ஸ்வீட் சிக்ஸ்டி 7- பாலும் பழமும் - ச சுந்தரதாஸ்

.

 1960ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக கோலோச்சிக் கொண்டிருந்தவர் பீம்சிங். தொடர்ச்சியாக சிவாஜி கணேசனின் நடிப்பில் படங் களை டைரக்ட் செய்து அவை எல்லாம் அடுத்தடுத்து வெற்றி கண்டு கொண்டிருந்தன. அந்த வரிசையில் ஜி என் வேலுமணி சரவணா பிலிம்ஸ் சார்பில் உருவாக்கிய படம் பாலும் பழமும்.

பாகப்பிரிவினை என்று படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே கூட்டணி மீண்டும் இணைந்து இப்படத்தை உருவாக்கியது. சிவாஜியின் அனுசரணையுடன் வேலுமணி நட்சத்திரப் பட்டாளத்துடன் படத்தை உருவாக்கினார். சிவாஜி எம் ஆர் ராதா சுப்பையா பாலையா நாகையா சாயிராம் இவர்களுடன் மலையாளத்தில் பிரபலமாக திகழ்ந்த பிரேம் நசீர் என்று ஒரு அணிவகுப்பே படத்தில் இடம்பெற்றது. அதேபோல் சரோஜாதேவி சவுகார்ஜானகி சுந்தரிபாய் ஆகியோரும் இணைந்து கொண்டனர். ஜி பாலசுப்பிரமணியம் படத்தின் கதையை எழுதி இருந்தார்.

பீம்சிங் படம் என்றாலே குடும்ப படம் தான் என்று முத்திரை குத்தப்பட்டதனால் இப்படமும் உணர்ச்சிகரமான நடிப்பு மனதை நெகிழச் செய்யும் காட்சிகள் கருத்துள்ள வசனங்கள் என்ற வகையில் உருவானது. பாசுமணி வசனங்களை எழுதியிருந்தார். உணர்ச்சிகரமாக வசனம் எழுதிய பாசுமணி எம்ஆர் ராதாவின் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் பல பஞ்ச் வசனங்களையும் எழுதி ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.


டாக்டராக வேலை செய்பவர் நர்சைத்தான் கட்டிக்கொள்ள வேண்டும் இன்ஜினியர் சித்தாளை ஆபீஸ் மேனேஜர் டைப் அடிக்கிற பெண்ணை கட்டிக்கனும், அப்பத்தான் தொழில் வளரும் என்று ராதா கூறும் இடம் ரசிகர்களை பரவசப்படுத்தியது.

காச நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க இரவு பகலாக பாடுபடும் டாகடர் ரவி தன் மனைவிக்கும் காச நோய் தொற்றி உள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவளை பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படவே வைத்தியத் துறையின் மீதான அவன் கவனம் சிதறுகிறது இதனால் அவனுக்கு தடையாக இருக்க விரும்பாத நீலா அவனை பிரிகிறாள். ஒரு ரயில் விபத்தில் அவள் இறந்து விட்டாரள் என்ற செய்தி பரவி வரவே மனமுடைகிறான் .

இப்படி அமைந்த படத்தின் கதைக்கு மேலும் மெருகூட்டுவது போல் கவிஞர் கண்ணதாசனின் தேனான பாடல்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ரசிகர்களை மெய்மறக்கச் செய்தன.

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன், நான் பேச நினைப்பதெல்லாம் போனால் போகட்டும் போடா, காதல் சிறகை காற்றினில் விரித்து போன்ற பாடல்கள் காலத்தை கடந்து இன்றும் ஒலிக்கின்றன.

சரோஜாதேவி சிவாஜிக்கு ஈடுகொடுத்து நடித்திருந்தார். சவுகார் ஜானகியின் நடிப்பு வழக்கம்போல் சிறப்பு. சிவாஜி டாக்டர் பாத்திரத்தின் தன்மை கெடாமல் நடித்தார்.

பால் துரைசிங்கம் படத்தொகுப்பை நேர்த்தியாகச் செய்ய விட்டல்ராவ் ஒளிப்பதிவை மேற்கொண்டார் . சிவாஜி பீம்சிங் கூட்டணியின் மாபெரும் வெற்றிப்படமாக பாலும் பழமும் விளங்கியது. சில வருடங்கள் கழித்து ஸ்ரீதர் டைரக்ஷனில் சாத்தி என்ற பெயரில் இந்தியிலும் வெளிவந்தது

No comments: