'தூயதமிழ் பரப்பிடுவோர் பெருக வேண்டும்.'


................. பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி



       தாயகத்தில் தனித்தமிழை வளர்த்தவென் முன்னோர்

              தந்திட்ட ஆசிகளும் தொடர்ந்தருள் கூட்டத்

       தூயதமிழ் வளர்த்துவந்தோர் தோன்றல் நானும்

              சொந்தத்திற் செந்தமிழைப் பேணி வந்தேன்!

       தேயாத  நல்லாக்கம் தமிழிற் செய்யும்

              திறன்மிக்கோர் நட்பினையும் சிட்னியிற் பெற்றேன்!

      ஓயாது பிறமொழியின் கலப்பால் தமிழை

              உருக்குலைப்போர் செயல்கண்டு உள்ளம் நொந்தேன்!.

    

       மெல்பேர்ணில் வசிக்குமென்றன் இனிய நண்பன்

              மின்னஞ்ச லோடிணைப்பு ஒன்றை அனுப்பி

        நல்லதொரு கதையிதடா  மறவாது நீயும்

              நன்றாக வாசிப்பாய்! பின்னர் எனக்குத்

       தொல்லையெனக் கருதாது கதையிற் கண்டு

              சுவைத்ததெல்லாம் எழுதிடுவாய்! புலம்பெயர் நாட்டில்

       சொல்லிஎண்ணக் கூடியதோர் கதைஎழுத் தாளருள்

              சோடிச்சு எழுதுவதில் 'விண்ணி' என்றார்.


       வரதராசன்  போன்றபலர் வண்ணத் தமிழில்

                வடித்தளித்த கதைகளைநான் விழித்தே இருந்து

       இரவிரவாய்ப் படித்தநாளை நினைப்ப துண்டு!

               இன்றுமந்தப் பசுமையான எண்ண அலைகள்

        விரவிநின்றென் சிந்தனைக்கு விருந்தா யமையும்

               வேண்டுமட்டும் கொச்சைத்தமிழ் எழுதி விற்போர்

       பரவுவதைப் பார்க்கின்றேன் இன்றவர் படைப்பைப்

               பார்த்ததுமே அதிர்ச்சிகொள்வேன்! பதைத்து நிற்பேன்!!


       


        நண்பனவன் விருப்புடனே அனுப்பி வைத்த

               நங்கையவள் கதையைநான் படிக்க லானேன்

       'கண்படவே' கூடாது  கதையில் அந்தோ

               கண்டபல ஆங்கிலச்சொற் கலப்பை நானும்

      எண்ணவெண்ண என்உள்ளம் நெந்த தம்மா!

              ஏனிந்தப் புலம்பெயர்ந்த எழுத்தா ளர்பலர்

      தண்டமிழைத் தரணியிலே சாக டித்துச்

            தம்வயிற்றை நிரப்பிடவோ முனைந்து விட்டார்.?


      'ஆங்கிலத்தைக் கலந்துகதை எழுதா விட்டால்

             ஆரையா என்கதையைப் படிப்பார்' என்றும்

      போங்களையா தனித்தமிழில் எழுதும் கதைக்குப்

            பொன்னான  'மவுசு'ஒன்றும்  இருக்கா தென்றும்

      தாங்கமாட்டேன்; ஆங்கிலக்கலப் பில்லாக் கதையை

            தனதுபுகழ் பாடுவோர்கள் படிக்கார் என்றும்

     அங்கலாய்க்கும் 'எழுத்தாளி' நினைப்பார் போலும்!

            அவர்கதைக்கு நீர்க்குமிழி ஆயுள் தானே!


    சிறுகதையைச் சீர்தூக்கிப் பார்த்த போது

            செந்தமிழுக் கேற்பட்ட அவலங் கண்டேன்!

    அறுபதுக்கும் அதிகமான ஆங்கிலச் சொற்கள்

            அத்தோடு ஐயாறு இலக்கணப் பிழைகள்

     உறுதியொடு எழுத்தாளர் ஆங்கிலக் கலப்பை

             ஊக்குவித்துத் தமிழ்எழுதி வருவா ராகில்

     இறுதியாகத் தமிழ்தன்னை அழிக்கும் பணியில்

            இவைக்குமொரு பங்குண்டு கவிச்சொல் ஏற்பீர்!


     ஒருபானை சேற்றிற்கு ஒன்றுபோது மென்ற

              உதாரணமாய் இக்கதையைக் காட்டி நின்றேன்

    பெருமளவிற் கலப்புத்தமிழ் எழுதும் அன்பர்

            பெரும்மனது வைத்தினிமேல் தமிழைத் தமிழாய் 

   அருந்தாய்க்குச் செய்திடுமோர் கடமையென் றுணர்ந்து

            திருநெறிய தேன்தமிழுக்(கு) உயிர்ப் பிச்சை

  திருந்தியென்றும் அளித்திடுவீர் வருந்திக் கேட்பேன்.


   பள்ளிகளில் நல்லதமிழ் படிப்பிக் கின்றார்

             படிக்கின்ற பிள்ளைகளின் தொகைதான் குறைவே!

   கள்ளமில்லாக் குழந்தைகளும் கலப்புத் தமிழைக்

            கற்றிடாது பார்ப்பதெங்கள் பெற்றோர் கடனே!

   எள்ளிநகை யாடிடாதீர் தாய்மொழித் தமிழில்

            இயல்பாகச் சிந்தித்துச் செயலாற்றி வந்தால்

    புள்ளிவிபரம் சொல்கிறதே பெறுபே றதனில்

            போதுமென்ற உயர்வுவரும் சிந்திப் பீரே!


    ஆய்வுசெய்த நிறுவனத்தின் கூற்றைக் கேட்பீர்!

              அடுத்துவரும் நூறாண்டின் பின்னர் எடுக்கும்

     ஆய்வினிலே தமிழ்என்ற பெயர்இருக் காதாம்!

              ஆச்சரியப்  படுவதற்கு ஏது உளதோ?

     தாய்நாட்டில் தமிழ்க்கொலையை நன்றே செய்யும்

              சஞ்சிகைகள் ஊடகங்கள் சொல்லி லடங்கா!

     பேய்போலக் கொடுந்தமிழை வளர்க்கப் போட்டி

              பெரிதாகப் போடுதையா திரைப்ப டங்கள்!


      இன்றமிழுக் கொருசொந்த நாடும் இல்லை!

               இந்நிலையில் விமோசனந்தான்; எங்கே தோன்றும்?

      பொன்னிலங்கைத் தமிழர்நிலம் பறிபோ குதையா!

                பொதிகையிலே பிறந்திருந்தும் தமிழ்த்தாய் நாட்டில்

       கன்னித்தமிழ்த் தரமங்கு விலைபோகு தையா!

                காட்டுத்தீ யாயாங்கிலக் கலப்பைக் காண்பீர்!

      தொன்மைமொழி அழிந்திடாது நிலைக்க வேண்டில்

             தூயதமிழ் பரப்பிடுவோர் பெருக வேண்டும்.!



     ஒருவரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை!

              ஒண்டமிழைச் சிதைக்காது உயர்தாய் மொழிக்கு

     பெருமைதரும் தனித்துவத்தைப் பேணிக் காக்கப்

             பேதைநான் தயவாக விடுக்குஞ் செய்தி

      திருந்துதற்கு ஒன்றேதான் வழியுண் டென்றால்

               திண்மைமிகு புலம்பெயர்ந்த  இலங்கைத் தமிழர்

     ஒருங்கிணைந்து மனம்வைத்துத் தூய தமிழில்

            ஒவ்வாத மொழிக்கலப்பை நிறுத்தல் வேண்டும்.!


( 'பாரிஸ் நகரத்திலே உலகத்து மொழிகள் சம்பந்தமாகச் செய்யப்பெற்ற ஆய்வு ஒன்றின் பின்னர் தயாரிக்கப்பெற்ற அறிக்கையிலே அடுத்த நூறு வருடங்களின் பின்னரும் நிலைத்து வாழப்போகின்ற மொழிகளின் பட்டியலில் தமிழ்மொழி இல்லையாம். அப்படியானால் இன்னும் நூறு வருடங்களில் தமிழ் மொழி இல்லாமற் போய்விடும் என்பதுதானே அந்த ஆய்வு நமக்குத் தந்திருக்கும் முடிவு?................................................................

...........தமிழ் மொழியின் வரலாற்றை - தமிழ் இனத்தின் வரலாற்றைச் சிறிது நேரம் நமது சிந்தனைக்கு எடுத்துச் சீர்தூக்கிப் பார்த்தோமென்றால் இந்தக் கருத்திலே இருக்கக் கூடிய எச்சரிக்கையை நாம் உணரமுடியும்' --- இது பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா அவர்கள்; அவரின் நூலிலே குறிப்பிட்ட அருமையான பதிவு. அவர் தனது 'தமிழின் பெருமையும் தமிழரின் உரிமையும்' என்னும்   நூலிலே குறிப்பிட்ட அத்தனை சிறந்த கருத்துகளை ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழனும் - தமிழை முழுவதும் மறந்து துறந்தபின்பும் தான் தமிழன் என்று உரிமைகொண்டாடும் ஈனர்களும் கண்டிப்பாகப் படிக்கவேண்டும். தமிழை வளர்ப்பதற்கு விழிப்புணர்வைத்தரும் அருமையான கட்டுரையைக் கொண்டுள்ளது.

இன்றைய சூழலிலே தமிழர் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளிலே மிகவும் முக்கியமானது எவை என்று பார்த்தால் ஒன்று தூயதமிழ் மொழியிலே பிறமொழிக் கலப்பு! மற்றது அப்பாவிச் சைவர்களை ஏமாற்றிப் பிறமதத்திற்கு மதமாற்றம் செய்யும் ஈனச்செயல். இவ்விரண்டையும் ஒழிப்பது எமது தலையாய கடன்.  

................................................................................................

 









No comments: