அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 39 – பெரியமேளம் – சரவண பிரபு ராமமூர்த்தி பெரியமேளம் – தோற்கருவி


பெரியமேளம் பெயருக்கு தகுந்தாற்போல் அளவில் மிகப்பெரியது. இரு புறமும் மாட்டுத்தோல் அல்லது எருமைத்தோல் கட்டப்பட்ட,  மரத்தாலான நடுப்பகுதி கொண்ட உருளை வடிவ இசைக்கருவி. இப்பொழுது பித்தளை உருளைக்கு மாறிவிட்டார்கள். சுமார் 2 அடி உயரம் இருக்கும் உருளை. ஒதியன் மரத்தின் குச்சியை வளைத்து மண்ணில் புதைத்து வைத்து பிறகு அதை தோல் வைத்துக் கட்டி தட்டும் முகமாக பயன்படுத்துவார்கள். முகங்கள் குச்சியால் வாசிக்கப்படும். பெரியமேளம் சுமார் 10 முதல் 12 கிலோ எடைகொண்டதாக இருக்கும்.

சென்ற நூற்றாண்டு வரை நாதசுரம், தவில், ஒத்து, தாளம் ஆகியவற்றை


இசைக்கும் குழுவிற்கு பெரிய மேளம் என்றும், தேவதாதியர், அவரைச் சார்ந்த நட்டு,முட்டு, மத்தளம், முகவீணை ஆகியவை சின்ன மேளம் என்றும் அழைக்கபட்டு வந்தது.  இன்று நாம் பார்க்கப் போகும் பெரிய மேளம் அதுவன்று. இது முழுவதும் நாட்டார் தன்மை கொண்டது. விளிம்பு நிலை மனிதர்களுடையது.     

 பெரியமேளக் குழுவில் பெரிய மேளம், சின்ன மேளம், பறை, தமரு, சட்டி, தமுக்கு, ஜால்ரா ஆகிய கருவிகள் இடம்பெறும். பெரியமேளக் குழுவை ஜமா என்றும் சொல்கிறார்கள். பெரியமேளத்தில் ஒவ்வோர் அடி முறையையும் பாகம் என்கிறார்கள். மொத்தம் பத்துவிதமான பாகம் உண்டு. முதல் பாகம் கோவில் பாகம், இரண்டாவது பாகம் என்பது காத்தவராயன் பாகம்,  மூன்றாவது பாகம் திருமண விழாக்களின்போதும், நான்காவது பாகம் கங்கையம்மனுக்குக் கூழ் ஊற்றும்போதும், ஐந்தாவது பாகம் வேகமான திரைப்படப் பாடலுக்கும், ஆறாம் பாகம் மாரியம்மனுக்குக் கூழ்வார்க்கும்போதும், பொங்கலின்போது ஏழாம் பாகமும் ,புலியாட்டத்திற்கு எட்டாம் பாகமும், ஒன்பதாம் பாகமும் வாசிக்கப்படுகிறது. துக்க நிகழ்ச்சியிலும் தனிமனித துதியிலும் பத்தாம் பாகமும் வாசிக்கப்படுகிறது

பெரியமேளம் ஆட்டத்துடன் கூடிய இசைவடிவம். துவக்கம் முதல் முடிவு வரை ஆடிக்கொண்டே நிகழ்த்தப்படும். ஏழு விதமான ஆட்டங்கள் உண்டு. மேடை நிகழ்வுகள், நாட்டார் கோவில் திருவிழாக்கள், திருமணம், இறப்பு ஆகிய நிகழ்வுகளில் பெரியமேளம் இசைக்கப்படுகிறது. பெரியமேளத்தை கள ஆய்வு செய்துள்ள முனைவர் அ.கா.பெருமாள் அவர்கள் இந்த பாக முறைகளை மக்கள் மிகத் தெளிவாக புரிந்துகொள்ளப்படுவதாகக் கூறுகிறார். இவரது கள ஆய்வில் ஒரு பாட்டியிடம் “அம்மா அங்கே என்ன மேள சத்தம். என்ன நடக்கிறது?” என்று கேட்க அந்த பாட்டி அடி தெரியலையா உனக்கு. கங்கையம்மனுக்கு கூழ் ஊத்தற அடி. கூழ் ஊத்தறாங்க வா போவலாம்”  என்றாராம்.


தமிழகத்தின் வடமாவட்டங்களில் இக்கலை பரவலாக நிகழ்த்தப்படுகிறது குறிப்பாக திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற மாவட்டங்களில் இசைக்கப்படுகிறது. திருவண்ணாமலை சு பாப்பம்பாடியைச் சேர்ந்த திரு முனுசாமி அவர்கள் இக்கலையை பல சிரமங்களுக்கிடையில் பரம்பரையாக நிகழ்த்தி வருகிறார். சுமார் 9 வயது முதல் இவர் தன் தாத்தாவிடம் கற்றார். இவரது தந்தை இதை வேண்டாம் என்று கூற இவர் இக்கலையை கையில் எடுத்து இன்று தமிழகம் முழுவதும் வலம் வருகிறார். இவரது பயிற்சியில் சுமார் 75 கலைஞர்களை இவரது கிராமத்தில் உருவாக்கியுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் இந்த கலை தான்.

பெரியமேளக் குழுக்கள் வட தமிழ்நாட்டில் அருகி வருகின்றன. இக்கலைக்கு உரிய மதிப்பு, தகுந்த சன்மானம் ஆகியவை சரியாக கொடுக்கப்படாத நிலையில் இக்கலை அழிவின் விளிம்பில் உள்ளது. பெரிய மேளத்தை குமரி வட்டாரத்திலும், கேரளத்திலும் சில இடங்களில் காணமுடிகிறது. 

காணொளி:

https://www.youtube.com/watch?v=n_WIQweELLQ

https://www.youtube.com/watch?v=rFdZs497Gkk

https://www.youtube.com/watch?v=hRwlozbln-A

-சரவண பிரபு ராமமூர்த்தி

நன்றி:

1.     திரு சரவணன், இசை ஆய்வாளர்,வேட்டவலம்

 





No comments: