இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த காலப்பகுதியில், நீர்கொழும்பில் எனது ஆரம்பக்கல்வியை கற்ற பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினை உருவாக்குவதற்கு பலருடனும் சேர்ந்து இயங்க நேர்ந்தது. அத்துடன் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்திலும் இணைந்தேன்.
அதற்கெல்லாம் பின்னணியாக சில அரசியல் சம்பவங்களும் இருந்தன. அது பற்றி இதே பத்தியில் பின்னர் சொல்கின்றேன்.
1954 ஆம் ஆண்டு ஒரு விஜயதசமி நாளில் 32 குழந்தைகளுக்கு
ஏடு துவக்கி வித்தியாரம் செய்விக்கப்பட்ட பாடசாலை தொடங்கப்பட்டபோது அதன் பெயர் விவேகானந்தா வித்தியாலயம்.
பின்னர் நான் அங்கிருந்து புலமைப்பரிசில் பெற்று யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரிக்குச்சென்ற 1963 காலப்பகுதியில் அதன்பெயர், ஸ்தாபகர் விஜயரத்தினம் அவர்களை நினைவுகூரும் வகையில் விஜயரத்தினம் வித்தியாலயமாகியது.
ஸ்ரான்லி கல்லூரியும் கனகரத்தினம் கல்லூரி என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது.
இவ்வாறு காலத்துக்குக் காலம் எங்கும் பெயர்கள் மாறிவந்திருக்கும் கோலங்களையும் அறிவீர்கள். மதம் மாறுபவர்களும் தமது இயற்பெயரை மாற்றிக்கொள்வார்கள். தென்னிந்திய சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. பல நடிகர், நடிகைகளின்
இயற்பெயர்களும் மாறிவிடும்.
எனது அம்மாவுக்கு தாத்தாவும் பாட்டியும் கதிர்மாணிக்கம் என்றுதான் பெயர் வைத்தார்கள். ஆனால், அம்மா ஊரில் பபா என்றுதான் அழைக்கப்பட்டார். அறியப்பட்டார். பல தமிழ்க்குடும்பங்களில் இந்த “ பாபா “ க்கள் அநேகம்!
எனது தாய்மாமனார் சுப்பையா எமது ஆரம்ப பாடசாலையின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளரானார். அவருக்கும் குடும்பத்தில் வைக்கப்பட்ட செல்லப்பெயர் பாலா. அவரும் ஊரில் பாலா என்றுதான் அறியப்பட்டார். அழைக்கப்பட்டார். நாம் அவரை பாலா மாமா என்போம். அவர் நீர்கொழும்பு கடற்கரை வீதியில் ஒரு பலசரக்கு கடை வைத்திருந்தார். கூப்பனுக்கு அரிசி விநியோகிக்கப்பட்ட காலத்தில் அவரது கடை, கூட்டுறவுச்சங்கங்களின் சம்மேளனத்திலும் பதிவுபெற்றிருந்தது. அவரது வர்த்தக நிலையம் “பாலா கடை
“ என்றுதான் ஊரில் பிரபலம். மூத்த எழுத்தாளர் வரதர் தொகுத்து வெளியிட்ட வரதரின் பல குறிப்புகள் என்ற பெரிய ஆவணத்திலும் எமது மாமாவின் பாலாகடை இடம்பெற்றுள்ளது. மாமாதான் எமது அம்மாவின் குடும்பத்திலும் உறவினர்கள் மத்தியிலும் அக்காலத்தில் அதிகம் படித்தவர்.
ஒன்பதாம் வகுப்பு படித்திருந்தாலே அது அக்காலத்தில் அதிகம் என்ற மனப்போக்கு இருந்திருக்கிறது. அவர் சாமி சாஸ்திரியார் என்ற பெரியவருடன் இணைந்து முருகானந்த களிப்பு, கந்த சஷ்டி கவசம் முதலான நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர்.
அவருக்கு நாம் கதைப்புத்தகம் படிப்பது பிடிக்காது. புராணப்படங்களுக்குத்தான் அழைத்துச்செல்வார். அவரது அழைப்பில்தான் ஶ்ரீவள்ளி, பட்டினத்தார், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமாள் பெருமை ஆகிய புராணப்படங்கள் பார்த்தோம். அத்தை சினிமாப்படமே பார்க்காதவர். தொலைக்காட்சி வந்தபின்னர்தான் வீட்டிலிருந்து அதில் படம் பார்த்தார்.
மாமா – அத்தையின் மூத்த பிள்ளைகளும் நானும் மு. வரதராசன், அகிலன், ஜெயகாந்தன் , தி. ஜானகிராமன், சுஜாதா ஆகியோரின் தொடர்கதைகளை நாவல்களையெல்லாம் அவர்களுக்குத் தெரியாமல்தான் படித்திருக்கின்றோம்.
அக்காலத்தில் காதல் என்பது எமது சமூகத்தில் கெட்ட வார்த்தை. எவருக்கும் காதல் கடிதமும் எழுதத் தெரியாது. பேச்சுத் திருமணம் என்று வந்துவிட்டால், மணமக்களின் படங்கள் கூட பரஸ்பரம் மணக்களுக்கு காண்பிக்கப்படமாட்டாது.
எனது அம்மா ஒரு பொலிஸ்காரரின் ஒரே மகள். நீர்கொழும்பு நியூஸ்ரட் மகளிர் பாடசாலைக்கு அம்மா கைரிக்ஷாவில்தான் சென்று வந்துள்ளார்கள்.
அம்மாவை அழைத்துச்சென்று, பாடசாலை விட்டதும் அழைத்து வரும் அந்த ரிக்ஷாகாரருக்கும் கடுமையான உத்தரவுகளை வழங்குவாராம் எங்கள் பொலிஸ் தாத்தா.
அம்மாவை ரிக்ஷாவில் தாத்தா ஏற்றிவிட்டு, கருப்பு பிளாஸ்ரிக் துணியால் அம்மாவை மறைத்து மூடிவிடுவாராம். அம்மா, எப்படித்தான் மூச்சை அடக்கிக்கொண்டு அவ்வாறு காலையும் பிற்பகலும் பாடசாலை சென்று வந்தார்களோ தெரியாது.
இவ்வாறு கட்டுப்பாடாக வளர்க்கப்பட்ட எமது அம்மா, பருவமெய்தியதும், பாடசாலைப்படிப்பு நிறுத்தப்பட்ட
கொடுமையும் நடந்திருக்கிறது.
அம்மா ஏழாம் வகுப்புவரையில் ஆங்கிலத்திலேயே படித்தவர். தொடர்ந்து அவரை படிக்கவிட்டிருந்தால், எங்கோ உயர்ந்திருப்பார்.
எனது பாட்டி பாடசாலைப்பக்கமே செல்லாதவர். கையொப்பமும் இடத்தெரியாதவர். ஆனால், பாட்டி வைத்தியத்தில் கைதேர்ந்தவர். அவர் கைநாட்டு போடும் பாட்டிதான். ஆனால், தாத்தா அந்த பிரிட்டிஷ் காலத்தில் தொடர்ந்து படித்து பொலிஸ் சார்ஜன்ட் ஆனவர்.
அம்மாவுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதவும் பேசவும் முடிந்தமையால், எமது தாய்மாமா அவரை விஜயரத்தினம் வித்தியாலயத்தின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் இணைத்துக்கொண்டு கல்வித்திணைக்களங்களுக்கும் அழைத்துசென்றவர்.
மிகவும் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்ட குடும்ப பின்னணியில் வளர்க்கப்பட்டமையால், நான் எழுத்தாளர்கள் பின்னால் அலைவதையோ, பத்திரிகை, இதழ்களுக்கு எழுதுவதையோ எனது அம்மாவும், தாய் மாமனாரும் விரும்பவில்லை.
ஆனால், அப்பா எனது எழுத்துக்களையும் நான் எழுத்தாளர்களுடன் சுற்றுவதையும் வரவேற்றார். அதற்கு அவர் அத்தகைய ஒரு இலக்கியப்பின்னணி மிக்க குடும்பத்திலிருந்து வந்ததும் ஒரு முக்கிய காரணம்.
“ அவன் என்ன கெட்ட பசங்களுடனா அலைகிறான். அவனது
நண்பர்கள் சாதாரண ஆட்கள் இல்லை பபா. பெரிய எழுத்தாளர்கள். எனது தாய் மாமன்மார் பற்றி அவர்களுக்கும் நன்கு தெரியும். அதனால், அவனை தடுக்காதே “ என்று அம்மாவை ஏசுவார்.
“எழுத்து சோறுபோடுமா…? நாளைக்கு அவனுக்கு திருமணம், குடும்பம், பிள்ளை குட்டி என்று வந்துவிட்டால், அந்த எழுத்தும் இலக்கியமும் சோறு போடுமா… அல்லது அவனுடன் வேலை வெட்டியில்லாமல் அலையும் அந்த எழுத்தாளர்கள், அவனது குடும்பத்தை பார்ப்பார்களா..? “ என்று அம்மா எதிர்த்துப்பேசுவார்கள்.
“ இருந்து பார்…. அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் எழுத்துதான் சோறுபோடும் “ என்று அப்பா திடமாக நம்பினார். இறுதியில் அப்பாவின் வாக்குத்தான் பலித்தது.
எனது முதலாவது நூல் வெளிவந்தபோது அந்த நிகழ்ச்சிக்கு அப்பா வந்தார். கொழும்பில் நாம் தேசிய ஒருமைப்பாடு மாநாடு நடத்தியபோதும், அதற்கு முன்னர் எங்கள் ஊரில் நடந்த நான் ஒழுங்குசெய்த அனைத்து இலக்கிய கூட்டங்களுக்கும் அப்பா வந்தார். முதல் நூலுக்கு சாகித்திய விருதுகிடைத்தபோது, பஸ் நிலையம் வரையில் வந்து வழியனுப்பிவைத்தார்.
நான் வீட்டில் இல்லாத வேளைகளில் என்னைத்தேடி வரும் எழுத்தாளர்களுக்காக கடைக்குச்சென்று குளிர்பானம் வாங்கி வந்து உபசரித்தவர்.
நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தில்தான் 1954 ஆம் ஆண்டு விவேகானந்தா வித்தியாலயம் தோன்றியது. அங்குதான் எமக்கு ஏடும் துவக்கப்பட்டது.
பின்னாளில் 1970 களில் அச்சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக நான் போர்க்கொடி தூக்கவும் நேர்ந்தது. அரசாங்கம் பாடசாலைகளை பொறுப்பேற்றபோது, அச்சங்கத்தின் கட்டிடத்தில் அமைந்திருந்த எமது பாடசாலை அதன் பின்வளவிற்குச்சென்றது.
சங்கம், நவராத்திரி விழா, நாயன்மார் குருபூசை முதலான சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளையே நடத்தியது. பேச்சாளர்கள், காவி உடுத்திய சாமியார்கள் எவரேனும் தமிழகத்திலிருந்து வந்தால், அவர்களை அழைத்து பிரசங்கம் நடத்துவார்கள். அதே சமயம் கி. வா. ஜகந்நாதன், குன்றக்குடி அடிகளார், பாரதியின் பேத்தி விஜயபாரதி முதலான சிலரையும் அழைப்பார்கள்.
ஆனால், ஈழத்து எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் அங்கு அழைக்கப்படுவது அபூர்வம். ஒரே ஒரு தடவை நான் பள்ளி மாணவனாக இருந்தபோது, இரசிகமணி கனகசெந்திநாதன், எஸ். பொன்னுத்துரை, கவிஞர் வி. கந்தவனம், ஏ. ரி. பொன்னுத்துரை , மஹாகவி உருத்திரமூர்த்தி முதலானோரை அழைத்து மூன்று நாட்கள் தமிழ் விழா நடத்தியிருக்கிறார்கள்.
அதற்கு அச்சமயம் அந்தச்சங்கத்தில் செயலாளராக இருந்த கந்தசாமி என்பவர்தான் காரணம். சங்கத்தின் பிரசுரங்கள், ஆண்டறிக்கை என்பனவற்றை கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் அமைந்திருந்த ரெயின்போ அச்சகத்தில்தான் அச்சிடுவார்கள்.
அதனை நடத்தியவர் எழுத்தாளர் எம். ஏ. ரஹ்மான். அங்குதான் அவரது அரசு வெளியீடு என்ற பதிப்பகமும் இயங்கியது. அரசு வெளியீட்டில் இந்தப்பத்தியில் நான் குறிப்பிடும் எழுத்தாளர்களின் நூல்களும் பதிப்பிக்கப்பட்டன.
இந்தத் தொடர்புகளினால், அன்று அந்தத் தமிழ் விழாவை சங்கம் நடத்தியிருந்தது.
நான் இலக்கியப்பிரவேசம் செய்த 1970 காலப்பகுதிவரையில் ஐக்கியதேசியக்கட்சியினதும், தமிழரசுக்கட்சியினதும் செல்வாக்கு அச்சங்கத்தில் இருந்தது.
எமது பாடசாலையின் ஸ்தாபகர் எஸ். கே. விஜயரத்தினம் அவர்களின் புதல்வர் அந்த வட்டாரத்திலிருந்து அந்த பச்சைக் கட்சியின் சார்பாக தொடர்ந்து மாநகர சபைக்கு தெரிவானவர்.
அவரது குடும்பத்தினர் என்மீது பாசம் கொண்டிருந்தவர்கள். அவர் சங்கத்தின் தலைவராக வந்த சமயத்தில், எனக்கு தனது கைப்பட எழுதிய சான்றிதழ் ஒன்றும் தந்திருந்தார். வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது, அதன் பிரதியையும் இணைத்துவிடுவேன்.
ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் கூட்டரசாங்கத்தில் அங்கம் வகித்த கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவுடன் நான் அலைவது அச்சங்கத்தின் ஆட்சிமன்றத்திற்கு உவப்பாக இருக்கவில்லை. அதிலிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வலதுசாரி எண்ணங்கள் கொண்டிருந்த தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள்.
1965 இல் டட்லி சேனாநாயக்காவின் தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி பதவிக்கு வந்தபோது, தமிழரசுக்கட்சியும் தமிழ்க்காங்கிரஸ் கட்சியும் அதற்கு முண்டுகொடுத்தன. அதற்காக அச்சங்கம் அதன் தலைவர்களை நீர்கொழும்புக்கு அழைத்து நிறைகுடம், மாலை மரியாதை ஊர்வலம், கூட்டம் என்று அமர்க்களம் செய்திருந்தது.
அக்கூட்டத்தில்தான் நான் முதல் தடவையாக தந்தை செல்வநாயம், ஈ. எம். வி. நாகநாதன், வி. தருமலிங்கம், மு. திருச்செல்வம் ஆகியோரைக்கண்டேன். அப்போதே செல்வநாயகம் பேசினால் எமக்கு கேட்காது. அவருக்கு கைநடுக்கமும் இருந்தது. வி. தருமலிங்கம்தான் அவரது உரையை உரத்து மீண்டும் சொல்வார்.
ஐக்கியதேசியக்கட்சிக்கும் தமிழரசு மற்றும் தமிழ்க்காங்கிரஸுக்கும் மத்தியிலிருந்த வர்க்க ஒற்றுமை குறித்து எனக்கு தெளிவு வந்ததும் அந்த 1970 காலத்தில்தான்.
இந்து வாலிபர் சங்கம் பிறிதொரு சந்தர்ப்பத்தில் உணர்ச்சிக்கவிஞர் காசி. ஆனந்தனை அழைத்து பேசவைத்தது. அவரது உரையையும் கேட்டேன். உணர்ச்சிபொங்கப்பேசினார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், அவருடன் சங்கச்செயலாளர் பேரின்பநாயகம் அவர்கள் வாடகைக்கு தங்கியிருந்து வீடு வரையில் உரையாடிக்கொண்டு நடந்து சென்றேன். நானும் இலக்கியப்பிரதிகள் எழுதுவதை கேட்டுத்தெரிந்துகொண்டு, செ. கணேசலிங்கனின் தரையும் தாரகையும் நாவலை படிக்குமாறும் அவர் சொன்னார்.
அவரது உரையாடலிலிருந்து அவரது கனவு தனித்தமிழ் ஈழம்தான் என்பது எனக்குப் புரிந்தது. அந்தக்கனவு பலித்தால், தென்னிலங்கையிலும் மேற்கு கரையிலும் மலையகத்திலும் வாழும் தமிழ் மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலை என்னை அரிக்கத்தொடங்கியது.
காசி. ஆனந்தன் போன்ற பேச்சாளர்களை எமது இந்து வாலிபர் சங்கம் ஊக்குவித்தால், எங்கள் ஊரின் எதிர்காலத்திற்கும் அது ஆபத்தாகிவிடலாம் என்ற அச்சமும் வந்தது.
எமது முற்போக்கு எழுத்தாளர்களையும் அச்சங்கம் அழைத்து பேசவைக்கவேண்டும் என்று சங்கத்தின் தலைவர் ஜெயம் விஜயரத்தினத்திடம் கோரினேன். ஆனால், தமிழ்த்தீவிரம் கொண்டிருந்த செயலாளர் பேரின்பநாயகம் மற்றும் ஆட்சிமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அவரூடாக நான் வைத்த கோரிக்கை எடுபடவில்லை.
காசி. ஆனந்தன் கைதாகி சிறை சென்று மீண்டு வந்தபோது, அவருக்கு வடக்கிலும் கிழக்கிலும் பெரிய வரவேற்பு நடந்தது. தமிழ் இளைஞர்கள் அவரது உணர்ச்சியூட்டும் பேச்சுக்களினால் கவரப்பட்டு அவருக்கு இரத்த திலகம் வைத்துக்கொண்டிருந்த காலம் அது.
எமது ஊர் இந்து வாலிபர் சங்கமும் காசி. ஆனந்தனுக்கு மாபெரும் வரவேற்பிற்கு ஏற்பாடு செய்தபோது, அதற்கு அனுமதிக்கவேண்டாம் என்று தலைவரிடம் சொன்னேன். அவரது பிரிவினை கோஷம் எம்மூருக்கு சரிவராது. அவர் வந்து பேசிவிட்டுப்போய்விடுவார். நாம்தான் அதன் பின்விளைவுகளை சந்திப்போம். இந்து வாலிபர் சங்கம் சமயத்துடன் நிற்கட்டும், இந்த அரசியல்வாதிகளுக்கு மேடை தரவேண்டாம் என்றேன்.
ஆனால், சங்கத்தின் ஆட்சி மன்றத்தினர் தந்திரோபாயமாக “ சங்கம் அதனை நடத்தவில்லை, ஒரு சிலர் மண்டபத்தை வாடகைக்கு கேட்டுள்ளனர். அவர்கள் நடத்தும் கூட்டம்தான் “ என்று தெரிவித்தனர்.
அவர்கள் எவ்வாறு சங்கத்தை அதன் திசையிலிருந்து திருப்புகிறார்கள் என்பதை, தொடர்ந்து அவதானித்துவந்தேன். ஒரு நாவலர் விழாவில் அடலேறு ஆலாலசுந்தரத்தை அழைத்துப்பேசவைத்தபோது, அந்த உரையில் அவர் எங்கள் மல்லிகை ஆசிரியரை ஏளனம் செய்து பேசியிருந்தார். அத்துடன் சங்கத்தின் நூலகத்தில் இயங்கிய படிப்பகத்திற்கு வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளுடன் உணர்ச்சியூட்டும் கோவை மகேசன் ஆசிரியராக இருந்த சுதந்திரன் பத்திரிகையும் வரத்தொடங்கியிருந்தது.
இப்படியே விட்டால், சங்கத்தின கதைவேறுவிதமாக மாறிவிடும் என்பதை உணர முடிந்தது.
அவர்கள் திட்டமிட்டவாறு காசி. ஆனந்தனுக்கு வரவேற்று வழங்கினர். அதனை எதிர்த்து நான் எனது நண்பர்களுடன் சங்க மண்டபத்தின் வாயிலில் சுலோக அட்டைகளுடன் அமைதி ஆர்ப்பாட்டம் செய்தேன்.
சங்கத்தின் தலைவர் ஜெயம் விஜயரத்தினமும் எனது தாய் மாமானாரும் அப்பாவும் அவரது வீட்டு வாயிலில் நின்றவாறு வேடிக்கை பார்த்தனர். எமது ஆர்பாட்டத்தினால் வீதியில் போக்குவரத்து நெருக்கடி வந்தது. பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
கொழும்பிலிருந்து வந்திருந்த காசி. ஆனந்தன், மு. சிவசிதம்பரம், இ.தொ. கா. செல்லச்சாமி ஆகியோர் நீர்கொழும்பில் ஒரு வீட்டிலிருந்து நிலைமைகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஊடாக கேட்டவாறு இருப்பதாக செய்தி வந்தது.
நேரம் இரவு ஏழு மணி கடந்தும் அவர்கள் மண்டபத்திற்கு வராதமையினால், பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கவிருந்த சங்கத்தின் துணைத்தலைவர் தா. சண்முகநாதனுக்கு அழுத்தம் கொடுத்தார்.
அதன்பின்னர் காசி. ஆனந்தன் அழைத்துவரப்பட்டார். எவரும் எந்த வன்முறையிலும் ஈடுபடக்கூடாது. நாம் எமது ஆர்ப்பாட்டத்தை அமைதியாக தொடருவோம் என்று எனது நண்பர்களுக்கு தெரிவித்தேன். அவர்களும் சுலோக அட்டைகளுடன் அமைதி காத்தனர்.
மண்டபத்திற்குள்ளே வந்த உணர்ச்சிக்கவிஞர், எம்மை செஞ்சட்டை காடையர் என்று வர்ணித்துப்பேசினார். அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் இருக்கும் நான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்தவன், மல்லிகை ஜீவாவின் நண்பன் என்பதை தெரிந்துகொண்டுதான் பேசுகிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன்.
பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு தமிழ் தெரியாது. அவர் என்னிடம், “ நீங்களும் தமிழர்கள், அவர்களும் தமிழர்கள். ஏன் எதிர்க்கிறீர்கள் ..? “ என்று சிங்களத்தில் கேட்டார்.
அதற்கு நான், “ உள்ளே பேசுபர் என்ன சொல்கிறார்..? என்பதை உங்களுக்கு மொழிபெயர்த்து சொன்னால், அதனைக்கேட்டு நீங்களும் கோபப்படுவீர்கள். அவர் பிரிவினை வாதி. அவர்கள் சொல்லும் தமிழ் ஈழத்திற்குள் எங்கள் ஊர் வரவில்லை. அப்படி இருக்கும்போது, இங்கே அவர்களுக்கு என்ன வேலை..? “
உணர்ச்சிக்கவிஞர் வீராவேசமாக பேசிவிட்டு வெளியே வந்தார், அவருடன் வந்த சில தமிழ்க்கொழுந்துகள் தங்கள் கரத்தில் பிளேடால் கீறி அவரது நெற்றியில் இரத்தத்திலகம் வைத்து கொக்கரித்தார்கள். அதனால் வெகுண்ட எமது இளைஞர்களுக்கும் அவர்களுக்குமிடையே வாக்குவாதம் வந்தது.
காசி. ஆனந்தன் மீது எவரும் தாக்குதல் நடத்திவிடலாகாது என்பதில் நான் மிகவும் அவதான அக்கறையோடு இருந்தேன். எமக்கிடையில் மாற்றுக்கருத்து இருந்தாலும், அவரும் ஒரு எழுத்தாளன். அவரை பாதுகாப்பாக காரில் ஏற்றி அழைத்துச்செல்லுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சொன்னேன்.
அதில் ஒருவர், என்னை முறைத்துப்பார்த்து “ கவனித்துக்கொள்கிறேன் “ என்றார். “ என்னை பின்னர் கவனியும். முதலில் உங்கள் உணர்ச்சிக்கவிஞரை அழைத்துச்சென்று கவனியும் “ என்றேன்.
( காலம் மாறியபோது அவர்கள் கவனித்த பலர் பரலோகம் சென்ற கதையும் நாம் அறிவோம் )
அந்த வீதி கலேபரமானது. வீதியெங்கும் பாதணிகள் இரைந்துகிடந்தன. பொலிஸார் தமது குண்டாந்தடியை ஓங்கினர்.
எமக்கு அடிவிழுவதற்குள் தலைவர் ஜெயம் விஜயரத்தினம் கூட்டத்துள் வந்து அனைவரையும் அமைதிப்படுத்தினார்.
அவர் ஊரில் சமாதான நீதிவானாகவும் விளங்கியவர்.
பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவர் என்னை அழைத்து, “ இச்சங்கத்தில் உனது குரலும் ஒலிக்கவேண்டுமாயின், முதலில் சங்கத்தின் உறுப்பினராக சேர்ந்துகொள். “ எனச்சொல்லி ஒரு உறுப்பிரிமை விண்ணப்பத்தையும் தந்தார்.
அதனை பூர்த்தி செய்து சந்தாப்பணத்துடன் செயலாளரிடம் கொடுத்தேன். அந்தச்செயலாளர் பேரின்பநாயகம்தான் பின்னாளில் தமிழ் அரசாங்க ஊழியர் சங்கத்தின் செயலாளர் நாயகமாகவும், அதன்பின்னர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவரானபோது அவருடை செயலாளராகவும் மாறியவர். காலப்போக்கில் அவர் அநுரா பண்டாரநாயக்கா எதிர்க்கட்சி தலைவரானபோது அவருக்கும் செயலாளராகவிருந்து, தீவிரவாத தமிழ் இளைஞர்களின் எச்சரிக்கைக்கும் ஆளானவர்.
பின்னாளில் மட்டக்களப்பில் நடந்த தேர்தலில் உணர்ச்சிக்கவிஞரை செல்லையா இராசதுரைக்கு எதிராக நிறுத்தியவர் அமிர்தலிங்கம்.
உணர்ச்சிக்கவிஞரின் உணர்ச்சியூட்டும் பேச்சுக்களினால் கவரப்பட்டு, அவருக்கு இரத்தத் திலகம் வைத்தவர்களின் வாரிசுகள்தான் 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி கொழும்பில் அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் சுட்டுக்கொலை செய்தனர். அன்று உணர்சிக்கவிஞருடன் எங்கள் ஊர் வந்த மு. சிவசிதம்பரத்தையும் சுட்டுக்காயப்படுத்தினர்.
எங்கள் ஊர் தமிழ்க்கொழுந்துகளின் ஏற்பாட்டில் மேடை ஏறி முழங்கிய அடலேறு ஆலாலசுந்தரத்தையும் வி. தருமலிங்கத்தையும் 1985 செப்டெம்பர் 02 ஆம் திகதி அந்த உணர்ச்சியின் வாரிசுகள்தான் சுட்டுக்கொலை செய்தது.
இந்த அமளிகள் இலங்கையில் நடக்கும்போது உணர்ச்சிக்கவிஞர் தமிழ்நாட்டிலிருந்து கவிதை எழுதிக்கொண்டிருந்தார்.
நான் தற்போது அவுஸ்திரேலியாவிலிருந்து இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
( தொடரும் )
No comments:
Post a Comment