பேரிகை/பேரி – தோற்கருவி
பேரிகை ஒரு தோற்கருவியாகும். பேரி என்றும் வழங்கும். பேரி மற்றும்
பேரிகை என்பதும் ஒரே கருவி என்று பேராசிரியர் பி சாம்பமூர்த்தி அவர்கள் கூறுகின்றார். இக்கருவி செம்பு பித்தளை இரும்பு தகடுகள் இணைத்து செய்யப்பட்டிருக்கும். இதன் மேல் பாகங்கள் உலோகத்தினால் செய்யப்பட்ட வளையங்களில் நல்ல மாட்டுத்தோல் போர்த்தி செய்யப்படும். சில இடங்களில் மரவளையங்கள் செய்து அதில் இருபுறமும் மாட்டுத்தோல் போர்த்தியும் செய்யப்பட்டது. இப்பொழுது அலுமியினம், பித்தளை அல்லது ஸ்டீல் வளையங்கள் பயன்படுத்துகிறார்கள். பேரிகை மேலைநாட்டு ட்ரம்ஸ் போல் இருக்கும் ஆனால் நமது பேரிகை வேறு ட்ரம்ஸ் வேறு. தோல்வார்க் கொண்டு தோல் பகுதிகள் வளையத்துடன் சேர்த்து இறுக்க கட்டப்படும்.இப்பொழுது கயிறுகொண்டு கட்டுகிறார்கள், 2 முதல் 3 அடி வரை விட்டம் இருக்கும். சற்று வளைந்த பெரிய குச்சியைக்கொண்டு முழக்கப்படும். சிலர் இரண்டு குச்சிகளும் பயன்படுத்துவர்.
மிகத்தொன்மையான இசைக்கருவி பேரிகை. ”பேரிகை படகம் இடக்கை
உடுக்கை சீர்மிகு மத்தளம் சல்லிகை கரடிகை” என்பது சிலப்பதிகார உரை. பேரிகை தோற்கருவிகளில் முதன்மையானது. திருமுறை, திருப்புகழ், கம்ப ராமாயணம் உள்ளிட்ட பல பழம் நூல்களில் இக்கருவி குறிக்கப்பட்டுள்ளது. ”பேரிகை முதலாய முகக் கருவி பிறவினுக்கும்” என்று நந்தனார் பெருமான் ஆலயத்திற்கான இசைக்கருவிகள் செய்ய தோல் அளித்து வந்த செய்தியை பெரியபுராணம் காட்டுகிறது. இசை நூல்கள் இக்கருவியை வன்மை கருவி என்றும் தலைக்கருவி என்றும் வகைப்படுத்தியுள்ளது. சங்கு, காளம், தாளம், சின்னம் ஆகிய பிற கருவிகளுடன் சேர்த்து பேரிகை இசைக்கப்படும்.
தமிழ்நாட்டில் தொன்மையான பேரிகைகள் கொங்கு பகுதிகளில் காணமுடிகிறது. கொங்கு பகுதி திருமணங்களில் இசைக்கப்படும் “கனக தப்பட்டை” எனப்படும் பல்லிய குழுவில் பேரிகையும் இடம்பெறுகிறது. “கனக தப்பட்டை” பல்லியத்தில் இசைக்கப்படும் மற்ற கருவிகள் பெரிய தப்பட்டை, தாசா, கொம்பு, சின்ன நாயனம் மற்றும் ஒத்து. பேரிகையை பாண்டு அல்லது ட்ரம் செட் என்று இக்காலத்தில் இப்பகுதி மக்கள் அழைத்தாலும் அதன் முந்தைய பெயர் பேரிகை என்பதை “கொங்கு நாட்டுப்புற இசைக்கருவிகள்” நூல் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. கொங்கு திருமண மங்கல வாழ்த்து பாடுதல் என்னும் சடங்கில் பாட்டின் நடுவே தொம் தொம் என்று இந்த பல்லியம் ஒலிக்கும். கொங்கு நாட்டில் கருப்பண்ணசாமி ஆட்டம், சிலம்பாட்டம், புலிவேடம் ஆகிய ஆட்டவகைகளிலும் பேரிகை இசைக்கப்படும். இறுதி ஊர்வலத்திலும் பேரிகை, தப்புடன் சேர்த்து இசைக்கப்படும். காரமடை அரங்கநாதர் கோவில் மற்றும் பழனி முருகன் கோவில் விழாக்களில் மக்களின் இசையாக ஒலிக்கும் திடும் இசையுடன் பேரிகை முழக்கப்பெறும்.
தென் தமிழ்நாட்டில் உள்ள திருக்குறுங்குடி கோவிலில் பேரிகை விழா நாட்களில் இசைக்கப்படுகிறது. இங்கு உள்ள ஜீயர் மடத்தில் இந்த இசைக்கருவிக்கு ஆதரவு உள்ளது. மரத்தில் செய்யப்பட்டுள்ளது. துளு நாடு என்று அழைக்கப்படும் தென் கருநாடகத்திலும் இந்த வகை பேரிகை இசைக்கும் வழக்கம் உள்ளது. கொல்லூர் மூகாம்பிகை கோவில், உடுப்பி கண்ணன் கோவில் போன்ற துளுநாட்டுக் கோவில்களில் பேரிகை புழக்கத்தில் உள்ளது.
பாடல்:
ஊரில் விடும் பறைத் துடைவை உணவுரிமையாக்கொண்டு
சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்
கூரிலைய முக் குடுமிப் படை அண்ணல் கோயில் தொறும்
பேரிகை முதலாய முகக் கருவி பிறவினுக்கும் - திருமுறை 12.1053
பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்
வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்
கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்
தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே - திருமுறை 2.38.2
தீந்த தோதக தந்தன திந்திமி
ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் ...... பொங்குசூரைச் – திருப்புகழ்
தித்தி மித்திமி தீத தோதக
தத்த னத்தன தான தீதிமி
திக்கு முக்கிட மூரி பேரிகை ...... தவில்போடச் – திருப்புகழ்
காணொளி:
-சரவண பிரபு ராமமூர்த்தி
நன்றி:
- பல்லடம் திரு க.பொன்னுசாமி அவர்கள், வரலாற்று ஆய்வாளர், பல்லடம்
- கொங்கு நாட்டுபுற இசைக்கருவிகள், முனைவர் பெ சுப்பிரமணியன்
- தமிழர் முழவியல் - பாகம் I, மகேந்திரன், சி, இராமநாதன் நுண்கலைக் கழகம்
No comments:
Post a Comment