செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடுகிறேன்
மட்டக்களப்பிற்கு வருவோர், செல்வோரின் விபரம் திரட்ட நடவடிக்கை
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க பிள்ளையானுக்கு அனுமதி
பிள்ளையார் சிலை இனந்தெரியாதோரால் சேதம்
அனைத்தையும் அவதானித்து திங்கட்கிழமை ஊரடங்கு நீக்கப்படும்
கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலையில் உள்ளது
நிதி நிறுவன மோசடி; சந்தேகநபர் குடும்பத்துடன் இந்தியாவில் கைது
ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த வாழ்த்து
செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடுகிறேன்
விரைவில் விடுதலையாவேன் என நம்பிக்கை
எந்த ஒரு குற்றமும் செய்யாமல் என்னை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கு அனுமதிப்பது தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நிதியமைச்சராக இருந்த மங்கள சமரவீரவிற்கும் கடிதம் எழுதியது தவிர நான் எந்த தவறும் செய்யவில்லை என ரிசாத் பதியுதீன் எம்.பி தெரிவித்தார்.
நீதி நியாயத்தால் விடுதலையடைவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர்,
இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்க வசதி அளித்துக் கொடுத்ததற்காக எந்த ஒரு குற்றமும் செய்யாமல் என்னை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.1990 இல் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து வருகின்றனர்.
ஆனால் இந்த முறை அதனை பெரிதுபடுத்தி அதற்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த என்னை சிறையில் அடைத்துள்ளனர். நாட்டில் நீதி நியாயமிருந்தால் நான் விடுதலை செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. எனக்கு நடந்த அநியாயத்தை படைத்த இறைவனிடம் ஒப்படைத்துள்ளேன்.
என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்.மக்கள் வாக்களிக்க அனுமதி கோரிய போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் ஆலோசனை கேட்டேன்.
உங்களது அமைச்சின் கீழ் உள்ளவிடயம் என்று கூறி பணிப்பாளருக்கு அவர் கடிதம் அனுப்பியிருந்தார்.
இதற்கான நிதியை பயன்படுத்த நிதி அமைச்சராக இருந்த மங்கள சமரவீர அறிவித்திருந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மங்கள சமரவீரவிற்கும் கடிதம் எழுதியதை தவிர வேறு எந்த தவறும் செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். அரசியலமைப்பில் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் கருத்து ,மதச் சுதந்திரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
2020 மார்ச்சில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இறந்த உடலினால் தொற்றுபரவாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே அவசரமாக நிபுணர் குழுவை நியமித்து முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்.நான் மரணித்தாலும் முஸ்லிம் அமைச்சர்கள் மரணித்தாலும் எரிக்கப்படுவார்கள்.
வைத்தியசாலைகளுக்கு செல்ல பலரும் பயப்படுகிறார்கள்.ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தி இதற்கு அனுமதிக்குமாறு கோருகிறேன்.
ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன் - நன்றி தினகரன்
மட்டக்களப்பிற்கு வருவோர், செல்வோரின் விபரம் திரட்ட நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தருவோர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்வோரினது விபரங்களை திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட கொவிட்-19 கொரோனா தடுப்பு விசேட செயலணியின் கூட்டம் நேற்று (01) மாலை மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றபோதே, பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் சிகை அலங்கார நிலையங்களை இன்று (02) முதல் திறப்பதற்கு மாவட்ட கொவிட்-19 தடுப்புச் செயலணி அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஒரு வாரகாலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மூடப்பட்டிருக்கும் சிகை அலங்கார நிலையங்களை இன்று முதல் திறப்பதற்கு அனுமதிப்பதுடன், கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத பிரதேசங்களிலும் சிகை அலங்கார நிலையங்களை திறக்க அனுமதிக்கப்படுகின்றது. சிகை அலங்காரம் செய்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்குவது எனவும், சுகாதார நடைமுறைகளை பேணி சிகை அலங்காரத்தை செய்ய வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன், மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு இறுக்கமான இன்னும் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களிலிருந்து வருகின்றவர்களினதும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்பவர்களினதும் பெயர் விபரங்களை மாவட்டத்தின் எல்லைகளான வெருகல், பெரியநீலாவணை, பதுளை வீதி, றெதிதென்ன போன்ற இடங்களில் பொலிசார் பதிவுகளை மேற்கொள்ளுதல்.
அவர்களின் விபரங்களை மாகாண சுகாதார பணிமனைக்கு அனுப்புவதுடன், அவர்களைக் கண்காணித்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் வண்டிகள், அதேபோன்று தனியார் பஸ் வண்டிகள் மாவட்டத்துக்கு வெளியே செல்வது தொடர்பில் விபரங்களை பெற்றுக்கொள்ளுதல்.
மாநகர, நகர, பிரதேச மட்டங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஊடாக நடவடிக்கை எடுத்தல்.
மாவட்டத்திலிருந்து அத்தியாவசிய சேவைகளுக்காக வெளிமாவட்டங்களுக்கு செல்வோர், அவர்களின் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவித்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லக்சிறி விஜேயசேன, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரிகள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பாதுகாப்பு அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(புதிய காத்தான்குடி தினரகன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்) நன்றி தினகரன்
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க பிள்ளையானுக்கு அனுமதி
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியை பெற்று, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள முடியும் என, நீதிபதி ரீ. சூசைதாஸன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கான நீதிமன்ற அனுமதி வழங்கக் கோரிய வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (02) இடம்பெற்ற போதே நீதவான் இதனை அறிவித்தார்.
இதன்போது, சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.பி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ஜவ்பர்கான்) - நன்றி தினகரன்
பிள்ளையார் சிலை இனந்தெரியாதோரால் சேதம்
மட்டக்களப்பு, வாழைச்சேனையில் பிரசித்தி பெற்ற ஆலயமான ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்ட வழிப் பிள்ளையார் உருவச் சிலையானது இனந்தெரியாதோரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பாக இன்று (05) அதிகாலையில் காவலாளி தமக்கு தெரியப்படுத்தியதாக, ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
70 வருட கால பழமை வாய்ந்த இரண்டரை அடி உயரமுள்ள குறித்த பிள்ளையார் சிலையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
(பாசிக்குடா நிருபர் - உருத்திரன் அனுருத்தன்) - நன்றி தினகரன்
அனைத்தையும் அவதானித்து திங்கட்கிழமை ஊரடங்கு நீக்கப்படும்
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (09) பின்னர் மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்தும் அமுல்படுத்த எண்ணம் இல்லை என, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டை மூடுவது தொழில்துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள அவர், அனைத்து விடயங்களையும் அவதானித்து, மேல் மாகாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (09) அதிகாலை 5.00 மணி வரை விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீக்குமாறு, ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
ஆயினும், மக்கள் உரிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றினால் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நன்றி தினகரன்
கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலையில் உள்ளது
சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத்
கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்கு, இரண்டு மாதத்திற்கும் அதிக காலம் எடுக்கும் என சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு நாட்டில் கொரோனா வைரஸ் பரவலானது, ஓரளவு அபாயநிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டில் நேற்று வரை 409 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில், 401 பேர் நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், 8 பேர் தனிமை மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 266 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 332 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.
தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்த 34 பேர் நேற்று வீடு திரும்பியுள்ளனர். தனியார் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களே, இவ்வாறு வீடு திரும்பியதாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரையில், 63 ஆயிரத்து 223 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேநேரம், முப்படையினரால் முன்னெடுத்துச் செல்லப்படும் 34 தனிமைப்படுத்தல் மையங்களில், 2 ஆயிரத்து 776 பேர் தொடர்ந்தும் தனிமைப்பத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நன்றி தினகரன்
நிதி நிறுவன மோசடி; சந்தேகநபர் குடும்பத்துடன் இந்தியாவில் கைது
மக்களின் பணத்தை ஏப்பமிட்ட தனியார் நிதி நிறுவன உரிமையாளர், மனைவி, மகன் இந்தியாவில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள், தமது உண்மையான விபரங்களை மறைத்து ஆரம்பத்தில் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ள நிலையில் இலங்கையில் தனியார் நிதி நிறுவன உரிமையாளர் என தெரிய வந்துள்ளது.
வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில், இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் ஒரு பைப்பர் படகில் திருகோணமலை பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி (45) மனைவி சல்மா பேகம் (35) மகன் அன்சார் (10) என்ற பெயரில் கோடியக்கரை சவுக்கு காட்டில் சென்று இறங்கினர்.
இந்த மூன்று பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் படையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாக கிழக்கு மாகாணத்தில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் விலை மோசடி செய்து தலைமறைவான நிலையில் பல்வேறு பிரதேசங்களில் நீதிமன்றங்களில் இவருக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்கலாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனம் கிழக்கின் முக்கிய நகரங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கியதுடன் கல்முனை, மருதமுனை, சம்மாந்துறை, பொத்துவில் உள்ளிட்ட பிரதேசங்கள் முழுவதிலும் மொத்தமாக 200 கோடி ரூபாயையும் நாடு முழுவதிலும் 1,200 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(பாறுக் ஷிஹான்) - நன்றி தினகரன்
ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த வாழ்த்து
- எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் வாழ்த்து
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தனது ட்விற்றர் கணக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,
"வரலாற்று வெற்றி தொடர்பில் ஜோ பைடனுக்கு வாழ்த்துகள். இரு நாடுகளுக்கிடையேயான வலுவான உறவை தொடர்ந்தும் வலுப்படுத்த எதிர்பார்க்கிறேன்" "ஜனாதிபதியாக தெரிவான ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தெரிவான கமலா ஹரிஸ் ஆகியோருக்கு, இலங்கை அரசாங்கமும், நாட்டு மக்களும் என்னுடன் இணைந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்."
அதேபோன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ட்விற்றர் கணக்கில் இவ்வாறு வாழ்த்தியுள்ளார்.
"ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துகள். இரு நாடுகளுக்கிடையேயான 72 வருட இராஜதந்திர உறவு பூர்த்தியாகியுள்ள இத்தருணத்தில், இலங்கை - அமெரிக்க இடையிலான இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தி, உங்கள் இருவருடனும் இணைந்து, இரு நாட்டு மக்களின் நன்மைக்காக பணியாற்ற விரும்புகிறேன்."
இதேவேளை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் தனது ட்விற்றர் கணக்கில் ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்று வெற்றியீட்டியுள்ள ஜோ பைடனுக்கு எனது இனிய வாழ்த்துகள். மிக உயர்ந்த அலுவலகத்தில் பணியாற்றவுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துகள். அத்துடன் நீங்களும், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹரிஸும் இணைந்து அமெரிக்காவை மிகச் சிறந்த நிலையை நோக்கி கொண்டு செல்வதற்கான உச்ச முயற்சிகளை வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்."
No comments:
Post a Comment