பசுமை நிறைந்த நினைவுகளும் ! பார்த்து வியந்த பனைமரங்களும் !! யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் கற்றதும் பெற்றதும் !!! முருகபூபதி



பாடசாலைப் பருவம் பசுமை நிறைந்த நினைவுகளை உள்ளடக்கியிருக்கும்.

எனது வாழ்வில், 1954 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டுவரையில் நான்கு பாடசாலைகளில் எனது பெரும்பாலான பொழுதுகள் கழிந்திருக்கின்றன.

முதலில் எங்கள் நீர்கொழும்பூரில்  1954 ஆம் ஆண்டு விஜயதசமியன்று தொடங்கப்பட்ட விவேகானந்தா வித்தியாலயம் 32 மாணவர்களுடன் அங்குரார்ப்பணமாகியபோது, அதன் முதல் மாணவனாக இணைத்துக்கொள்ளப்பட்டு, 1963 ஆம் ஆண்டு முதல் தவணை வரையில் அங்கேயே ஆரம்பக்கல்வியை கற்றபின்னர், எதிர்பாராதவகையில் யாழ்ப்பாணம், அரியாலையில்  நாவலர் வீதியில் அமைந்த  அன்றைய ஸ்ரான்லிக்கல்லூரியில் பிரவேசிக்க நேர்ந்தது.

எனது வாழ்வில் பல எதிர்பாராத திருப்பங்கள், பால்யகாலம் முதலே நிகழ்ந்துவந்திருக்கின்றன.  அத்தகைய  திருப்பங்களும் முடிவில்லாமல் தொடருவதன் விளைவுதான்  இந்த ஆக்கத்தின்


ரிஷிமூலம்.

அண்மையில் எனது வாட்ஸ் அப்பிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அனுப்பியவர் இங்கிலாந்தில் வதியும் எனது குடும்ப நண்பர் மகேந்திரன்.

அதில், அவர்,  “ முருகபூபதி நீங்கள் முன்னர் கல்வி கற்ற எமது யாழ்ப்பாணம் அரியாலை கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் சந்திப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி இணையவழியில் காணொளி ஊடாக நடக்கவிருக்கிறது.

அது நடக்கும் நேரம் உங்கள் அவுஸ்திரேலியாவில் நடுச்சாமம். இயலுமானால் இணைந்துகொள்ளுங்கள்.   “ என்று அந்த குறுஞ்செய்தி சொன்னது.

எனக்கும்  இந்த நிகழ்வு பற்றி அறிவிக்குமாறு ஒரு நண்பர் அவரிடம் தெரிவித்துள்ளார். யார் அந்த புண்ணியவான் என்பது தெரியவில்லை.

இச்செய்தி வந்த நாள் முதலாக எனது நினைவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருந்தது குறிப்பிட்ட  யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்.

1963 ஆம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டுவரையிலான சுமார் இரண்டு வருடகாலம்தான் அந்த வித்தியாலயத்துடன் எனக்கிருந்த உறவும் தொடர்பும்.  நானும்  எனது தாய்மாமனார்  மகன் முருகானந்தனும் அங்கே சென்று கற்கவேண்டிய சூழ்நிலையும் எதிர்பாராமல் வந்தது.


எம்மிருவருக்கும்  வயதில் சில மாதங்களே வித்தியாசம். இருவரும் 1951 ஆம் ஆண்டு பிறந்தவர்கள். இருவரும் 1954 இல் நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் அனுமதிபெற்றவர்கள்.  உறவு முறையில் மச்சான் என்பதற்கு அப்பால், இணை பிரியாத தோழர்கள்.  நாம் சிறுவயதில் செய்த குறும்புத்தனங்கள் அநேகம்.

வீட்டிலே அடிக்கடி,  “ உன்னாலே அவன் கெட்டான், அவனாலே நீ கெட்டாய்  “ என்று நற்சான்றிதழ் தருவார்கள். ஒரு சமயம் கொழும்பு ரோயல் கல்லூரியில் எம்மைச்சேர்ப்பிப்பதற்காக அனுமதிப்பரீட்சைக்கும் அனுப்பினார்கள்.

ஆனால், அங்கே அனுமதி கிடைக்கவில்லை. பின்னர் ஆறாம் வகுப்பு படிக்கும்போது,  ஆறாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனுப்பினார்கள். அந்தப்பரீட்சை எங்கள் ஊரில் ரிச்சந்திரா  மகா வித்தியாலயத்தில் நடந்தது.  அது பிரபலமான சிங்கள வித்தியாலயம்.

பரீட்சைக்கு எங்கள் விவேகானந்தா வித்தியாலயத்திலிருந்து பல மாணவ, மாணவிகள் தோற்றினோம்.

நானும் முருகானந்தனும் மாத்திரம் சித்தியடைந்தோம்.

அதன்பின்னர் நாம் இருவரும் மத்திய மகா வித்தியாலயம்


அல்லது மத்திய கல்லூரி தரத்திலிருக்கும் ஏதாவது ஒரு பாடசாலைக்குச்செல்லவேண்டியதுதான் விதிமுறை.

எங்கள் ஊரில் அவ்வாறு தரம் உயர்ந்த பாடசாலைகள் அப்போது இருக்கவில்லை. இருந்தவை சிங்களப்பாடசாலைகள். எனினும் அங்கே மாணவர்கள் தங்கியிருந்து படிக்கவும் விடுதி வசதி இல்லை.

இறுதியில் எமக்கு கிடைத்தது யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரிதான். 

எனது அப்பா மெக்‌ஷா என்ற ஒரு வர்த்தக நிறுவனத்தின் வெளியூர் விற்பனை பிரதிநிதியாக (Sales Representative) இருந்தவர்.   அடிக்கடி யாழ்ப்பாணத்திற்கும் கம்பனி வாகனத்தில் சென்று வருபவர்.


மாமாவின் மூத்தமகன் ( முருகானந்தனின் அண்ணன் ) ஶ்ரீஸ்கந்தராஜா அக்காலப்பகுதியில் யாழ். இந்துக்கல்லுரியில் விடுதியில் தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்தவர்.

நானும் முருகானந்தனும் அடிக்கும் லூட்டிகளை பொறுக்கமுடியாத எமது பெற்றோர்,  “ இவனுகளையும் போர்டிங்கில் விட்டுத்தான்  படிக்கவைக்கவேண்டும். அப்போதுதான் அடங்குவான்கள்   “ என்று தமக்குள் தீர்மானித்துக்கொண்டவர்கள். அவர்களது எண்ணத்திற்கு ஏற்ப எமக்கு முதலில் ஸ்ரான்லிக்கல்லூரி என்ற பெயரில் விளங்கிய கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தில் அனுமதியும் அங்கிருந்த ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து படிப்பதற்கும் வாய்ப்புக்கிடைத்தது.  எமக்குரிய அன்றை காலத்து அரிசிக்கூப்பன் புத்தகத்தையும் எடுத்துச்சென்றோம்.

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வரும்போது 1963 ஆம் ஆண்டு இரண்டாம் தவணை  ஆரம்பமாகிவிட்டது.  அப்போது நாமிருவரும் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தோம்.

யாழ்ப்பாணம் செல்லத்தயாரானோம்.  எமது  முன்னாள்


தலைமை ஆசிரியர் பண்டிதர் க. மயில்வாகனம் அதற்கு ஒரு சில  மாதங்களுக்கு முன்னர்தான் மாற்றலாகி தமது சொந்தவூர் சித்தங்கேணிக்கு சென்றுவிட்டிருந்தார். அவர்தான் எம்மை குறிப்பிட்ட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயார் செய்தவர்.

எமது பெற்றோர்களிடமிருந்து புலமைப்பரிசில் முடிவுகள் பற்றி முதலில் தகவல் சென்றதும் பண்டிதருக்குத்தான்.  அவரும்  “ அழைத்து வாருங்கள். நான் பார்த்துக்கொள்வேன்  “ என்று பதில் அனுப்பிவிட்டார்.

எமது பாடசாலையில் அப்போதிருந்த தலைமை ஆசிரியர் கந்தசாமி மற்றும் ஆசிரியர்களின் கால்களை பணிந்து வணங்கி விடைபெற்றோம்.  அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கினோம்.  எமது வகுப்பு மாணவர்கள் எம்மிருவருக்காகவும் பணம் சேகரித்து ஒரு  சுடுநீர் குடுவை              ( Thermos Flask  ) வழங்கினார்கள்.

வெளியூர் செல்கிறோம். அதுவும் வாகனத்தில் செல்கிறோம் என்பதில் நான் மிகவும் புளகாங்கிதத்துடன் இருந்தேன்.


ஆனால்,  எனது அக்கா எனது பிரிவைத்தாங்க முடியாமல் விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தார். முருகானந்தனும் அழுதான்.

ஒருநாள் மாலை நாம் எனது அப்பாவுடன் அவரது கம்பனி வாகனத்தில் புறப்பட்டோம்.  அப்பாவின் சாரதியும்  உதவியாளரும்  சிங்களவர். அத்துடன் எமது குடும்ப நண்பர்கள். மாமாவின் மூத்த மகனும் எம்முடன் தனது இந்துக்கல்லூரிக்கு புறப்பட்டார்.

சிலாபம், புத்தளம், அநுராதபுரம் கடந்து  9  பாதையில் பயணித்து, வவுனியாவைக்கடக்கும்போது பனைமரங்களை பார்த்து வியந்தோம். அதற்கு முன்னர் நாம் பனைமரங்களை பார்த்திருக்கவில்லை. அநுராதபுரத்திற்கு அப்பால் சென்றதுமில்லை.

எனது வாழ்வில்  அதுவரையில் பனை மரங்களை பாடப்புத்தகங்களில்தான் பார்த்திருக்கின்றேன்.  எங்கள் ஊர் சந்தைக்கு எப்போதாவது வரும் பனம் பனாட்டு வாங்கி சுவைத்திருக்கிறேன்.  இனிமேல் யாழ்ப்பாணத்தில் பனை நுங்கு, பனாட்டு, புழுக்கொடியல் எல்லாம் அடிக்கடி சாப்பிடலாம் என்று உள்ளம் பூரிப்படைந்திருந்தது.


வவுனியாவுக்கு அப்பால் வந்த ஊர்களின் பெயர்ப்பலகைகள் நாம் தமிழ் ஊருக்குள் பிரவேசிப்பதையே உணர்த்தியது. 

வழியில் சந்தித்த முறிகண்டி குடிசைக்கோயிலிலும் தரிசனம் செய்துகொண்டோம். அங்கே தேநீர்க்கடைகளில் பக்திப்பாடல்கள் ஒலித்தன.  நாம் அங்கே கண்டவர்களில் பெரும்பாலானவர்களின் நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் துலங்கியது.

 

 

வித்தியாலய வாழ்க்கை

கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தின் முன்றலில் மாமரங்கள் செழித்து வளர்ந்து நின்றன. முன்னால் செல்லும் வீதி நாவலரின் பெயரை சூடியிருந்தது.

சமய பாட வகுப்பில், நாவலரின் சைவவினாவிடை படித்தபோது, எமக்கு சிரிப்பும் வரும்.  அது பற்றிய விளக்கம் இங்கே அவசியம் இல்லை.

வித்தியாலயத்திற்கு வௌியே இடதுபுறம் ஒரு சிறிய தேநீர்க்கடை.   முன்னால் மற்றும் ஒரு பலசரக்கு கடை.   இவற்றில் எமக்கு என்னென்ன வாங்கலாம் என்பதை அப்பாவின் உதவியாளர் மைக்கல் பார்த்துவிட்டு வந்து சொன்னார்.

அவற்றில்  வடை, மோதகம், சீனிப்பாகு கலந்த கடலை உருண்டையும் அடக்கம்.

நாம் அனுமதி பெற்றபோது மண்டலேஸ்வரன் அதிபராக இருந்தார். அவருக்கு முன்னர் கந்தையா என்ற அதிபர் இருந்ததாக சொன்னார்கள்.  அவரது காலத்தில் அவரிடம் கற்ற மேல்வகுப்பு மாணவர்கள் சிலரும் ஆண்கள் விடுதியில் இருந்தார்கள். அந்த அதிபர் கந்தையாவுக்கு காபன் கந்தையா என்றும் ஒரு பட்டப்பெயர் இருந்ததாக சொன்னார்கள்.

ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பட்டப்பெயர் சூட்டுவதும் மாணவர்கள் பரஸ்பரம் பட்டம் சூட்டுவதும் கல்விக்கலாசாரத்தில் ஒரு அங்கம்தான்.

ஆண்கள் விடுதியில் சில மாணவர்கள், “ என்னையும் முருகானந்தனையும் விசாரித்துவிட்டு,                                                               “ நீர்…….கொழும்பிலிருந்தா வந்தனீர்..?  “  எனக்கேட்டுச்சிரிப்பார்கள்.  கொழும்பு பிரபலமான மாநகரம், அதற்கு முன்னால் நீர் என்ற அடைமொழியும் இணைத்து வேடிக்கையாக கேட்பார்கள்.

ஆண்கள் விடுதியில் யாழ். குடாநாட்டுக்குள் பல பிரதேசங்களையும் சேர்ந்த மாணவர்கள் புலமைப்பரிசில் சித்தி பெற்று  அனுமதிபெற்றிருந்தனர்.  வித்தியாலயம் அமைந்துள்ள அரியாலையிலிருந்தும் பல மாணவர்கள் தெரிவாகியிருந்தனர்.

விடுதிக்குப்பின்னால் ஒரு சிறிய சந்து இருக்கிறது. அதன் ஊடாக இரகசியமாக அம்மாணவர்கள் மாலைவேளையில் தத்தமது வீடுகளுக்கும் சென்று திரும்புவார்கள்.

வெள்ளிக்கிழமை மாலை யாழ். குடாநாட்டைச்சேர்ந்த பல மாணவர்கள் தங்கள் பேக்கை தூக்கிக்கொண்டு புறப்பட்டுவிடுவார்கள். அவர்களை அதன்பிறகு அடுத்த வாரம் திங்கட் கிழமை காலையில்தான் பார்க்கமுடியும்.

நீர்கொழும்பைச்சேர்ந்த நானும் முருகானந்தனும் கண்டி, உடப்பு, மன்னார், ஓமந்தை  ஆகிய ஊர்களைச்சேர்ந்தவர்களும் போக்கிடம் இன்றி விடுதியில் தங்கியிருப்போம். அப்பொழுதுதான் நாம் தனிமையை உணர்வோம்.  Home Sick இனால் நாம் துவண்ட நாட்களையும் இன்றளவும் மறக்கமுடியாது.

எமது ஆண்கள் விடுதிக்கு முன்பாக பெரிய இலுப்பை மரம் நின்றது.  மழைக்காலத்தில் இலுப்பை விதைகளை நான் பொறுக்கி சேமிப்பேன்.  எனது அம்மாவுக்கு காலில் பித்தவெடிப்பு. இலுப்பெண்ணெய் அதற்கு சிறந்த நிவாரணி என்று அந்த வயதிலேயே அறிந்திருந்தேன். ஆனால், நான் சேகரித்த இலுப்பை விதைகளினால் எண்ணெய் தயாரிக்க எனக்குத் தெரியவில்லை.

ஆண்கள் விடுதியின் அருகிலேயே பெரிய தண்ணீர் தாங்கியிருந்தது.  அதன் அருகில் ஆழமான பெரிய கிணறு. அத்தகைய கிணறை நான் எங்கள் ஊரில் பார்க்கவில்லை.  சித்தங்கேணியில் பண்டிதர் மயில்வாகனம் வீட்டில் துலா கிணறை பார்த்து வியந்தேன்.

யாழ்ப்பாணத்தில் வீடுகளில்  பெரும்பாலும் துலாக்கிணறுகள்தான். 

ஜப்பான்காரன் இரண்டாம் உலக மகா யுத்ததின்போது,  யாழ்ப்பாணத்தில் குண்டுபோடாமல், திருகோணமலைக்கு தனது போர் விமானத்தை திருப்பியதற்கு ,  விமான எதிர்ப்பு ஏவுகணைபோன்று அவனுக்கு காட்சியளித்த   இந்த துலாக்கள்தான்  காரணம் என்றும் வேடிக்கையாகச் சொல்வார்கள்.

அது ஏவுகணையல்ல என்பதை சிங்கள இராணுவமும் விமானப்படையும் தெரிந்துவைத்திருந்தமையால்தான் யாழ்ப்பாணத்திலும் வடமராட்சியிலும்  வன்னியிலும் விமானத்திலிருந்து குண்டுகளை ஈழப்போர் காலத்தில் வீசின.

சரி, மீண்டும் எங்கள் ஆண்கள் விடுதிக்கு வருகின்றேன்.  வித்தியாலயத்தில் பெரேரா, அருளம்பலம், சோமசுந்தரம், கனகரத்தினம் இல்லங்கள் இயங்கின.

இவர்களை எனக்கோ முருகானந்தனுக்கு தெரியாது. இவர்கள் வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள். முன்னாள் அதிபர்கள் என்ற செய்தி மாத்திரமே தெரியும்.

ஆண்கள் விடுதியில் வள்ளுவர், பாரதி, நாவலர் இல்லங்கள் இயங்கின.  நாம் வார விடுமுறை நாட்களில் மற்றும் அரசாங்க விடுமுறை காலங்களில் சிரமதானங்கள் செய்வோம்.

ஒரு தடவை தண்ணீர்தாங்கியை துப்பரவுசெய்யும்போது வாளிகள் நிரம்ப சுண்ணாம்பு சேகரித்தோம்.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் வந்த இஸ்ரேல் விஞ்ஞானிகள் இந்த குடாநாட்டில் தண்ணீர் படிப்படியாக உவர் நீராக மாறிவிடும் என்று சொன்னார்களாம்.  அதுதான்  இறுதியில் நடந்தது.

இதுபற்றி நாடாளுமன்றம் சென்ற பிரதிநிதிகள் யோசித்தார்களா என்பதும் தெரியவில்லை.

பெரும்பாலான இல்லங்களில் தண்ணீர் கொதிக்கவைக்கும் கேத்தில்களின் உள்ளே சுண்ணாம்பு சாம்பல் நிறத்தில் படிந்திருந்ததையும் அவதானிக்கமுடிந்தது.

ஆண்கள் விடுதிக்கு முன்பாகத்தான் பெரிய மைதானம்.  மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாகிவிடும்.  மாரித்தவளைகள் தாளலயத்துடன் ஓசை எழுப்பும்.  மறுநாள் காலையில்  அவை வெண்ணிற நுரை  கக்கி இறந்திருக்கும்.

மழைக்காலத்தில் எம்மால் மைதானத்தில் விளையாட முடியாது.  குறிப்பாக தாச்சி மறித்தல் என்ற கிளித்தட்டு விளையாட்டு. இந்த விளையாட்டு அங்குதான் எனக்கு அறிமுகமானது.

வித்தியாலயத்தில்  இரண்டுவேளை வகுப்புகள் நடந்தன. காலை முதல் நண்பகல் வரையிலும் அதன்பின்னர் மதிய உணவிற்கு மேல் அடுத்த வேளையும் நடந்தன. மதிய உணவிற்கு விடுதிக்கு வந்துவிடுவோம்.

எமக்காக இரண்டு சமையல்காரர்கள் இருந்தார்கள். நானும் முருகானந்தனும் மச்சம் - மாமிசம் சாப்பிடமாட்டோம். ஒரு நாள் மதிய உணவில் முருகானந்தனின் தட்டில் ஒரு சிறிய மீன் துண்டு தவறுதலாக விழுந்துவிட்டது.

அவனுக்கு வாந்தி வந்தது. சாப்பாட்டுத்தட்டை  துக்கிச்சென்று கொட்டினான்.  எமது உணவு விடயத்தை பார்க்கும் மேல்வகுப்பு மாணவரான ஒரு அண்ணன், அவனுக்கு களஞ்சியசாலையிலிருந்து வாழைப்பழம் எடுத்துக்கொடுத்தார். 

கடற்கரையோர ஊரான நீர்கொழும்பிலிருந்து வந்திருக்கும் நாமிருவரும் மீன் சாப்பிட மறுத்தமை குறித்து அங்கிருந்த அனைவரும் சிரித்து கேலிசெய்தனர்.

கிரிக்கட், உதைபந்தாட்டம், கிளித்தட்டு என்பன எமது விருப்பத்திற்குரிய விளையாட்டுக்கள்.   அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சென்ட் ஜோன்ஸ்  கல்லூரிக்கும் மத்திய கல்லூரிக்கும் இடையில் நடக்கும் வருடாந்த கிரிக்கட் போட்டி பிரசித்தமானது.

சென். ஜோன்ஸ் கல்லூரியைச்சேர்ந்த துடுப்பாட்ட வீரர்கள் தேவேந்திராவும் கனகதுரையும் எமது கதாநாயகர்கள். அவர்கள் ஆடிய ஆட்டங்களை நாம் விரும்பிப்பார்ப்போம்.

எங்கள் வித்தியாலயத்தில் மரியதாசன், குமார தியானன், சுதேசநாதன்  முதலான மேல்வகுப்பு மாணவர்களும் சிறந்த விளையாட்டு வீரர்கள். சுதேசநாதன் பின்னாளில் அகில இலங்கை Hockey Team இலும் இணைந்திருந்தவர்.

சுதேசநாதன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, எதிர்பாராத வகையில் அவரை கொழும்பில் சந்தித்தேன். அவர் தற்போது கனடாவில் வசிப்பதாக அறிகின்றேன்.

கோவிந்தராஜன் , முருகேசு ஆகியோரை நான் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் சிட்னியிலும் மெல்பனிலும் சந்திக்கிறேன்.

எம்முடன் ஒரே வகுப்பில் படித்த தருமகுலசிங்கம், கேதீஸ்வரன், யோகராஜா, இராமச்சந்திரன், நாகராஜா, சரச்சந்திரன்,  கமலநாதன், அப்துல் கய்யூம்,  மதிவதனி, மகேஸ்வரி, சிதம்பரம்,  சரவணபவன், காளிதாஸ், முதலான பலரை அடிக்கடி நான் நினைப்பதுண்டு.  இவர்களில் கேதீஸ்வரனை  நீண்ட இடைவெளிக்குப்பின்னர் கனடாவில் 2007 இல்  சந்தித்தேன்.

இவர் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் கலகலப்பு என்ற  நகைச்சுவை இதழை சிறிது காலம் நடத்தினார். எப்பொழுதும் ஏதாவது நகைச்சுவைத்துணுக்குகளை உதிர்ப்பார்.

நான் எழுத்தாளனக வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் எதிர்பாராத வகையில் அவரை யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் சந்தித்தேன். அக்காலப்பகுதியில் நான்  சாயிபாபா போன்று பாகவதர் முடிவளர்த்திருந்தேன்.

என்னைக்கண்டதும் அவர்,  “ பயிர்வளர்க்கிறீர்களோ இல்லையோ தாராளமாக மயிர் வளர்க்கிறீர்கள்  “ என்றார்.

கேதீஸ்வரன் கனடாவில் சில திரைப்படங்களும் குறும்படங்களும் தயாரித்ததாக அறிகின்றேன்.

தருமகுலசிங்கம்,  The Island, Daily News முதலான பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறார்.  அவரையும் என்னால் மறக்கமுடியாதிருப்பதற்கு காரணம் நானும் அவரும் 1951 ஆம் ஆண்டு ஜூலை  மாதம் 13  ஆம் திகதி பிறந்தவர்கள்.

 உதைபந்தாட்டம் விளையாடியபோது விழுந்து எனது இடது முழங்காலில் காயம் வந்தது. தருமகுலசிங்கம்தான் என்னை அரியாலையில் ஒரு வைத்தியரிடம் மருந்து கட்டுவதற்கு அழைத்துச்சென்றார். இன்னமும் அந்த காயத்தின் தழும்பு  இருக்கிறது.

இறுதியாக அவரை 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் யாழ்ப்பாணத்தில் நாவலர் மண்டபத்தில் மாநாடு நடத்தியபோது,  எனது வருகை பற்றிய செய்தியை ஈழநாடு பத்திரிகையில் படித்துவிட்டு வந்து சந்தித்து  தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று உபசரித்தார்.

உரும்பராயைச்சேர்ந்த சரச்சந்திரன் என்ற மாணவரும் எனது நல்ல நண்பர். அவர்தான் ஒரு விடுமுறை நாளில் என்னையும் முருகானந்தனையும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச்சென்று ராஜா தியேட்டரில் The Longest Day ,  வெலிங்டன் தியேட்டரில் நானும் ஒரு பெண் முதலான திரைப்படங்களை காண்பித்தவர். ஒரே நாளில் முற்பகல், மதியம் இரண்டு படங்கள் பார்த்தோம். அப்போது வெலிங்டன் தியேட்டர் தகரக்கொட்டகையாக இருந்தது.

வெள்ளிக்கிழமை  மாலையில் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச்செல்வோம். அங்கே கச்சான் கடலை வாங்கி வழியில் கொரித்துக்கொண்டே நடந்து விடுதிக்கு வந்து சேருவோம்.

யாழ்ப்பாணம் பாடசாலைகளுக்கிடையே விளையாட்டுப்போட்டி ஒரு தடவை யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் நடந்தது.  அப்போது ஈட்டி எறிதல் போட்டியில் ஒரு மாணவன் எறிந்த ஈட்டி மத்தியஸ்தராக கடமையாற்றிய ஒரு ஆசிரியரின் வயிற்றை பதம் பார்த்து, அவர் இறந்தார். பாடசாலைகள் அவரது மறைவை முன்னிட்டு துக்க தினம் அனுட்டித்தன.

ஒரு தடவை கொக்குவில் இந்துக்கல்லூரியுடன் எமது வித்தியாலயம் கிரிக்கட் விளையாட்டில் மோதியது. கொக்குவில் இந்துக்கல்லூரியில் மெட்ச் நடந்தது. அந்த மைதானம் சுற்றலவில் சிறியது.

எமது வித்தியாலய மாணவன் ஒருவர்  அடித்த சிக்ஸரை இன்றளவும் மறக்கமுடியாது.  அவர் அடித்த பந்து மைதானத்திற்கு மேலாகச்சென்று அடுத்த காணியிலிருந்த ஒரு வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு  உள்ளே சென்று சமயலறையில் வீழ்ந்து அடுப்பில் வெந்துகொண்டிருந்த இறைச்சிக்கறியை பதம் பார்த்தது.

ஆண்கள் விடுதியின் பொறுப்பாசிரியர்களாக மயில்வாகனம், நடராஜா ஆகியோர் எமது காலத்தில் இருந்தனர்.  மயில்வாகனம் அவர்களின் திருமணம் அக்காலத்தில்தான் ஒரு இரவு வேளையில் புங்கன்குளத்திலிருந்த மணப்பெண்ணின் வீட்டு முற்றத்தில் பந்தல்அமைத்து நடந்தது அதற்கு விடுதி மாணவர்கள் அனைவரும்  சென்றிருந்தோம்.

அவரைத்திருமணம் செய்தவர் சங்கீத ஆசிரியை . பின்னர் எமது ஆண்கள் விடுதியில் எமது படுக்கைகளையெல்லாம் ஒரு மூலையில் வைத்துவிட்டு, அந்த மண்டபத்தை அலங்கரித்து மணமக்களை பூரண கும்பம் வைத்து வரவேற்று உபசரித்தோம்.

அதில் அந்த சங்கீத ரீச்சரை பாடச்சொன்னோம். இனிமையான குரலில் பாடினார்.

பெண்கள் விடுதி மாணவிகளும் வருடாந்த ஒன்றுகூடலை இராப்போசன விருந்துடன் நடத்தும்போது எம்மையும் அழைப்பார்கள்.

எமது மேல்வகுப்பு ஆண் மாணவர்களுக்கு அவ்வேளையில் கிளுகிளுப்பு தோன்றும்.  அச்சந்தர்ப்பத்திலாவது மாணவிகளுடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிட்டாதா..?  என்ற ஏக்கமும் வரும்.

எமது ஆண்கள் விடுதியில் ஒரு மாணவர் மாத்திரம் நின்று படிப்பார். , ஏனையோர், அதிகாலையும் இரவுப்பொழுதும் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்திற்கு வந்து படிப்போம்.  அங்குதான் எமது Home Works செய்வோம். சந்தேகங்களை மேல் வகுப்பு மாணவர்களிடம் கேட்டு தெளிவுபெறுவோம்.

விடுதியில் நிற்கும் மாணவருக்கு துருப்பிடித்த  ஒரு பழைய மண்வெட்டியும் ஒரு இரும்புக்கோலும் வழங்கப்பட்டிருக்கும். அவர் அந்த மண்வெட்டியில் தட்டித்தட்டித்தான் சிக்னல் கொடுப்பார்.

அந்த சிக்னல்தான் காலையில் எம்மை துயில் எழுப்பும் அலார்ம்.

அவ்வேளையில் எழுந்து பல்துலக்கும்போதுதான், கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டுவரும் இரவு தபால் ரயில் வண்டி புங்கன் குளம் ரயில் நிலையத்தில் தரித்து, ஒலி எழுப்பும். அந்த ஒலி  எழும்போது மனதில் இனம்புரியாத ஏக்கமும் விம்மலும் வரும்.  எப்போது அந்த ரயிலில் ஊருக்குச்செல்வோம் என்ற கவலைதான்அதற்கு காரணம்.

சில மேல்வகுப்பு மாணவர்கள் எம்மை வெருட்டிக்கொண்டிருப்பார்கள். அத்துடன் சில சில்மிசங்களும் செய்வார்கள்.

நாம் இரவில் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும்போது,  எமக்கு மையினால் மீசை வைத்துவிடுவார்கள்.  ஒரு மாணவரை கட்டிலோடு தூக்கிச்சென்று குளியலறையில் ஷவருக்கு கீழே வைத்துவிட்டு தண்ணீரை திறந்துவிட்டார்கள்.

இதுபற்றியெல்லாம் விடுதி ஆசிரியரிடம் முறைப்பாடுகள் செய்வோம். ஆனால், எவரும் பிடிபடமாட்டார்கள்.

எமக்கு போர்டிங் மாஸ்டராக இருந்த நடராஜா மாஸ்டர்,  பிற்காலத்தில் இலங்கை பனம்பொருள் அபிவிருத்திச்சபையின் தலைவராகவும் பதவி வகித்தார்.

இவர்  காலப்போக்கில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து தற்போது சிட்னியில் வசிக்கிறார். இங்கு அவர் தமிழ் பிரமுகராக புகழ்பெற்று விளங்குகிறார். எனது நூல்களின் வெளியீட்டு அரங்கிலும் மற்றும் கலை இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறார்.

கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் நானும் முருகானந்தனும் வாழ்ந்த வாழ்க்கையை மறக்கவே முடியாது. அங்கு எம்முடன் கற்றவர்களையும் மேல் வகுப்புகளில் கற்றவர்களையும் என்றாவது ஒரு நாள் சந்திக்கநேர்ந்தால், பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்ற வார்த்தைக்கு உயிர் கிடைக்கும்.

இங்கிலாந்தில்  வதியும் நாடகக்கலைஞர் க. பாலேந்திராவும்  எமது வித்தியாலயத்தைச்சேர்ந்த பழைய மாணவர்தான். ஈழத்து எழுத்தாளரும் அலை, தெரிதல் முதலான இலக்கிய இதழ்களை நடத்திய எழுத்தாளர் அ. யேசுராசவும் எமது வித்தியாலயத்தின் பழைய மாணவர்தான்.

ஆனால், இச்செய்திகள் நானும் எழுத்தாளனாகிய பின்னர்தான் எனக்குத்  தெரியவந்தது.

எமது வித்தியாலயம் அமைந்துள்ள அரியாலை கலைஞர்கள் பலரையும் உருவாக்கியுள்ளது.  அங்கு சில சனசமூக நிலையங்கள் இயங்குகின்றன.

அதில் ஒன்றில் வருடாந்தம் நடக்கும் விளையாட்டுப்போட்டிகள், நாடக விழாக்களுக்கும் சென்றிருக்கின்றேன்.

கர்ணன் என்ற நாடகத்தை எங்கள் வித்தியாலயத்திலும் மேடையேற்றினார்கள்.  அதற்காக எமக்கு தச்சுவேலைப்பயிற்சி வகுப்பு நடத்திய ஆசிரியர் சுப்பிரமணியம்  இரண்டு சிறிய அழகிய  ரதங்களே செய்து கொடுத்தார்.

மகாபாரதத்தில் வரும் குருஷேத்திரப்போரில் கர்ணனும் அருச்சுணனும் தோன்றும்  காட்சிக்காக அந்த இரண்டு ரதங்களும் அமைக்கப்பட்டன.

நானும் எனது வகுப்பில் ஒரு நாடகத்தை எழுதி இயக்கி நடித்தேன். மதுவிலக்கை பிரசாரப் படுத்தும் நாடகம். அதில் அம்மா பாத்திரம் ஏற்று நடிப்பதற்கு மாணவிகள் எவரும் முன்வராதமையினால், நானே அம்மா வேடம் தரித்து நடித்தேன்.

அதனால் சக மாணவர்கள் எனக்கு அம்மா பூபதி என்றும் பட்டம் சூட்டி நகைத்தனர்.

அங்குதான் எனக்கு சரித்திர பாடத்தில் பெருவிருப்பம் வந்தது. எமது சரித்திர ஆசிரியர் திருமதி பாலசிங்கத்தின் அபிமான மாணவனாக இருந்த அக்காலம் பொற்காலம்தான். அந்தப்பாடத்தில் எனக்கு நூறு புள்ளிகள் கிடைத்தது. ஆனால், ஆசிரியை என்னை அருகே அழைத்து,  ஏனைய மாணவர்களை கவனத்தில்கொண்டு 98 புள்ளிகள்தான் தருவதாகச்சொன்னார்.

நான் நாடகம் எழுதுவதையும் பார்த்த அவர், எதிர்காலத்தில் எழுத்தாளனாக வருவாய் என்றும் வாழ்த்தினார்.  திருமதி பாலசிங்கம் எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை.

எங்கள் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடந்த கலைமகள் விழாவில் வித்துவான் வேந்தனார், பண்டிதர் சோ. இளமுருகனார் ஆகியோர் உரையாற்றியுள்ளனர்.

ஒரு தடவை எழுத்தாளர் டொமினிக் ஜீவாவையும் எமது வித்தியாலய ஆண்கள் விடுதியின் சார்பாக அழைத்து அந்த மண்டபத்தில் பேசவைத்தார்கள். அவரது அந்தப்பேச்சை முதல் முறை நான் கேட்டபோது எனக்கும் முருகானந்தனுக்கும் பன்னிரண்டு வயது.

அவர் மல்லிகை இலக்கிய இதழை ஆரம்பித்த பின்னர்,  எங்கள் ஊருக்கு வந்து அறிமுகமாகி என்னையும் இலக்கியப்பிரவேசம் செய்யவைத்தார்.

அவரால்தான் இன்று நான் எழுத்தாளனாக உங்கள் மத்தியில் உலா வருகின்றேன். 

எமது ஆண்கள் விடுதியின் அழைப்பில் கிழக்கிலங்கை வந்தாறு மூலை வித்தியாலயத்தைச்சேர்ந்த கூத்து  பயின்ற மாணவர்கள் வருகை தந்து,  வள்ளி திருமணம் என்ற கூத்தை அரங்காற்றுகை செய்தனர்.

அதில் வரும் பாடலை இப்பொழுதும் என்னால் பாட முடியும்.

கன்னங்கருப்பி, சிவப்பி கருத்தக் கொண்டைக்காரி அய்யாமாரே…..

அவள் காதிலே குண்டலம் கடுக்கனும் போடுவாள் அய்யாமாரே…

பெற்றவர்கள், சகோதரர்களை விட்டு தொலைதூரத்திற்கு படிக்க வந்த தனிமைத்துயரமும் ஊர்ப்பாசமும், மீண்டும் என்னையும் முருகானந்தனையும் ஊருக்கு அழைத்தது.

நாமிருவரும் விடைபெறும்போது திரு. பத்மநாதன் அதிபராக பணியாற்றினார். ஊர் திரும்பிய  பின்னர் அங்கே தரமுயர்த்தப்பட்டிருந்த அல் – கிலால் மகா வித்தியாலயத்தில் கல்வியை தொடர்ந்து நிறைவு செய்தோம்.

பின்னாளில் அரியாலை ஊர் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமானது.  1983 ஆம் ஆண்டு கலவரம் வந்தபோது  அரியாலையில் நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திற்கு எதிர்ப்புறமாக செல்லும் செம்மணி வீதியில்தான்  ஒரு வீட்டில் சில மாதங்கள் எனது குடும்பத்தினருடன் தஞ்சமடைந்தேன்.

அப்போது எனது மூத்த  பெண் குழந்தைக்கு  மூன்று வயது. இரண்டாவது பெண் குழந்தைக்கு  ஒரு வயது.

அவ்வூர் மக்கள் எம்மீது அன்பு பாராட்டி அரவணைத்தனர்.  நாம் வாடகைக்கு குடியிருந்த வீட்டின காணியிலும் பெரிய கிணறு இருந்தது. ஆனால்,  உப்புச்சுவை. அதனால், கண்டி வீதியை கடந்து நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் கிணற்றில் குடிநீர் பெற்றோம்.

அந்த ஆலயத்தின் தேர்முட்டியை பின்னணியாகவைத்து நான் எழுதிய சிறுகதை வீரகேசரி வாரவெளியீட்டில் 1985 இல் வெளியானது.  அரியாலை குறித்து பல கட்டுரைகள் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். மச்சான் முருகானந்தன் தற்போது தமிழ்நாடு கோயம்புத்தூரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

இப்போதுதான் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் பற்றி எழுதுகின்றேன். இப்படி ஒரு பதிவை எழுதுவதற்கு பிரதான காரணமாக விளங்கும்  இங்கிலாந்தில் வதியும்  நண்பர் மகேந்திரனுக்கு எனது மனமார்ந்த நன்றி.

இந்த நீண்ட பதிவின் ஊடாக இலங்கை உட்பட உலகெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் வித்தியாலய பழைய மாணவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே சமயத்தில்,  எமது மறைந்த ஆசான்களுக்கும் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகின்றேன்.

பசுமை நிறைந்த நினைவுகளுடன்,  சமகால இடைவெளி பேணும் காலத்தில் இணையவழியில் ஒன்றுகூடவிருக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

letchumananm@gmail.com

 

 

 

 

 

 

  

No comments: