உலகச் செய்திகள்

காசாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு மழை 

பிறந்த குழந்தையை கைவிட்டு தப்பிச்சென்ற தாய் அடையாளம்

நெதன்யாகு விரைவில் பஹ்ரைனுக்கு பயணம்

அமெரிக்க கப்பலை ரஷ்யா துரத்தியடிப்பு

ரஷ்ய தடுப்பூசி விலை 20 டொலருக்கும் குறைவு

துருக்கி ஆட்சிகவிழ்ப்பு முயற்சி: 337 பேருக்கு ஆயுள் தண்டனை

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற டிரம்ப் நிபந்தனை

ஐ.அ. இராச்சியத்தில் 13 முஸ்லிம் நாடுகளுக்கான விசா நிறுத்தம்


காசாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு மழை 

முற்றுகையில் உள்ள காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதோடு உயிர்ச் சேதங்கள் இடம்பெறவில்லை என்று பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றுக் காலை காசாவின் மேற்கு, கிழப்பு மற்றும் தெற்கு பகுதிகளில் இஸ்ரேலிய போர் விமானங்கள் உக்கிர ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

சூரியோதயத்திற்கு முன்னர் இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட தீப்பிழம்புகளை காண முடிந்ததாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.

பலஸ்தீன பகுதியில் இருந்து வீசப்பட்ட ரொக்கெட் குண்டுகளுக்கு பதில் நடவடிக்கையாகவே காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் இலக்குகள் மீது தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை காசாயில் இருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டு வீசப்பட்டதை அடுத்து தெற்கு இஸ்ரேலிய நகரான அஷ்கெலோனில் சைரன் ஒலி எழுப்பப்பட்டது.

கடந்த வாரமும் இவ்வாறான ரொக்கெட் தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கையாக காசா பகுதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன்     






பிறந்த குழந்தையை கைவிட்டு தப்பிச்சென்ற தாய் அடையாளம்

கட்டார் விமான நிலையக் கழிப்பறையில் சில வாரங்களுக்கு முன் குறைமாதத்தில் பிறந்த சிசு கண்டெடுக்கப்பட்டது. தற்போது அதன் பெற்றோரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

சிசுவின் பெற்றோர் ஆசியர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டிற்கு தப்பியோடிய அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சிசுவின் பெற்றோருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

சிசுவின் தாய் கள்ளக்காதலருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமானதாக விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் குழந்தையை மறைக்க விமான நிலையத்தில் சிசுவை கைவிட்டார்.

கட்டாரில் தென் கிழக்கு ஆசியர்கள் அதிக அளவில் வேலை செய்கின்றனர்.

சிசு கண்டெடுக்கப்பட்டதில் இருந்து கட்டார் விமான நிலையத்தில் பெண் பயணிகளிடம் கட்டாயச் சோதனை நடத்தப்பட்டது. அது உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெண் பயணிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட விமான நிலையக் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். நன்றி தினகரன்     







நெதன்யாகு விரைவில் பஹ்ரைனுக்கு பயணம்

பஹ்ரைன் முடிக்குரிய இளவரசர் சல்மான் அல் கலீபாவின் அழைப்பின் பேரில் விரைவில் அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ள விருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தைத் தொடர்ந்து பஹ்ரைனும் அண்மையில் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியது. இந்த இராஜதந்திர உறவுகள் பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிரான மூலோபாயத் திட்டமாக பார்க்கப்படுகிறது.

எனினும் இதற்கு பலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ‘இந்த குறுகிய காலத்திற்குள் எமது மக்களுக்கு அமைதியின் பலனை கொண்டுதருவதில் இரு தரப்பும் உற்சாகம் கொண்டுள்ளன. அதனால் தான் பஹ்ரைனுக்கு உத்தியோகபூர் விஜயத்திற்கு அவர் (அல் கலிபா) அழைப்பு விடுத்துள்ளார். அதனை நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

பஹ்ரைனின் தூதுக் குழு ஒன்று முதல் முறையாக கடந்த வாரம் இஸ்ரேல் பயணித்திருந்தது. நெதன்யாகு கடந்த ஞாயிற்றுக்கிழமை சவூதி அரேபியாவுக்கு இரகசியமாக பயணித்து அந்நாட்டு முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் மற்றும் அங்கிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவை சந்தித்ததாக செய்தி வெளியாகி இருந்தது. நன்றி தினகரன்     


   











அமெரிக்க கப்பலை ரஷ்யா துரத்தியடிப்பு

ஜப்பான் கடலில் தமது கடற்பகுதிக்குள் நுழைந்த அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்றை தமது போர் கப்பல்கள் துரத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பீட்டர் வளைகுடா பகுதியின் தமது கடல் எல்லைக்குள் 2 கிலோமீற்றர் வரை யு.எஸ்.எஸ் ஜோன் எஸ் மக்கைன் கப்பல் ஊடுருவியதாகவும் தமது கப்பலை மோதும் வகையில் அச்சுறுத்தியதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க கப்பல் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறியதாக அது குறிப்பிட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிழக்குக் கடல் என்றும் அழைப்படும் ஜப்பான் கடல் ஜப்பான், ரஷ்யா மற்றும் கொரிய கடல் எல்லைகளைக் கொண்ட பகுதியாகும். கடந்த ஆண்டும் கிழக்கு சீன கடல்பகுதியில் ரஷ்ய மற்றும் அமெரிக்க கப்பல்கள் போதும் வகையில் செயற்பட்ட சம்பவம் தொடர்பில் இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டின. நன்றி தினகரன்     









ரஷ்ய தடுப்பூசி விலை 20 டொலருக்கும் குறைவு

‘ஸ்புட்னிக் பைவ்’ கொரோனா தடுப்பூசி மற்ற அனைத்து தடுப்பு மருந்துகளையும் விட செயல்திறன் மிக்கது. அவற்றை விடப் பாதி விலையில் கிடைக்கக்கூடியது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இரண்டு முறை கொடுக்கப்படவேண்டிய ஸ்புட்னிக் பைவ் தடுப்பூசி 95 வீதம் செயல்திறன் கொண்டது என்று அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. என்றாலும், ரஷ்யத் தடுப்பூசி குறித்து அது எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை. 20 டொலருக்கும் குறைவான விலையில் ஒருவருக்கான தடுப்பூசியை சர்வதேச சந்தையில் வழங்க முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.

ரஷ்யக் குடிமக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். முன்னோட்டப்

பரிசோதனைகளில் இதுவரை பக்கவிளைவுகள் ஏதும் கண்டறியப்படவில்லை.

வரும் ஜனவரியில் ஸ்புட்னிக் பைவ் தடுப்பூசியை சர்வதேச சந்தைக்கு விநியோகிக்க முடியும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.  நன்றி தினகரன்     








துருக்கி ஆட்சிகவிழ்ப்பு முயற்சி: 337 பேருக்கு ஆயுள் தண்டனை

துருக்கியில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பிலான மிகப்பெரிய வழக்கு விசாரணையில் 337 இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனையவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானை பதவி கவிழ்க்க முயன்றதாக விமானப்படை விமானிகள் மற்றும் இராணுவ கட்டளைத் தளபதிகள் என சுமார் 500 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இவர்கள் அங்காராவுக்கு அருகில் இருக்கும் அகின்சி விமானப்படைத் தளத்தில் இருந்து நேரடியாக இந்த சதிப்புரட்சியில் தொடர்புபட்டிருந்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இஸ்லாமிய மதத்தலைவரான பதுல்லாஹ் குலன் இந்த சதிப்புரட்சி முயற்சியில் மூளையாக செயற்பட்டதாக எர்துவான் குற்றம்சாட்டி வருகிறார். எனினும் இந்தக் குற்றச்சாட்டை அவர் மறுத்து வருகிறார்.

எர்துவான் விடுதி ஒன்றில் விடுமுறையில் இருந்தபோது 2016 ஜூலை மாதம் இடம்பெற்ற இந்த தோல்வியடைந்த சிதிப்புரட்சியின்போது 251 பேர் கொல்லப்பட்டு 2,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இதன்போது எர்துவான் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி சதிப்புரட்சியில் ஈடுபடுவோருடன் போராடி அதனைத் தடுத்தனர். இது தொடர்கில் 2017 ஆம் ஆண்டு ஆரம்பமான வழக்கு விசாரணையில் ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்தது உட்பட பல குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.     நன்றி தினகரன்     








வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற டிரம்ப் நிபந்தனை

ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனுக்கு தேர்தல் சபை வாக்களித்தால், தாம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறத் தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 14ஆம் திகதி தேர்தல் சபை கூடவுள்ளது. ஜனவரி 20ஆம் திகதி பைடன் ஜனாதிபதி பொறுப்பை ஏற்கவுள்ளார்.

இம்மாதம் 3ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு 306 தேர்தல் சபை வாக்குகள் கிடைத்தன. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு 270 வாக்குகள் பெற்றால் போதுமானது.

மொத்த வாக்குகளிலும் டிரம்பை விட 6 மில்லியனுக்கும் அதிகமானோரின் ஆதரவைப் பெற்றுள்ளார் பைடன்.

எனினும், டிர்ம்ப் இதுவரை தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் தாம் வென்றதாகவே கூறிவருகிறார். தேர்தலில் பரவலாக மோசடி நேர்ந்ததாய்க் குறைகூறும் அவர் அதை நிரூபிக்க ஆதாரம் எதையும் முன்வைக்கவில்லை.

தேர்தல் முடிவுகளுக்கு எதிராக டிரம்ப்பின் குழுவினர் பல்வேறு நடவடிக்கைகளுக்கு முயன்று வருகிறது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது குறித்து கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கே டிரம்ப் இவ்வாறு பதிலளித்திருந்தார். தேர்தல் சபை வாக்கெடுப்பில் தோற்றால் என்ன செய்வீர்கள், என்ற அந்தக் கேள்விக்கு, “நிச்சயமாக நான் வெளியேறுவேன். அது உங்களுக்கும் தெரியும்.

என்றாலும் அவர்கள் அவ்வாறு செய்தால் (பைடனை தேர்ந்தெடுத்தால்) அது மிகப்பெரிய தவறு” என்று டிரம்ப் குறிப்பிட்டார். இதன்மூலம் டிரம்ப் ஒருபோதும் தோல்வியை ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்பதை இந்த பதில் காட்டுவதாக உள்ளது.

“பெரும் மோசடி இடம்பெற்றிருப்பது தெரிந்திருக்கும்போது தோல்வியை ஒப்புக்கொள்வது மிகக் கடினமான ஒன்று” என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். டிரம்ப் எந்த ஆதாரமும் இன்றியே இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வருகிறார்.

பைடனின் பதவி ஏற்பு நிகழ்வில் தாம் பங்கேற்பது குறித்தும் டிரம்ப் எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.

அமெரிக்காவில் தேர்தல் சபை என்பது ஜனாதிபதியை தேர்வு செய்யக்கூடிய தேர்வாளர்களை கொண்ட ஒரு குழுவாகும்.  இந்த குழுவினர் அளிக்கும் வாக்குகளுக்கு ஏற்ப பெரும்பான்மை வாக்குகளை பெறும் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

இதுபற்றி டிரம்ப் மேலும் கூறும்போது, வாக்களிக்கும் உள்கட்டமைப்பில் நாம் 3ஆவது உலக நாடு போல் இருக்கிறோம். ஊடுருவல் செய்ய கூடிய கணினி சாதனங்களை நாம் உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம் என கூறினார்.

இதற்கிடையே அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்புமருந்து விநியோகம் அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னிலை ஊழியர்கள், மருத்துவர்கள், தாதிகள், மூத்த குடிமக்கள் முதலியோருக்குத் தடுப்புமருந்து முதலில் வழங்கப்படும் என அவர் கூறினார்.அமெரிக்காவில் பதிவான கொவிட்–19 நோய்ச் சம்பவங்களின் எண்ணிக்கை 13 மில்லியனை நெருங்கியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 263,000க்கும் அதிகம்.    நன்றி தினகரன்     









ஐ.அ. இராச்சியத்தில் 13 முஸ்லிம் நாடுகளுக்கான விசா நிறுத்தம்

ஐக்கிய அரபு இராச்சியம் 13 முஸ்லிம் பெருபான்மை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குப் புதிய விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது

ஈரான். சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், துருக்கி, சோமாலியா உள்ளிட்ட நாடுகள் அவற்றில் அடங்கும் என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 13 நாடுகளைச் சேர்ந்தவர்களின் வேலை, பயண விசா விண்ணப்பங்கள் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்புக் காரணங்களால் விசாக்கள் வழங்குவது நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அதற்கான காரணங்கள் மேற்கொண்டு விவரிக்கப்படவில்லை.

புதிய விதிமுறைகள் இம்மாதம் 18ஆம் திகதி அமுலுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அல்ஜீரியா, கென்யா, ஈராக், லெபனான், யெமன், லிபியா மற்றும் துனீசியா நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த விசா தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இராஜதந்திரிகள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்ட ஒரு வாரத்திற்குப் பின் தடை அமுலுக்கு வந்துள்ளது.

புதிய விசாக்கள் வழங்கப்படாவிட்டாலும், ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள் பாகிஸ்தானிலிருந்து சென்றுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு ரோய்ட்டர்ஸ் இடம் தெரிவித்தது.    நன்றி தினகரன்     










No comments: