எனது எழுத்துலக வாழ்வு வெள்ளீயத்தில் தயாரிக்கப்பட்ட அச்சு ஊடகங்களில் ஆரம்பமாகி, பின்னாளில் இணைய ஊடகத்தை நோக்கி வளர்ந்தது.
1970 களில் எனது எழுத்துக்கள் வீரகேசரி, தினகரன் முதலான நாளேடுகளிலும் மல்லிகை, பூரணி, புதுயுகம், கதம்பம், மாணிக்கம் முதலான சிற்றிதழ்களிலும்தான் வெளிவந்தன. அவுஸ்திரேலியாவுக்கு வரும்வரையில் ஒவ்வொரு வெள்ளீய அச்சு எழுத்துக்களினால் கோர்க்கப்பட்டு அச்சாகிய எனது படைப்புகள், 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கணினியில் பதிவாகி இணைய ஊடகங்களிலும் பரவத்தொடங்கியது.
இணையத்தின் வருகையுடன், தமிழ் எழுத்து உருபுகளும் அறிமுகமானதும் அதுவரை காலமும் நடைமுறையிலிருந்த பேனையை எடுத்து, காகிதத்தில் எழுதி, தபாலில் அனுப்பும் வழக்கம் முற்றாக மறைந்தது. முதலில் பாமினி உருபுகளில் கணினியில் எழுதத்தொடங்கியதும், எனது மனைவி வழி உறவினரான திருமதி பாமினி என்பவர் , தனது அண்ணாதான் அந்த தமிழ் உருபை கண்டுபிடித்து,
அதற்கு தனது பெயரையும் சூட்டினார் என்று சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதன்பின்னர் யூனிகோட்டில் எழுதிப்பழகினேன்.
இவ்வாறு எழுதிக்கொண்டிருந்தபோதுதான் மெல்பன் நண்பர் எழுத்தாளர் நடேசன், எனக்கு தேனீ இணைய இதழை அறிமுகப்படுத்தினார். முதலில் அவர் ஊடாகவே எனது ஆக்கங்களை ஜெர்மனியிலிருந்து வெளிவந்த தேனீ இணைய இதழுக்கு அனுப்பினேன். அவற்றை ஏற்று தொடர்ச்சியாக பிரசுரித்த தேனீ இணையத்தளத்தை நடத்தும் ஜெமினி கங்காதரன், என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தோழமை பூண்டார். அதன்பிறகு நானே நேரடியாக அவருக்கு எனது ஆக்கங்களை அனுப்பத்தொடங்கினேன்.
இவ்வாறு தொடங்கிய எமது தோழமையினால், எனது இலக்கிய மற்றும் அரசியல் ஆய்வாளர்களான நண்பர்களின் ஆக்கங்களையும் தேனீக்கு அறிமுகப்படுத்தினேன். அவற்றையும் தேனீ ஆசிரியர் ஜெமினி கங்காதரன் மனமுவந்து ஏற்று பதிவேற்றினனார்.
தமிழ்நாட்டில் வெளியான யுகமாயினி இதழில் வெளியான எனது சொல்ல மறந்த கதைகள் தொடர், நடேசனின் வலைப்பூவிலும், அதேசமயம் , தேனீயிலும் தொடர்ந்து வெளியானது. அதற்கு நல்ல வரவேற்பிருந்தமையால், அதனை நூலாகத் தொகுத்து வெளியிடுமாறு கிளிநொச்சியிலிருந்து இலக்கிய நண்பர் கருணாகரன் தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.
பின்னர் அவரது ஏற்பாட்டிலேயே சொல்லமறந்த கதைகள் தமிழ்நாடு மலைகள் பதிப்பகத்தினால் 2014 ஆம் ஆண்டில் வெளியானது. அதன் வெளியீட்டு அரங்கு மெல்பனில் நடந்தபோது, தொலைபேசியில் என்னை வாழ்த்தியதோடு, அது போன்ற தொடர்களை தொடர்ந்தும் எழுதுமாறு தோழர் ஜெமினி கங்காதரன் உற்சாகமூட்டினார். அவரது ஊக்கமூட்டும் வார்த்தைகளினால்தான் எனது சொல்லவேண்டிய கதைகள், சொல்லத்தவறிய கதைகள் என்பனவும் அடுத்தடுத்து வெளியாகின.
சொல்லவேண்டிய கதைகள் யாழ்ப்பாணம் ஜீவநதி மாத இதழிலும் சொல்லத்தவறிய கதைகள் யாழ்ப்பாணம் காலைக்கதிர் வார இதழிலும் வெளியாகி, பின்னர் நூலுருப்பெற்றன. அவற்றில் வெளியான பல ஆக்கங்கள் அவுஸ்திரேலியா தமிழ் முரசு, அக்கினிக்குஞ்சு, கனடா பதிவுகள், தமிழ்நாடு திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் கொழும்பில் தினக்குரல் வார இதழிலும் நடேசனின் வலைப்பூவிலும் மறுபிரசுரமாகியிருக்கின்றன.
இவ்வாறு எனக்கு பரவலான வாசகர்களை தேடித்தந்திருக்கும் தோழர் ஜெமினி கங்காதரன், நான் அவரது தேனீக்கு அனுப்பும் அரசியல் சார்ந்த ஆக்கங்களில் இடம்பெறும் பெயர்களில் தவறுகள் நேர்ந்திருந்தால், தாமதிக்காமல் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு திருத்தங்களை பக்குவமாக எடுத்துச்சொல்லி, திருத்தியபின்னரே வெளியிடுவார்.
இவ்வாறு சகோதர வாஞ்சையுடன் பழகியவர் கடந்த மார்ச் மாதம் முதல் உடல் நலக்குறைவினால் மருத்துவமனை – வீடு என அழைந்துகொண்டிருப்பது அறிந்து மிகவும் வேதனைப்படுகின்றேன். தேனீ இணைய இதழை நீண்டகாலமாக தனிமனிதராக நடத்திவந்தவர்.
சிறந்த அரசியல் ஆய்வுத் தொடர்களுக்கும் கலை, இலக்கிய படைப்புகளுக்கும் பயனுள்ள நேர்காணல்களுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் சிறந்த களம் வழங்கி, வாசகர்களிடம் சேர்ப்பித்தவர். அதற்காக எந்த ஊதியமும் பெறாமல் கருத்துக்களையும் எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் மாத்திரமே பெற்றுக்கொண்டவர். எனினும், தேனீயில் வரும் ஆக்கங்களுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பு என்ற ஊடக தர்மத்தை பின்பற்றி, பாரதூரமான விமர்சனங்கள் வரும் பட்சத்தில், அவற்றை உரியவர்களுக்கே சேர்ப்பித்து கவனத்திற்குட்படுத்தி ஊடக தர்மத்தின் கண்ணியத்தையும் காப்பாற்றியவர்.
ஆங்கில ஊடகங்களில் ஏதேனும் சிறந்த அரசியல் ஆய்வுகள் வெளிவரும் பட்சத்தில் அவற்றை தெரிவுசெய்து இலங்கைக்கு அனுப்பி அங்கிருந்த ஒரு மொழிபெயர்ப்பாளரிடமிருந்து மொழிமாற்றம் செய்து தருவித்து, தானே கணினியில் பதிவுசெய்து வெளியிட்டவர். மணியம் என்பவர் தொடர்ச்சியாக எழுதிய ஈழப்போராட்டத்தின் உறைபொருளும் மறைபொருளும் தொனித்த நீண்ட கட்டுரைத் தொடரை தோழர் ஜெமினி கங்காதரனே தினமும் கண்விழித்திருந்து பதிவுசெய்து தேனீயில் வெளியிட்டார்.
கணினியில் தமிழில் பதிவு செய்யத் தெரியாத பலரதும் ஆக்கங்களையும் கையெழுத்துப்பிரதியில் பெற்றும் பதிவுசெய்து வெளியிட்டார். தனது குடும்பத்திற்காக இரவுநேர வேலைக்குச்சென்று, அதிகாலை வீடு திரும்பி, உறங்காமல் விழித்திருந்து தேனீயை பதிவேற்றிவிட்டே ஓய்வெடுத்துவந்தவர். புகலிட தேசத்தில் அவர் இணையத்தின் ஊடாக தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் சேவையாற்றி அறிவார்ந்த தேடலையும் அமைதியாக விதைத்தவர். உலகடங்கிலும் வாழும் பலரைப்பற்றிய ஆக்கங்களும் தேனீயில் வெளியாகியிருக்கின்றன.
நானே பல கலை, இலக்கிய, ஊடகத்துறை, சார்ந்த ஆளுமைகள் பற்றி தேனீயில் தொடர்ச்சியாக எழுதியிருக்கின்றேன். எனினும் அதற்கெல்லாம் அடிப்படைக்காரணமாக விளங்கிய தேனீ ஆசிரியர் தோழர் ஜெமினி கங்காதரன் பற்றி இதுவரையில் எங்கும் எதிலும் எழுதவில்லை என்ற மனக்குறையும் நீண்டகாலமாக எனது மனதை உறுத்திக்கொண்டிருந்தது.
இணையத் தமிழ் இதழ்களின் வகைப்பாடு என்ற தலைப்பில் விகாஸ்பீடியா என்ற இணையத்தளத்தில் நான் வாசித்த பின்வரும் வரிகளை இங்கே இச்சந்தர்ப்பத்தில் பதிவுசெய்கின்றேன். இணையத்தில் இதழ்கள் தோன்றக் காரணம் அச்சு ஊடகம், ஒலி ஊடகம், காட்சி ஊடகம் என எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டு உருவான இணைய ஊடகத்தின் வளர்ச்சி, கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது.
ஆரம்பத்தில் மிக சாதாரணமாக கருதப்பட்ட இணைய ஊடகங்கள் கடந்த சில வருடங்களில் உள்ளடக்கம், கட்டமைப்பு என எல்லாவற்றிலும் முன்னேறியிருக்கின்றன. ஊடக மொழிகளில் இணையத்தைப் பயன்படுத்துவதில் தமிழின் பங்களிப்பு சிறப்பானதாகவே உள்ளது.
இதற்குப் பெருமளவில் துணை நின்றவர்கள் புலம்பெயர் தமிழர்களும், தொழில் நிமித்தமாக அயல் நாடுகளுக்குச் சென்ற தமிழர்களுமேயாவர். நாடு, இனம், மொழி எனக் கடல்கடந்து சென்றாலும் தம் தமிழர்கள் பண்பாடு, மொழி, கலை போன்றவற்றால் தமக்கான அடையாளத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தமிழைப் பேசவும், கேட்கவும் வழி இல்லாமல் இருந்த நிலையில் இணையம் மூலம் கருத்துக்களையும், தகவல்களையும் பரிமாறிக்கொள்ள இணையத் தளங்களையும், இணைய இதழ்களையும் தோற்றுவித்தனர்.
“தமிழில் இணைய தளங்கள் உருவாவதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அரசியல் காரணங்களால் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் அயல்நாடுகளுக்குப் பரவி வாழ வேண்டிய தேவை 1983-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்டது.
அதுபோல் தமிழகத் தமிழர்கள் பணியின் பொருட்டு அயல்நாடுகளுக்குச் செல்ல நேரிட்டது. இவ்வாறு தமிழகத்திலிருந்து பிரிந்து சென்ற மக்கள் தாயகத்துடன் தொடர்பு கொள்ளவும் பிற நாடுகளில் வாழுபவர்களுடன் தொடர்பு கொள்ளவும் இணைய தளங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. அதுபோல் தாம் வாழும் நாடுகளில் தமிழ் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தினர்.
அதற்கெனத் தமிழ்ச் சங்கங்கள், அமைப்புகள், வளர்ச்சி நிறுவனங்களை உருவாக்கினர். தம் பணிகளை வெளிவுலகிற்கு வெளிப்படுத்த இணையதளங்களைப் பயன்படுத்தினர். அவ்வகையில் இணையத்தில் தமிழை அயல்நாட்டுத் தமிழர்கள் 1986 முதல் பயன்படுத்தத் தொடங்கினர். முதல் முயற்சியாகத் தாங்கள் உருவாக்கிய தமிழ் எழுத்துருக்களைக் கொண்டு மின்னஞ்சல் அனுப்பி, உறவை வளர்த்தனர்.
தமிழ் எழுத்துருக்களின் உருவாக்கத்தின் தொடர்ச்சியாக தமிழில் இணையதளங்கள், இணைய இதழ்கள் வடிவமைப்பதில் தொழிற்நுட்ப வல்லுநர்களும் தமிழறிஞர்களும் ஈடுபட்டனர். இதனால் முதல் தமிழ் இணைய இதழ் எது..? என்பதில் கருத்து வேறுபாடுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளில் இருந்தும் தமிழ் இணைய இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இதனால் உலகளவில் தமிழர்களின் உணர்வுகளையும், படைப்புக்களையும் காணமுடிகிறது. ( நன்றி: விகாஸ்பீடியா ) கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் நான் பிரான்ஸிற்கு செல்லநேரிட்டது. எனது குழந்தைப்பருவத்தில் வித்தியாரம்பம் செய்வித்து ஏடு துவக்கிய ஆசான் ( அமரர் ) பண்டிதர் க. மயில்வாகனன் அவர்களின் நூற்றாண்டு விழாவுக்காக என்னை அழைத்திருந்தார்கள்.
எனது வருகை பற்றி தோழர் ஜெமினிக்கு தெரிவித்தேன். அந்தப்பயணத்தில் என்னை ஜேர்மனிக்கும் வருமாறு அழைத்தார். எனது பயண ஒழுங்குகள் பாரிஸ், லண்டன், தமிழ்நாடு, இலங்கை என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதனால் ஜேர்மனிக்கு இம்முறை வரமுடியாது, அடுத்த தடவை பார்ப்போம் என்றேன். “ அதனால் என்ன, நானே உங்களைப்பார்க்க பாரிஸுக்கு வருகிறேன் “ என்றார். சொன்னபடி ஜெர்மனியிலிருந்து ஒருநாள் அதிகாலையே ரயிலில் புறப்பட்டு என்னைத்தேடி வந்தார். தேனீயில் எனது எழுத்துக்களைப்படித்து என்னுடன் தோழமை பூண்டவரான ராயப்பு அழகிரி அவர்களும் நான் பாரிஸில் தங்கியிருந்த இடம்தேடிவந்து அழைத்துச்சென்றார்.
எமக்கான சந்திப்பு ஒன்றுகூடலுக்கான ஏற்பாட்டை , எனது நீண்ட கால நண்பரும் யாழ்ப்பாணம் ஈழநாடு இதழின் ஆசிரியரும் டான் தொலைக்காட்சி இயக்குநருமான எஸ். எஸ். குகநாதனின் துணைவியார் றஜனி குகநாதன் அவர்கள் பாரிஸில் தமது இல்லத்தில் செய்திருந்தார். தோழர் அழகிரியும் நானும் மற்றும் ஒரு தோழர் உதயகுமாரும் ரயில் நிலையம் சென்று தோழர் ஜெமனியை அழைத்துச்சென்றோம். அன்றைய தினத்தை மறக்கமுடியாது. யாழ். ஈழநாடு இதழில் முன்னர் பணியாற்றிய பத்திரிகையாளர் துரைசிங்கமும் வந்திருந்தார்.
அன்றைய பொழுது மிகவும் இனிமையாக கழிந்தது. மெல்பனில் எனது நண்பர்கள் எடுத்த ரஸஞானி ஆவணப்படத்தையும் பார்த்தனர். தேனீயில் தொடர்ந்து வெளிவந்து நூலுருப்பெற்ற எனது படைப்புகளையும் அன்று ஜெமினிக்கு வழங்கினேன். மாலையானதும் மீண்டும் தோழர் ஜெமினியை பாரிஸ் ரயில் நிலையத்திற்கு சற்றுத் தொலைவில் விட நேர்ந்தமைக்கு குறிப்பிட்ட பாரிஸ் வீதியில் அன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்தான் காரணம்.
ஜெர்மனிக்கான ரயிலுக்கு ஒரு சில நிமிடம்தான் இருந்தது. ஜெமினி ஓட்டமும் நடையுமாக சென்று ரயிலைப்பிடித்தார். ஒரு நிமிடம் தாமதித்திருந்தால், அன்று அவர் பாரிஸில்தான் நிற்கநேர்ந்திருக்கும். என்னைத்தேடி வந்த அந்த நல்லுள்ளத்தை அன்று அந்த எதிர்பாராத போக்குவரத்து நெருக்கடி கடுமையாக சோதித்துவிட்டது.
அவர் ஜெர்மனிக்கு சென்று சேரும் வரையில் பதட்டத்துடன் இருந்தேன். மீண்டும் அய்ரோப்பாவுக்கு வரும்போது, ஜெர்மனிக்கும் வந்து தன்னோடு சில நாட்கள் நிற்குமாறு கூறியிருந்தார். இந்த ஆண்டு நடுப்பகுதியில் நோர்வேயில் ஒஸ்லோவில் நடக்கவிருந்த இலக்கிய சந்திப்பின் 50 ஆவது நிகழ்ச்சிகு செல்லவிருந்தேன். எதிர்பாராமல் கொரோனோ வந்து குந்தகம் செய்துவிட்டது.
தோழர் ஜெமினியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி கிடைத்ததும் தொடர்புகொண்டு பேசினேன். சிகிச்சை பற்றி விபரமாகச்சொன்னார். உலகடங்கிலும் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்ச்சியாக பார்த்துப்படித்துவந்த தேனீ இணைய இதழ் கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் வெளிவரவில்லை.
இறுதியாக ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நீர்வை பொன்னையனின் மறைவுச்செய்தியுடன் நான் எழுதிய அஞ்சலிக்குறிப்புகள் தேனீயில் வெளியானது. என்னூடாக தேனீக்கு தமது ஆக்கங்களை அனுப்பிக்கொண்டிருந்த சிலரும் தேனீக்கு என்ன நடந்தது என்று கேட்டவண்ணமிருந்தனர்.
இலங்கையில் மல்லிகை இதழை தங்கு தடையின்றி நான்கு தசாப்தங்களும் மேல் நடத்திவந்த டொமினிக்ஜீவா அவர்கள் உடல் உபாதைக்குள்ளானதும், மல்லிகை அதன்பின்னர் வெளிவரவில்லை. ஐம்பது ஆண்டு நிறைவை நெருங்கிய சமயத்தில் மல்லிகையும் நின்றுவிட்டது.
நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்களுக்கு மல்லிகை எவ்வாறு களம் கொடுத்து ஊக்கமளித்ததோ, அவ்வாறே தோழர் ஜெமினியின் தேனீ இணைய இதழும் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களுக்கு சிறந்த களம் வழங்கிவந்தது.
எமது படைப்புகளுக்கு உரிய களம் வழங்கியவர்கள் பற்றி நாம் என்றைக்காவது எழுதியிருக்கின்றோமா..? என்ற உணர்வு அவற்றில் எழுதி தமது இருப்பை வெளிப்படுத்தியவர்களுக்குத் தோன்றவேண்டும் என்பதினாலேயே இந்தப் பதிவை எனது இனிய தோழர் ஜெமினி சார்ந்து எழுதுகின்றேன். எனது பேரபிமானத்துக்குரிய தோழர் ஜெமனி கெங்காதரன் பூரண சுகத்துடன் தேறிவரல் வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். Letchumananm@gmail.com
No comments:
Post a Comment