முற்கூத்தும், பிற்கூத்தும் (கன்பரா யோகன்)


பொது நிகழ்வுகள், வைபவங்கள் குறைந்து போய்க் காணப்படும் இக்காலத்தில் பல்வேறு வழிகளில் நேரத்தை செலவிடும் வழிகள்

இருக்கின்றன. இந்த வீடடங்கு காலத்தில்

சில நண்பர்களுக்கு அழகான குறுந்தாடி வளர்ந்துள்ளது. குறுஞ் செய்திகளில் மூழ்கிப் போயிருக்கும்  நண்பர்களும்  இன்னும் அதிகம். இன்னும் சிலர் தோட்ட வேலைகளையும் வீட்டு வேலைகளையும் கவனிக்க நேரம் வாய்த்துள்ளது.

 

மேடைக் கலைஞர்களுக்கு நிகழ்ச்சிகள் அருகிப் போயிருந்தாலும், Zoom அல்லது Skype தொழிநுட்பத் தொடர்பாடல்கள் மூலம்   பல நிகழ்ச்சிகளை  நிகழ் நிலையில் (ஒன் லைன்) நடாத்த முற்படுகின்றனர்.

இலக்கியகாரர்கள் இதுதான் தருணமென்று அறையிருந்து எழுதிக் குவிக்க வேளை வந்துள்ளது. கணினியில் இலக்கிய கூட்டங்களுக்கும் குறைவில்லை.

நவீன தொழிநுட்ப வசதிகள் அனைத்தையும் பயன்படுத்தி இந்த வெறுமையை போக்கிவிட அனைவரும் முயல்வது தெரிகிறது.

 

1971 ஜே.வி.பி கலவர காலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது பொழுது போக்குவதற்கு எந்த நவீன தொழிநுட்பங்களும் இருக்கவில்லை. ஆக மிஞ்சினால் செய்தி கேட்பதற்கு வானொலி மட்டும் இருந்தது.

பொழுதை போக்க திண்ணையில் தாயக்  கட்டங்களை வரைந்து  நாலு பேர் கொண்ட குழுவாக  விளையாடினோம். வேப்ப மரக் கொப்புகளிருந்து  அல்லது பூவரங் கதியால்களிருந்து வெட்டி எடுத்த இரண்டு தாயக் கட்டைகளை  சீமெந்து நிலத்தில் தேய்த்து அழுத்தமாக்கி கூர்க் கத்தியால்  இலக்கம் வெட்டி பேனாவினால் மை  கீறினோம். பக்கத்து வீட்டுப் பொன்ராசா மான் கொம்புத் தாயக் கட்டையும் வைத்திருந்தான். அவை சீமெந்து தரையில் உருளும் போது கல கலத்து  ஒலியெழுப்பின.

 

ஆறு காய்களை வைத்து விளையாடியதால் இறுதிக்காயை ஆறாடி என்றழைக்கும் வழக்கம் இருந்தது. ஆறாடியைப் பழுக்க வைப்பதுதான் சவாலான போட்டியாகவிருந்தது. ஆறு காய்களுடன் விளையாடுவது அதிக நேரமெடுத்ததால் நான்கு காய்களை வைத்து விளையாடினோம்.

 

சுவாரஸ்யமான சில விதிகள் தாய விளையாட்டில் இருந்தன. தாயம் விழுந்தாலே ஆடுபவர் மனையை விட்டு வெளியே வர முடியும், அதாவது  தாயம் விழுந்து தோய்ந்த பிறகே ஆட்டம் தொடங்கலாம் என்பார்கள்.  குளித்து, முழுகியபின் வீட்டை விட்டு புறப்படுவது போலத்தான்.  

 

தாயக்கட்டை சதுர கனக்குற்றி போலல்லாது  செவ்வக கனக்குற்றியாக இருந்ததால் நான்கு முகங்களே இலக்கங்களை கொண்டிருந்தன. தாயம், சோனாலு, ஐந்து விழுந்தால் மீண்டும் தாயக்கட்டைகளை உருட்டலாம். பானாலு என்றொரு இன்னொரு நாலு இலக்கம் சற்று வித்தியாசமாக  தாயக்கட்டையில் வெட்டப்பட்டிருக்கும்.

 

 

 

'சொனாலு, பானாலு, சொத்தி நாலு'  விழு என்று கத்தினான் பொன்ராசா.

சொன்னது விழுந்தால் எதிராளியை வெட்டவோ அல்லது காயை பழுக்க வைக்கவோ முடிவதால்  இப்படி தாயக் கட்டைகளை அதட்ட வேண்டியிருந்தது. ஆனால்  என்னவோ மட்டமும் விழத்தான் செய்தது.

 

ஆட்டத்தின் கடைசியில் தாயக்கட்டையில் அமோகமாக விழுந்தால் பிற்கூத்து சிறக்கிறது என்றும் சொல்வார்கள். வெற்றிக்கு எதுவாக பிற்கூத்துதான் சிறக்க வேண்டும். அந்தக் காலத்தில் விடிய விடிய ஆடும் கூத்துகளிலும் பிற்பகுதியிலேயே நல்ல நடிகர்களின் ஆட்டங்கள் வருவதுண்டு. அதை  வைத்தே முற்கூத்தை விட பிற்கூத்து சிறக்கும் என்ற சொல் வழக்கம் வந்திருக்க வேண்டும். 

 

இதை விட சீட்டாட்டம்  விளையாடும்  ஆர்வமுள்ளோர் அதில் லயித்திருந்தனர்.

ஆயினும் ஜெ.வி.பி காலத்தில் நான் சீட்டாடும் வயதுக்கு வந்திருக்கவில்லை. அதை விட தாயம் விளையாட்டு ஆண்கள், பெண்கள், சிறுவர் என்ற வேறுபாடில்லாமல் ஆடக்கூடிய ஒரு குடும்ப விளையாட்டு என்ற கணிப்பை பெற்றிருந்தது.

 

1983 இன்  தொடக்க காலங்களில் கூட எங்கள் ஊரில் ஒரே ஒருவர் வீட்டில் மட்டுமே தொலைக்காட்சி இருந்தது. அப்போது அவர் வீட்டுக்கு டிவி பார்க்கப் போவதற்கு பெரும் போட்டி நிலவியது.  

அவ்வப்போது நான் அங்கு டிவி பார்க்கப் போனால் வீட்டுக்குப் பின் புறமுள்ள நாற்பது அடி  உயரமுள்ள கம்பத்தில் பொருத்தபட்டுள்ள அன்டெனாவை அடிக்கடி திருப்பி தெளிவான படம் வரும் வரை திருக வேண்டும்.  இப்படி ஆன்டெனாவின் கம்பத்தை  திருகும் வேலை எனக்கும் அடிக்கடி தரப்பட்டது. 

 

திருமண வீடுகளில் நாலாஞ் சடங்குகளுக்கு டிவியுடன், டிகோடர்  எனப்படும் டெக்கையும் வாடகைக்கு எடுத்து உறவினர்களுக்கும், அயலவர்களுக்கும் சினிமாப் படம் காட்டும் ஒரு வழக்கம் வந்தது.

நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமண நாலாஞ் சடங்கிற்கும் இந்த ஏற்பாட்டை செய்தோம். ஊரிலிருந்த ஒரே ஒரு டிவி அங்கே கொண்டு வரப்பட்டது. அப்போது தமிழ்திரையில் பாக்யராஜ் பிரபலம் பெற்றிருந்தார்.

அவருடைய ‘விடியும் வரை காத்திரு’ திரைப்படத்தை டெக்கில் போட்டு காட்ட ஒழுங்கு செய்திருந்தோம். ஆனால் விடியும் வரையில் அந்தப் பாழாய்ப் போன டெக் வேலை செய்யவேயில்லை. படம் பார்க்க வந்தவர்கள் பாயில் படுத்துறங்கி விடிந்ததும் தேனீரையும் அருந்தி விட்டுத்தான் சென்றனர்.

 

தியேட்டரில் சினிமாப்  படம் பார்க்கும் பழக்கம் 1983 களுக்குப் பின்னர் படிப்படியாகக் குறைந்தது .

மினி திரையரங்குகள் தோன்றின. உள்ளே இருந்த  திரையும்  சிறுத்து காணப்பட்டது. திரைப் படங்களை வாடகைக்கு கொடுக்கும் வீடியோக் கடைகள் தோன்ற, வீடுகளிலேயே VCR அல்லது டெக்குகளை வைத்திருப்போர் தமது டிவி சின்னத்திரைகளுக்கே தஞ்சமடைந்தனர்.

 

85 களுக்குப் பின்னர் இந்த மாற்றங்களெல்லாம் மிக விரைவாகவே நடை பெற்றன. VHS என்றழைக்கப்படும் அனலொக் ஒளிநாடாப் பேழைகளுக்குப்  பதிலாக டிஜிட்டல் குறுந்தகடுகளில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட  திரைப்படங்கள் கிடைத்தன. புகைப்படக் கமராக்களின் பிலிம் படச்சுருள் வழக்கொழிந்து போய் விட்டது போல VHS ஒளிநாடாப் பேழைகளும் பாவனையிலிருந்து  மறைய ஆரம்பித்தன. வீடியோக் கடைகள் வீடியோ குறுந்தகடுகளையே வைத்திருந்தனர்.

எனது முதல் திரைப்படத்தினை தியேட்டரில் தரையில் இருந்து பார்த்தேன். அது மறக்க முடியாத அனுபவமாயிருந்ததற்கு இன்னொரு காரணம் அதன் பெயரும் ‘மறக்க முடியுமா’ என்பதுதான்.

கலைஞர் கருணாநிதியின் கட்டைக்குரல் அறிமுக குறிப்புகளுடன் படம் ஆரம்பித்தது இன்றும் நினைவிலுள்ளது வியப்பளிக்கிறது. அவர்தான் திரைக்கதையை எழுதியிருந்தார். 'காகித ஓடம்'  என்ற பாடலும் அப்படத்தில் பிரபலமாகியது.

 

இன்று கைத்தொலை பேசியிலேயே திரைப்படங்கள் பார்க்கும் காலம்  வந்துள்ளது. இடையில் ஒரு நாற்பது வருடங்கள் மட்டுமே கடந்துள்ளன. என்பது வியப்பாகத்தானிருக்கிறது.  

 

இப்படியாக பெரிய வெண்திரையில்  தொடங்கி சிறிய மினி திரைக்குத் தாவிய திரைப்படங்கள் இன்று டிவியின், மற்றும் கணினியின் சின்னத் திரைகளிலும், செல் போனின் குறுணித் திரைகளிலும் பார்க்கப் படுவதை எம் வாழ் நாளில் கண்டு விட்டோம்.

 

முற்கூத்துகளின்  காலங்கடந்து போயின. இன்றைய பிற்கூத்துகள்  இப்படி நடக்கிறது. 

தொழிநுட்பம் கால ஒட்டத்தை மிஞ்சும் வேகத்தில் செல்கிறது.

 

                         


No comments: