உலகச் செய்திகள்

 அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு

"தேர்தலில் மோசடி; உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளேன்"

  “முஸ்லிம்களின் கோபத்தை புரிந்துகொள்ள முடிகின்றது”

அமெரிக்க தேர்தல் முடிவுகளில் டிரம்ப் - பைடன் இடையே கத்திமுனை போட்டி

பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து உத்தியோகபூர்வமாக அமெ. விலகல்

இந்திய-நேபாள எல்லையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கும் பாகிஸ்தான்


அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு-US Presidential Election 2020-Joe Biden Wins

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின், தற்போது வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் 03ஆம் திகதி இடம்பெற்ற இத்தேர்தலைத் தொடர்ந்து. 4 நாட்களாக தொடர்ந்த கத்திமுனை போட்டி இடம்பெற்று வந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதியான குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை வெற்றி பெற்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முடிவை மாற்றக்கூடிய முக்கிய மாநிலங்களிலும் இருவருக்கும் இடையே நெருக்கமான போட்டி நிலவி வந்தது.

538 எலெக்டோரல் கொலேஜ் (தேர்தல் தொகுதிகள்) இல் ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்கு, வேட்பாளர் ஒருவர் 270 கொலேஜ் இல் வெற்றி பெற வேண்டி இருந்தது.

அதற்கமைய ஜோ பைடன் இதுவரை 290 கொலேஜ் இலும், டொனால்ட் ட்ரம்ப் 214 எலெக்டோரல் கொலேஜ் இலும் வெற்றி பெற்றுள்னர்.

இதேவேளை, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், வாக்கெண்ணும் பணிகளை நிறுத்துமாறு தெரிவித்ததோடு, அதனை நிறுத்த உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் தெரிவித்ததோடு, தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்து வந்தார்.

தொடர்ந்தும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 






 "தேர்தலில் மோசடி; உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளேன்"

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள டொனால்ட் ட்ரம்ப்,  வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிகளவான வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். டொனால்ட் ட்ரம்ப் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.  இந்நிலையில், தேர்தல் நிலவரம் தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உரையாற்றியபோதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, நாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். தேர்தலில் மகத்தான ஆதரவு அளித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

ஜோர்ஜியா, டெக்சாஸ் உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம். பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின் மாநிலங்களிலும் வெற்றி கிடைக்கும். ஆனால், முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் செய்கின்றனர்.

இத்தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எதிர்க்கட்சியினர் வெற்றியை திருடப் பார்க்கிறார்கள். தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பென்சில்வேனியா உள்ளிட்ட 3 முக்கியமான மாநிலங்களில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார். இழுபறியில் உள்ள இம்மாநிலங்களில் முடிவுகள் வெளியாகவில்லை. ஆனால் தபால் வாக்குகளை எண்ண ஆரம்பித்தால், டொனால் ட்ரம்ப் பின்னடைவை சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 



  “முஸ்லிம்களின் கோபத்தை புரிந்துகொள்ள முடிகின்றது”

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், நபிகள் நாயகம் குறித்த கேலிச் சித்திரங்களால் முஸ்லிம்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்திருப்பதைத் தம்மால் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறியுள்ளார்.

ஆனால், வன்முறையில் ஈடுபட அதை ஒரு காரணமாகக் கூறுவதை ஏற்கமுடியாது என்று அவர் தெரிவித்தார். அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் அதனைத் தெரிவித்தார்.

வன்செயல்களுக்கு அஞ்சித் தமது நாடு பின்வாங்கிவிடாது என்று கூறிய மக்ரோன், கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையைத் தற்காக்கப் போவதாகக் கூறினார்.

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்களும் அதில் அடக்கம் என்றார் அவர்.

ஆனால், அது தாமோ தமது அதிகாரிகளோ அந்தக் கேலிச் சித்திரங்களை ஆதரிப்பதாகப் பொருள்படாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

பிரான்ஸ் முஸ்லிம்களுக்கு எதிரான நாடு அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதே தமது பணி என்று குறிப்பிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி, உரிமைகளைப் பாதுகாப்பதும் தமது பணியே என்றார்.   நன்றி தினகரன் 




அமெரிக்க தேர்தல் முடிவுகளில் டிரம்ப் - பைடன் இடையே கத்திமுனை போட்டி

இரு வேட்பாளர்களும் வெற்றி பற்றி முன்கூட்டியே அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் தற்போதைய ஜனாதிபதியான குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் இடையே கத்திமுனை போட்டி நீடித்தது. முடிவை மாற்றக்கூடிய முக்கிய மாநிலங்களிலும் இருவருக்கும் இடையே நெருக்கமான போட்டி இருந்து வந்தது.

வாக்குகள் எண்ணப்படும் நிலையிலேயே டிரம்ப் வெற்றி அறிவிப்பை வெளியிட்டதோடு, அடிப்படை அற்ற மோசடி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். உச்ச நீதிமன்றம் செல்வதாகவும் அவர் சூளுரைத்துள்ளார்.

முன்னதாக தாம் வெற்றியின் பாதையில் இருப்பதாக பைடன் கூறியிருந்தார்.

நேற்று மாலை வரை மில்லியன் கணக்கான வாக்குகள் எண்ணப்படவிருந்த நிலையில் வெற்றியாளரை தேர்வு செய்யும் முடிவு வெளியாவதற்கு தாமதம் ஏற்பட்டிருந்தது. இரு வேட்பாளர்களும் வெற்றி பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டபோதும் அவை நம்பகமானதாக இருக்கவில்லை.

இந்த தேர்தல் முடிவுகளை ஒட்டி அமெரிக்கா எங்கும் நேற்று ஓர் இழுபறிச் சூழல் ஏற்பட்டிருந்ததோடு இறுதி முடிவு பல நாட்களுக்கு பின்னரே தெரியவரும் நிலை உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் 100 மில்லியனுக்கு அதிகமானவர்கள் தேர்தல் தினத்திற்கு முன்னரே முன்கூட்டிய வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். இது ஒரு நூற்றாண்டில் அதிக வாக்களிப்பு வீதத்தை கொண்ட தேர்தலாகவும் பதிவானது.

வெளியான முடிவுகளின்படி

தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புகளை முறியடிக்கும் வகையில் டிரம்ப் இந்தத் தேர்தலில் பல இடங்களிலும் அதிக வாக்களை வென்றிருந்தார். பைடன் தொடர்ந்து போட்டியில் இருந்த நிலையில் ஒட்டுமொத்த முடிவில் எந்த மாற்றமும் நிகழக்கூடிய வாய்ப்பு இருந்து வந்தது.

அமெரிக்கத் தேர்தல் என்பது நாடு தழுவிய வாக்கு எண்ணிக்கைக்கு பதில் மாநில அளவிலான போட்டியாகவே உள்ளது.

எனவே, ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்கு வேட்பாளர் ஒருவர் 270 எலெக்டோரல் கொலேஜ் வாக்குகளை வெல்லவேண்டி உள்ளது. மாநில அளவில் மக்கள் தொகை அடிப்படையில் இந்த வாக்குகள் பிரிகின்றன.

நேற்று மாலை வரை வெளியான முடிவுகளின்படி பைடன் 238 எலெக்டோரல் கொலேஜ் வாக்குகளையும் டிரம்ப் 213 இடங்களையும் வென்றிருந்தனர்.

குறிப்பாக தீர்க்கமான புளோரிடாவில் டிரம்ப் வெற்றி பெற்றது அவர் தொடர்ந்து போட்டியில் நீடிப்பதில் முக்கியமானதாக அமைந்தது. குடியரசுக் கட்சியின் கோட்டையான டெக்சாஸில் பைடன் திருப்பத்தை எதிர்பார்த்தபோதும் டிரம்ப் அங்கு வெற்றியை உறுதி செய்துள்ளார். எனினும் மற்றோரு குடியரசுக் கட்சியின் கோட்டையான அரிசோனாவில் பைடனால் வெல்ல முடிந்திருப்பது ஆரம்பக் கட்ட தேர்தல் முடிவுகள் காட்டின.

இந்நிலையில் பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் விஸ்கொன்சின் மாநிலங்களின் முடிவுகள் வெளியாகி இருக்காத நிலையில் அதன் முடிவுகள் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதில் தீர்க்கமாக இருந்தது.

இதில் டிரம்ப் தனது தோல்வியை தவிர்ப்பதில் அவர் பென்சில்வேனியாவில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழல் இருந்தது. தவிர இன்னும் முடிவுகள் வெளியாகாது இருந்து ஜோர்ஜியா மற்றும் வடக்குக் கரோலினாவின் முடிவும் செல்வாக்கு செலுத்துவதாக இருந்தன.

வேட்பாளர்கள் என்ன கூறுகின்றனர்

தேர்தல் தின இரவை சுமார் 100 விருந்தினர்களுடன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் கழித்து வந்தார். அங்கு அவர் அதிகாலையில் உரையாற்றியபோது, ‘இந்தத் தேர்தலில் நாம் வெற்றியை அறிவிக்க தயாராகி இருக்கிறோம். உண்மையிலேயே இந்தத் தேர்தலில் நாம் சாதித்துள்ளோம்’ என்றார்.

எந்த ஆதாரமும் குறிப்பிடாது ‘பெரும் மோசடி இடம்பெற்றதாக’ கூறிய டிரம்ப், ‘நாம் அமெரிக்க உச்ச நீதிமன்றம் செல்வோம்’ என்றார்.

‘என்னைப் பொறுத்தவரை, நாங்கள் ஏற்கனவே வென்று விட்டோம். எங்களுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று டிரம்ப் பேசினார்.

மில்லியன் கணக்கான தபால் வாக்குகள் இன்னும் எண்ணப்படாத நிலையில் மோசடி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தனது சொந்த ஊரான விலிமிங்டோனில் பைடன் உரையாற்றியபோது, தமது வெற்றி பற்றி நம்பிக்கை வெளியிட்டிருந்தார். ‘நாம் சாதித்திருக்கிறோம் நாம் இருக்கும் இடம் பற்றி நல்லதாகவே உணர்கிறோம். இந்தத் தேர்தலில் நாம் வெற்றிப் பாதையில் செல்கிறோம் என்பதை இங்கு நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்’ என்று பைடன் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 




பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து உத்தியோகபூர்வமாக அமெ. விலகல்

மூன்று ஆண்டுகள் தாமதத்திற்குப் பின் பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து உலகில் முதல் நாடாக அமெரிக்க நேற்று விலகியது.

அந்த உடன்படிக்கையில் இருந்து விலகும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 2017 ஆம் ஆண்டே வெளியிட்டபோதும், ஐ.நா ஒழுங்குமுறைகளுக்கு அமைய நேற்றே இந்த முடிவு அமுலுக்கு வந்தது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் இந்த உடன்படிக்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது.

காலநிலை மாற்ற அச்சுறுத்தலை கையாள்வதில் சர்வதேச அளவிலான ஒரு நடவடிக்கையாகவே 2015 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கை எட்டப்பட்டது.

இந்த நூற்றாண்டில் உலக வெப்பநிலை உயர்வதை கட்டுப்படுத்துவது மற்றும் வெப்பநிலை 1.5 பாகையை விட அதிகரிக்காது கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு உலக நாடுகளுக்கு இடையே இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.

உலகளாவிய பசுமையில்ல வாயுக்கள் உமிழ்வில் 15 வீதத்தை கொண்டிருக்கும் அமெரிக்கா உலகின் சக்திவாய்ந்த பொருளாதாரமாக தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே அமெரிக்கா விலகியதால் பாரிஸ் உடன்படிக்கையை செயற்படுத்துவது கேள்விக்குறியாகியுள்ளது.  நன்றி தினகரன் 





இந்திய-நேபாள எல்லையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கும் பாகிஸ்தான்

இந்திய-நேபாள எல்லையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எவ்வாறு ஆதரிக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய பாதுகாப்பு முகவர்கள் தயாரித்த சமீபத்திய அறிக்கையில் இந்திய நேபாள எல்லையில் தீவிர நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, பீகார் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய-நேபாளத்தில் ஏராளமான மசூதிகள் மற்றும் விருந்தினர் மாளிகைகளுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தாவத்-இ-இஸ்லாமியா என்ற அமைப்பால் நிதியளிக்கப்படுகின்றன, மேலும் இந்த மசூதிகள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளத்தின் தாவத்-இ-இஸ்லாமியா கிளைகளால் நிதியளிக்கப்படும் இந்த நிறுவனத்தின் திட்டத்தின் செலவு ரூ1.25 கோடி என்று அறிக்கை கூறுகிறது.

"ரவுட்டாஹாட், பார்சா, கபிலவஸ்து, சன்சாரி மற்றும் பரா ஆகிய எல்லை மாவட்டங்களில் வந்துள்ள வெளிநாட்டு நிதியுதவி கொண்ட மதரஸாக்கள் மற்றும் மசூதிகள் நேபாளத்தில் தண்டனையின்றி செயல்படும் இந்திய எதிர்ப்பு சக்திகளின் நரம்பு மையங்கள் ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் தவாத்-இ-இஸ்லாமியா விருந்தினர்களை தங்க வைக்க இரண்டு மாடி விருந்தினர் மாளிகை கட்டப்பட்டிருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த எல்லைப்புற மாவட்டங்களில் வாழுபவர்கள் நேபாளத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் அளிக்கின்றன, இது இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கும். இந்தோ-நேபாள எல்லையில் இஸ்லாமிய நடவடிக்கைகள் அதிகரிக்கிறது என்று அதிகாரி கூறினார். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழு லஷ்கர்-இ-தைபாவும் நேபாள எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளை குறிவைத்து உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மற்றும் பைசாபாத்தில் ஒரு தளத்தை உருவாக்க முயற்சிக்கிறது.   நன்றி தினகரன் 





No comments: