ராஜூ இறந்து நான்கு வருடகாலத்தில்,  ஜீவா புத்திமதி சொன்ன மேத்தாதாசனும் 1991 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒரு சாலை விபத்தில் கொல்லப்பட்டார்.

 

மேத்தாதாசனின் திடீர் மறைவினால் ஜீவா கலங்கிவிட்டார். அந்த இழப்பின் துயரத்தை ஜீவா கடப்பதற்கு சிரமப்பட்டவேளையில்தான்,  அந்த நல்ல ஆத்மாவின் சிறப்பியல்புகளை என்னிடம் தெரிவித்தார்.

 

அய்ரோப்பிய இதழும் சாதி அகம்பாவமும்

 

ஈழத்தமிழர்கள் கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அய்ரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த பின்னர் இங்கிருந்தெல்லாம் பல பத்திரிகைகள் ,  இலக்கிய இதழ்கள் வெளிவந்தன.

 

1990 களில் அய்ரோப்பியாவிலிருந்து வெளிவந்த ஒரு வார இதழின் ஆசிரியர்  கடிதம் மூலம் தொடர்புகொண்டு கலை, இலக்கியப்புதினங்களை  தமது இதழுக்கு எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.

 

அந்த இதழின் ஆசிரியர் இலங்கையில் எனக்கு அறிமுகமானவர். அத்துடன் எமது குடும்ப நண்பராகவும் திகழ்ந்தார்.

 

அத்துடன் நான் வீரகேசரியிலும் அவர் மற்றும் ஒரு பத்திரிகையிலும் துணை ஆசிரியர்களாக பணியாற்றினோம்.  விதி அவரை முதலில் அய்ரோப்பாவுக்கும் என்னை பின்னாளில் அவுஸ்திரேலியாவுக்கும் அனுப்பிவைத்துவிட்டது.

 

 மின்னஞ்சல் தொழில் நுட்ப வசதி இல்லாத அக்காலப்பகுதியில் அந்த நண்பர் கடிதம் எழுதிக்கேட்டவாறு வாராந்தம்   கலை , இலக்கியப்புதினங்களை எழுதி தபாலில் அனுப்பிக்கொண்டிருந்தேன். அவரும் வாராந்தம் குறிப்பிட்ட இதழ்களை தபாலில் அனுப்பினார்.

 

ஓரு இதழில், “ யாழ்ப்பாணத்தில் போர் நெருக்கடிக்கு மத்தியிலும் காகிதாதிகளின் தட்டுப்பாடு நிலவிய சூழலில் ஜீவா, மல்லிகை இதழ்களை பாடசாலை அப்பியாசக்கொப்பித்தாளில் அச்சிட்டு, ஈழத்து  இலக்கிய வளர்ச்சிக்கு பாடுபடுகிறார் “ என்ற குறிப்பினை எனது பத்தியில் எழுதியிருந்தேன்.

 

அதற்கு அடுத்தவாரம் வந்த இதழில், ஒரு வாசகர், சாதி அகம்பாவத்துடன், ஜீவாவை கேவலப்படுத்தி, ( அந்த வார்த்தைகளை நான் இங்கே எழுத விரும்பவில்லை ) எனது பதிவுக்கு எதிர்வினையாற்றியிருந்தார்.

 

அதனைப்படித்தவுடன் நான் வெகுண்டேன்.  கடும்கோபத்துடன், தாமதிக்காமல் குறிப்பிட்ட இதழின் ஆசிரியரை  தொலைபேசியில் அழைத்து எனது கண்டனத்தை தெரிவித்ததுடன்,  “ இனிமேல் உமது இதழில் எழுதவே மாட்டேன்  “ எனச்சொல்லிவிட்டு. தபாலில் எனது கோபத்தை கொட்டி  கடிதமும் எழுதினேன். அதில், இனிமேல் உமது இதழை எனக்கு தபாலில் அனுப்பவும் வேண்டாம் “  என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

 

இதனால் நிலைகுலைந்துபோன அவர், மன்னிப்புக்கேட்டு கடிதம் எழுதியதுடன், தனது கவனக்குறைவினால் அந்த வாசகர் கடிதம் வெளிவந்துவிட்டது என்று சமாதானம் சொன்னர்.

 

தொலைபேசியிலும் தொடர்புகொண்டு மன்னிப்புக்கோரினார்.   இனிமேல் அவருடனோ, அவரது இதழுடனோ எந்தவித தொடர்பும் வைத்திருப்பதில்லை என்பதில் நான் மிகவும் பிடிவாதமாக  இருந்தேன்.

 

அவரது மற்றும் ஒரு இதழில், நிகழ்ந்த தவறுக்கு வருந்துவதாகவும் குறிப்பு எழுதியிருந்தார்.

 

அப்படியிருந்தும் சில வருடங்கள் அவருடன் நான் எந்தத்தொடர்பையும் பேணவில்லை. அவரது மனைவிக்கு என்னை நன்கு தெரியும்.  அவர் மூலமாகவும் என்னிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.

 

நாட்கள் கடந்தன.  2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி, ஜீவா அய்ரோப்பாவில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி முதலான நாடுகளுக்கு ஒருமாத காலம் இலக்கியச்சுற்றுலா சென்றார்.

 

அய்ரோப்பாவில் நீண்டகாலமாக இலக்கிய சந்திப்பு ஒன்று கூடலை நடத்திவரும் கலை, இலக்கியவாதிகள் ஜீவாவை தமது விசேட விருந்தினராக அழைத்திருந்தனர்.

 

அந்தப்பயணத்தின்போது, நான் மேலே குறிப்பிட்ட இதழின் ஆசிரியரும் தமது நாட்டிற்கு ஜீவா வந்ததும் சென்று சந்தித்து,    “ தனது இதழில்   உங்களைப்பற்றி வந்த எதிர்வினையால்,  முருகபூபதி என்னுடான நட்புறவை முறித்துக்கொண்டார்.  என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.  மீண்டும் எமக்கிடையே நட்புறவு மலர்வதற்கு நீங்கள்தான்  ஆவனசெய்யவேண்டும்  “ என்று மன்றாடியிருக்கிறார்.

 

நான் ஜீவாவை 1997 இல்  இலங்கையில் சந்தித்தபோது அந்த விவகாரம் பற்றியும் சொல்லியிருந்தபோது, ஜீவா எதுவும் பேசாமல் சிரித்தார். 

 

அவ்வாறே அந்த இதழாசிரியர் தனது வருத்தத்தை காலம் கடந்து அய்ரோப்பாவில் சொன்னபோதும் ஜீவா எதுவும் சொல்லாமல் சிரித்திருக்கிறார்.

 

மீண்டும் மீண்டும் அந்த இதழ் ஆசிரியர் எங்களுக்கிடையில் ஜீவா ஒரு சமாதானத் தூதுவனாகவேண்டும் எனச் சொன்னதும், ஜீவா,   “ ஐஸே…. நீரும் எனது நண்பன். அவரும் எனது நண்பன். பிரச்சினை உங்கள் இருவருக்கும்தான்.  அதில் நான் சம்பந்தப்பட்டிருந்தாலும், பிரச்சினை உங்களிருவரிடமிருந்தும்தான் தொடங்கியிருக்கிறது.  நீங்கள் இருவருமே பேசித்தீர்த்து சமாதானமாகிவிடுங்கள். என்னைப்பற்றி வரும் எந்தவொரு எதிர்வினைகளும் விமர்சனங்களும் என்னை எதுவும் செய்துவிடாது.  நான் பாஷாணத்தில் புழுத்து புழு  என்பது தெரியும்தானே..!  “ என்று சொல்லியிருக்கிறார்.

 

இந்தச்செய்தியை 2005 ஆம் ஆண்டு நான் இலங்கை சென்ற சமயம் மல்லிகைப்பந்தல் சார்பில் ஜீவா எனக்கு வழங்கிய தேநீர் விருந்தின்போது தெரிவித்தார்.

 

 

இந்த அங்கத்தில் ஜீவா சம்பந்தப்பட்ட இரண்டு குறிப்புகளை பார்த்தீர்கள்.  இந்த இரண்டு குறிப்புகளுக்குமிடையில் ஒரு மெல்லிய ரேகை இழையோடுகிறது.

 

சென்னையில், தமிழகத்தைச்சேர்ந்த ஒரு பிராமண வகுப்பினைச்சேர்ந்த இளைஞன், ஜீவாவை எப்படிப்பார்க்கிறான்..?

 

அய்ரோப்பாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும்  ஈழத்தின் வடபுலத்து மேல்சாதிக்காரன்  ஜீவாவை எப்படிப்பார்க்கிறான்…?

 

இந்த இரண்டு கேள்விகளுக்கும் இடையில் தெளிவை தேடுங்கள் !

 

இது இவ்விதமிருக்க, அய்ரோப்பாவிலிருந்து வெளிவந்த உயிர்நிழல் ( 2001 ஜனவரி – பெப்ரவரி )  இதழில் ஜீவா சொன்னதை அவரது வார்த்தைகளிலேயே இங்கு பதிவுசெய்கின்றேன்.

 

 “ தனக்கு கூடத் தெரியும் என்கிறது ஒருவகையான இலக்கிய மிரட்டல். உன்னைவிட எனக்குத் தெரியும் என்று சொல்கிறதிலை, ஒரு அகம்பாவம். எத்தனை தத்துவங்கள் வந்தது…? ஆனால், மனிதன் மனிதனாய் இருக்கிறது என்கிற தத்துவம்தான் உலகத்தில் ஆகச்சிறந்தது. மனிதன் மனிதனாய் மனிதப் பண்போடும், மனித நேசத்தோடும் பக்கத்திலுள்ளவனுடன் அன்பு செலுத்துகிறதுடன், அவனுடைய நல்வாழ்வுக்காகத் தன்னுடைய வாழ்வில் ஒரு பகுதியை ஒப்படைக்கிறதோடு இருக்கவேணும். என்னதான் ஆயிரம் தத்துவத்தைச்சொல்லி என்ன – இந்த ஒரு நாலைஞ்சு வரிக்குள்ளைதான் இவ்வளவு தத்துவங்களும் அடங்குது.  “

 

( தொடரும் )

 

letchumananm@gmail.com

 

 

 

 

 

 

No comments: