அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 45 – ஈழப் பறை மேளம் – சரவண பிரபு ராமமூர்த்தி ஈழப் பறை மேளம் – தோற்கருவி


ஈழப்  பறை ஈழ  தமிழர்களுக்கு உரியது. தமிழ்நாட்டின் பறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஈழப்  பறை அளவில் மிகப்பெரியது. இலங்கையின் தனித்துவமான தமிழர் அடையாளங்களில் ஒன்று. பலா மரத்தாலான பெரிய உருளை வடிவ இசைக்கருவி.  இரு புறமும் ஆட்டுத் தோல்  கட்டப்பட்டு இருக்கும்.   குச்சியால் இசைக்கப்படும் முகம் ஆண் ஆட்டுத் தோலாலும் மறுபுறம் பெண் ஆட்டுத் தோலால் ஆனது என்கிறார்கள். இரண்டு அளவுகளில் இக்கருவி புழக்கத்தில் உள்ளது. மிகப் பெரியது ஒன்று அதைவிட சிறிய நடுத்தர அளவுடையது மற்றொன்று.

 

தமிழகம் போல் இலங்கையிலும் பறை விளிம்பு நிலை


சமூகங்களின் கருவியாகவே உள்ளது. பறை என்றால் பேசு என்றும் ஒரு பொருள்படும். உண்மையிலேயே பறை ஒரு தாள வாத்தியக்கருவியாக இருந்தபோதும் அது ஒலிக்கும் போது வெளிப்படும் ஓசையைக்கொண்டு அந்த மேள அடி எதைச் சொல்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும். கோயில், இறப்புவீடு, மங்கல நிகழ்வுகள் என்னும் மூன்று சூழல்களில் ஒவ்வொன்றுக்கும் ஆறு ஆறு தாளக்கட்டுகளாக மொத்தம் 18 தாளக்கட்டுகள் உள்ளனவாம். மரணச்சடங்கில் உறவினர்கள் வருகையின் போது, பிரேதத்தை குளிக்க வைக்கும் போது, பிரேதம் தூக்கும் போது, இறுதி ஊர்வலத்தின் போது, கொள்ளி வைக்கும் போது என ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஒவ்வொரு விதமான அடி இலங்கைப் பறையில் உண்டு. தெய்வ பூசை, பொங்கல், படையல், கலையாடுதல், காவடியாட்டம் போன்ற வழிபாடு சம்மபந்தமான நிகழ்வுகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தாள அடி உண்டு. ஆலயங்களில் ஆலயத்தாளம், அபிஷேகத்தாளம், அழைப்புத்தாளம், சுற்றாலைத்தாளம், பெரியபூசைத்தாளம் என்ற வேறுபாடுகளுடனும், வரவேற்பு போன்ற நிகழ்வுகளில் வரவுத்தாளம், கோணங்கித்தாளம், இராசதாளம், பல்லாக்குத்தாளம், நாலடித்தாளம், ஆறடித்தாளம், எட்டடித்தாளம், தட்டுமாறும்தாளம் என பறைமேளம் இசைக்கப்பட்டு வருகிறது.

 

றைமேளக் கூத்து என்பது இலங்கையில் வழங்கி வரும் கலை வடிவம். இக்கலையானது மட்டக்களப்பு பகுதியில் கோளாவில், களுதாவளை, புன்னைக்குளம், ஆரையம்பதி,


கல்முனை, வெல்லாவெளி, பிலாலிவேம்புமாவடிவேம்பு ஆகிய பகுதிகளிலே சிறப்பாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இக்கூத்தை ஆடுபவர்கள் பறையை இடுப்பில் கட்டிக்கொண்டு அதை சைத்தபடியே அந்த இசைக்கு ஏற்ப ஆடுவார்கள். பறை, தம்பட்டை மற்றும் சொர்னாளி ஆகியவை இதில் இடம்பெறும். பறைமேளக் கூத்தில் 18 வகை தாளக்கட்டுகள் இலங்கையில் பயன்பாட்டில் உள்ளன. தாளக்கட்டுகளுக்கு ஏற்ப கூத்தில் பங்குபெறுவோர் தங்களது ஆளுமையை வெளிப்படுத்தி பறையை இசைப்பர். கலைஞர்கள் வட்டமாக சுற்றி நின்று இசைப்பதுடன், மாறிமாறிப் போட்டியாக இசைப்பது, முகபாவனையுடன் இசைப்பது எனப் பல்வேறு அம்சங்கள் இக்கூத்தில் இடம்பெறுகின்றன. மேற்படி தாளக்கட்டுகள் ஆடும் சூழலுக்குத் தக்கவாறு அமைகின்றன.

 

           ஆகம விதிப்படி பூசைகள் நடைபெறும் ஆலயங்களில் பறைமேளங்களைக் காணமுடிவதில்லை. தொண்டமனாறு செல்வசந்நிதியான் கோவிலில் பறை உண்டு. இன்னும் பல கோவில்களிலும் பூசை வேளைகளில் பறை இசைக்கும் வழக்கம் இலங்கையில் உள்ளது. பெரும்பாலும் கோவிலுக்கு வெளியில் இசைக்கப்பட்ட பறை அண்மை நாட்களில் சில இடங்களில் கோவிலுக்குள்ளும் இசைக்கப்படுகிறது. பொங்கல் வழிபாடுகள் நடைபெறும் கோவில்களில் பறைமேளம் முக்கிய பங்கை வகிக்கின்றது. புளியம்பொக்கனை, பொறிக்கடவை, புதூர், வற்றாப்பளை ஆகிய நாட்டார் தெய்வ கோவில்கள் ஆகம வழிபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டபோதிலும் பொங்கல் படையல் போன்ற சடங்குகளை பறைமேளமே வழிநடத்துகிறது.

 

கண்ணகி அம்மனின் கோவில்களில் பெருவிழாவின்


பொழுது பறை ஒரு தலையாய கருவியாகத் திகழ்கிறது. பறைமேளத்துடன் கதவு திறத்தல் மற்றும் பாக்குத்தெண்டல் ஆகிய கால்கோல் நிகழ்ச்சி ஆரம்பமாகின்றது. இலங்கையில் ஆகமமயமாக்கப்பட்ட நாட்டார் தெய்வ கோவில்களில் கண்ணகி அம்மன் கோவில்கள் தான் அதிகம். பிராமணர் பூசை சடங்குகள் கண்ணகி கோவில்களை ஆக்கிரமித்து உள்ள சூழலில் பறை மேளத்திற்குக் கண்ணகி கோவில்களில் வேலை இல்லாமல் போய்விட்டது.

 

பல ஆண்டுகள் முன்பு ஈழத்து இசுலாமியர்களும் பறை இசைக்கு ஆதரவு அளித்து வந்தனர். இசுலாமிய குடும்ப விழாக்களில் பறை இசைக்கப்பட்டது. பிறகு சுமார் 1965முதல் அவர்களின் குருமார்கள் பறைக்குத் தடை விதித்தார்கள்(ஹராம்). இதனால் இம்மக்களின் ஆதரவு விலக்கிக்கொள்ளப்பட்து.

 

இன்றைய சூழலில் சாதிய நோக்கத்துடன் பார்க்கப்படும் பறை அழிவின் விளிம்பில் இருக்கும் கருவியாகவே உள்ளது. பழைய ஆட்ட வகைகள் வழக்கொழிந்து வருகின்றது. ஒரு பறை இசைக்கருவியை செய்ய சுமார் 45ஆயிரம் இலங்கை ருபாய் தேவைப்படுகிறது. மக்களின் ஆதரவும் இல்லை. புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த இசைக்கருவிகளை கண்டுகொள்வதில்லை. இந்த நிலைகள் மாறினால் இந்த கருவி இன்னும் சற்று காலம் வாழும். இல்லயென்றால் பறையை அருங்காட்சியகத்தில் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை.

காணொளி:

https://youtu.be/Bl3_fCvNCu4

https://youtu.be/tKhuOPTFtwM

https://www.youtube.com/watch?v=PSucLoni-kA&t=79s

https://www.youtube.com/watch?v=MiVnB6IJeJY

https://www.youtube.com/watch?v=mhiQcszQV7c&feature=youtu.be

https://www.youtube.com/watch?v=B97lqeckwuw

https://www.youtube.com/watch?v=5wYbknmqW0A

https://www.youtube.com/watch?v=HMMcpaE2l7A

 

-சரவண பிரபு ராமமூர்த்தி

 


1 comment:

Anonymous said...

Saravanaprabu phone number