முன்னொரு காலத்தில் மாத – வார இதழ்களில்தான் சிறுகதைகள் வெளிவந்துகொண்டிருந்தன. முன்னொரு காலம் என்றால், பழந்தமிழ் இலக்கியம் அறிமுகமான அந்தக்காலம் அல்ல.
குறிப்பிட்ட முன்னொரு காலத்தில் இலங்கையில் இலக்கியத்துறையில் மறுமலர்ச்சிக்கால இலக்கியம் , மண்வாசனை இலக்கியம், முற்போக்கு இலக்கியம், பிரதேச மொழி வழக்கு இலக்கியம், தலித் இலக்கியம், போர்க்கால இலக்கியம், இடப்பெயர்வு இலக்கியம் என்று சிலவகை இலக்கியப்படைப்புகளை இலங்கையில் மாத இதழ்கள் தாங்கி வெளிவந்தன.
தமிழ்ப்பத்திரிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிட்ட வார இதழ்களும் இலக்கியப்படைப்புகளுக்கு போதியளவு
களம் வழங்கின.
காலம் மாறியது. இலங்கையில் இனநெருக்கடி உச்சம் பெற்றதனால் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மத்தியிலிருந்த கலை, இலக்கியவாதிகள், புகலிடத்திலிருந்து இதழ்களை வெளியிட்டு வந்ததுடன் புகலிட இலக்கியத்தையும் பேசுபொருளாக்கினர்.
மாறிக்கொண்டிருப்பது காலம். சமகாலத்தில், முகநூலின் வருகையையடுத்து பலரும் அதிலும் எழுதி உடனுக்குடன் எதிர்வினைகளையும் வரவாக்கிக்கொள்கின்றனர்.
நவீன தொழில் நுட்பத்தின் தீவிர பாய்ச்சலினால், வரப்பிரசாதமான இணைய இதழ்களும், முகநூல்களும் இலக்கியம் பேசிவருகின்றன.
எவரும் தத்தமக்கென வலைப்பூவை வைத்துக்கொண்டும் தங்கள் அன்றாட பதிவுகளை அதில் ஏற்றமுடிகிறது.
இந்தப்பின்னணிகளுடன்தான், பிரான்ஸில் வதியும் எழுத்தாளரும், ஒரு கால கட்டத்தில் ஓசை, அம்மா முதலான இதழ்களை வெளியிட்டவரும் மகாஜனாக்கல்லூரியின் பழையமாணவர் மன்றத்தின் பாரிஸ் கிளையின் ஊடாக புகலிட நாடகக்கலைக்கு பங்களிப்புச்செய்தவருமான மனோ சின்னத்துரையின் கொரோனா வீட்டுக்கதைகளின் உள்ளடக்கத்தை பார்க்கமுடிகிறது.
இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட இலக்கியக்காலங்கள் ஒரு புறம் இருக்கட்டும், இனிமேல் நாம் கொரோனா காலக்கதைகளைப்பற்றி பேசுவோம் என்ற எண்ணத்துடன், உள்ளிருப்பு காலத்தில் தனது முகநூலில் எழுதிய கதைகளை தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.
உடனுக்குடன் தனது கதைகளுக்கு வந்த வாசகர் கருத்துக்களையும் நூலின் இறுதியில் ஏழு பக்கங்களில் பதிவேற்றியிருக்கிறார்.
என்வசம் முகநூல் இல்லை. இனிமேலும் இருக்காது. என்பதனால்தானோ என்னவோ, எனது இனிய இலக்கிய நண்பர் மனோ சின்னத்துரை இந்தத் தொகுதியை தபாலில் அனுப்பிவைத்திருக்கிறார்.
பல தரமான நூல்களை வெளியிட்டுவரும் கருப்புப்பிரதிகள் இந்தத் தொகுப்பினை பதிப்பித்துள்ளது.
தாயகத்தில் இவருடன் படித்த சமகால நண்பர் இளவாலை விஜயேந்திரன், மனோவைப்பற்றி எமக்கு அறிமுகப்படுத்தும்போது, “ இலங்கையில் வாழ்ந்த காலத்தில் அதிகம் இலக்கிய வட்டங்களில் அறியப்படாமல், புலம்பெயர்ந்தபின் கலை, இலக்கிய ஆர்வலர்கள் எல்லோராலும் அறியப்பட்டவர் மனோ. தனது படைப்புகளை முதன்மைப்படுத்தாத செயற்பாட்டாளராகவே பெரிதும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவராகவே அவரை நாம் காணமுடியும் “ என்று குறிப்பிடுகிறார்.
ஆம், எனக்கும் மனோ இலங்கையில் அறியப்பட்ட எழுத்தாளர் அல்ல. அவரது ஓசை, அம்மா முதலான இதழ்களில் நானும் முன்னர் எழுதியிருக்கின்றேன்.
மனோ, அம்மா அவுஸ்திரேலிய சிறப்பிதழையும் வெளியிட்டவர். அவுஸ்திரேலியாவில் வதியும் எமது நண்பர் கலைஞர் மாவை நித்தியானந்தன் எழுதிய நாடகங்கள் சிலவற்றையும் பாரிஸில் மேடையேற்றியதில் முன்னின்று உழைத்தவர்.
இவ்வாறு தன்முனைப்பின்றி இயங்கிய மனோவை இந்த கொரோனா காலம் கதைகளை எழுதத்தூண்டியிருக்கிறது. அவற்றை உனுக்குடன் தனது முகநூல் வாயிலாக பதிவேற்றச்செய்திருக்கிறது. காலம் தாழ்த்தாமல் தனது முகநூல் வட்டத்தினரின் வாசிப்பு அனுபவங்களுடன் தொகுத்து தனி நூலாகத் தரவும் முடிந்திருக்கிறது.
முழு உலகையும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அச்சுறுத்தி, ஏற்றதாழ்வின்றி, இன, மத, மொழி பேதமற்று பரவியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா என்னவெல்லாம் செய்கிறது..? என்பதை அன்றாடம் வாட்ஸ் அப் அலைப்பறையிலும் காணொளிகளிலும் ஊடகங்களிலும் பார்த்துவருகின்றோம்.
இந்தக்கொரோனா காலம் வந்ததும் வீட்டுக்கு வீடு புதுப்புது வைத்தியர்களும் தோன்றிவிட்டனர். படித்தவர் முதல் பாமரர் வரையில் வயது வித்தியாசம் பாராமல் ஆட்டிப்படைக்கும் இந்தக்காலம் குறித்து பட்டிமன்றங்களும் பெருகிவிட்ட சூழ்நிலையில், மனோ, தனது வாழ்வின் தரிசனங்களை படைப்பிலக்கியமாக்கியிருக்கிறார்.
மொத்தம் 24 கதைகள். கதைகள் எனச்சொல்வதை விட காட்சிகள் என்றும் எனது பார்வையில் சொல்லமுடியும். ஒவ்வொன்றின் தொடக்கத்திலும் அவரால் முகவரி அறியமுடியாது போன ஓவியர்கள் வரைந்த படங்களை பதிவேற்றியிருக்கிறார். அத்துடன் அவர்களுக்கே இந்தத் தொகுப்பினையும் சமர்ப்பணம் செய்துள்ளார்.
மூன்று கதைகளைத்தவிர ஏனைய 21 கதைகளும் கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்த கொரோனா காலத்தில் எழுதப்பட்டவை. ஏற்கனவே 1997 – 2011 – 2019 ஆண்டுகளில் எழுதிய மூன்று கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
புகலிடத்தில் முக்கியமாக இங்கிலாந்து தவிர்ந்த ஏனைய அய்ரோப்பிய நாடுகளில் மொழிதெரியாமல், தஞ்சமடைந்த நாடுகளின் மொழியில் பயிற்சியோ பரீச்சியமோ இல்லாமல் அவதியுறும் இலங்கைத் தமிழர்கள், தலைமுறை இடைவெளி தரும் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள் , கொரோனா தொற்றுக்கு அஞ்சுபவர்கள், வேகமாக பரவி வரும் நினைவு மறதிநோயின் தாக்கத்துக்குட்பட்டவர்கள், இடிபஸ் தாழ்வுச்சிக்கலுக்குள்ளானவர்கள், உளவியல் நெருக்கடிக்கு ஆளானவர்கள்… இவ்வாறு பலதரப்பட்ட மாந்தர்களை மனோ சித்திரிக்கின்றார்.
எனினும் கதைகள் யாவும் முற்றுப்பெறாத ஒரு புள்ளியில் வந்து நிற்கின்றன. முடிவை வாசகரே தீர்மானித்துக்கொள்ளட்டும் என்ற முன்தீர்மானத்துடன் எழுதப்பட்ட கதைகளாகிவிடுகின்றன. நல்லதங்காள் கதையை இரண்டு பாகங்களாக்கி, கதையின் இறுதியில் மூன்றாம் பாகத்தை வாசகர்களுக்கானது என்று முடித்துவிடுகிறார்.
யாழ்ப்பாணத்தில் எல்லா ஊர்களிலும் நடமாடிய மனநலம் குன்றிய ஒரு பெண்ணைப்பற்றிய பார்வதி என்ற கதையும் வருகிறது. இது பற்றி பெண்ணிய சமூகச்செயற்பாட்டாளர்கள் சி. புஸ்பராணியும், தர்மினியும் செல்லப்பிராணியான நாயுடன் அத்தகையவர்களுக்குள்ள இனம்புரியாத உறவு குறித்தும் தங்கள் கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள்.
நாய்களுடன் நடமாடிய சித்தர்களை நானும் எங்கள் ஊரில் பார்த்திருக்கின்றேன். அவர்களின் ரிஷிமூலத்தை அறியமுடியாது.
சில கதைகள் அதனைப்படிக்கும் வாசகரின் சிந்தனையை கிளறிவிட்டாலும், பாத்திரங்கள் நினைவில் சஞ்சரிக்கும் இயல்பை கொண்டிருக்கின்றன.
மனோ, தனது அன்றாட வாழ்வின் தரிசனங்களையே தனது படைப்பு மொழியில் கதைகளாக்கியுள்ளார்.
2050 ஆம் ஆண்டு காலத்திற்கு எம்மை அழைத்துச்செல்லும் விதை நிலம் கதை, மனோ எதிர்பார்க்கும் சமூகத்தை காண்பிக்க முயன்றிருக்கிறது.
கொரோனா, மனிதர்களையும் சுற்றுச்சூழலையும் மாற்றிவிடுகிறது என்ற செய்தியையும் சில கதைகளில் இழையோடவிட்டுள்ளார்.
மனோ சின்னத்துரையிடமிருந்து இலக்கிய உலகமும் குறிப்பாக அவரது முகநூல் வட்டத்தினரும் மேலும் எதிர்பார்க்கின்றனர்.
அவரிடத்தில் தாயக வாழ்வும் புகலிட வாழ்வும், இரண்டுக்கும் இடைப்பட்ட இரண்டக வாழ்வுக்கதைகளும் சமகால கொரோனா காலக்கதைகளும் நிரம்பவே இருக்கின்றன.
மனோ சின்னத்துரைக்கு எமது வாழ்த்துக்கள்.
letchumananm@gmail.com
No comments:
Post a Comment