மழைக்காற்று - ( தொடர்கதை ) அங்கம் 60 முருகபூபதி


 அ பிதா… என்னம்மா… உறக்கமா…? எனக்காக சமைத்து படையலும் வைத்து களைத்துப்போனாயா…? உறங்கு… உறங்கு… கண்ணுறங்கு மகளே… உண்ட களை தொண்டருக்கும் உண்டாம்.  நீயோ… இங்கே வந்தது முதல் வேலை… வேலையே வாழ்க்கை என்று காலத்தை ஓட்டுகிறாய்.  யார்தான் உனக்கு ஓய்வு தந்தார்கள்.

 சமைத்துப்பரிமாறி,  பாத்திரம் கழுவித்துடைத்து, வீட்டை கூட்டித் துப்பரவுசெய்து,  அவகள்  அணிந்து களைந்து போட்டுவிடும் உள்ளாடை முதற்கொண்டு அனைத்தையும் துவைத்து காயப்போட்டு உலரவைத்து, அவகளுக்குத் தேவைப்படும்போதெல்லாம் அவற்றை ஸ்திரிபோட்டு அயன்செய்து மடித்துக்கொடுத்து, அவகள் வேலைக்குச்செல்லும்போது,  அணியும் சேலையின் கீழ் விளிம்பில் மடிப்பு வராமல் நிமிர்த்திவிட்டு சரிகைக்கும் பிளவுஸுக்கும்  ஊசி குத்திவிட்டு, சாப்பாட்டு கெரியரையும், தண்ணீர்போத்தலையும் எடுத்துக்கொடுத்து, கைப்பையையும் கைத்தொலைபேசியையும் நினைவூட்டி வழியனுப்பியதோடு உன்ர வேலை முடியவில்லையே…  அந்த ரீச்சரம்மாவுக்கு கால் உளைவு வரும்போதெல்லாம் எண்ணெய் பூசி தடவிவிட்டு, உறங்கவைத்ததுடன் நின்றாயா… அதுவும் இல்லையே… அந்தப்பெட்டைகள் ரெண்டுபேரின் சோகக்கதைகளை கேட்டு ஆறுதலும் சொல்லி, பாட்டும் பாடி அவளுகளை உற்சாகப்படுத்தினாயே… இவ்வளவும் செய்தும் என்னத்தை கண்டாய்.  அவள் ஜீவிகா, காதலனுடன் சுற்றப்போனவேளைகளில் வீட்டில்  கண்விழித்து காவல் இருந்தாயே…  உறங்கு… உறங்கு… இப்போது எல்லோரும் அவரவர் பாட்டை பார்த்துக்கொண்டு போய்விட்டார்கள்… காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே… என்ர புருஷன், என்ன செய்தார்..? நான் பாரிசவாதம் வந்து படுக்கையில் விழுந்ததும், எனக்கு பணிவிடை செய்யவந்த பெண்களுடன் ஆடிய சரசங்கள் எனக்குத் தெரியாது என்றா நினைக்கிறாய்.. இப்போது எனது தினம் வருகிறது. படையல் போடச்சொல்கிறார். ஊரிலிருந்த எனக்குத்தந்த சீதன வீட்டை விற்றுத்தான் இந்த வீட்டை அவர் வாங்கினார்.   என்னுடைய


சேமிப்பிலிருந்ததை கொடுத்துத்தான் என்ர மகனையும் மகளையும் லண்டனுக்கு படிக்க அனுப்பினன். போனவிடத்தில் தங்களை செட்டில் பண்ணிக்கொள்வதில் காண்பித்த அக்கறையை என்னை ஒரு எட்டு வந்து பார்த்துவிட்டுப்போவதற்கு காண்பிக்காத பிள்ளைகள்.  உனக்குத் தெரியுமா, அதுகளின்ட குழந்தைகளையும் , அதுதான் என்ர பேரக்குஞ்சுகளையும் நான் படங்களில்தான்  பார்த்திருக்கிறன. சிலவேளை நான் செத்தபிறகு என்ர மகன் கொள்ளி வைக்க வந்திருப்பான். ஆனால், தெரியாது, நான்தான் செத்துப்போனேனே…. இப்போது இந்த வீட்டை வித்துப்போட்டு இலங்கைக்காசுக்கு லண்டன் பவுண்ஸ் எவ்வளவு வரும் என்று அண்ணனும் தங்கச்சியும் கணக்குப்பார்க்குதுகள். நீ… எதற்காக இங்கே வந்தாய்… நீ வரவில்லை… விதி உன்னை இங்கே என்னிடம் வரவழைத்திருக்கிறது.  அந்தப்பாலகன், அவன்தான் உன்னுடன் இப்போது புதிதாக சிநேகிதம் கொண்டாடுகிறாளே… தமயந்தியின் மகன்… என்ன சொன்னான் பார்த்தாயா.. கடவுளும் குழந்தையும் ஒன்றுதான். அந்தச்சிறுவனின் வாக்கு பலிக்கும்.  இந்த வீட்டை யாரும் வாங்கமாட்டார்கள். வீடு விற்கப்படாது.  நான் இங்கே நடமாடுகிறேன்.  நீதான் இந்த வீட்டின் எஜமானி.  அவள் ஜீவிகா அல்ல. அவள் போய்விடுவாள்.  தினமும் எனக்கு நீ பூச்சரம் சூட்டி, தண்ணீர் வைத்து விளக்கேற்றி வணங்குகிறாய்.  ஆனால், லண்டனில் எனது படத்தை எவரும்  கணக்கில் எடுப்பதும் இல்லை.  அவர்… நீதான் அடிக்கொரு தடவை லண்டன்காரர்…  லண்டன்காரர் என்று சொல்வாயே… நான் பிறந்த நாள், இறந்த நாள் மாத்திரம்தான் அந்த ஆளின்ரை நினைவில்  இருக்கும். மற்றும்படி அந்த ஆளுடன் சரசமாடியவள்களின் முகமும் உடலும்தான் நினைவில் தங்கியிருக்கும்… நீ… உறங்கு மகளே… உறங்கு…. நீ… இவ்வாறு பகல் உறக்கம் கண்டு எத்தனை வருடமிருக்கும்…?    போர் உக்கிரமடையமுன்னர் ஒரு பகல்பொழுதில்தானே உனக்கும் உனது கணவனுக்கு முதல் பகல் வந்தது. அந்த முதல் பகலில்தானே உன்குழந்தையும் உனக்குள் உயிராகியது.  நினைவிருக்கிறதா…..? 

இப்பொழுது  அனைத்தும் நீ  இழந்து,  நினைவுகள் மாத்திரமே உனக்கு நிரந்தரமாகியிருப்பதை  பார்த்தாயா… ?   இதுதான் மகளே விதி.  ராஜேஸ்வரி அம்மா, அபிதாவின் கூந்தலை வருடிக்கொண்டே பேசுகிறாள்.  அபிதாவின் மேனி குளிர்கிறது.  ராஜேஸ்வரியின் மடியில் முகத்தை குப்புறப்போட்டுக்கொள்கிறாள்.    “ அம்மா பேசுங்க… சுகமாக இருக்கிறது.  இன்றைக்குத்தான் நல்ல தூக்கம் வருகிறது… ஒரு பாட்டு பாடுங்கோ அம்மா…  “   “ அதுதான் பாடுகிறேனே… காலம் இது காலம் இது கண்ணுறங்கு மகளே…  “ ராஜேஸ்வரி அம்மா விசும்புகிறாள்.    “ என்னம்மா… அழுறீங்களா… அழவேண்டாம். பாடுங்கோ… பாடுங்கோ…. உங்கள்  குரல் நல்லா இருக்கிறது…. என்னுடைய பாட்டியும் என்னை உறங்கவைக்கும்போது இப்படித்தான் தாலாட்டுவா…. என்னுடைய பாட்டியை உங்களுக்குத் தெரியுமா… கிட்டத்தட்ட உங்களைப்போலத்தான்.  நெற்றியில் பெரிய குங்குமத்திலகம் வைத்திருப்பா… பாடுங்கோ அம்மா… இடி இடித்து மழை வரும்போது, பாட்டியை இறுகக்கட்டிக்கொள்ளுவேன். பாட்டி அர்ச்சுனா… அர்ச்சுனா… என்று உச்சரிப்பா… வானத்தில் வீமனும் துரியோதனனும் கதாயுதத்தால் சண்டை போடுவினமாம்.  வீமன் தனது தம்பி அர்ச்சுனனை துணைக்கு கூப்பிடுவானாம்.  அம்மா… எனக்கு குளிருது அம்மா. மழை வரப்போகுதா… இடி இடிக்குதா… அம்மா… நீங்கள் அழுகிறியளோ… அழவேண்டாம்.. இது என்ன உங்கள்  கண்ணீர் என்னுடைய முகத்தில் விழுது…. “  அபிதா திடுக்கிட்டு விழித்தாள்.  வெளியே மழைக்காற்று வீசிக்கொண்டிருக்கிறது.  கூரை ஓட்டிலிருந்த  சிறிய துவாரத்திலிருந்து விழுந்த மழைத்துளி அவள் கன்னத்தில் பட்டுத் தெறித்தது.  அபிதா படுக்கையிலிருந்து எழுந்து முழங்கால்களை மடித்தவாறு விட்டத்தை பார்த்தாள்.  மழைக்காற்றினால் சற்று விலகியிருந்த ஓடுகளின் ஊடாக வெளிச்சமும் குளிர்காற்றும் உள்ளே வந்தன.  கன்னத்தில் பட்டுத் தெறித்த நீர்த்துளியைத்தான் ராஜேஸ்வரி அம்மாவின் கண்ணீர் என்று நினைத்தேனா…? நீண்ட காலத்திற்குப்பின்னர் வரப்பிரசாதமாக வந்த பகல் உறக்கம். அது என்ன முதல் பகல்… அதுமாத்திரம்தானே அந்த அம்மா சொன்னதும் நினைவில் காட்சிப்படிமமாக தங்கியிருக்கிறது. முதல் இரவு போன்று முதல் பகலும் இருந்திருக்கிறதே…  அபிதா கணவனை நினைத்து சிரித்தாள்.  சேலைத்தலைப்பினால் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டு எழுந்தாள். கூடத்தின் யன்னல் ஊடாக வெளியே பார்த்தாள், மழைத்தூறல் உள்ளே வந்தது.  யன்னலை மூடாமல் தூறலை ரசித்தாள்.  தமயந்தியின் அண்ணனுக்கு மின்னஞ்சல் அனுப்பும் எண்ணம் வந்தது. தனது அறைக்குச்சென்று மடிக்கணினியை எடுத்து வந்து சாப்பாட்டு மேசையில் வைத்துவிட்டு, குளியலறைக்குச்சென்று திரும்பினாள். அந்த பகல் கனவு இருண்ட மேகத்தினூடாக வரும் மெல்லிய வெளிச்சமாக மனதிற்குள் ஊடுருவியதுபோன்ற உணர்வு வந்தது. ராஜேஸ்வரி அம்மாவின் படத்தை பார்த்தாள். அன்று பகல் படையல் வைக்கும்போது சூட்டியிருந்த மலர்ச்சரம் காற்றில் அசைந்தது.  ஊதுவத்தி அணைந்து, மெல்லிய கோடாக சாம்பல் வடிந்திருந்தது. அந்தப்படத்தையே கூர்ந்து பார்த்தாள். ராஜேஸ்வரியின் கண்கள் எத்தனையோ கதைகளை அவளுக்கு சொல்வதுபோலத் தெரிந்தது.  மீண்டும் மேசையருகே வந்து, கணினியை இயக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டுக்குள் நிலவிய அமைதியை கிழித்துக்கொண்டு யன்னல் கதவுகள் வெளியே வீசிய மழைக்காற்றினால்  முன்னும் பின்னும் நகர்ந்து  நிலையில் அடித்தன.  கணினியில் பக்கம் பக்கமாக எழுதிவைத்திருந்த தனது நாட்குறிப்புகளை முதலிலிருந்து வேக வேகமாக  வாசித்தாள்.  எழுத்துப்பிழைகளை திருத்தினாள். வசனங்களை மாற்றினாள். நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. கழுத்திலும் தோள்மூட்டுகளிலும் நோவு வந்தபோது,  எழுந்து நடந்தாள்.  கைகளை மேலே உயர்த்தி நெட்டி முறித்தாள். தேநீர் தயாரித்து அருந்தினாள்.  தன்னைத்தவிர வேறு எவருமே இல்லாத வீட்டில், தான் மாத்திரம் இன்னும் எத்தனை நாட்களுக்கு இவ்வாறு யோசித்துக்கொண்டிருக்கப்போகிறேன்..? வந்திருக்கும் கொரோனோ என்றைக்கு விட்டுச்செல்லும். கண்ணுக்கே  தெரியாமல் உயிர்களையும் பலியெடுத்து, முழு உலகத்தினதும் பொருளாதாரத்தை தலைகீழாக்கிவிட்டு, மனித மனங்களையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறதே…?  எத்தனைபேரின் கனவுகள் நிராசையாகிவிட்டன. இந்த இலட்சணத்தில் எனக்கு வரும் பகல் கனவு என்ன சொல்ல வருகிறது…?  வீட்டுக்குள்ளே நடைபயின்ற அபிதாவின் வாய் ஒரு பாடலை முணுமுணுத்தது.  பாடிக்கொண்டே  வீட்டின் பின்கதவருகில் வந்து வெளியே எட்டிப்பார்த்தாள்.   பின்புறத்தில் அவள் பராமரிக்கும் மரம், செடி, கொடிகளும் , பூமரங்களும் மழைக்காற்றில் சிலிர்த்து அசைந்தன. அவற்றின் அழகை ரசித்தவாறு பிடித்தமான பாடலை பாடினாள்.  என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார் என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார் என் நெஞ்சைச்சொல்லுமே… பாடிக்கொண்டே வந்து அமர்ந்து கணினியில் தொடர்ந்து எழுதினாள்.  எழுதிக்கொண்டே இருந்தாள். வரிகள் வேகமாக வந்தன.  அந்த நாட்குறிப்பு நெடுங்கதையாகவே உருமாறி  வளர்ந்திருந்தது. அறுபது அங்கங்கள் வரையில் தொடர்ந்திருந்தது.   அவுஸ்திரேலியாவிலிருக்கும்  தமயந்தியின் அண்ணனின்  மின்னஞ்சலுக்கு மடல் எழுதினாள். அன்புள்ள அய்யா வணக்கம். நலமாக இருக்கிறீர்களா… ?  என்னைப்பற்றி உங்கள் தங்கை தமயந்தி சொல்லியிருப்பா. எனது கதையையும் சொல்லியிருக்கலாம்.  இறுதியாக வன்னியில் நடந்த போரில் அனைத்தும் இழந்து நிர்க்கதியாக நின்றபோதுதான், இந்த நிகும்பலையூருக்கு ஒரு வீட்டு வேலைக்காரியாகவும் சமையல்காரியாகவும் வந்தேன். எனக்கு அடைக்கலம் தந்த இந்த நிகும்பலையூரைப்பற்றியும் இங்கு நான் சந்தித்த மனிதர்கள், தரிசித்த காட்சிகள், பெற்ற அனுபவங்கள் அனைத்தையும் நாட்குறிப்பாகவே எழுதியிருக்கிறேன். இந்த நாட்குறிப்பில் எனதும் என்னைச்சூழவிருந்தவர்கள் – இருப்பவர்களதும் கதைகள்தான் இருக்கின்றன. நான் கற்பனாவாதியல்ல. இதில் எழுதியிருப்பதெல்லாம் நிஜம். நீங்கள் ஒரு தேர்ந்த இலக்கியவாதி என்பதை அறிவேன். உங்களிடம்தான் இதனை எழுதி ஒப்படைக்கின்றேன். இதனை படித்துவிட்டு உங்கள்  வாசிப்பு அனுபவத்தை எழுதி அனுப்புங்கள். உங்கள் அனுபவத்தையே எனது இந்த நெடுங்கதையின் அணிந்துரையாக ஏற்றுக்கொள்கின்றேன்.  எங்கள் நாட்டுக்கு, இந்த நிகும்பலையூருக்கு நீங்கள் வரும்போது நான் எங்கே இருப்பேன் என்பது தெரியாது.  விதிப்படிதான் அனைத்தும் நடக்கும் என்பார்கள்.  விதி என்னுடன் நன்றாக விளையாடியிருக்கிறது.  நானும் அதனுடன் விளையாடி வருகிறேன். விதிதான் எனது ஆத்மார்த்தமான உறவு. உடல் நலத்தில் அவதானமாக இருங்கள்.  இத்துடன் எனது நாட்குறிப்பு வடிவத்தில் அமைந்த நெடுங்கதையை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன். நன்றி அய்யா.   அன்புடன் அபிதா.   மின்னல் வேகத்தில் அந்த நெடுங்கதை கணினியூடாக பறந்து சென்றது.   அக்கதை இவ்வாறு தொடங்கியிருந்தது:  அபிதா,  நிகும்பலையில் இறங்கும்போது அதிகாலையாகிவிட்டது. அந்த தனியார் துறை பஸ் உரியநேரத்திற்கு முன்பே வந்து, அவளை இறக்கிவிட்டு கடந்து சென்றது. அதன் சாரதியின் வேகம் அடிக்கடி நடக்கும் வீதி விபத்துக்களையும் நினைவூட்டியமையால் பதற்றத்துடனேயே பயணித்தாள். அந்தப்பதற்றம் இதர பயணிகளின் முகங்களிலும் படிந்திருந்தது. ( முற்றும் )

No comments: